டி.டி.வி – ஈ.பி.எஸ் இணைப்பு : பாஜகவின் சாட்டைக்கு ஆடும் அடிமை அதிமுக

பாஜகவின் செயல்பாடுகள் அனைத்தையும் ஓட்டுக் கட்சிகளின் வழக்கமான அரசியலாகப் பார்க்க முடியாது. ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் வென்று ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடிப்பது மட்டுமோ பாஜகவின் நோக்கம் அல்ல.

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன், டிடிவி தினகரன் அமமுகவும் கை கோர்த்துள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவும் அங்கம் வகிக்கிறது. மோடி கலந்து கொண்டு, செங்கல்பட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும் ஒரே மேடையில் தோன்றியது மட்டுமல்லாமல், கைக்குலுக்கி அன்பைப் பரிமாரிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்னர், ‘டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை’ எனக் கூறி வந்த எடப்பாடி பழனிச்சாமியும், ‘பழனிச்சாமியுடன் கூட்டணிக்குப் போவதற்கு பதில் தூக்கு மாட்டி தொங்கிட்டுப் போயிடலாம் ’ எனக் கூறிய டிடிவி தினகரனும் இன்று “எங்களுக்குள் இருப்பது பங்காளிச் சண்டை” என்றும் “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” என மேடையில் பேசுகிறார்கள்.

அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி.டி.வி. தினகரன், “எங்களுக்குள் இருந்தது குடும்ப பிரச்சனை, ஒருதாய் மக்களாக கூட்டுக் குடும்பமாக இருந்த எங்களுக்குள் பிரச்சனை” என்றும் “அமித்ஷாவும் மோடியும் அழைத்துப் பேசி ஒன்றாக இணைந்து போட்டியிடுங்கள் எனக் கூறியதால் தற்போது இணைந்திருக்கிறோம்” என்றும் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்தற்குப் பிறகு, “டிடிவி தினகரன் தவெக கூட்டணிக்கு வர நினைத்தார். கூட்டணி பற்றி யாராவது பேசினாலே தில்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்” என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இதே செங்கோட்டையன்தான் அதிமுகவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக தில்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீத்தாராமனுடன் ஆலோசனை பெற்று அதன் பிறகு அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்தார்.

அதே போல எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கி அதிமுக கட்சியை மீட்கப் போவதாகக் கூறிக்கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வமும், தற்போது தர்மயுத்தத்தை எல்லாம் கைகழுவிவிட்டு, டி.டி.வி. தினகரனை இணைத்துக் கொண்டது போல தன்னையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்றும் அதற்கு டி.டி.வி. தினகரன் நினைத்தால் உதவி செய்ய முடியும் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து ஏற்கெனவே ஓ.பன்னீர் செல்வம் அமித்ஷாவைப் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுகவின் முன்னாள், இந்நாள் தலைவர்கள் அனைவரும் பாஜக தலைவர்களான அமித்ஷா மற்றும் மோடியின் சொல்லைக் கேட்டு நடப்பவர்களாகவே இருக்கின்றனர்.

மொத்தத்தில் அதிமுக கட்சியில் யார் இருக்க வேண்டும், யார் விலக வேண்டும், அந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என எல்லா முடிவுகளையும், தில்லியில் அமர்ந்துகொண்டு அமித்ஷா எடுக்கிறார். அதிமுக எனும் கட்சியை பாஜக முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது, இயக்குகிறது. அதிமுகவை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி அது தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தயவில் ஐந்து எம்.எல்.ஏ.க்களை பெற்றது போல இந்த முறையும் அதற்கு அதிக அளவிலான இடங்களைக் கைப்பற்ற நினைக்கிறது.

அதிமுக கட்சியின் தலைவர்கள் அனைவரையும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யைக் கொண்டு மிரட்டித்தான் இதனை பாஜக சாதித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. பாஜக கூட்டணியில் இணைந்திருக்கும் பாமகவின் அன்புமணியை, பாஜக எவ்வாறு மிரட்டிப் பணியவைத்தது என்று பாமக கட்சியின் நிறுவனரான இராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு நடத்தி வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

பாஜகவிற்கு இது புதிதல்ல. பாஜகவின் நீண்டநாள் கூட்டாளியாக இருந்த மராட்டிய மாநிலத்தின் சிவசேனா கட்சியினை ஏக்நாத் ஷிண்டேவைக் கொண்டு உடைத்தது பாஜக. அதன்பிறகு உத்தவ் தாக்கரே தலைமையில் இயங்கிய சிவசேனாக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை ஒருவர் பின் ஒருவராக உருவியெடுத்தது. இருபது வருடங்களுக்கும் மேலாக சிவசேனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த, அக்கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படுகின்ற மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் தோற்றுப் போகும் அளவிற்கு சிவசேனா கட்சியினை பாஜக வலுவிழக்கச் செய்திருக்கிறது.

ஆனால் பாஜக குறித்து அதன் எதிர்க்கட்சிகள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அதன் பாசிச முகத்தைப் பற்றியும், அதன் நோக்கங்களைப் பற்றியும் எதிர்க்கட்சிகள் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்தியாவில் காவி கார்ப்பரேட் பாசிச அரசை நிறுவத்துடிக்கும் பாசிச சக்தியான பாஜகவை மற்ற தேர்தல் கட்சிகளைப் போல மற்றொரு கட்சியாகப் பார்க்க முடியாது. இந்தப் பார்வை தமிழ்நாட்டில் இருக்கின்ற பாசிச எதிர்ப்பு பேசுகின்ற ஓட்டுக் கட்சிகளுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ஏன் தேசிய அளவில் எதிர்க்கட்சியாகச் செயல்படுகின்ற காங்கிரஸ் கட்சிக்கே கூட இல்லை.

பாஜக தனது அரசியல் எதிரிகளை மட்டுமன்றி தனது கூட்டணிக் கட்சிகளையும் கூட வழிக்குக் கொண்டு வருவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட அரசுத் துறைகளைப் பயன்படுத்துகிறது. கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களையே கூட விலைக்கு வாங்குகிறது. நீண்ட நாட்களாகத் தனது கூட்டாளியாக இருந்த சிவசேனா, பிஜு ஜனதாதளம் போன்ற கட்சிகளை உடைத்து அவர்களின் அரசியல் செல்வாக்கை அழிக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை ஊழல் வழக்குகளில் கைது செய்து அவர்களது கட்சிகளை இல்லாமல் ஆக்குகிறது.

பாஜகவின் இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் ஓட்டுக் கட்சிகளின் வழக்கமான அரசியலாகப் பார்க்க முடியாது. ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் வென்று ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடிப்பது மட்டுமோ பாஜகவின் நோக்கம் அல்ல. பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு முன்னதாக, தன்னை எதிர்க்கக் கூடிய அளவில் எந்தவொரு கட்சியும், இயக்கமும் மக்களின் ஆதரவு பெற்று வலுவாக இல்லாமல் பார்த்துக் கொள்வது பாசிசத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

நெருக்கடியான காலகட்டங்களில், முதலாளித்துவக் கட்சிகள் அம்பலப்பட்டு நிற்கும்போது, அவர்களது ஊழல்களும், முறைகேடுகளும், மக்கள் விரோத நடவடிக்கைகளும் வெளிப்பட்டு மக்களிடம் அவர்களது செல்வாக்கு சரியும் போது, இயல்பாகவே பாசிசத்தால் இதனைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் நெருக்கடி இல்லாத காலகட்டங்களில், இதுபோன்ற திட்டமிட்ட செயல்பாடுகளின் மூலமாக எதிர்க்கட்சிகளை இல்லாமல் செய்யும் வேலையை பாசிசம் செய்து முடிக்கிறது.

காவி கார்ப்பரேட் பாசிசத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில், நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட்டு, ஒற்றைக் கட்சியின் சர்வாதிகாரத்தின் கீழ் நாட்டைக் கொண்டு வருவதுதான் பாசிஸ்டுகளின் செயல் திட்டம். அந்த திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. எல்லாக் கட்சிகளையும் வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்றே பாசிசம் நினைக்கின்றது.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை முழுமையாக உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. பாஜக அரசியல் கட்சிகளை அழிக்கிறது என்று வாயளவில் கூறினாலும் கூட, மக்களிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு, மாநில அளவில் அரசு அதிகாரத்தில் இருப்பது, ஆகியவை காரணமாக பாசிசத்தின் கொடூரங்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். தங்களால் அதனைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என நினைக்கிறார்கள். இந்த ஓட்டுக் கட்சிகள் அடுத்து வரவிருக்கின்ற தேர்தல்களைத் தாண்டி சிந்திப்பதில்லை.

இதற்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு ஒரு காரணம் என்றால் மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது அந்தக் கட்சிகளின் கட்டுமானம். இன்றைக்கு ஓட்டுக்கட்சியில் இருக்கும் தலைவர்கள் அனைவரும், நேற்று ஆரம்பிக்கப்பட்ட நடிகர் விஜயின் கட்சி உட்பட, சொத்து சேர்ப்பதையும், சேர்த்த சொத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாக்க கொண்டே அரசியல் செய்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை எவ்விதமான துன்ப துயரங்களையும் எதிர்கொள்ளாமல், சேர்த்த சொத்துக்களை அனுபவிக்க வேண்டும். எனவே பாசிச எதிர்ப்பு என மேடையில் முழங்கினாலும் நடைமுறை என வரும் போது இது வேண்டாத வேலை என்றுதான் சிந்திக்கிறார்கள்.

ஆகையால்தான் பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் இவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டாலும் கூட ஒன்றிரண்டு தொகுதிகளுக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் அந்தக் கூட்டணியைக் காவு கொடுக்கவும் இந்தக் கட்சிகள் தயங்குவதில்லை. இதுவரை நடந்துள்ள பாராளுமன்ற சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒரு முறை, ஒரே ஒரு முறை கூட இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்திக்கவில்லை.

பாசிச எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கூட கேரளத்திலும், தில்லியிலும், மேற்குவங்கத்திலும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிடுகின்றன. ஒரு வார்டு தேர்தலில் கூட இவர்களால் ஒற்றுமையாகப் போட்டியிட முடியவில்லை.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஓட்டுக்கட்சிகளில் ஒரு பிரிவு, நெருப்பைத் தேடிச் செல்லும் விட்டில் பூச்சிகள் போல, பாசிசத்துடன் கைகோர்த்துக் கொண்டு தங்களது அழிவிற்குத் தாங்களே பாதையமைத்துக் கொள்கின்றன. பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறும் இன்னொரு பிரிவு அதில் எவ்வித உறுதியும் இல்லாமல், பெயருக்கு பாசிச எதிர்ப்பு என வைத்துக் கொண்டாலும் நடைமுறையில் தங்களது வழமையான ஓட்டுச் சீட்டு அரசியல் நடவடிக்கைகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த நிலை மாறாதவரை, காவி கார்ப்பரேட் பாசிசத்தின் முன்னால் இந்த ஓட்டுக் கட்சிகள் எல்லாமும் மக்கள் செல்வாக்கை இழந்து ஒன்றும் இல்லாமல் காற்றில் கரைந்து போவதைத் தடுக்க முடியாது.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன