விஜயின் அரசியல் : சதிக்கோட்பாடுகளின் TOOLKIT
தேர்தல் அரசியலில் கட்சிகள் மாறி மாறிச் சண்டையிடுவதும், ஒருவர் மேல் ஒருவர் பழிசுமத்துவதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாத சதிக்கோட்பாடுகளை உருவாக்கி அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது இதற்கு முன் இல்லாத வகையில் தேர்தல் அரசியல் சண்டையை இன்னமும் தரம்தாழ்த்தியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது இதே அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். திமுக மீது அவர் முன்வைக்கும் பல குற்றச்சாட்டுகள் அரசியல் விமர்சனமாக அல்லாமல், சதிக்கோட்பாட்டு அரசியலாகவே வெளிப்படுகின்றன.
விஜய் எதை முன்வைத்துத் திமுக மீது விமர்சனம் செய்து வருகிறார் என்பது முக்கியமானது. ஒன்று ஊழல், மற்றொன்று மன்னராட்சி. இவை இரண்டைத் தவிர தவெக முன்வைக்கும் அனைத்து விமர்சனங்களுக்கும் அடிப்படையானது சதிக்கோட்பாடு தான்.
சதிக்கோட்பாடு என்பது தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் அல்லது மிகக் குறைந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு செய்திகளை உருவாக்குவது ஆகும். அதாவது அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் மலிந்தவையாக இருக்கின்றன என்பது மக்களிடம் ஒரு பொதுக்கருத்தாக இருக்கிறது. எனவே எந்தவித ஆதாரமுமின்றி ஒருவரைப் பற்றி மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசுவதை மக்கள் இயல்பாகக் கடந்துவிடுகின்றனர்.
அப்படித்தான் சமீபத்தில் தவெக ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின விழாவில் பேசிய விஜய் பல்வேறு திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார். “இந்தத் திட்டங்களை எல்லாம் எப்படிச் செய்ய முடியும்? ஸ்டாலின் சார் செய்ய முடியாததை நீ எப்படிச் செய்வாய்?” என்ற கேள்வி உங்களுக்கு எழும் என்று அவரே கேள்வியை எழுப்பிவிட்டு, பின்னர் இது பற்றிச் சமீபத்தில் படித்துத் தெரிந்துகொண்டதாகவும் கூறினார். அதில் நம்முடைய மாநிலத்திற்கான பட்ஜெட் 4.39 லட்சம் கோடியாக உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, “இந்த பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்படும் நிதியில் 20 சதவீதம் ஸ்டாலின் சார் டாக்ஸ் போகிறது, 10 சதவீதம் அமைச்சர்களுக்குப் போகிறது” என்று அதற்கு அவரே பதிலும் அளித்துள்ளார்.
“அரசுக்குத்தான் நிதி செலுத்துவார்கள். ஆனால், அரசாங்கமே ஒருவருக்கு வரி கொடுக்கிறது என்றால், அதற்குப் பெயர் ஸ்டாலின் சார் டாக்ஸ் தானே. இதைவிட நாகரிகமா நீங்க அடிக்கிற ஊழலையும், கொள்ளையையும் சொல்ல முடியாது. மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை நீங்க சைடில் ஒதுக்காமல் இருந்தால், நல்ல அரசாங்கத்தைத் தரமுடியும், அதாவது அவரின் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியும்” என்று விஜய் பேசியிருக்கிறார்.
இதனை தவெகவினர் விசில் அடித்து ஆரவாரம் செய்து வரவேற்றனர். விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும்கூட திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுக்க மாட்டார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுகவினர் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கொண்டுவந்திருக்கும் திட்டங்களையும், அதில் திமுக அமைச்சர்கள் தொடங்கி வார்டு கவுன்சிலர் வரை அடிக்கும் கொள்ளையையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். டாஸ்மாக் ஊழல், பணம் வாங்கிக்கொண்டு பதவி வழங்கிய ஊழல், நில அபகரிப்பு, கனிமவளக் கொள்ளை என நீளும் பட்டியலில் முக்கிய அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, பொன்முடி என அடுத்தடுத்துக் கைது செய்யப்படுகின்றனர். இவற்றை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற திமுகவின் கதையாடலை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
அதேசமயம் மக்களைத் திசைதிருப்ப அடுத்தடுத்த அறிவிப்புகளை, மக்களுக்கு நேரடியாகப் பணம் சென்று சேரும் அறிவிப்புகளைத் திமுக வெளியிட்டு வருகிறது. அதனை அடியொற்றி விஜயும் திமுகவை விடத் தான் அதிகமாக மக்களுக்குக் கொடுக்கப்போவதாக அறிவிக்கிறார். அதனால்தான் “இவர் சொல்வதெல்லாம் சாத்தியமா?” என்ற கேள்வியோ, சந்தேகமோ தவெகவினருக்கு எழவில்லை.
