இந்தியா முழுவதும் உள்ள ரேசன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொது விநியோக திட்டத்தின் மூலம் சுமார் 80 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பதிலாக, அதற்கான மானியத் தொகையை நேரடியாகப் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் (DBT – Direct Benefit Transfer) செலுத்தும் புதிய திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது.
இத்திட்டதின் ஒரு பகுதியாக சண்டிகர் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும், மார்ச் 2016 முதல் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் நகர்ப்புறங்களிலும் சோதனை அடிப்படையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்கு விரும்பம் தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதற்கு வேண்டுமானால் உத்திரவாதம் கொடுக்கலாம். மாறாக, ஒன்றிய அரசு கூறுவதுபோல் DBT-யின் முக்கிய அம்சங்களில் ஒன்றான JAM என்ற மும்மூர்த்தியைப் பயன்படுத்துவதாகும். அதாவது ஜன் தன் வங்கிக் கணக்குகள், ஆதார் தனித்துவமான அடையாள எண்கள் மற்றும் கைபேசி எண்களைக் குறிக்கிறது. இந்தக் கட்டமைப்பின் மூலம் ரேசன் கடை பொருட்களை வெளிச்சந்தையில் விற்பது, உணவுக் கிடங்குகளில் ஏற்படும் சேதம், கையாளுவதிலுள்ள தவறுகள், பொருட்களை ரேசன் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவீனங்கள், முறையற்ற ரேசன் அட்டைகள் என அனைத்தையும் தடுத்துவிட முடியும் எனக் கதையளக்கிறது.
”எலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்துவது” என்ற பழமொழிக்கு ஏற்ப ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் என அனைத்திலும் கணினிமயம் ஆக்கப்பட்ட பிறகு மக்கள் அனைவரும் இலஞ்சமின்றியே தங்களுக்கு தேவையான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் வாங்கிக்கொள்ள முடிகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஒன்றிய அரசு, தற்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியமாக 24.95 ரூபாயை மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கிறது. அதனைக்கொண்டு உங்களால் சமையல் எரிவாயு வாங்க முடியுமா? இது முடியும் என்றால் அதுவும் முடியும்.
எனவே மானியத் தொகையை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் (DBT – Direct Benefit Transfer) செலுத்தும் திட்டம் என்பது படிப்படியாக மானியத்தை குறைத்து வெளிச்சந்தையில் தனியாரிடம் வாங்கிக்கொள்ள தள்ளுவது/தூண்டுவது ஆகும். இதனடிப்படையில் தான் சமையல் எரிவாயுக்கான விலை 400 – 450 ரூபாயாக இருந்த பொழுது 240 ரூபாய் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. அதுவே படிப்படியாகக் குறைக்கப்பட்டு தற்பொழுது 867 ரூபாயாக இருக்கும் பொழுது 24.95 ரூபாயாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவே சிலருக்கு 19, 14 ரூபாயாகவும் வரவு வைக்கப்படுகிறது.
அதேபோல் ஒன்றிய அரசு இத்திட்டத்தை அமல்படுத்த விரும்பும் மாநிலங்கள், தங்களுடைய விரும்பத்தைத் தெரிவிக்கலாம் என்று மாநிலங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதுபோல் கூறினாலும், பின்னர் அவ்வாறு செய்வதற்கு அனுமதிப்பதில்லை. உதாரணமாக சர்வ சிக்க்ஷா அபியான் (SSA) திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே கல்விக்கான நிதியை மாநிலங்களுக்கு கொடுக்க முடியும் என்று சட்டத்தில் இல்லை. இருந்தும் பணம் கொடுக்க மறுத்து வருவதை இதற்கான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 14 மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன, அதேபோல், பிற மாநிலங்களில் DMK, INC, CPI(M), AAP, மற்றும் வேறு சில மாநில கட்சிகள் ஆட்சி செய்கின்றன. இதில், பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் உணவு மானியத்தை பணமாக மாற்றும் திட்டத்தில் அதாவது ரேசன் கடைகளை இழுத்து மூடும் திட்டத்தில் உடனடியாக சேர்ந்து விடுவார்கள். எனவே பாதி மாநிலங்கள் இத்திட்டத்தில் சேர்ந்த நிலையில் அதையே காரணமாக கூறி, மற்ற மாநிலங்களையும் சேரும்படி அழுத்தம் கொடுப்பார்கள் அல்லது மானியத்தை நிறுத்தி விடுவதாக மிரட்டிப் பணிய வைப்பார்கள்.
