விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா – உயர் கல்வி கார்ப்பரேட் மயத்திற்காகச் செய்யப்படும் நிர்வாக மறுகட்டமைப்பு By செங்கனல் பிப்ரவரி 24, 2026 கல்வி தனியார்மயம் கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு உடனே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்ட கல்வி ஆணைய மசோதா குறித்த இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கானக் காலக்கெடுவை சபாநாயகர் ஓம்பிர்லா நீட்டித்திருக்கிறார். இந்த புதிய கல்வி ஆணைய மசோதாவில், ஏற்கனவே நடைமுறையில் தொண்ணூறு சதவிகித உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்ற பல்கலைக் கழகமானியக் குழு (UGC), தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய ஆணையம் (AICTE), ஆசிரியர் கல்விக்கான தேசிய ஆணையம் (NCTE) மற்றும் கட்டிடக்கலை படிப்புக்கான ஆணையம் (CoA) நான்கையும் கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரே அமைப்பாக, வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி ஆணையம் (விக்சித்பாரத்சிக்க்ஷாஅதிஷ்தான் – VBSA) என்ற பெயரில் மையப்படுத்தப்பட்ட புதிய அமைப்பை முன்மொழிந்துள்ளனர். “நான்கையும் சேர்த்து” என்று சொல்லும் போது மேற்சொன்ன நான்கு அமைப்புகளின் சரத்துக்களை அப்படியே எடுத்துக்கொள்வது என்று பொருள் கொள்ளக்கூடாது. இந்திய கல்விச் சந்தையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பது, இந்திய கல்வி முதலாளிகள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் இலாபத்தை உத்திரவாதப்படுத்துவது, பாதிக்கப்படும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எழுப்பும் புகார்களை கல்வி முதலாளிகள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட ஆணையங்களின் மூலமாக பஞ்சாயத்து செய்து முடித்து வைப்பது என்ற ‘உள்ளார்ந்த’ நோக்கத்திற்கு பொருந்தி வருகிற வகையில் பழைய மசோதாக்களின் சரத்துக்களை எடுத்துக் கொண்டும், புதிய சரத்துகளைச் சேர்த்தும் அதற்கான நிர்வாகக் கட்டமைப்புக் கூறுகளை உள்ளடக்கியும் VBSA மசோதாவை கொண்டு வந்துள்ளனர். இந்த புதிய அமைப்பின் நோக்கமே, உள்நாட்டு கல்வி முதலாளிகளையோ, வெளிநாட்டு கல்வி முதலாளிகளையோ கண்காணிப்பதல்ல மாறாக அரசு கண்காணிப்பிலிருந்து விலக்கி வைப்பதுதான். செயற்கை நுண்ணறிவு குறித்த இளங்கலை பட்டப்படிப்பை ஒரு கல்லூரி புதிதாகத் தொடங்க விரும்பினால், அக்கல்லூரி நிர்வாகம் AICTE, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகம், மத்திய/மாநில உயர் கல்வி அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும். இவ்வமைப்புகளோ, அப்படிப்பினை தொடங்குவதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்களா? ஆய்வக வசதிகள் உள்ளதா? பாடத்திட்டத்தின் தரம் என்ன? உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? என நேரடியாகப் பரிசோதித்தப் பின்பே செயற்கை நுண்ணறிவு படிப்பை தொடங்க ஒப்புதல் வழங்குவார்கள். சோதனையில் குறைபாடுகள் இருப்பின் சரிசெய்வதற்கான அவகாசம் தரப்படும். அதற்கு பிறகும் களையவில்லையெனில் படிப்பிற்கான அங்கீகாரம் இரத்து செய்யப்படும். அப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை அக்கல்லூரி நடத்த முடியாது. இது தற்போது இருந்து வருகிற நடைமுறை. இந்த நடைமுறை குறைந்தபட்ச அளவிற்காவது தரமான கல்வியை வழங்குவதற்கான அழுத்தத்தை தனியார் கல்லூரிகள் மீது கொடுத்து வந்தது. உதாரணமாக தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களைக் கொண்டு பொய்யாக கணக்கு காண்பித்து கொள்ளையடித்த விவகாரம் அம்பலமானதையடுத்து பெயரளவிற்காவது அரசு நடவடிக்கை எடுத்தது. கூடவே தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய அழுத்தத்திற்கு தனியார் கல்லூரி நிர்வாகம் தள்ளப்பட்டது. ஆனால் VBSA-இல் கல்லூரிகளை நேரடியாக ஆய்வுகள் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் தளர்த்தப் பட்டிருக்கின்றன. எப்படி ஒரு தொழிற்சாலைக்கோ அல்லது நகைகடைக்கோ தனியார் நிறுவனங்களின் மூலம் ISO தரச்சான்றிதழ் பெறப்படுகிறதோ அதுபோல உயர் கல்வி நிறுவனங்களும் தனியார் தரமதிப்பீட்டு நிறுவனங்களைக் கொண்டு தரச்சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். கல்லூரிகளின் தரமடிப்பீட்டைப் (Ranking) பொருத்து சொந்தப்பரிசீலனை அறிக்கையையோ (Self Assessment Report) அல்லது தனியார் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட அறிக்கையையோ சமர்பித்து அப்புதிய படிப்பிற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறது VBSA மசோதா. இதில் கல்வி ஆணையமோ அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகளோ நேரடியாக கல்லூரியின் விவகாரங்களுக்குள் தலையிட மாட்டார்கள். கல்லூரியில் எவ்வளவு குறைபாடுகள் இருப்பினும், கல்லூரி நிர்வாகம் என்ன கோருகின்றனரோ அதையே தனியார் தரமதிப்பீட்டு நிறுவனங்களும் அறிக்கையாகக் கொடுக்கப் போகின்றனர். அதையே VBSA ஆணையமும் ஏற்றுக்கொள்ளப் போகிறது. கல்லூரி நிர்வாகத்திற்கு முன்பிருந்த புறநிலை அழுத்தம் கூட தற்போது கிடையாது. ஒருவேளை கல்லூரிகள் விதிமுறைகளை பின்பற்றாதது நிருபிக்கப்பட்டால், தண்டனையாக பத்து இலட்சம் அபராதம் செலுத்தினால் போதும். கல்லூரிகள் வசூலிக்கும் நன்கொடையோடு ஒப்பிடும் போது இந்த அபராதம் ஒன்றுமில்லை. உதாரணமாக, சந்தையில் மிகவும் டிமாண்டாக உள்ள செயற்கை நுண்ணறிவு படிப்பை, கட்டமைப்பு வசதிகளைச் செய்யாமலேயே, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி தொடங்குவதாக கொள்வோம். இப்படிப்பிற்காக, சராசரியாக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் மூன்றிலிருந்து ஐந்து இலட்சம் வரை நன்கொடையாக வசூலிக்கின்றனர். கூடவே ஒரு வருடத்திற்கான கல்விக் கட்டணமாக ஒரு இலட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சம் வரை வாங்குகின்றனர். அப்படிப்பில், வருடத்திற்கு நாற்பது மாணவர்கள் சேர்க்கப்படுவதாகக் கொண்டால், வருடத்திற்கு சராசரியாக இரண்டு கோடியை அக்கல்லூரி கொள்ளையடித்து விடுகிறது. அடுத்தாண்டும் இதே கதைதான். அப்புதியப் படிப்பிற்குத் தேவையான வசதிகள் அக்கல்லூரிகளில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி தண்டனை வழங்க இரண்டாண்டுகளாவது ஆகிவிடும். அதற்குள் அக்கல்லூரி மாணவர்களிடமிருந்து நான்கு முதல் ஐந்து கோடி வரை வசூலித்துவிடும். இதில் பத்து இலட்சம் என்பது கல்லூரி நிர்வாகத்திற்கு சொற்பம். வேலை உத்திரவாதம், தரமான கல்வி, வெளிநாட்டு பல்கலைக் கழகங்களோடு கூட்டு போன்ற விளம்பரங்களின் மூலமாக பெற்றோர்களும் மாணவர்களும் திட்டமிட்டு ஏமாற்றப்படுகின்றனர். ஆனால் திட்டமிட்டு ஏமாற்றும் கல்வி முதலாளியோ தண்டிக்கப்படுவதில்லை. மாறாக அரசானது தனியார் கல்லூரிகளை மேற்பார்வையிடுவதிலிருந்து தன்னை இன்னும் தளர்த்திக் கொள்கிறது. தரகு முதலாளிகளும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களும் கல்லூரி தொடங்குவதற்கு இங்குள்ள சட்டங்களும் விதிமுறைகளும் கல்வி நிர்வாக அமைப்புகளும் கடுமையானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருப்பதினால் அதனை எளிமையாக்க (Regulation to ease institutional functioning) வேண்டியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டே VBSA மசோதாவும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை “Light but Tight” அணுகுமுறை என்கிறார் UGC இன் முன்னாள் தலைவர் பேரா. ஜெகதீஸ்குமார். கல்லூரிகளை நேரடியாக ஆய்வு செய்யமாட்டோம், ஆனால் கல்லூரிகள் விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்கிறார். கல்வி முதலாளிகளின் நலனே பிரதானமானது என்பதே இதன் அர்த்தம். கடந்த முப்பது வருடங்களில், கல்லூரிகளின் மூலம் அடைந்த இலாபத்தைக் கொண்டு ஒவ்வொரு கல்லூரி முதலாளிகளும் ஹோட்டல், போக்குவரத்து, சினிமா, ரியல் எஸ்டேட் என பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலேயே இதற்கு பல உதாரணங்கள் உண்டு. இவையெல்லாம் மாணவர்களிடமிருந்து அடித்த கொள்ளையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான். இந்நிலையில் அவர்களை கண்காணிக்க இருந்த கொஞ்சநஞ்ச வழிமுறைகளையும் தளர்த்திவிட்டு தனியார் கல்வி நிறுவனங்களை கண்காணிப்பதிலிருந்தே அரசு தன்னை விலக்கிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே VBSA மசோதாவைக் கொண்டு வந்துள்ளனர். இதைதான் ease of institutional functioning என்கிறது VBSA மசோதா. இதே அணுகுமுறையைத்தான் பிறதுறைகள் சார்ந்த மசோதாக்களிலும் மோடிகும்பல் பின்பற்றுகிறது. உதாரணமாக தொழிலாளர் சட்டதொகுப்பை எடுத்துக் கொள்ளலாம். அந்நிய தொழில்துறை மூலதனம் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காக தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளதாக மோடி கும்பல் கூறுகிறது. அதில், தொழிலாளர்கள் ஊதியம், பாதுகாப்பு பிற உரிமைகள் குறித்த விதிமுறைகளைத் தொழிற்சாலை நிர்வாகம் பின்பற்றுகிறதா என்று அரசாங்கம் ஆய்வு செய்யத் தேவையில்லை, நிர்வாகமே சொந்த அறிக்கையைக் கொடுத்தால் போதும் என்றுள்ளது. அவ்வாறு விதிமுறைகளைப் பின்பற்றாதத் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்றும் கூறுகிறது. ஏற்கனவே இருந்த தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி, முதலாளிகளுக்கு சாதகமாகவும் தொழிற்சாலை நிர்வாகம் தவறே செய்திருந்தாலும் முதலாளிகளைத் தண்டிக்காத அதேவேளையில் தொழிலாளிகளின் உரிமைகளைப் பறிக்கின்ற இந்நடவடிக்கைகளையே, அதாவது இச்சட்டத் தொகுப்பையே, Ease of doing business என்கின்றனர். மூன்று வேளாண் சட்டங்களாகட்டும், கல்வி மசோதாக்களாகட்டும், தொழிலாளர் சட்டத் தொகுப்பாகட்டும், கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டதிருத்தமாகட்டும் அனைத்தையுமே இந்தியா வல்லரசாக வளர்வதற்கான (Viksit Bharat) சட்டத் திருத்தங்கள் என்று பிரச்சாரம் செய்கிறது மோடி கும்பல். ஆனால் இவைகளுக்கு பின்னால் உள்ள ஒற்றுமை, முதலாளிகளுக்கு கட்டற்ற சுதந்திரமும் பெரும்பான்மை மக்களை கசக்கிப் பிழியலாம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இதுதான், 2047-இல் இந்தியா வல்லரசாகும் என்று காவி பாசிச கும்பல் செய்துவரும் பிரச்சாரத்தின் உள்ளடக்கம். அதை உயர் கல்வியில் அரங்கேற்றுவதற்கான சட்ட அங்கீகாரமே VBSA மசோதா. மாணிக்கம் https://www.orfonline.org/expert-speak/recasting-higher-education-governance-in-india-an-analysis-of-the-vbsa-bill VBSA Bill: MP Purandeswari to head joint panel; report submission deadline extended NAAC has bred corruption in India’s higher education system NEP-2020 document HECI bill 2025: Pros, cons, and future of higher education – YouTube Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Print (Opens in new window) Print Share on WhatsApp (Opens in new window) WhatsApp Like this:Like Loading...