தவெகவினருக்கு மட்டும்தான் எழவில்லை என்று அவர்களை தற்குறிகள் என்று எண்ணி ஒதுக்கிவிட வேண்டாம். இந்தியாவின் நான்காவது தூண்களான காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இதுவரை என்ன கேள்விகளை எழுப்பியிருக்கின்றன? சரி, திமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் என்ன கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்? சரி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் என்ன கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்? என்றால், ஊழலும் கொள்ளையும் அப்படியே தொடரவும், நிலைத்திருக்கவும் என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் அனைவரும் செய்தனர். இனியும் செய்வார்கள்.
தவெக தலைவர் விஜய் எழுப்பியிருக்கும் கேள்வியும், அதற்கான பதிலும் சரிதானா என்று ஆராய்வதற்குப் பொருளாதாரம் படித்திருக்கத் தேவையில்லை. தர்க்க அறிவு இருந்தாலே போதுமானது.
- ஏன் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்கான இலவசங்களை முந்திக்கொண்டு வாரி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றன?
- மு.க.ஸ்டாலின் அரசாங்கம் 30 சதவீதம் கொள்ளையடிக்கிறது என்பது விஜய் கூறும் புள்ளிவிவரப்படி உண்மையென்றால் (இதன் பொருள் அவர்கள் கொள்ளையடிக்கவில்லை என்பதல்ல) ஏன் அவர்கள் மீது வழக்குத் தொடுத்துத் தண்டனை பெற்றுத்தரக்கூடாது?
- பட்ஜெட்டில் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களுக்கும் இன்ன பிறவற்றிற்கும் செலவு செய்யத் திட்டமிட்டிருப்பார்கள். அதில் 30 சதவீதம் எடுத்துவிட்டால் மீதமுள்ள பணத்தில்தானே அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அப்படியென்றால் அந்தத் திட்டங்கள் அரைகுறையாக நிறைவேற்றப்படும், அப்படித்தானே? அப்படியென்றால் இந்த 30 சதவீதத்தை எடுத்து விஜய் தனது அறிவிப்புகளை நிறைவேற்றினால், ஏற்கனவே அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு எந்தப் பணத்தைப் பயன்படுத்துவார்?
எனவே விஜய் பேசுவது ஓட்டரசியலுக்குத்தானே தவிர, ஊழலையும் கொள்ளையையும் தடுப்பதற்காக அல்ல. “நானும், எனது கட்சியினரும் ஊழல் செய்ய மாட்டோம், கொள்ளையடிக்க மாட்டோம்” என்று கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற கட்சிதான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்றால், ஊழலின் நியாயத்தை எவராலும் புரிந்துகொள்ள முடியும்.
எனவே மேற்சொன்னவற்றின் பொருள், தவெகவினர் விஜயை நம்புகிறார்கள் என்பதல்ல, அவரின் சதிக்கோட்பாடு உகப்பாக இருக்கிறது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
தவெக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை அவர்கள் முன்வைக்கும் அரசியல் முழுக்க முழுக்க சதிக்கோட்பாடுதான். சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கான Toolkit-இல் கரூர் துயரச் சம்பவம், பிரச்சாரம் செய்வதைத் தடுக்கும் வகையில் SOP, ஜனநாயகன் படத்துக்குத் தடை, இறுதியாக விவாகரத்து வழக்கு வரை அனைத்து விவகாரங்களிலும் திமுகவின் சதி உள்ளது. இவை அனைத்தும் தவெகவை முடக்குவதற்கான சூழ்ச்சி, இவற்றில் இருந்தெல்லாம் தலைவர் மீண்டு வெற்றிபெறுவார் என்ற செய்தியைச் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனப் பேசிய ஆடியோ வைரலானது.
இப்படிப் பணம் கொடுத்துப் பரப்பப்படும் செய்தியைக் கேட்டு, சதிக்கோட்பாட்டுக்குப் பழகிய தவெகவினர் இதனை உண்மையென்று நம்பித் தாங்களும் பிரச்சாரம் செய்கின்றனர்.
இதன் விளைவாக, கரூரில் மரணித்த குழந்தைகளின் தாயார், “என் பிள்ளை இறந்துவிட்டால் என்ன? விஜயை நேரில் பார்த்துவிட்டார்கள், அது போதும்” எனப் பேசுகிறார்கள். இப்படி ஒரு தாய் பேசுவதை உண்மையென்று நம்பிக் கடந்து செல்ல முடியுமா? வறுமை என்ற சமூகக் காரணம் இருக்கும்வரை இவ்வாறு பேசுவதை ஒருநாளும் தடுக்க முடியாது. இதன் தொடர் விளைவாகத்தான் சங்கீதா அவர்களின் விவாகரத்து விசயம் வெளியில் வந்தவுடன், ஒரு பெண் “நான் அண்ணனுக்குத் தங்கச்சியாகவும் இருப்பேன், பொண்டாட்டியாகவும் இருப்பேன்” என்று பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. உண்மையிலேயே ஒரு பெண் அவ்வாறு பேசுவதை எந்த தாய்-தந்தை, அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை ஆகியோரால் ரசிக்க முடியும்? தவெக தலைவர் விஜய் இதுபோன்ற ஒரு சமூகத்தைத்தான் படைக்க விரும்புகின்றாரா? என்பதை தவெகவினர் சிந்தியுங்கள்.
SOP (Standard Operating Procedure) என்பது தவெகவினருக்கு மட்டும் திமுகவினரால் போடப்பட்டதல்ல. அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும். கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் பக்கம் பக்கமாக கேள்விகளை அடுக்குவதும், கடைசி நிமிடம் வரை பதில் சொல்லாமல் இறுதியில் அனுமதி மறுப்பதும், போலீசின் வழமையான அனுகுமுறை. திமுக அரசை எதிர்க்கின்ற கட்சிகளுக்கு மட்டுமல்ல, அதன் கூட்டணியில் இருக்கின்ற சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கும் இதே நிலைதான்.
திமுக அரசு மக்களின் எந்தவொரு நியாயமான கோரிக்கைகளுக்காகவும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்கு அனுமதியளிப்பதில்லை. பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதாக மேடையில் பேசினாலும், காவி பாசிசத்தை எதிர்த்துத் தெருமுனைக் கூட்டம் போட்டால்கூட வழக்குப் போடுகிறது திமுக அரசின் போலீசு. தற்போது கரூர் சம்பவத்திற்குப் பிறகு நிலையான வழிகாட்டுதல்கள் என்ற பெயரில் இந்த அரசு, அரசியல் இயக்கங்களை மொத்தமாக முடக்கிப்போடப் பார்க்கிறது. ஆனால் இதனை தவெகவினர் தங்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கின்றனர். அதையே மக்கள் மனதில் பதிய வைப்பதற்காகச் சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஜனநாயகன் படத்துக்குத் தடை செய்திருப்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சினிமா தணிக்கை வாரியம். இதில் மாநிலத்தை ஆளும் திமுகவிற்கு என்ன பங்கு என்று இயல்பாகக் கேள்வி எழுப்புகின்றனர். இருந்தும் மாநில அரசுதான் காரணம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவர என்ன காரணம் இருக்க முடியும்? தவெக தலைவர் விஜய், “திமுகவும் பாஜகவும் மறைமுகக் கூட்டு, எனவே இது சாத்தியம்” என்று கூறுகிறார். ஜனநாயகன் படத் தடைக்கு திமுக-பாஜக மறைமுகக் கூட்டு என சதிக் கோட்பாட்டை முன்வைப்பதற்குப் பதிலாக, விஜய் வேறு வழியில் பேசியிருக்கலாம். அதாவது, பாசிசத்தை எதிர்ப்பதாக பேசும் திமுக, புதிய கல்விக் கொள்கையின் தனியார்மய திட்டங்களை எப்படி அமல்படுத்துகிறது, அதானிக்கு எப்படி தமிழகத்தைத் திறந்துவிட்டிருக்கிறது, தொழிலாளர் நலன்களை எப்படி வெளிநாட்டு மூலதனத்திற்காக பணயம் வைக்கிறது என்பதைப் பட்டியலிட்டிருக்கலாம். இதன் மூலம் பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் திமுக கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சியினரைத் தன் பக்கம் கொண்டு வர முயன்றிருக்கலாம்.
ஆனால் விஜய் அதனைச் செய்யவில்லை. மாறாக அவர் தன்னைப் பழிவாங்க திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டு வைத்திருப்பதாக ஒரு சதிக் கோட்பாட்டுக்குள் நுழைகிறார். பராசக்திக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைத்துவிட்டது, ஜனநாயகனுக்குக் கிடைக்கவில்லை என்று அதற்கு ஆதாரம் வேறு காட்டுகிறார்.
சமீபத்தில் வெளிவந்த விஜய்–சங்கீதா விவகாரத்தையும் அரசியல் சதிக்கோட்பாட்டுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. தனிப்பட்ட குடும்ப விவகாரங்கள்கூட அரசியல் சதியாக மாற்றப்படுவது, தற்போதைய சதிக்கோட்பாட்டு அரசியலின் இன்னொரு வெளிப்பாடாகும். 26 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பெண்ணுடன் தனது இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்குத் திருமண வயதாகும் நிலையில், பொதுவெளியில் தன்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டவர்களின் மத்தியில் “அவ்வளவு வொர்த் இல்லை” என்று பேசுவதை எந்த மனநிலையில் உள்ளவர்களால் பேசவும், கேட்கவும் முடியும்? இது தவெகவினருக்குப் பொருந்தாது என்று கடந்து செல்ல முடியுமா? ஏனென்றால், கரூர் மரணத்தில் ஒரு தாய் பேசியதையும், விவாகரத்து வழக்கில் ஒரு பெண் பேசியதையும் விஜய்க்குக் கிடைத்த புகழாரம், பெருமை என்று கருதும் மனநிலை கொண்டவர்களுக்கு இது எளிதில் புரிந்துவிடுவதற்கு வாய்ப்பில்லை.
இது ஒருபுறம் இருக்க, விஜய்-சங்கீதா விவகாரத்திற்கான சதிக்கோட்பாடு என்ன? கருணாநிதியின் மகள், ஸ்டாலினின் அக்கா செல்வி அவர்களின் கணவர் முரசொலி செல்வம் அவர்கள் இறப்பிற்குச் சங்கீதா சென்றிருந்தார், எனவே திமுகவுக்கும் சங்கீதாவுக்கும் நெருக்கம் இருக்கிறது. இதனடிப்படையில் விஜய்க்கு எதிராகத் திமுக சங்கீதாவைப் பயன்படுத்தியுள்ளது என்ற செய்தியைத் தங்களது Toolkit மூலம் பரப்பிவிட, அதனையே பிடித்துக்கொண்டு சங்கீதாவுக்கு எதிராகத் தரம் தாழ்ந்து தவெகவினர் விமர்சித்தனர். இதனை விஜய்யோ, மற்ற நிர்வாகிகளோ கண்டிக்கவில்லை என்பதிலிருந்தே இவர்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வளவுக்குப் பிறகு சமீபத்தில் நடந்த மகளிர் தின விழாவில் “வொர்த் இல்லை” என்று பேசியதை ஆதரித்து ஆதவ் அர்ச்சுனா, “தலைவரே சொல்லிவிட்டார். அந்த விசயத்தை அவர் பார்த்துக்கொள்வார்” எனப் பின்பாட்டுப் பாடுவது எவ்வளவு வொர்த்தானது என்பதை தவெகவினர் சிந்தியுங்கள்.
விஜயின் இந்த ஆணாதிக்க திமிர் பேச்சும் நடவடிக்கைகளும் தவெகவினரிடையே கூட சலசலப்பை உருவாக்கியுள்ளன. விஜயின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாங்கள் முட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறதே என அவரது ஆதரவாளர்களே கூட சமூக ஊடகங்களில் புலம்ப ஆரம்பித்துள்ளனர். வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் போன்ற பெண் ஆளுமைகளைத் தனது கட்சிக்கு முன்மாதிரியாக வைத்துக்கொண்டு, அதே மேடையில் ஒரு பெண்ணை “வொர்த் இல்லை” என்று பேசியதை ரசிக்க முடியாது என தவெக நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
சதிக்கோட்பாடுகள் அரசியலில் தற்காலிக ஆதரவைப் பெற்றுத்தரலாம். ஆனால் அவை மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்காது. அரசியலில் புதிய மாற்றம் தேவை என்றால் அது சதிக்கோட்பாடுகளால் அல்ல, தெளிவான அரசியல் கொள்கைகளாலும், பொறுப்புள்ள விவாதங்களாலும் மட்டுமே சாத்தியம். விஜயின் சதிக்கோட்பாட்டு அரசியலை புரிந்துகொள்ளும் எவரும், விஜயை விட்டு தவெக கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்பது திண்ணம்.
- மகேஷ்

