கடந்தாண்டு நவம்பர் 21-ஆம் தேதியன்று, மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தப் போவதாக திடீரென்று அறிவித்தது. இதன்மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுவரைப் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் வேரோடும் – வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துள்ளது. அதாவது 29 மத்திய தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு பதிலாக, ஊதியத் தொகுப்பு (2019), தொழில்துறை உறவுகள் தொகுப்பு (2020), சமூகப் பாதுகாப்பு தொகுப்பு (2020), தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு (2020) ஆகிய நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்து.
இந்திய தொழிற்சங்க இயக்கங்களின் வரலாறு பிரிட்டன் காலனித்துவ ஆட்சியுடன் தொடங்கியது என்றாலும், தொழிலாளர்களைக் கட்டியெழுப்பி பல்வேறு போராட்டங்களின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்தது. ஆனால் பாசிசத்தின் தாக்குதலின் காரணமாக இதுவரைப் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் பொழுது தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் மௌனமாக இருப்பது இதுவரை தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கும், வருங்காலத் தலைமுறையினருக்கும் இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்க முடியும்.
இந்த புதிய சட்டங்களின் மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறியதையும், அதையே உண்மையெனக் காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் வாந்தியெடுத்திருப்பதையும் பொய்யென அம்பலப்படுத்துகிறது DECODING THE LABOUR CODES புத்தகம். இந்தப் புத்தகம் ஒவ்வொரு தொழிலாளர்களின் கையிலும் இருப்பது அவசியம் எனக் கருதுகிறோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆங்கிலேயக் காலனியாதிக்க அரசால் 1926-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தொழிற்சங்க சட்டத்திலிருந்து இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறு தொடங்குகிறது. தொழிற்சங்க இயக்கங்களை சட்டவரையரைக்குள் கொண்டு வராவிட்டால் என்ன நடக்கும் என்பதைத் தனது நாட்டு அனுபவத்தின் மூலமாக உணர்ந்திருந்த ஆங்கிலக் காலனியாதிக்கம், இந்தியாவில் உள்ள தொழிற்சங்கங்களைப் பதிவு செய்யவும் அவர்களது செயல்பாடுகளை முறைப்படுத்திக் கண்காணிக்கவும் இந்தச் சட்டத்தினைப் பயன்படுத்திக் கொண்டது. அதேசமயம் இந்தச் சட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையையும், கூட்டுப் பேச்சுவார்த்தை (Collective Bargaining) நடத்தும் உரிமையையும் பெற்றனர்.
1947-ஆம் ஆண்டில் தான் தொழில்துறை தகராறுகள் சட்டம் பிரிட்டிஷ் இந்தியாவால் இயற்றப்பட்டது. ஏப்ரல் 1, 1947 அன்று இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் வேலைநிறுத்தங்கள் நடைபெறுவதைத் தவிர்ப்பதுவும், தொழில்துறை தகராறுகளை நீதிமன்றங்களின் வாயிலாகத் தீர்ப்பதுமே இதன் நோக்கமாக இருந்தது.
இந்தச் சட்டம் இயற்றப்பட்டபோது, அதில் “மீண்டும் பணியமர்த்துதல்” என்ற வார்த்தையே பயன்படுத்தப்படவில்லை. அது வேலைக்கு அமர்த்துவதையும், பணிநீக்கம் செய்வதையும் சட்டமாகக் கொண்டிருந்தது. எனவே ஒரு நபர், செய்யாத குற்றத்திற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டால், அதற்காக இழப்பீடு மட்டுமே கோர முடியும். 1951-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பக்கிங்ஹாம் மற்றும் கர்நாடிக் மில்ஸ் வழக்கில்தான், பிரிவு 10-இன் கீழ் எந்த ஒரு தீர்ப்பாயமும் சட்டவிரோதமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளியை மீண்டும் பணிக்கமர்த்த முடியும் எனத் தீர்ப்பளித்தது.
இது போன்ற எண்ணற்ற தீர்ப்புகளைத் தொழிற்சங்கங்கள், சட்டப் போராட்டத்தின் மூலம் வாங்கியிருக்கின்றனர். தொழிற்தகராறுகள் அனைத்தும் சட்டத்தில் உள்ள சரத்துகளை மட்டுமல்லாது இது போன்ற நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்க்கப்பட்டு வந்தன. இன்று இவை எல்லாவற்றையும் அழித்துவிட்டு, மீண்டும் முதலில் இருந்து அதாவது 1926ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் உருவாக்கிய வெறும் எழும்புக் கூட்டைப் போல தொழிலாளர் நலச் சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது 1991-ஆம் ஆண்டே தொடங்கிவிட்டாலும் இன்றைக்கு காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு அதில் இறுதி ஆணியை அடித்துள்ளது. 90களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளின் விளைவாக தொழிலாளர்கள் மீதான சுரண்டலை மெல்ல மெல்ல அதிகரித்தனர். போராட்டங்கள் நடத்துவதற்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியமர்த்த முதலாளிகளுக்கு உரிமை வழங்கப்பட்டது. அதேபோல் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை அளிக்கப்பட்டது.
இதன்விளைவாக, தொழிலாளர்களை இந்திய அரசியலமைப்பின் 311-வது பிரிவின் பாதுகாப்பிலிருந்து வெளியேற்றியதுடன், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் உரிமையையும் அவர்களுக்கு மறுத்தது.
இந்திய அரசின் பால்கோ நிறுவனத்தைத் தனியாரிடம் விற்பதற்கு எதிராக ஒரு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதாவது இந்த வழக்கை நிராகரித்ததுடன், இதன்மூலம் தொழிலாளர்களுக்கு வேலையின்மையை ஏற்படுத்தினாலும் கூட, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று மறுத்துவிட்டன.
இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்கப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களை, 2014-க்கு பின்னர், வணிகத்தை எளிதாக்கும் (Ease of Doing Business) என்ற நோக்கில் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படுள்ளன. மொத்தமிருந்த பழைய 44 சட்டங்களில் 29 சட்டங்களை ஒன்றிணைத்து 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளனர். மீதமுள்ள 15 சட்டங்களின் நிலை என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை. அவை கைவிடப்பட்டதாகவே பெரும்பாலான சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
1) Code on Wages (ஊதியச் சட்டக் குறியீடு)
2) Industrial Relations Code (தொழிற் உறவுகள் சட்டக் குறியீடு)
3) Social Security Code (சமூக பாதுகாப்புச் சட்டக் குறியீடு)
4) Occupational Safety, Health & Working Conditions Code (வேலைநிலை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வேலை நிபந்தனைகள் சட்டக் குறியீடு)
ஆகிய இந்த 4 தொகுப்புகளைக் பற்றி எளிமையாகவும், புரிந்துகொள்ளும் வகையிலும் பழைய சட்டங்களுடன் ஒப்பிட்டும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது இது அனைத்து உழைக்கும் வர்க்கத்திற்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.
இந்த நூல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் வகையில் இந்தச் சுட்டியில் கிடைக்கிறது https://cwm.org.in/labour-codes/
- மகேஷ்




