திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு அருகில் உள்ள ஈட்டிவீரம்பாளையம் கிராமத்தில் கடவுளின் பெயரைச் சொல்லி இந்து முன்னணி கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 1994 -ஆம் ஆண்டு ஈட்டி வீரம்பாளையத்தில் உள்ள 125 தலித் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச நிலப் பட்டாக்களை வழங்கியது. சுமார் 1.15 ஹெக்டர் அளவிலான நிலத்தைத் தலித் மக்களுக்கு இலவசமாக அன்றைய தமிழ்நாடு அரசு வழங்கியது. தலித் மக்களுக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஆக்கிரமித்து குமரன் குன்று என்ற பெயரில் கோயிலைக் கட்டி இருக்கிறார்கள் அப்பகுதி ஆதிக்கச் சாதி வெறியர்கள். இந்த நடவடிக்கையைக் கண்டித்து அப்பகுதி தலித் மக்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புடன் இணைந்து அந்த இடத்தை மீட்கப் பல கட்டப் போராட்டங்களை நடத்தியதோடு மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும் போராடி வந்தார்கள்.
சென்ற வருடம் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குமரன் குன்று என்ற பெயரில் கோயில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டா நிலத்தை ஆறு வாரக் காலத்திற்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2025 அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி 6-ம் தேதி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றும் வேலையில் ஈடுபட்டனர்.
இந்தத் தருணத்திற்காக காத்திருந்த பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பல் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஆக்கிரமைப்பை அகற்றக் கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது எங்களது கடவுள்களை எப்படி அகற்றலாம் என இந்து முன்னணி காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையிலான சங் பரிவார கும்பல் அதனைத் தடுத்து நிறுத்தியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
இதனை முறியடித்து வருவாய்த் துறையினருடன் அப்பகுதி மக்களும் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்றி தலித் மக்களுக்கு நிலத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர். திருப்பரங்குன்றத்தில் நிலஅளவைக் கல்லை தீபத்தூண் எனக் கூறி கலவரத்தில் ஈடுபடுவது, ஈட்டி வீரம்பாளையத்தில் தலித் மக்களுக்கு உரிய நிலத்தில் கோயில் கட்டி ஆக்கிரமிப்பு செய்து கலவரம் செய்ய முயல்வது. இதுதான் இந்து முன்னணி கும்பலின் நோக்கமாக உள்ளது. சங்பரிவாரக் கும்பல்களை பொறுத்தவரைக் கடவுள், பக்தி என்பதெல்லாம் கலவரத்திற்கான குறியீடுகள் மட்டுமே. அப்பகுதி மக்களுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புத் தோழர்களும் உறுதியாக நின்று போராடி ஆக்கிரப்புகளை அகற்றி நிலத்தை மீட்டுள்ளனர். கடவுளின் பெயரைச் சொல்லி அப்பகுதியில் கலவரத்தை தூண்டி காலுன்ற நினைத்த சங்பரிவார கும்பலின் கனவு கானல் நீராகிப் போனது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டமே வெல்லும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.
தமிழக அரசே!
ஆக்கிரமிப்பை அகற்ற வந்த வருவாய்த்துறையினரை மிரட்டிய சங்பரிவார கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்!
தலித் மக்களுக்கு வழங்கிய பட்டா நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியவர்களை வன்கொடுமை வழக்கில் கைது செய்!
உழைக்கும் மக்களே!
கடவுள், பக்தியின் பெயரில் கலவரத்தை நடத்த வரும் சங்பரிவாரக் கும்பல்களை விரட்டியடிப்போம்!
செய்தியாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
அவினாசி