அழுத்தம் கொடுத்தும், மிரட்டியும் பணிய வைப்பதற்கான காரணம் இந்தியா இறையாண்மை கொண்ட நாடு என்று இந்திய ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டாலும், உண்மையில் அமெரிக்க சக்கரத்தின் ஒரு பல்லாகத்தான் இந்தியா இருந்து வருகிறது என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்பொழுது இந்திய ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டி வருகிறார். எனவே தான் பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தை மோடி அறிவிப்பதற்குப் பதிலாக டிரம்ப் அறிவித்தார். சமீபத்தில் இரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக வெனிசுலாவில் வாங்குவதற்கு மோடி இசைவு தெரிவித்துள்ளார் என டிரம்ப் அறிவித்தார். இவை இரண்டும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாகும்.
ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளையின் அறிக்கையின் படி, DBT அமல்படுத்துவதற்கு முன்பு (2009 – 2013) மொத்த மானியச் செலவில் 16% இருந்ததை, DBT அமல்படுத்திய பிறகு (2014 – 2024) 9% ஆகக் குறைந்துள்ளது எனக் கூறுகிறது. இது அமெரிக்க ஏகாதிபத்தியம், உலக வர்த்தக கழகத்தின் மூலம் இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தின் படி மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களைப் படிப்படியாக குறைப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில் குறைந்துள்ளது என்ற உண்மையை மறைத்து DBT-யின் மூலம் மானியங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடையும் எனக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறது ஒன்றிய மோடி அரசாங்கம்.
மேலும், உணவு மானியத்தை பணமாக மாற்றும் இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்படப்போவது சாமானிய ஏழை, எளிய மக்கள் மட்டுமில்லை. மாறாக விவசாயிகளும், விவசாயப் பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.
ஒன்றிய அரசு ரேசன் கடைகளுக்கு தேவையான பொருட்களை தற்பொழுது இந்திய விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. அதற்கான கொள்முதல் நிலையங்களையும் அமைத்துள்ளது. ஒருவேளை DBT திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால், கொள்முதல் செய்வதற்கான தேவையோ, அவசியமோ இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். மேலும், நெல், கோதுமை, கரும்பு, பருப்பு போன்றவற்றிற்கு குறைந்த பட்ச ஆதார விலையை (MSP) ஒன்றிய அரசு நிர்ணயித்து வருவதிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும். அவ்வாறு விடுவிக்கும் பொழுது விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை தனியாரிடம் மட்டுமே விற்பனை செய்யமுடியும் என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டு, விளைவித்த பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையின்றி இந்திய விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவர்கள்.
சமீபத்தில் அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறியது பற்றி அமெரிக்காவின் விவசாயத் துறை செயலாளர் புரூக் ரோலின்ஸ், இந்த ஒப்பந்தம் அமெரிக்க விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை இந்தியாவின் மிகப்பெரிய சந்தையில் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். மேலும், 2024-இல் இருந்த $1.3 பில்லியன் விவசாய வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும், அமெரிக்க விவசாயிகளுக்கு அதிக விலையையும், கிராமப்புறங்களில் புதிய வருவாயையும் உறுதி செய்யப் பயன்படும் என்றும் கூறியுள்ளார்.
இதன்பொருள், DBT-யின் மூலம் இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து அமெரிக்க ஏகபோகத்திற்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியாவை சந்தையாக மாற்றி ஏழை, எளிய நடுத்தர மக்கள் வாழ வழியின்றி மரணத்தை நோக்கி தள்ளுவதை தவிர இத்திட்டத்தை அமல்படுத்துவதனால் வேறெதுவும் நடைபெறப்போவதில்லை.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
https://tamil.getlokalapp.com/tamilnadu-news/cash-instead-of-ration-items-new-scheme-16232429



