பாசிச எதிர்ப்பு முகமூடியில்
தி.மு.க.வின் ஆளும்வர்க்க அரசியல்

செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழின் தலையங்கம்

சென்னையில் பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்புக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. நிரந்தரப்பணி கோரி செவிலியர்கள் நடத்தும் போராட்டமும் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து நடக்கிறது. இவைதவிர இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் என பல தரப்பிலிருந்தும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசினை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இப்போராட்டங்களில் பெரும்பாலானவை கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி நடத்தப்படும் போராட்டங்களே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாததன் விளைவாகத்தான் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் போராடுபவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் திமுக அரசு பரிசீலிப்பது கூட இல்லை.

தூய்மைப் பணியாளர்களது நிரந்தர வேலை, அரசு வேலை என்ற கோரிக்கையை ஏற்காமல் அவர்களுக்குச் சோறு போடுகிறோம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குகிறோம் என ஏமாற்றப்பார்க்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் போராடும் போது அத்தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவிவிடுகிறது. போராடும் தொழிலாளர்களை நள்ளிரவில் அப்புறப்படுத்துவது, கைது செய்வது, முன்னணியாளர்கள் மீது அடுத்தடுத்து வழக்குத் தொடுப்பது என தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவிவருகிறது.

தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பேசுகின்ற செயல்படுகின்ற மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப் போடுவது, போராட்டக்காரர்களைத் தனிமைப்படுத்த அவர்களை மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சென்று சந்திக்க முடியாதவண்ணம் தடுத்து நிறுத்துவது எனக் கடும் அடக்குமுறையை ஏவிவருகிறது.

அப்படியொன்றும் நிறைவேற்ற முடியாத, அசாதரமாண கோரிக்கைகள் எதையும் இவர்கள் முன்வைக்கவில்லை. செவிலியர்கள் போராட்டத்தை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 8000-க்கும் அதிகமான செவிலியர்கள் தற்காலிகப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நிரந்தரப் பணியில் இருக்கும் செவிலியர்கள் செய்கின்ற அதே வேலையைத் தான் செய்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு மாதம் 18,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகின்றது. இவர்களை வேலைக்கு எடுக்கும் போது இரண்டு ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த பிறகு அவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும் என அரசு தரப்பிலிருந்து வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும் பணிநிரந்தரம் பெறாமல் பல செவிலியர்கள் இன்னமும் தற்காலிகப் பணியாளர்களாகவே உள்ளனர்.

தற்காலிகச் செவிலியர்கள் செய்யும் அதே வேலையில் இருக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு மாதம் 55,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகின்றது. இவர்களோ 18,000 சம்பளத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக செவிலியர்கள் தொடுத்த வழக்கில், தற்காலிகச் செவிலியர்களுக்கும் நிரந்தரச் செவிலியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்ற ஆகஸ்டு (2025) மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த போது அதனைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் தற்காலிக செவிலியர்களின் ஊதியத்தை அதிகரிக்கும்படி தமிழக அரசிற்கு உத்தரவிட்டது.

தமிழக அரசு இதற்குச் செவிமடுப்பதாகத் தெரியவில்லை. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகளை அமுல்படுத்தக் கோரி தற்காலிக செவிலியர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் 6 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 18 அன்று சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் போராடிக் கொண்டிருந்த செவிலியர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள். பின்னர் சுமார் ஐந்து மணி நேரம் வேனிலேயே அடைத்து வைத்து நகரம் முழுவதும் சுற்றிவிட்டு இரவானதும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையைத்தில் கொண்டுவந்து அவர்களை இறக்கிவிட்டிருக்கின்றனர்.

அப்படியிருந்தும் களைந்து செல்லாத செவிலியர்கள் கிளாம்பாக்கத்திற்கு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்தில் கூடி தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்படிப் போராடிக் கொண்டிருந்த செவிலியர்கள் மறுநாள் காலை தங்களது இயற்கை உபாதைகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த போது அவர்கள் பேருந்து நிலைய கழிப்பிடங்களைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி போலீசார் விரட்டியடித்துள்ளனர். இத்தனை அடக்குமுறைகளையும் சந்தித்த பிறகும் தங்களது போராட்டத்தினைக் கைவிடாத செவிலியர்களை மீண்டும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஊரப்பாக்கத்தில் விட்டிருக்கின்றனர். அவர்கள் அங்கேயும் போராடியதால் அதற்கு பிறகு மீண்டும் இழுத்துச் சென்று நகருக்கு வெளியே கூடுவாஞ்சேரியில் இறக்கிவிட்டிருக்கின்றனர்.

போராடிய செவிலியர்களைத் தகாதவார்த்தைகளால் திட்டுவது, வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றும்போது அவர்களைத் தாக்குவது, கலைந்து செல்லாவிட்டால் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என மிரட்டுவது  — என போலீசார் இந்த ஆறு நாட்களில் போராடிய செவிலியர்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையான சித்தரவதைக்கு உள்ளாக்கியிருக்கின்றனர்.

திமுக அரசுக்கு எதிராகப் போராடிய செவிலியர்கள் மீது தொடுக்கப்பட்டதற்கு சற்றும் குறையாத ஒடுக்குமுறையினை தூய்மைப் பணியாளர்களும், இடைநிலை ஆசிரியர்களும் எதிர்கொண்டிருக்கின்றனர். இருந்தும் தங்களது கோரிக்கைகளுக்காக அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசு இன்றுவரை இவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

செவிலியர்கள் போராட்டம் குறித்தும் அவர்களது கோரிக்கைகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘காலிப் பணியிடங்கள் அவ்வபோது உருவாகும்போது அதில் ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வது என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்’ என்று கூறினார். ஊதிய உயர்வு குறித்து பேசும் போது “கோவிட் காலத்தில் செவிலியர்கள்  பெரிய அளவில் பொதுமக்களின் உயிர் காத்ததால், அவர்களுக்கு 14,000 ரூபாயாக இருந்த சம்பளம் 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.” எனக் கூறி இதற்கு மேல் உயர்த்த முடியாது என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவிற்கும் குறைவான செவிலியர்கள் உள்ளதால் ஏற்கெனவே தற்காலிக செவிலியர்களுக்கு வேலைச் சுமை அதிகமாக இருக்கிறது. இன்னமும் அதிக அளவில் செவிலியர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் எனச் செவிலியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் சுகாதாரத் துறை அமைச்சரோ இதற்கு நேர்மாறாக காலிப்பணியிடங்கள் உருவாகும்போது பணி நிரந்தரம் செய்வதாகக் கதையளக்கிறார்.

இவர்களது நோக்கமெல்லாம், தனியார்மயத்தின் முக்கிய அம்சமான நிரந்தரப் பணியாளர்களை ஒழித்துவிட்டு தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டே எல்லாத் துறைகளையும், தொழிற்சாலைகளையும் இயக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதுதான். மாநில அரசு நினைத்தால் ஒரு கையெழுத்தில் இந்தத்   தொழிலாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்துவிட முடியும். தூய்மைப் பணியாளர்களோ, செவிலியியர்களோ மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கின்றனர் இவர்களைப் பணிநிரந்தரம் செய்வது மாநில அரசுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்காது. ஆனால் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ள தனியார்மயம் என்ற கொள்கைதான் இதற்குத் தடையாக உள்ளது.

தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரைக் கடுமையாக ஒடுக்குவது போல ஊதிய உயர்வு கோரும் எல்லோரையும் திமுக அரசு ஒடுக்குவதில்லை. இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரியும் பார்ப்பன அர்ச்சகர்கள் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக இந்த திராவிட மாடல் திமுக அரசால் நிறைவேற்றித் தரப்படுகின்றது. 2019இல் 10,000 ரூபாயாக இருந்த இந்தப் பார்ப்பன அர்ச்சகர்களது சம்பளம் திமுக அரசு பதவியேற்ற பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 41,800 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நிலையான மாத சம்பளம் மட்டுமே, இது தவிர அர்ச்சனைத் தட்டில் விழும் பணத்திற்கு கணக்கில்லை. அதுமட்டுமன்றி இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வேத பாடசாலைகளில் முழுநேரமாகப் படிக்கும் மாணவர்களுக்கு “கல்வி ஊக்கத்தொகை”யானது மாதம் 1000 ரூபாயிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதுவே பகுதி நேரமாக (part time) வேதம் படிப்பவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றது.

இதுதவிர பார்ப்பன அர்ச்சகர்களின் பிள்ளைகள் முதல் தலைமுறையாக கல்லூரிக்கு வருகையில் அவர்களின் முழு கல்விச் செலவையும்  தமிழக அரசே பொறுப்பேற்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தூய்மைப் பணியாளர்கள், ஊதியம் உயர்த்தப்படாவிடில் தங்களது அடுத்த தலைமுறையும் துப்புரவுத் தொழிலையே செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் எனப் போராடும் போது, அவர்கள் மீது தயவுதாட்சன்யம் இன்றி ஒடுக்குமுறையை ஏவிவிடும் “சமூகநீதி”, திராவிட மாடல் அரசு. பார்ப்பன அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதற்கு தானே முன்வந்து வசதி செய்து கொடுக்கிறது.

தூய்மைப் பணியை நிரந்தப் பணியாக மாற்ற முடியாது எனக் கூறும் இதே திமுக அரசுதான், அர்ச்சகர் பணியை அரசுப் பணியாக நிரந்தரப் பணியாக மாற்றி சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கிறது.

சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய நோய்க்கிருமி என மேடைகளில் முழங்கும் திமுகவினர் நடைமுறையில் சனாதன தர்மத்தை, நவீன மனுதர்மத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதாக வாய்கிழியப் பேசினாலும் நடைமுறையில் பாசிஸ்டுகளுக்கே சவால்விடும் அளவிற்கு ஒடுக்குமுறையை உழைக்கும் மக்கள் மீது ஏவி வருகின்றனர்.

ஒரு ஆளும்வர்க்க கட்சி என்ற வகையில் திமுக என்பது எப்போதும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான கட்சி என்ற போதும், காவி பாசிச எதிர்ப்பு என்ற முகமூடியணிந்து உழைக்கும் மக்களின் நண்பனாகத் தன்னை அது முன்னிறுத்திக் கொள்கிறது. திமுக அணிந்திருப்பது முகமூடி எனத் தெரிந்தும் கூடப் பலரும் அதனை பாசிச எதிர்ப்பின் தலைமை சக்தி என கூறிக்கொண்டிருக்கின்றனர். திருப்பரங்குன்றம் விசயத்தில் திமுகவைப் புகழ்ந்து பேசி பாசிச எதிர்ப்புப் போராளி எனப் பாராட்டியவர்கள் தொழிலாளர்கள் போராட்டங்களைத் திமுக அரசு தொடர்ந்து ஒடுக்குவது பற்றிப் பேசாமல் கள்ள மௌனம் காக்கின்றனர்.

உழைக்கும் மக்களுக்கு எதிராக கொடூரமான ஆயுதங்களுடன் களத்தில் எதிரில் நிற்கும் எதிரியை அடையாளம் காட்டுவது எளிது. ஆனால் உதட்டில் தேன் தடவிய வார்த்தைகளுடன், நெஞ்சில் விசத்தைக் கொண்டு, ஆயுதத்தை முதுகுக்குப் பின்னால் மறைத்துவைத்துக் கொண்டு நட்புப் பாராட்டிக் கொண்டு கூடவே இருக்கும் இதுபோன்ற போலி நண்பர்களை அடையாளம் காண்பதும், அவர்களை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்துவதும் மிகவும் கடினமானது. அதேசமயம் பாசிச எதிர்ப்பிற்கே உலைவைத்துவிடும் இதுபோன்ற சக்திகளை அம்பலப்படுத்துவது என்பது அவசியமானதும் கூட.

தற்போது பலவீனமாக இருந்தாலும், பாசிச எதிர்ப்பில் ஊன்றிநிற்கக் கூடிய சக்தி என்றைக்குமே உழைக்கும் வர்க்கம்தான் என்பதையும், ஆளும்வர்க்க கட்சிகள் தற்போது வலுவாக இருப்பதாக மார்தட்டிக் கொண்டாலும், பாசிசம் ஏறித் தாக்கும் போது, எதிர்ப்பைக் கைவிட்டு பாசிஸ்டுகளின் பக்கம் ஓடிப்போகக் கூடிய ஊசலாடும் சக்திகள்தான் என்பதையும் பிரித்துப் பார்த்து, திமுக போன்ற ஊசலாடும் சக்திகளை அம்பலப்படுத்த பாசிச எதிர்ப்பு முன்னணி கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன