அரசியல் சூனா பானா சீமான்

 

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் ஒரு தமிழ் தேசியவாதி என்று கூறி வருவதை தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் பேசுகிறவர்கள் கூட ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தும் தான் ஒரு தமிழ்தேசியவாதி என்று சில இலட்சம் இளைஞர்களை நம்பவைத்திருக்கிறார். இது மற்ற தமிழ்தேசியவாதிகளுக்கு கிடைக்காத ஒரு அங்கீகாரம் என்றே தமிழ்தேசிய அரசியல் தெரியாதவர்களால் பார்க்கப்படுகிறது.

சீமானுக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்திற்கு காரணம் அவர் ஒரு அரசியல் சூனா பானா என்பதனால் தான். அதுவன்றி தமிழ்தேசியவாதி என்பதற்காக அல்ல என்பதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

கண்ணாத்தாள் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு சூனா பானா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் பற்றி ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் பாரதி கண்ணன், ”ஒரு தோட்டத்துக்காரரிடம் சூனா பானா சிக்கிக் கொண்டால், அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக, இப்படி யாராவது திருடினால் என்ன செய்வாய்? ஏன் காய்கறி எல்லாம் இவ்வளவு சிறிதாக இருக்கிறது? என்று மனம் இளகும்படி முதலில் பேசுவார். இதெல்லாம் தப்பு என தோட்டத்துக்காரர் பேசினால், நான் என்ன இலட்ச ரூபாய் பொருளையா தூக்கிட்டு போறேன் என நியாயவான் போலப் பேசி, உனக்கு ஒன்று என்றால் இந்த சூனா பானா உயிரையே கொடுப்பான்” என தெரிவித்திருப்பார். இந்த உதாரணத்தை அப்படியே சீமானுக்குப் பொருத்திப் பாருங்கள். அச்சுப் பிசகாத ஒரு அரசியல் சூனா பானா என்பது அனைவருக்கும் தெரியவரும்.

இயக்குநர் சீமான் ஒரு சிறந்த கதை சொல்லி என்று அவரை அறிந்த சினிமா வட்டாரத்தினர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அதேபோல் திராவிட கழகத்தின் மேடைகளில் தொண்டை புடைக்க பெரியாரின் கொள்கைகளைப் பேசி தன்னை ஒரு சிறந்த பேச்சாளராக வளர்த்துக் கொண்டார். இந்த இரண்டு தகுதிகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பை தி.க.வினர் மூலம் பெற்றார். சீமானுக்கு முன்பும், பின்பும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் ஆளுமைகளும், கலை, இலக்கியம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களும் சந்தித்து இருக்கிறார்கள். இதில் சீமானைத் தவிர மற்ற எவரும் இவர் அளவிற்கு பிரபாகரனுடனான சந்திப்பை பொதுவெளியில் திரைக்கதை, வசனம் எழுதிப் பேசியதில்லை. அவ்வாறு பேசுவதும் அரசியல் நாகரீகமில்லை.

இருந்தபோதிலும், சீமான் ஏன் அவ்வாறு பேசுகிறார் என்றால் அவர் பேசுவது பிரபாகரனின் தமிழ்தேசிய அரசியல் இல்லை. கண்ணாத்தாள் வடிவேலுவின் சூனா பானா அரசியல் என்பதால்தான்.

சீமானின் செயல்பாடுகளை அவதானிக்கும் அரசியல் தெரிந்த ஒருவரால் அவர் சூனா பானா அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இருந்தும் போகாத ஊருக்கு வழி சொல்லும் அண்ணனின் திரைக்கதை, வசனத்திற்கு மதி மயங்கி இருக்கும் இலட்சக்கணக்கான தம்பி, தங்கைகளின் அரசியல் வேட்கை சூனா பானா அரசியலில் கரைந்து போவது தமிழக அரசியலின் சாபக்கேடு.

