தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்திரப் பட்டினியை பரிசாக்கும் ஊதியத் தொகுப்பு

ஊதியத் தொகுப்பு-2019, தொழிலாளி வர்க்கம் தனக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு பழையச் சட்டங்கள் வழங்கியிருந்த உரிமைகளை பறித்துள்ளதோடு அதை நிர்ணயிப்பதற்கான அதிகாரத்தை முதலாளிகளிடம் கொடுத்துள்ளது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தினை நிரந்திரப் பட்டினியை நோக்கித் தள்ளுவதற்கான கதவை திறந்துவிட்டுள்ளது.

நீண்ட இழுபறிகளுக்கு பிறகு, ஜனவரி முதல் தேதியிலிருந்து நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலுக்கு வந்ததாக  அறிவித்திருக்கிறது  மோடி அரசாங்கம். அதையொட்டி, நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பின் விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கையை மக்கள் கருத்துக் கேட்பதற்காக வெளியிட்டுள்ளது ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம். இவ்விதிமுறைகளை இறுதி செய்து வரும் நிதியாண்டிலிருந்து (மார்ச் 2026) முழுமையாக அமலுக்கு கொண்டுவரத் மோடி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன.   

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தவும் முதலீடுகளை  ஈர்ப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழிலாளர் சட்டத்திருத்தம் அவசியமானது என்கிறது மோடி கும்பல். ஆனால், ஆர்எஸ்எஸ்-இன் தொழிற்சங்கமான பாரத் மஸ்தூர் சங்கத்தைத் தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பானது தொழிலாளர் நலனுக்கு எதிரானது, அதனை திரும்பப்பெற வேண்டும் என்று தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இதை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத மோடி கும்பலோ, தொழிலாளர்களின் ஊதியம் கூடும், மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், Gig Workers மற்றும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி என்று கூறி தொழிலாளர்களின் நலனுக்காகவே இச்சட்டத் தொகுப்பைக் கொண்டு வந்ததாக பத்திரிக்கைகளில் தினமும் விளம்பரம் செய்து வருகிறது.

உண்மையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளம் தரவில்லையென்றால் அதற்கு தொழிற்சாலை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டியதில்லை பணியமர்த்திய ஒப்பந்ததாரரே பொறுப்பு, நிர்வாகக் குறைபாட்டினால் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டால் தொழிற்சாலையின் முதலாளியை தண்டிக்க வேண்டியதில்லை என்று முதலாளிகளுக்கு சாமரம் வீசும் இந்நான்கு சட்டத் தொகுப்பு, தொழிற்சங்கத் தரப்பில் சிறுதவறு கண்டறியப்பட்டாலும் தொழிற்சங்கத்தின் அங்கீகாரம் இரத்து செய்யலாம் என பரிந்துரைக்கிறது. இப்படிபட்டச் சட்டத்தொகுப்பை தொழிலாளர்களின் நலனுக்கானது என சொல்லமுடியுமா?

இங்கு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்யை  நிர்ணயிப்பதற்கு  ஊதியத் தொகுப்பு 2019 சொல்லும் வழிகாட்டுதல்கள் எவ்வாறு தொழிலாளர் வர்க்க நலனுக்கு எதிராக உள்ளதென்பதை விரிவாகப் பார்க்கலாம்.

நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பில் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பானது, ஊதியத் தொகுப்பு 2019 (Code on Wages, 2019-WC). இதில், ஊதியம் மற்றும் போனஸ் தொடர்பாக ஏற்கனவே இருந்து வந்த நான்கு சட்டங்களை இணைத்தும் திருத்தங்களை சேர்த்தும் ஊதியத் தொகுப்பாக கொண்டு வந்துள்ளனர். அதில் குறைந்தபட்ச ஊதியத்தை (Minimum Wage) தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான சட்டம் 1948 இல் (Minimum Wage Act, 1948-MWA) அமல்படுத்தப்பட்டது. இச்சட்டமானது, தொழிற்சங்கங்கள் மூலமாக ஊதியத்தை நிர்ணயிக்க வாய்ப்பில்லாத தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது குறித்த வழிகாட்டுதல்களை உள்ளடக்கியதாகும். ஒரு வாகன தொழிற்சாலையில் வேலை செய்யக்கூடிய நிரந்தர தொழிலாளர்களுக்கான ஊதியத்தை குறிப்பிட்ட வருடத்திற்கு ஒருமுறை திருத்துவதென்பது கட்டாயம் என்கிறது ஊதியச் சட்டம் (The Payment of Wagae Act, 1936). ஆனால் கட்டுமானம், விவசாயம், மீன்பிடிப்பு, தோல் பதனிடுதல், கார்மெண்ட், துப்புரவு போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ள தொழிலார்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதற்கோ அல்லது திருத்துவதற்கோ சட்டரீதியான உத்திரவாதம் இல்லாமல் இருந்தது. இத்தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக MWA-1948  கொண்டு வரப்பட்டது.

குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி, ஒவ்வொரு மாநில அரசும் மேற்சொன்ன வேலைப் பிரிவுகள் போன்ற  பல வேலைப் பிரிவுகளை அட்டவணைப்படுத்தப்பட்ட வேலை (Schdeulde of Employment) என்று வரையறுக்கும். இந்த அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கும், திருத்துவதற்கும் முத்தரப்புக் குழுவை மாநில அரசுகள் அமைக்க வேண்டும். உதாரணமாக, MWA படி, தமிழகத்தில் அட்டவணைப்பட்ட வேலைகளில் ஒன்றான, தோல் பதனிடும் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்படும் முத்தரப்பு குழுவில் அரசாங்கப் பிரதிநிதி, தொழிலாளர் பிரதிநிதி மற்றும் தொழிற்சாலை தரப்பு என மூன்று தரப்பினரும் இருப்பர், இக்குழுவே, அவ்வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும்.

அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையும் அதற்கான ஊதியமும் மாநிலங்களுக்கிடையே மாறுபடலாம். 2020-ஆம் ஆண்டு கணக்கின் படி, அசாம் மாநிலத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை 103 ஆகவும், பஞ்சாப்பில் அது 71 ஆகவும் உள்ளது. கூடவே விவசாய வேலைக்காக குறைந்தபட்ச ஊதியம் புதுச்சேரியில் 55 ரூபாயாகவும் அதே நேரத்தில் புது தில்லியில் அது 596 ரூபாயாகவும் வேறுபடுகிறது.  

குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது என்பது மாநில அரசினுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது. வேலையின் தன்மை, பொருள்களின் விலை ஆகியவற்றை கணக்கில் கொண்டு அடிப்படை ஊதிய விகிதம் (ஐந்து வருடத்திற்கு ஒருமுறை திருத்த வேண்டும்) மற்றும் பஞ்சபடி (DA – இரண்டு வருடத்திற்கு ஒருமுறை திருத்த வேண்டும்) அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 கூறுகிறது. கடந்த எண்பதாண்டு கால ‘இந்திய ஜனநாயக குடியரசில்’ இச்சட்டத்தின் பரிந்துரைகள் பரவலாக அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும் தொழிலாளர்களின் போராட்டத்தின் காரணமாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படுவதும் அல்லது திருத்தப்படுவதும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்தேறிவந்தது.

தற்போது, ஊதியத் சட்டத்தொகுப்பு 2019-இன் படி,  முதலாவதாக, அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைகளை முடிவு செய்வதோ, அதற்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரமோ மாநில அரசுகளுக்கு கிடையாது. அவற்றை ஒன்றிய அரசே தீர்மானிக்கும் என WC கூறுகிறது. மேலும் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட முத்தரப்பு குழுவில் அரசு தரப்பு பிரதிநிதி என்பதை நீக்கிவிட்டு அவ்விடத்தில் சுயேட்சையான நபரை அமர்த்திக் கொள்ளலாம் என்று WC கூறுகிறது. அதாவது முத்தரப்புக் குழுவில் தொழிலாளர்கள் தரப்பு, தொழிற்சாலைத் தரப்பு மற்றும் அரசாங்கத் தரப்பிற்கு பதிலாக சுயேட்சையான நபர் (Independent Person)  இருப்பார். இந்த சுயேட்சையான நபர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவானவராகவே இருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, இக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் இயல்பாகவே தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவுமே இருக்கும்.

முத்தரப்புக் குழுவிலிருந்து ஒன்றிய அரசானது தன்னை விடுவித்துக் கொண்டதின் மூலம் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதிலிருந்து தனக்கான பொறுப்பை கைகழுவியதோடு மட்டுமில்லாமல் ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான சட்டரீதியான அதிகாரத்தை முதலாளிகளின் கைகளில் ஒப்படைத்துள்ளது. ஊதிய நிர்ணயத்திற்கு மட்டுமல்ல, தொழிலாளர் நலன் தொடர்பான அனைத்து விவகாரங்களுக்கும் இதே வழிகாட்டுதல்களையே நான்கு சட்டத் தொகுப்பிலும் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, MWA இன் படி, குறைந்தபட்ச ஊதியத்தின்  அடிப்படை,  ஊதிய விகிதம்(Basic Wage Rate) ஐந்து வருடத்திற்கு ஒருமுறையும் பஞ்சப்படி (DA) இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் திருத்தப்பட வேண்டும். ஆனால் WC, பஞ்சப்படியை திருத்துவதற்கு ஒன்றிய அரசு முயற்சியெடுக்க வேண்டுமென்கிறதே ஒழிய அதைக் கட்டாயம் என்று சொல்லவில்லை. அதாவது பஞ்சப்படியை (DA) திருத்துவதென்பது ஒன்றிய அரசின் விருப்பத்திற்குட்பட்டது. தொழிலாளர்கள் போராட்டங்களின் மூலமாக ஆளும் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து குறைந்தபட்ச ஊதியத்தை திருத்திக் கொள்வதற்கான  வாய்ப்பாவது MWA இல் இருந்தது. தற்போது அதுவும் இல்லாமலாக்கப்பட்டுவிட்டது.

இந்திய தொழிலாளர்களின் ஊதியத்தைப் பொறுத்தவரை கடந்த பத்து வருடங்களாக அதிகரித்துள்ள பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது, அவர்களின் உண்மைக் ஊதியத்தின் அளவு மாறமலே உள்ளது. இதன் காரணமாக  பெரும்பான்மைக் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகள் குறைந்துள்ளது. இதன் விளைவாக உணவுப் பொருட்கள், சோப்பு, பற்பசை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை தேக்கமடைந்துள்ளதாக பொருளாதார அறிக்கையே கூறுகிறது. இச்சூழலில்விலைவாசி உயர்வுக்கேற்றவாறு பஞ்சப்படியை திருத்துவது கட்டாயம் இல்லை என சட்டம் இயற்றுவதென்பது தொழிலாளர் வர்க்கத்தை நிரந்திரப் பட்டினியை நோக்கித் தள்ளுவதேயாகும்.   

மூன்றாவதாக, WC ஆனது மிகவும் குறைந்தபட்ச ஊதியம் (Floor Level Minimum Wage-FLMW) என்ற வரையறையை நிர்ணயித்துள்ளது. எந்த ஒரு வேலைப் பிரிவுக்கும்  நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியமானது மிகவும் குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக இருக்கக் கூடாது என்கிறது WC.

மிகவும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான கமிட்டியை 2017-இல் மோடி அரசாங்கம் அமைத்தது. இரண்டாண்டுகள் கழித்து, அக்கமிட்டி ஒருநாளைக்கு ரூ.375-ஐ மிகவும் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்க பரிந்துரைத்தது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத மோடி அரசாங்கம், மிகவும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.178-ஐ அறிவித்தது. இன்றுவரை இதுதான் மிகவும் குறைந்தபட்ச ஊதிய அளவாக இருந்து வருகிறது.

இந்தியாவில் ஒரு Unskilled தொழிலாளியின் ஒருநாள் சராசரி குறைந்தபட்ச ஊதியம் 397 ரூபாயாகவும்  skilled தொழிலாளியின் ஒருநாள் சராசரி குறைந்தபட்ச ஊதியம் 475 ரூபாயாகவும் உள்ளது. இது மிகவும் குறைந்தபட்ச ஊதியமான 178 ரூபாயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகும். நடைமுறையில், எப்போது இவ்விரு ஊதிய அளவுகளும் சமமாகிறதோ அப்புள்ளியிலிருந்து தான் குறைந்தபட்ச ஊதியத்தின் அளவு உயர்வுக்கு சாத்தியமிருக்கும். அதுவரை 178 ரூபாயை சுட்டிக்காட்டியே குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கான கோரிக்கையை தொழிற்சாலை நிர்வாகம் நிராகரிக்கச் செய்யும். எனவே WC-இன் படி, இனி குறைந்தபட்ச ஊதிய உயர்வு என்பதே நிர்வாகத்தின் கருணையினால் கிடைக்கின்ற சலுகையாக இருக்குமேயன்றி அது தொழிலாளர் வர்க்கத்தின் உரிமையாக இருக்காது.

மிகவும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயப்படி, ஒரு தொழிலாளிக்கான மிகவும் குறைந்தபட்ச மாத ஊதியம் 5340 ரூபாய். இதைக்கொண்டு அத்தொழிலாளி தனது குடும்பத்திற்கான மாத செலவுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது மோடி கும்பல். சென்னையில் ஒரு அளவுச் சாப்பாட்டின் சராசரி விலை நூறு ரூபாய். இரண்டு டீ களின் சராசரி விலை முப்பது ரூபாய். மீதமுள்ள இருவேலைக்கான உணவு, தங்குமிடம், உடை, போக்குவரத்து செலவு என சராசரியாக 450 ரூபாயாவது ஒரு நாளுக்கு ஒரு நபருக்குத் தேவைப்படுகிறது.

ஆனால் ஒரு நபர் ஒருவேளை உணவு மட்டும் உண்டு ஒட்டுத்துணிகளை உடுத்திக் கொண்டு பிளாட்பாரத்தில் வாழ்வதற்கு போதுமான தொகையை ஒரு குடும்பத்தின் பராமரிப்புக்கான ஒரு தொழிலாளியின் மிகவும் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கிறார்கள் என்றால், தொழிலாளர் வர்க்கத்தை எந்த அளவிற்கு ஒட்டச் சுரண்ட வேண்டும் என்ற இலாப வெறியிலிருந்து இச்சட்டத்தொகுப்பினை ஆளும்வர்க்கம் நிறைவேற்றியிருக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். அடிப்படையில், ஊதியத் தொகுப்பு-2019, தொழிலாளி வர்க்கம் தனக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு MWA பெயரளவிற்கு வழங்கியிருந்த உரிமைகளையும் பறித்துள்ளதோடு தொழிலாளி வர்க்கத்தினை பட்டினியை நோக்கித் தள்ளுவதற்கான கதவையும் திறந்துவிட்டுள்ளது.

  • மாணிக்கம்

தகவல் உதவி

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன