நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோவில் என்று தேர்தல் கட்சிகள் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதாவது, மக்களின் (நாட்டு) நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும், ஜனநாயக முறையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் விவாதித்து முடிவு எடுக்கக்கூடிய இடமே நாடாளுமன்றம் என அதற்கு விளக்கம் தருகிறார்கள்.
ஆனால், முதலாளித்துவ ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் கடமையே, முதலாளிகளுக்காக இயற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடிய முதன்மை டோல்கேட் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை. எனவேதான், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய மசோதாக்கள் மீது கருத்து தெரிவிக்கக் கூட ஓட்டுக் கட்சிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
உதாரணமாக, மூன்று வேளாண் சட்டங்களாகட்டும், பணமதிப்பிழப்பாகட்டும், ஜி.எஸ்.டி வரிச்சட்டங்களாகட்டும், அணுசக்தி தொடர்பான சட்டங்களாகட்டும், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டமாகட்டும், வனத்துறைச் சட்டமாகட்டும் அல்லது கல்விக் கொள்கையாகட்டும் இப்படி மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய எந்தச் சட்டங்கள் குறித்தும் பெரியளவு விவாதங்கள் இன்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிர்கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தினால் ஒப்புதல் கொடுக்கப்படுகிறது.
அந்தவகையில், நாற்பது கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்களைக் கொண்ட இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும், பெரியளவு விவாதங்கள் இன்றி தொழிற்சங்கங்களின் கருத்துக்களைக் கூட கேட்காமல் பாஜக எம்.பிக்களை மட்டும் கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இச்சட்டத் தொகுப்பு பிறச் சட்டங்களைப் போலில்லாமல், நேரடியாகவே நிதிமூலதனங்களின் இலாப வெறிக்காக, தொழிலாளர்களின் ஊதியம், பணிப் பாதுகாப்பு, வேலைநேரம், உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் தொடர்பாக கடந்த தொண்ணூறு வருடங்களாகப் போராடிப் பெற்ற கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் அடியோடு பறிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாகும்.
உதாரணமாக, இரண்டு வருடங்களுக்கு முன்பு மும்பையின் தானேவில் உள்ள ஒரு வேதி தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 12 தொழிலாளர்கள் இறந்து போயினர், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இவ்வழக்கு விசாரணையில், இரசாயனங்களை சேமிக்கும் கொதிகலன் முறையான பரிசோதனைக்கு உட்படுத்தாமலே பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது தெரிய வரவே, அத்தொழிற்சாலையின் முதலாளிகள் மற்றும் தலைமை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டனர்.
தற்போது, தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டத் தொகுப்பு 2020-இன் படி (Code on Occupational Health, Safty and Working Conditions, 2020) ஒரு தொழிற்சாலையில் விபத்து நடந்தால் அதற்கு நிர்வாகமே காரணமாக இருந்தாலும் கூட, அதன் முதலாளியை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்தில் இதுபோல நடக்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறு தொழிற்சாலை நிர்வாகத்திற்கு புத்திமதி சொன்னால் போதுமானது. தொடர்ச்சியாக விபத்துகள் நடந்தால் தண்டிக்கலாம் என்கிறது. அதாவது தொழிற்சாலை நிர்வாகத்தின் நிர்வாகக் குறைபாடினால் தொழிலாளர்கள் உயிரிழந்தாலும் கூட அவர்களைத் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது புதிய சட்டத் தொகுப்பு.
தொழிலாளி வர்க்கத்தின் உயிரைப் பறிக்கக்கூடிய இத்தகைய கொடூர சட்டத் தொகுப்பை கண்டித்துக் கூட எதிர்கட்சிகள் பேசவில்லை. மாறாக பாஜகவோடு போட்டி போட்டுக் கொண்டு, ராஜஸ்தானைப் போலவே, காங்கிரசும் திமுகவும் தத்தமது மாநிலங்களில் பன்னிரெண்டு மணி நேர வேலை என்று சட்டத் திருத்தத்தை கொண்டு வருகின்றனர். முதலாளிகளுக்கும் நிதி மூலதன கும்பல்களுக்கும் சேவை செய்வதில் ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற பேதமெல்லாம் கிடையாது.
தொண்ணூறுகளில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கைகளையடுத்து, தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதற்கான முயற்சிகள் அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டன. ஆனால், வாஜ்பாய் ஆட்சியில்தான் அதற்கான முழுமையான செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. 1999-இல் அமைக்கப்பட்ட இரண்டாவது தேசிய தொழிலாளர் கமிஷன், தொழிலாளர் சட்டத் தொகுப்புக்களை உருவாக்குவதற்கானப் பரிந்துரைகளை 2002-இல் வாஜ்பாய் அரசாங்கத்திடம் கொடுத்தது. இப்பரிந்துரைகளை ஆர்எஸ்எஸ்-இன் பிஎம்எஸ் (BMS) உட்பட அனைத்துத் தொழிற் சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. 2003-இல் மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடாளுமன்றம் நோக்கி மிகப் பெரியப் பேரணியை நடத்தின.
2004-2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, இரண்டாவது தொழிலாளர் கமிஷனின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தவில்லையென்றாலும், ஏற்கனவே இருந்து வந்த தொழிலாளர் சட்டங்களில், தொழிலாளார்கள் போராடிப்பெற்ற உரிமைகளை குறைக்கும் வகையிலானத் திருத்தங்களைச் செய்தது. கூடவே நீதிமன்றங்களும் தொழிலாளர் வழக்குகளில் அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான தீர்ப்புகளையே வழங்கின.
2014-இல் பாஜக தனது அறிக்கையில், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழிலாளர் சட்டங்கள் சீர்திருத்தப்படும் எனக் கூறியிருந்தது. அதே ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜக, இரண்டாவது தொழிலாளர் கமிசனின் பரிந்துரைகளை அமல்படுத்த தொடங்கியது. குறிப்பாக தொழில் தரகாறு சட்டம்-1947 இல், நூறு அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையை மூடுவது அல்லது தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யவதற்கு முன் அரசின் ஒப்புதல் பெறவேண்டும் என இருந்ததை, முந்நூறு அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகள் மட்டுமே தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யவதற்கு முன் அரசின் ஒப்புதல் பெறவேண்டும் எனத் திருத்தியது.
இச்சட்டத்திருத்தத்தின் மூலம் தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்துகொள்ளலாம் என்ற அதிகாரத்தை முதலாளிகளுக்குக் கொடுத்தது இராஜஸ்தான் அரசாங்கம். 2017-18 ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் உள்ள 90 சதவிகிதத் தொழிற்சாலைகளில் முந்நூறுக்கும் குறைவான தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். எனவே இது தொழிலாளர்களுக்கு வேலை நிச்சயமற்றத் தன்மையை அதிகமாக்கியது. இராஜஸ்தானை அடுத்து பாஜக ஆளுகின்ற உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் அமலுக்கு வந்தன.
பதினைந்து மாநிலங்கள், தொழில்தகராறு சட்டம், 1947-இல் 300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகள் மட்டுமே வேலை நீக்கம் மற்றும் ஆலை மூடுவதற்கு முன் அரசின் அனுமதி பெற்றால் போதும் எனத் திருத்தங்கள் செய்தன. ஆறு மாநிலங்கள் நிலையான ஆணைகள் சட்டம் 1946-இன் கீழ் குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பை (Fixed Term Employment) அமல்படுத்துவதாக அறிவித்தன. பதினைந்து மாநிலங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, பெண்கள் இரவு ஷிப்டில் பணிபுரிவதற்கான திருத்தங்களைக் கொண்டுவந்தன. COVID-19 காலத்தில், ஏறக்குறைய பன்னிரெண்டு மாநிலங்கள் வேலை நேரத்தை 10-மணியில் இருந்து 12-மணி வரை உயர்த்துவதாக அறிவித்தன. இதேபோல, பன்னிரெண்டு மாநிலங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் (கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு) சட்டம், 1970-இல் திருத்தங்கள் செய்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என அறித்தது. இவையனைத்துமே ஒன்றிய அரசு சட்டத் தொகுப்பினை அமல்படுத்துவதற்கு முன்பே, மாநில அரசுளால் அமல்படுத்தப்பட்ட இரண்டாவது தொழிலாளர் கமிசனின் பரிந்துரைகளாகும்.
2014-இல் ஆட்சிக்கு வந்த மோடி கும்பல், இரண்டாவது தொழிலாளர் கமிஷனின் பரிந்துரைகளின் படி, நடப்பில் இருந்த, 44 தொழிலாளர் சட்டங்களில், 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றுவதற்கான வேலைகளைத் தொடங்கியது. தொழிலாளர் சட்டத் தொகுப்பு என்பது, ஏற்கனவே இருந்த தொழிலாளர் சட்டங்களை இணைத்து ஒரே சட்டமாக திருத்துவதாகும். உதாரணமாக தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பாக தனித் தனியாக இருந்த வெவ்வேறு சட்டங்களை இணைத்து ஒரே சட்டமாக, ஊதியச் சட்டத் தொகுப்பு (Code on Wages-2019), என்று மாற்றப்பட்டுள்ளது. இது வெறும் பழைய தொழிலாளர் சட்டங்களை இணைப்பது மட்டுமல்லாமல், முதலாளிகளின் நலனுக்காக, ஏற்கனவே தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த உரிமைகளைப்/சலுகைகளைப் பறிப்பதற்கான திருத்தங்களையும் செய்துள்ளனர்.
இதேவகையில், தொழில்துறை தொடர்பான சட்டத் தொகுப்பு-2020, சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு-2020 மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டத் தொகுப்பு-2020 என்ற மூன்று சட்டத் தொகுப்புகளும் உருவாக்கப்பட்டன.
முதலில், ஊதியச் சட்டத்தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு சில திருத்தங்களுடன் 2019 ஜூலையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கொரோனாவிற்கு பிறகு நடந்த முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரில், அதாவது செப்டம்பர் 2020-இல் மீதமுள்ள மூன்று சட்டத் தொகுப்புகளும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
ஊதியச் சட்டத் தொகுப்பிற்கு, ஒப்புக்காவது தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. ஆனால் மற்ற மூன்று சட்டத் தொகுப்புகளுக்கும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. இச்சட்டத் தொகுப்பை விவாதிக்க, நாடாளுமன்றத்தின் மேலவைக்கு மூன்று மணி நேரமும், கீழவைக்கு இரண்டு மணி நேரமும் ஒதுக்கியது மோடி கும்பல். செப்டம்பர் 2020-ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராகப் போராடிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்தனர். இச்சூழலைப் பயன்படுத்தி பா.ஜ.க உறுப்பினர்களைக் கொண்டே மூன்று சட்டத் தொகுப்புகளையும் நிறைவேற்றியது மோடி கும்பல். இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு தொழிற்கழகங்களின் முப்பதாண்டு காலக் கோரிக்கையான தொழிலாளர் சட்டத் திருத்தம், நிறைவேற்றி ஐந்து வருடங்களுக்குப் பிறகு நவம்பர் 21, 2025-இல் இருந்து நான்கு சட்டத் தொகுப்புகளும் அமலுக்கு வருவதாக மோடி கும்பல் அறிவித்தது.
- மாணிக்கம்
தகவல் உதவி
- https://www.business-standard.com/article/pti-stories/thane-factory-blast-death-toll-rises-to-12-116052800183_1.html
- https://thewire.in/labour/decentralisation-of-labour-reforms-who-wants-the-national-codes
- Decoding the labour codes -A handbook for workers – Centre for Workers’ Management.