இதனைப் புரிந்து கொண்டு வியனரசு, ராஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம், காளியம்மாள் போன்ற முன்னணியாளர்களும், வேறு சிலரும் நா.த.க-வில் இருந்து வெளியில் வந்தாலும், சீமானின் சூனா பானா அரசியலை அம்பலப்படுத்தி பேசுவதில்லை. மாறாக அவரின் ஆளுமையை பெரிதும் மதிப்பதாக இன்றளவும் பேசுவது தமிழக அரசியல் அரங்கில் சாபக்கேடு தொடர்வதற்கான மற்றொரு காரணம்.

சீமானின் தமிழ்தேசிய அரசியலுக்கு முன்னோடிகளாக கரிகால சோழன், இராஜ இராஜ சோழன், செங்குட்டுவன் போன்றவர்களையும், ஆங்கிலேயர்களை எதிர்த்த வா.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, புலித்தேவன் போன்றவர்களையும், சமகாலத்தில் வே. பிரபாகரனையும் குறிப்பிடுகிறார்.

இவர்கள் யாரும் தனித் தமிழ்நாடு கோரி போராடியவர்கள் கிடையாது. மாறாக இந்திய விடுதலைக்காகவும், தமிழுக்காகவும் போராடியவர்கள்.  இருந்த போதிலும் இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதால் தனது இனவாத அரசியலுக்கு அடையாளங்களாக உயர்த்திப் பிடிக்கிறார் சீமான்.

வா.உ.சி அவர்கள், சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி ஆங்கிலேயரின் கடல்வழி ஏகபோகத்தை எதிர்த்தார். இதனால் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, வறுமையில் வாடினாலும் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார்.

கட்டபொம்மனும், மருது சகோதரர்களும் தாங்கள் தூக்கில் ஏற்றப்படுவோம் என்று தெரிந்தே நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணம் அடைந்தனர்.

இப்படி நாட்டின் விடுதலைக்காக தனது சொத்துக்களையும், உயிரையும் தியாகம் செய்தவர்களை வரித்துக் கொள்வதற்கு சீமானுக்கு தகுதியோ, உரிமையோ இருக்கிறதா? பிரபாகரனும், தானும் ஒன்றாக இருப்பது போல் போட்டோஷாப் செய்து தன்னுடைய கூட்டங்களில் பயன்படுத்தி, தான் பிரபாகரனின் தம்பி என்றும் வாரிசு என்றும் கூறுவதற்கு அருகதை இருக்கிறதா? சீமானின் இந்த சூனா பானா அரசியல் சிரிப்பதற்கும், எள்ளி நகையாடுவதற்கும் வேண்டுமானால் பயன்படலாம். மாறாக தமிழ்தேசிய அரசியலை வென்றெடுப்போம் எனப் பேசித்திரிவதும், வெங்காயத்தை உரிப்பதும் வேறுவேறல்ல.

அப்படி அவர் உரித்த வெங்காயத்தையும், தமிழ்தேசியம் சிரிப்பாய் சிரித்ததையும் இனி பார்க்கலாம். அண்ணன் பிரபாகரனுடன் அமர்ந்து ஆமைக்கறியும், இட்லியும் சாப்பிட்டதாக நா கூசாமல் மேடைதோறும் பேசி வந்தார். இந்தக் கூற்றை உடனடியாக யாரும் மறுக்கவில்லை. மாறாக அமைதியின் மூலம் ஆதரித்தனர். ஏனென்றால் சீமான் பேசியது தமிழ்தேசிய அரசியல் என்று நம்பினர். பிரபாகரனை கையில் எடுத்தது உண்மையை வெளி உலகிற்கு சொல்லாமல் இருந்ததற்கு மற்றொரு காரணம்.

