குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு, அவரது 3 வயது குழந்தை உட்பட அவரது உறவினர்கள் 7 பேர் இந்து மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2008ல் அந்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும், போதிய அளவு சிறைவாசம் அனுபவித்துவிட்டார்கள் என்று கூறி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் பா.ஜ.க அரசால் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது அதே போல உன்னாவ் பாலியல் குற்றவாளியான பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரை விடுவிக்கும் முயற்சி நடக்கிறது.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர், பாஜகவைச் சேர்ந்த குல்தீப் சிங் செங்கர். கடந்த 2017ம் ஆண்டில் இவரிடம் வேலை கேட்டு வந்த சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 2019அம் ஆண்டில் தில்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் தில்லி உயர்நீதிமன்றம் இவரது ஆயுள் தண்டனையை நிறுத்திவைப்பதாகவும், அவரைப் பிணையில் விடுவிப்பதாகவும் உத்தரவிட்டது.
சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டாலும் ஏழு ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்திருப்பது, இவரது மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணை முடியாமல் இருப்பது ஆகியவற்றைக் காரணமாக கூறி இவரை பிணையில் விடுவிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இவருக்கு அதிபட்ச தண்டனை கிடைக்க காரணமாக இருந்த போக்சோ சட்டத்தின் ஒரு சரத்து குறித்தும் தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதாவது போக்சோ சட்டத்தின் பிரிவு 5c யின் படி குற்றவாளி அரசு ஊழியராக (public servant) இருந்தால் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
குற்றம் நடந்த போது செங்கர் எம்.எல்.ஏ.வாக இருந்ததால் அவர் அரசு ஊழியர் எனக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. தில்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஒரு எம்.எல்.ஏ.வை எவ்வாறு அரசு ஊழியராக கருத முடியும் என சந்தேகம் எழுப்பியது. அதாவது போக்சோ சட்டத்தில் உள்ள ஒரு ஓட்டையைப் பயன்படுத்தி பாலியல் குற்றவாளியான செங்கரை விடுவிக்க முயல்கின்றனர்.
காவி பாசிசக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வழக்கு பதிவதும், அதில் அவர்கள் கைது செய்யப்படுவதும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதும் அவ்வளவு எளிதில் நடைபெறுவதில்லை. பில்கிஸ் பானு வழக்கு தொடங்கி ஹத்ராஸ் வழக்கு மல்யுத்த வீராங்கனைகள் வழக்கு என இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இந்த வழக்கிலும் கூட செங்கர் அவ்வளவு எளிதாகச் சிறையில் அடைக்கப்படவில்லை.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உன்னாவ் சிறுமி செங்கரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார். ஆனால் 2018 ஏப்ரல் மாதம் 8ம் தேதிவரை செங்கர் மீது வழக்குப் பதியப்படவில்லை. பாஜகவின் சக்திவாயந்த எம்.எல்.ஏ. என்ற காரணத்தினால் போலீசார் வழக்கைப் பதிவு செய்ய மறுத்தனர். அதுமட்டுமன்றி பிரச்சனை செய்யாமல் அமைதியாகச் சென்றுவிடும்படி சிறுமியின் குடும்பத்தை போலீசார் தொடர்ந்து மிரட்டிவந்தனர். இந்த மிரட்டலுக்கெல்லாம் பணியாமல் தனது மகளுக்கு நீதிகேட்டுப் போராடிய சிறுமியின் தந்தை ஆயுதம் வைத்திருந்தார் என்ற பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உத்திரபிரதேசப் போலிசாரால் சிறையில் அடித்தே கொல்லப்பட்டார்.
இத்தனை கொடுமைகளையும் கண்டபிறகு இனியும் தனக்கு நீதி கிடைக்காது என வேதனையடைந்த சிறுமி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார். சிறுமியின் தற்கொலை முயற்சிக்குப் பிறகு நாடு முழுவதும் இது குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்த காரணத்தால்தான் செங்கர் மீது வழக்கே பதிவு செய்யப்பட்டது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக சக்திகளிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தில்லி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
அப்போதும் கூட செங்கர் தரப்பினர் அமைதியாக இல்லை. வழக்கை திரும்பப் பெறக்கோரி சிறுமியைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தனர். சிறுமிக்காக வாதாடிய வழக்கறிஞரையும் கூட காவிக் கும்பல் மிரட்டியது. வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வந்த போது, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது வழக்கறிஞரும் பயணம் செய்த வாகனத்தின் மீது லாரி ஏற்றி அவர்களைப் படுகொலை செய்யவும் முயன்றார்கள். அதில் சிறுமியின் உறவினர்கள் இரண்டுபேர் பலியானார்கள் சிறுமி பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.
இவை எல்லாவற்றையும் தாண்டித்தான் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செங்கர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இன்று சொத்தைக் காரணங்களைக் கூறி செங்கரை விடுவிக்க முயற்சி நடக்கிறது.
செங்கரை விடுவிக்கும் தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிய பிறகு அது நாடு முழுவதும் விவாதங்களை கிளப்பியதாலும், பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்திருப்பதாலும் தற்போது உச்சநீதிமன்றம, தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு செங்கரின் மகள், தனது தந்தையின் விடுதலைக்காக போராடிப் போராடி தனக்கு களைத்துவிட்டதாகவும், தான் பயந்து போயிருப்பதாகவும் உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதாவது அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, சட்டத்தின் ஓட்டைகள் வழியாகத் தப்பித்துக் கொள்ள நினைக்கும் இவர் நீதிக்கான போராட்டத்தில் களைத்துவிட்டதாகக் கதையளக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையையும் உறவினர்களையும் திட்டமிட்டுக் கொலை செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் பயந்துபோயிருப்பதாக கூறுகிறார்.
இந்தக் கடிதம் வெளியானவுடன் காவி பாசிசக் கும்பல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக இணையவெளியில் கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. இதனை எதிர்கொள்ள முடியாமல் பொதுமக்கள் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் எனச் சிறுமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடும் சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மீது பொய் வழக்குப் போட்டு, வழக்கு விசாரணையே தொடங்கப்படாமல் அவர்களை ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கும் போது, அது குறித்து வாயே திறக்காமல் இந்த நீதிமன்றங்கள் மௌனம் சாதிக்கின்றன. பீமா கொரேகான் வழக்கு, தில்லி சி.ஏ.ஏ கலவர வழக்கு எனப் பல வழக்குகளில் பொய்க் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து பல ஆண்டுகள் பிணை வழங்க மறுக்கும் இதே நீதிமன்றங்கள், பாசிச சக்திகளின் அடியாட்படையாக இருக்கும் ஒரே காரணத்திற்காக, செங்கர் போன்ற பாலியல் குற்றவாளிகள் தப்பிப்பதற்குத் தனது கதவுகளை அகலத் திறந்து வைக்கின்றன. சட்டத்தின் ஓட்டைகள் வழியாக இல்லாமல் நீதிமன்றத்தின் அகலத் திறந்த இந்தக் கதவுகளின் வழியாகவே காவி பாசிஸ்டுகள் வெளியே வந்துவிடுகின்றனர்.
- அறிவு




