நீதித்துறை ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின், காவி அரசியல் திட்டத்திற்கான எடுபிடிகள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது நீதிமன்றங்களின் சமீபத்திய இரண்டு தீர்ப்புகள். ஒன்று, குற்றம் நிறுபிக்கப்படாத உமர் காலித் மற்றும் ஜர்ஜீல் இமாமிற்கு உச்சநீதிமன்றம் பிணை மறுத்த தீர்ப்பு. மற்றொன்று, பாலியல் வல்லுரவு மற்றும் கொலைக்குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட தேரே சச்சா சௌதா-வின் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்ற பொறுக்கி சாமியாருக்கு பதினைந்தாவது முறையாக பிணை வழங்கப்பட்டிருப்பது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 2020-இல் தில்லியில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க போலீஸ் உதவியுடன் காவிக் கும்பல் ஏற்படுத்திய கலவரத்தோடு தொடர்புபடுத்தி உமர் காலித், சர்ஜில் இமாம் உள்ளிட்ட ஏழு பேரை ஊபா (UAPA) சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ ஐந்தரை ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவ்வளவு வருடங்களாகியும் இவ்வழக்கு விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், நீண்டகால சிறை என்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது (Article 21) என்ற அடிப்படையில் பிணை கோரியிருந்தனர். வெவ்வேறு வழக்குகளில், ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட பலருக்கும் இதே அடிப்படையில் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் பிணை வழங்கியுள்ளது.
அதேபோல் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட எழுவரில், ஐந்து பேருக்கு பன்னிரெண்டு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது. உமர் மற்றும் இமாமிற்கு மட்டும் பிணையை மறுத்து தீர்ப்பெழுதியுள்ளது உச்சநீதிமன்றம். பிணை மறுக்கப்பட்டதற்கு காரணமாக, 2020 கலவரத்திற்கு உமர் மற்றும் இமாம் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் உதவியதாகவும் போலீஸ் சமர்பித்த ஆதாரங்களிலிருந்து உறுதியாவதால் இவர்கள் இருவருக்கு மட்டும் பிணை மறுக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளனர்.
இவ்வழக்கில் இன்னும் நீதிமன்ற வாதங்களே தொடங்கவில்லை. மேலும் எழுநூறு சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் உமர் மற்றும் இமாம் இருவரும் “முக்கிய மூளையாக” செயல்பட்டதாக ‘நீதிமான்கள்’ எப்படி முடிவு செய்தனர்? எந்தவொரு குறுக்கு விசாரணையும் செய்யாமல் போலீஸ் சமர்பித்த ஆவணங்களை சோதித்தறியாமல் குற்றப்பத்திரிக்கையில் போலீஸ் எழுதியுள்ள திரைக்கதையை கேள்வியே இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு இருவரையும் குற்றம் இழைத்தவர்களாகவே தீர்ப்பெழுதியுள்ளனர். விசாரணை தொடங்குவதற்கு முன்பே குற்றம் இழைத்ததற்கான முகாந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்றமே அங்கீகரித்திருப்பதால் இனி இவ்விருவருக்கும் பிணை கிடைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
கலவரத்தில் உமர் கலந்து கொள்ளவில்லை, முஸ்லீம் பகுதிகளில் கலவரம் நடத்தப்பட்ட சமயத்தில் உமர் தில்லியில் இல்லை. கலவரத்தை திட்டமிட்டதற்கான முதன்மையான ஆதாரங்களும் போலீஸிடம் இல்லை. பிறகு தில்லி போலீஸ் காட்டியதாக நீதிமன்றம் கூறுகின்ற ஆதாரங்கள் எவை? வாட்ஸ்அப்பில் “புரட்சிகர வீரவணக்கம்” என அனுப்பிய குறுஞ்செய்தி, “CAA-NRC-யை முறியடிக்க ஒன்றுதிரள்வோம்” என்ற குறுஞ்செய்தி, CAA-NRC-யை பற்றி பொதுக் கூட்டங்களில் பேசியவை, கைது செய்யப்பட்டவர்களின் மடிக்கணினிகளில் இருந்து போலீஸ் கைப்பற்றியதாகக் கூறப்படும் ‘இரகசிய ஆவணங்கள்’ ஆகியவற்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
கையில் கடப்பாரையையும், பிற ஆயுதங்களையும் ஏந்திக்கொண்டு அத்வானியும் உமாபாரதியும் பாபர் மசூதியை இடித்துக் கலவரத்தை தூண்டியதற்கான புகைப்படங்களும் நேரடியான ஆதாரங்களும் உண்டு. ஆர்.எஸ்.எஸ் காலிகள் மோடி தலைமையில் நடந்த குஜராத் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொலை செய்ததற்கான நேரடி சாட்சியங்களும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் உண்டு. 2020 தில்லி கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக-வின் கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தக்கூர் பேசியதற்கான காணொளி ஆதாரங்களும் உண்டு. ஆர்.எஸ்.எஸ்–பாஜக காலிகள் செய்து வருகின்ற கலவரங்களுக்கு நேரடியான ஆதாரங்கள் இருந்தும் அவர்கள் மீது வழக்குகள் இல்லை கைதுகள் கிடையாது. நீதிமன்றங்களும் ஆர்.எஸ்.எஸ் காலிகளுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. கலவரங்களுக்கு சன்மானமாக பிரதமர் பதவியும், அமைச்சர் பதவியும், எம்.பி பதவியும் கிடைத்துள்ளது.
ஆனால், உமரும் இமாமும் தில்லி கலவரத்தில் முக்கிய மூளையாக செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் போலீஸிடம் இல்லை. CAA-NRC-க்கு எதிராக தில்லியில் நடந்த போராட்டங்களில் மாணவர் பிரதி நிதிகளாக கலந்து கொண்டு பேசியதையும் அதையொட்டி அனுப்பிய குறுஞ் செய்திகளையும் வைத்துக்கொண்டு கலவரத்தோடு தொடர்புபடுத்தி ஒரு பொய்யான வழக்கை ஊபா சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். ஊபா சட்டத்தில் அதற்கான முகாந்திரம் உள்ளது.
ஊபா சட்டத்தின் பிரிவு 15-இன் படி, வெடி மருந்துகள் மூலமாகவோ, மிக மோசமான ஆயுதங்கள் மூலமாகவோ, வேதிப்பொருட்கள் மூலமாகவோ, தீ வைப்பதோ அல்லது வேறு எந்த வகையின் (by any other means) மூலமாகவோ உயிர்களைக் கொல்வது அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற நடவடிக்கைகளை தீவிரவாத நடவடிக்கைகள் என்று வரையறுத்துள்ளது.
தில்லி கலவரத்தில் ஐம்பத்தி நான்கு அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருந்தனர். மேலும் ஏராளமான வீடுகளும், கடைகளும், வாகனங்களும் பொது சொத்துக்களும் தீக்கரையாக்கப்பட்டன. ஊபா சட்டப்படி இந்த தீவிரவாத நடவடிக்கையை உமர், இமாம் மற்றும் பலர் “வேறு எந்த வகை மூலமாகவோ” திட்டமிட்டு நடத்தியதாகவும் அதற்கு குறுஞ் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு இவ்வழக்கை ஜோடித்துள்ளனர்.
இதே முறையை தான் பீமா கொரேகான் வழக்கிலும் மோடி கும்பல் கையாண்டது. பீமா கொரேகானில் ஆர்.எஸ்.எஸ் காலிகள் திட்டமிட்டு நடத்தியக் கலவரத்தை காரணம் காட்டி அதற்கு பின்னால் மாவோயிஸ்டுகளும் அவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்களும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும், வழக்குறைஞர்களும் இருப்பதாகக் கூறி பதினெட்டு பேரின் மீது ஊபா வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது மோடி கும்பல். ஆனால் எட்டு வருடங்களாகியும் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை, வழக்கும் நடக்கவில்லை.
ஊபா சட்டம் என்பது ஆளும் வர்க்கம் குறிப்பாக மோடி கும்பல் தன்னை அம்பலப்படுத்துபவர்களையும், மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களையும் ஒடுக்குவதற்காக வைத்துள்ள ஒரு கருவியாகும். காங்கிரஸ் அமல்படுத்திய கனிமவளக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மற்றும் அம்பலப்படுத்திய ஆதிவாசி மக்கள் மீதும், அவர்களுக்கு துணையாக நின்ற பல சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் இந்த கொடூர சட்டத்தை பயன்படுத்தி ஒடுக்கினர்.
தற்போது, பீமா கோரேகான் வழக்காகட்டும், தில்லி கலவர வழக்காகட்டும் அல்லது சட்ட விரோத பண பரிவர்த்தனை என்ற போர்வையில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளாகட்டும் இவையனைத்தும் பாசிச மோடி-அமித்ஷா கும்பலை அம்பலப்படுத்தி பேசியும், எழுதியும், செயல்பட்டும் வந்தவர்கள் மீது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகளே.
மாணிக்கம்
செய்தி ஆதாரம்
https://indconlawphil.wordpress.com/author/gautambhatia1988/