கடந்தாண்டு தொடக்கத்தில் கடலூரில் நா.த.கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த சீமானிடம் ”விஜய் உண்மையாக நேசித்த ஒரே ஆள் நீங்கள்தான். இப்போது ஏன் முரண்பட்டிருக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், அண்ணன் தம்பி என்கிற பாச நேசமெல்லாம் வேறு. கொள்கைக் கோட்பாட்டு முரண் வேறு. பெரியாரை கொள்கை வழிகாட்டி என்கிறீர்கள், எனில் எந்த இடத்தில் அவர் உங்களுக்கு வழிகாட்டி என கேட்க வேண்டியிருக்கிறது அல்லவா? என எதிர்க்கேள்வி கேட்கிறார். ஏனென்றால் அண்ணன் சீமானுக்கு பெரியார் கொள்கை எதிரியாக இருக்கும் பொழுது தம்பி விஜய்க்கு மட்டும் எப்படி கொள்கை வழிகாட்டியாக இருக்க முடியும். எனவே தம்பிக்கு உண்மையில் அண்ணன் மீது பாசமில்லை என்று அவரே பதிலளித்திருக்கலாம்.

இருந்தும், விடாப்பிடியான கொள்கைப் பிடிப்பு கொண்ட அண்ணன் சீமான், தமிழ் மொழியையே சனியன், காட்டுமிராண்டி மொழி எனப் பேசியிருக்கிறார். திருக்குறளை மலம் என்கிறார். எனவே கம்பரும், திருவள்ளுவரும் உங்களுக்கு எதிரிகள். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா? அப்படிப் பேசிய ஒருவரை எப்படி கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்? என பெரியார் மீதான தனது வன்மத்தைக் கக்கினார்.

இந்தக் கேள்விகள் ஒன்றும் புதிதல்ல. பெரியார் மறைந்து நூறாண்டுகள் கடந்த பிறகும் பார்பனியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இதுபோன்ற கேள்விகளை முன்வைப்பதும், பின்னர் மூக்குடை படுவதும் சர்வசாதாரணம். இதற்கு சமீபத்திய உதாரணம் நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசனின் கன்னிப்பேச்சும், அதற்கு பதிலளிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பெரியார் குறித்துப் பேசியதும், கடந்தாண்டு சீமான் பெரியார் குறித்துப் பேசியதும் வேறுவேறல்ல.

பெண்ணிய உரிமை குறித்து பெரியார் கூறியதாக சீமான் சொன்னது. பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவர்களும் சொல்லத்துணியாத சொல் என்பதால் அது குறித்து சர்ச்சையானது. இப்படி கூறுவதினால் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் யோக்கியர்கள் என்று பொருள் ஆகாது. ஏனென்றால் அவர்கள் எப்பொழுதும் பார்ப்பனக் கடப்பாரைகளையே நம்பியிருக்கின்றனர். அதில் சமீபத்திய கடப்பாரை சீமான்.

இந்த நிகழ்வுக்கு முன்புவரை சீமானின் பேச்சுக்களை மௌனமாக ஆதரித்து வந்த தி.க.வினர், தமிழ்தேசியவாதிகள், அவரின் தம்பி-தங்கைகள் என அனைவரும் தங்களது மௌனத்தை கலைத்தனர். அதன்பிறகு தான் ஒன்றன்பின் ஒன்றாக சூனா பானா கதாபாத்திரம் வெளிவரத் துவங்கியது.

முதலில் பிரபாகரன் உடனான சீமானின் புகைப்படத்தை எடிட் செய்தது நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டியளித்தார். அதேபோல் பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன், சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பு தான் எனப் பேட்டியளித்தார்.

அதேபோல் சீமானுடன் அங்கு சென்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ், சீமான் ஆயுதங்களுடன் இருக்கும் படங்கள் திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதே தவிர, மாறாக அவருக்கு ஆயுத பயிற்சி கொடுக்கவில்லை. சீமான் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்தது உண்மை, ஆனால், தற்போது இருக்கும் படம் போலியானது. உண்மையான படம் என்னிடம் உள்ளது. அவர் சந்திப்பின் போது படம் மட்டுமல்ல வீடியோவும் இருக்கிறது. இது எதுவும் அவரிடம் இல்லை.

சீமானிடம் புகைப்படங்களை கொடுக்கக்கூடாது என்று சொன்னது சேரலாதன். அதுவும் சீமானுக்கு தெரியும். சீமான் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள அந்தப் புகைப்படங்களை வெளியிடுவார். அது எங்களை போன்ற படம் எடுக்க சென்றவர்களுக்கு ஆபத்தாக முடியலாம் என்பதால் அந்தப் புகைப்படங்களை கொடுக்க வேண்டாம் எனக் கூறி தவிர்த்து வந்தார்.

அதேபோல் சீமானுக்கு ஆமைக்கறி பரிமாறப்படவில்லை. எனக்குக் கொடுத்ததை அவரிடம் அங்கு வந்திருந்தபோது சொன்னேன். அதனை அவருக்கு நடந்ததாக சொல்லிக்கொள்கிறார். அவருக்கு உடும்புக்கறி கொடுக்கப்பட்டது. அவரும் ஆமைக்கறி வேண்டும் என்று கேட்டார். ஆனால், அந்த சமயத்தில் ஆமைக்கறி கிடைக்கவில்லை எனப் பேட்டியளித்துள்ளார்.

இத்தனை நடந்த பிறகும் தம்பி-தங்கைகள் அண்ணன் சீமான் தமிழ்தேசியத்தை வென்றெடுப்பார். அதில் ஆடு, மாடு மேய்த்து, அதில் பால் கறந்து குடிக்கலாம், குளங்களையும், கால்வாய்களை அமைத்து விவசாயம் செய்யலாம். க்யூபாவைப் போல் தற்சார்பு பொருளாதாரத்தை அடையளாம் என்று நம்பிக்கொண்டிருக்கும் தம்பி-தங்கைகளே ”இன்னுமாட உலகம் நம்மல நம்புது” என்ற அண்ணனின் மைண்ட் வாய்ஸ் கேட்கவில்லையா?

அண்ணனின் மைண்ட் வாய்ஸ்-ஐ ஆடியோவில் கேட்டு வெளியேறிய தங்கை காளியம்மாள், ஒருவேளை படம் எடுக்க இலங்கைக்குப் போய் ஷூட்டிங் மட்டும் எடுத்துவிட்டு திரும்பி வந்திருந்தால் இத்தனை பேருக்கான ஒரு தமிழ்த் தேசியத் தலைவராக சீமான் நமக்குள் புகுத்தப்பட்டிருக்கமாட்டார். அங்கே போய் பிரபாகரனுடன் நடைபெற்ற பத்து நிமிட பேச்சு இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு காரணமாகவும், அவரது அரசியலை நிலை பெறச் செய்யக் கூடிய மையப்புள்ளியாகவும் இருந்துள்ளது என அண்ணன் சீமானை வைத்துக்கொண்டே பேசினார் என்று சொல்வதைவிட ஒரு குத்து குத்தினார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

எனவேதான் காளியம்மாளுக்குப் பிறகு பேசிய சீமான், அவரின் பேச்சுக்கு அதே மேடையில் பதிலடி கொடுக்கும் விதமாக தனது சூனா பானா அரசியலைப் பேசியது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது என்பதால் செய்தி ஆதாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடுகைகளைப் படித்துக் கொள்ளவும்.

இதற்கு காரணம், தமிழ்தேசியம் என்ற பெயரில் அண்ணன் நடத்தி வந்த கம்பெனியில் காளியம்மாள் தனியாக கணக்கு வழக்குகளை பார்க்கத் தொடங்கியதும். அண்ணன் கோபமடைந்து தங்கையை பிசிரு என்றும், லேசாக ஒரு தட்டு தட்டினால் போதும் என்றும் கூறியது ஆடியோவில் வெளிவந்து விட்டது. அதுவரை அண்ணன் தமிழ்தேசியத்தை மீட்டுத் தருவார் என தான் கெட்டதுடன், தன்னை நம்பிவந்த பலரையும் ஏமாற்றி அண்ணனின் சூனா பானா அரசியலைப் பேசிவிட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிவிட்டார்.

அதன்பிறகு நா.த.க-வின் மாணவர் பாசறை மாநிலச் செயலாளர் தம்பி அபுபக்கர், பெண்ணிய உரிமை குறித்து பெரியார் சொன்னதாக அண்ணன் சீமான் கூறியுள்ள கருத்தை மீளாய்வு செய்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் உறவு வைத்துக் கொள்வது குறித்து பெரியார் சொன்னதாக வீரமணி பேசியிருக்கிறார். பிறர் மனைவி நோக்குவது தவறல்ல என சேலம் மாநாட்டில் பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த புறநிலை சாட்சிகளை வைத்து அதற்கான தரவுகளை தேடிக் கொண்டிருக்கிறோம். பெரியார் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டால் ஆதாரம் தருகிறோம் என்று அண்ணனின் சூனா பானா அரசியலை பேசி வருகிறார்.

பிரபாகரனை வைத்து அவ்வப்போது தம்பி-தங்கைகளை உசுப்பேத்தி வந்தாலும், தற்பொழுது தமிழ்தேசியத்தை அடைவதற்கு எளிமையான வழி திராவிடத்தை எதிர்ப்பது என்று முடிவு செய்துவிட்டார். தமிழகத்தை ஆளும் கட்சிகள் திராவிடத்தை ஒரு கொள்கையாக கொண்டுள்ளதால், நா.த.க ஒரு தமிழ்தேசிய அரசியல் கட்சி என்ற வகையில் அதனை எதிர்ப்பது தவறொன்றுமில்லை. ஆனால் திராவிடத்தை எதிர்ப்பது என்ற பெயரில் பெரியாரை இகழ்வதும், அதன்மூலம் தமிழ்தேசியத்தை அடையமுடியும் எனத் தொடர்ந்து பேசிவருவது நிச்சயமாக சூனா பானா அரசியல் தான்.

எனவேதான், கடந்தாண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ”இது பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண் தான்”என்று சீமான் பேசினார். இதனைத் தொடர்ந்து, சீமான் ஒரு பாஜக-ஆர்எஸ்எஸ் கைகூலி என அவர் மீது கடுமையான விமர்சனம் வந்தது. அதனை சீமான் உடனடியாக மறுத்தும் வந்தார். இருந்தும், மிகச் சமீபத்தில் ”பார்ப்பனக் கடப்பாரையை எடுத்து திராவிடக் கட்டிடத்தை இடிப்பேன்” என்று தனது தமிழ்தேசிய சூனா பானா அரசியலை பேசியுள்ளார்.

அதேபோல் சமீபத்தில் மின்னம்பலம் தொலைக்காட்சியில் நடைபெற்ற IAS/UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடலில், சீமான் பேசிய சில கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தனக்குத் தெரிந்த சூனா பானா அரசியல் மூலம் பதிலளித்தார்.

அதில் ஒரு மாணவர், தமிழகத்திற்கு ஒன்றிய அரசு முறையாக பணம் கொடுப்பதில்லை. ஒருவேளை நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் எப்படி கையாண்டிருப்பீர்கள் என வினவினார்.

அதற்கு பதிலளித்த சூனா பானா, ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி பணம் கொடுக்க முடியாது என்று சொல்வேன். வெள்ளைக்காரனிடம் மட்டும் தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இந்தக் கொள்ளைக் காரணிடமும் வரிகொடா இயக்கம் நடத்துவோம் என அனைவரையும் வியப்பில் ஆள்த்தினார். மேலும் கொடுக்க வேண்டியதை முறையாகக் கொடுக்காவிட்டால் நெய்வேலி மின்சாரத்தை துண்டித்து விடுவேன் எனவும் மிரட்டினார்.

ஜி.எஸ்.டி பணத்தை வசூல் செய்வதும், மாநிலங்களுக்குத் திருப்பிக் கொடுப்பதும் ஒன்றிய அரசு தான் என்பதைக் கூட தெரிந்திராத சூனா பானா, வரிகொடா இயக்கம் நடத்தப் போகிறாராம். அப்புறம் நெய்வேலி அனல் மின்சாரம் தமிழ்நாட்டில் இருப்பதனால் அதுவும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல், மின்சாரத்தை துண்டித்து விடுவாராம். அதாவது அவர் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட்டாலே தமிழ்தேசியம் அமைந்துவிடும் என்று கருதிக்கொண்டு பதிலளிக்கிறார். தேர்தல் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினால் தமிழ்தேசியம் அமைந்துவிடும் என்று கருதி பதிலளிப்பது சூனா பானா அரசியலன்றி வேறென்னவாக இருக்க முடியும்.

அதுவும் நாளை அரசு அதிகாரத்தில் பங்கெடுக்கும் மாணவர்களிடம் இப்படி பேசுவது ரமணா திரைப்படம் பார்ப்பது போல் தோன்றவில்லையா? இவையெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி ஒரு மாணவருக்குக் கூட எழவில்லையா? அந்தளவிற்கு சீமானின் சூனா பானா அரசியல் தம்பி, தங்கைகளிடம் குடிபுகுந்து விட்டதா? இந்தப் பிரம்மைகளில் இருந்து வெளியேற மீண்டும் ஒருமுறை சூனா பானா அரசியலை தம்பி-தங்கைகளுக்கு நினைவூட்டி முடித்துக்கொள்வோம்.   

முதலில் வீராவேசமாகப் பேசிவிட்டுப் பின் திட்டு வாங்குவதும், அடி வாங்குவதும் சூனா பானாவின் வழக்கம். ஆனாலும் இவையெல்லாவற்றில் இருந்தும் மீண்டுவிடும் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர் சூனா பானா. அவர் தன்னைத்தானே தேற்றிக்கொள்ளச் சொல்லும் வசனம் ”ஒத்தைக்கு ஒத்த வர்றீயா?” ”நேருக்கு நேர விவாதம் பன்ன தயாரா?” ”இந்த கேள்விக்கெல்லாம் உன்னிடம் பதில் இருக்கா? என்று எதிர்கேள்வி கேட்டுவிட்டு கிளம்பிவிடுவார். அவர் இப்படித்தான் எல்லா வீழ்ச்சிகளையும் சட்டையில் ஒட்டிய மண்ணைத் தட்டிவிடுவதுபோல் தட்டிவிட்டபடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறார்.

கண்ணாத்தாள் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, “ஏன்டா எல்லாருமே சூனா பானா ஆகிற முடியுமா?” என்று பேசியிருப்பார். அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சீமானுக்கு நிச்சயம் பொருந்தும்.

– மகேஷ்      

செய்தி ஆதாரம்:

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1171801-soona-paana-25.html

http://tamil.oneindia.com/news/chennai/a-video-released-by-the-congress-party-for-election-campaign-is-going-viral-602859.html#google_vignette

https://tamil.abplive.com/entertainment/director-bharathi-kannan-revealed-vadivelus-soona-paana-character-inspired-by-real-life-man-239444https://www.youtube.com/watch?v=8cTMXaReFDA

https://www.youtube.com/watch?v=zJkcRF1zTkY

https://www.youtube.com/shorts/mYHHKw0Fo-M

https://www.vikatan.com/government-and-politics/seeman-about-periyar

https://www.vikatan.com/government-and-politics/an-analysis-on-seeman-remarks-on-periyar-and-governor

https://tamil.news18.com/tamil-nadu/is-the-photo-of-seeman-with-prabhakaran-real-what-ellalan-cinematographer-santhosh-said-nw-mma-ws-b-1712428.html

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/videos/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-/1791594388066352/

https://tamil.news18.com/tamil-nadu/did-seeman-eat-turtle-meat-cinematographer-santhosh-explains-nw-mma-ws-b-1712440.html

https://www.bbc.com/tamil/articles/cdxe2gzr2wxo

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன