ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாதத் தாக்குதல்
புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை
புரட்சிகர மக்கள் அதிகாரம்
01-03-2026
அணு ஆயுத பூச்சாண்டி காட்டி ஈரானை மிரட்டி அடிபணியச் செய்ய முயற்சித்து மேற்கு ஆசிய நாடுகளை போருக்குள் தள்ளி ஆயிரக்கணக்கானோரைக் கொன்று ரத்தம் குடிக்கத் துடிக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கப் போரைக் கண்டிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
உலகெங்கிலும் தனது அடிமை நாடுகளை உருவாக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்துவரும் கொலைபாதகச் செயல்களால் மனித குலமே பதைபதைத்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது மேலாதிக்கத்திற்காக அனுதினமும் காய் நகர்த்திப் பல நாடுகளை அடிமையாக்கித் தனது பொம்மை அரசுகளை உருவாக்கிவருகிறது. தனது ஆதிக்கத்தை ஏற்க மறுக்கும் நாடுகள் மீது ராணுவ ரீதியில் தாக்குதல் நடத்தி லட்சக்கணக்கானோரைக் கொல்ல கிஞ்சித்தும் ஈவு இரக்கமின்றிச் செயல்படுகிறது.
அதன் தொடர்ச்சியாகத்தான் நேற்று 28-02-2026 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுச் சேர்ந்து ஏவுகணைத் தாக்குதல் தொடுத்துள்ளது. ஈரானின் தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 53 மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் கொமேனியின் வீடு, மாளிகை தகர்க்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரானும் பதில் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் கத்தார், துபாய் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகள் போர் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.
வளைகுடா நாட்டு எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும் உலக மேலாதிக்கத்திற்காகவும் அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சிகளே இதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளன.
இதை மறைத்துவிட்டு ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்று பூச்சாண்டி காட்டித் தனது ரவுடித்தனத்தை மறைக்கப் பார்க்கிறது அமெரிக்கா.
ஒரு நூறாண்டுகளாக ஈரான் குறித்து இந்த பொய்யைத் திரும்பத் திரும்ப அவ்வப்போது கூறி ஈரானை வளைக்கப் பார்க்கிறது. பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று கூறி ஈராக்கைக் கைப்பற்றியது, போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி வெனிசுலா அதிபரைக் கடத்திச் சென்றுள்ளது என அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறி சமீபகாலமாக அதிகரித்து உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதை உலக நாடுகளும் அந்த நாட்டு மக்களும் அமெரிக்காவின் இந்த அநீதியான போரைக் கண்டித்துப் போராட்டத்தில் இறங்க வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு அடிபணிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று ஈரானுக்கும் வெனிசுலாவுக்கும் ஏற்பட்டுள்ள நிலை நாளை இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடக்கும். ஆகவே, உலக மக்களின் பொது எதிரியான அமெரிக்காவை இந்திய மக்கள் மட்டுமல்ல, உலக மக்கள், ஏழை நாடுகள் என எதிர்த்துப் போராடக் களத்தில் இறங்குவது ஒன்றே தீர்வு.
இப்படிக்கு,
இரா. முத்துக்குமார்
மாநிலப் பொதுச்செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
9790138614

