எவ்வளவுதான் கொடூரமான குற்றங்களைச் செய்திருந்தாலும், காவி பாசிஸ்டுகளின் குண்டர் படையைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்துவிட்டால் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடும் என உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் யோகி ஆதித்ய நாத் அரசு கூறுகிறது. அக்லக் கொலை வழக்கின் விசாரணையைக் கைவிடக் கோரி நீதிமன்றத்தில் உ.பி. அரசு தாக்கல் செய்த மனுவில்தான் இதுபோலக் கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் தாத்ரியில் கொல்லப்பட்ட முகமது அக்லக்கை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தனது வீட்டில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு காவி பாசிசக் குண்டர் படையால் முகமது அக்லக் அடித்தே கொல்லப்பட்டார். அவரது மகனும் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தார். நாடு முழுவதும் பசுக் குண்டர்களால் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்கும், இன்றுவரை கொல்லப்படுவதற்கும் தொடக்கப்புள்ளியாக இருந்தது அக்லக்கின் படுகொலை.
ஊரே வேடிக்கை பார்க்க, ஒலிப்பெருக்கியில் பகீரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டு அணிதிரட்டப்பட்ட இந்துமதவெறிக் கும்பல் அக்லக்கின் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது மகனையும் வெளியே இழுத்துவந்து தெருவில் போட்டு அடித்தது. இந்தத் தாக்குதலில் அக்லக் கொல்லப்பட்டார். அக்லக் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக சொல்லப்பட்ட அவரது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த கறி, மாட்டுக் கறி அல்ல ஆட்டுக்கறி என நிரூபிக்கப்பட்டது. இருந்தும் அவரது கொலைக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை.
அக்லக் கொலை வழக்கில் 18 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட 18 பேருக்கும் அப்போதே பிணை வழங்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.
அக்லக்கின் படுகொலைக்குப் பிறகு பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மிகப்பெரிய இயக்கத்தை காவி பாசிஸ்டுகள் கையிலெடுத்தனர். பசு பாதுகாப்புப் படை (கோ ரக்சா சேனா) என்ற பெயரில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பல குண்டர்படைகளை காவி பாசிஸ்டுகள் உருவாக்கினார்கள். இந்த பிரச்சாரத்தின் காரணமாக இம்மாநிலங்கள் இணைந்த நிலப்பரப்பு பசு வளையம் (cow belt) எனவும், காவி பாசிசக் கும்பலின் அதிகாரத்தின் கேந்திரமாகவும் மாற்றப்பட்டது.
உள்ளூர் போலீசுடன் கை கோர்த்துக் கொண்டு பசு பாதுகாப்பு குண்டர் படையானது கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 90க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் இதில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதுடன், 280க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அதில் பல சம்பவங்களில் வழக்கு விசாரணை கூட இன்னமும் தொடங்கப்படவில்லை.
இஸ்லாமியர்களைக் குறிவைத்துக் கொல்லும் பசுக் குண்டர்களை எவ்வாறு மாநில அரசே பாதுகாக்கிறது என்பதற்கு அக்லக் வழக்கு ஒரு முன்னுதாரணம். இந்த வழக்கு விசாரணையை உ.பி.யை ஆளும் காவி பாசிச யோகி அரசானது முறையாக நடத்தவில்லை. பத்து ஆண்டுகளாக இழுத்து இழுத்து நடத்தியது. இடைப்பட்ட காலத்தில் வழக்கின் முக்கிய சாட்சிகளாக இருந்த பலரும் இறந்துவிட்டனர். உயிரோடு இருக்கும் சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். இப்போது இதையே காரணமாகக் கூறி வழக்கை முடித்து வைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் உ.பி. அரசு மனுச் செய்துள்ளது.
அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படும் என்பதால் இதனை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாமியர் ஒருவர் மாட்டுக்கறி வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டாலும் கூட கொலைக் குற்றவாளிகளை விடுவித்துவிட வேண்டும் அப்போதுதான் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படும் என யோகி ஆதித்யநாத் அரசு கூறுகிறது.
அதாவது தங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் அநீதிகளைச் சிறுபான்மையினர் சகித்துக் கொள்ள வேண்டும். அதற்கு எதிராக நீதிகேட்பது என்பது சமூக நல்லிணக்கத்தைக் குலைத்துவிடும், சிறுபான்மையினர் மீது மேலும் மேலும் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கு அதுவே வழி செய்துவிடும். எனவே கொடூர குற்றவாளிகளாக இருந்தாலும் காவி பாசிஸ்டுக் குண்டர்களை விடுதலை செய்துவிட வேண்டும். யோகி ஆதித்ய நாத் அரசு நீதிமன்றத்திற்குக் கொடுத்துள்ள மனுவில் பகிரங்கமாக கூறியிருப்பதம் அர்த்தம் இதுதான்.
இதைத்தான் காவி பாசிஸ்டுகள் காலம் காலமாகக் கூறிவருகின்றனர். இன்றைக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறைகளை முகாலய ஆட்சிக் காலத்தில் இந்துக்களின் மீது தொடுக்கப்பட்ட வன்முறையின் எதிர்வினை எனக் கூறி நியாயப்படுத்துவதுடன் அதனை இஸ்லாமியர்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நாட்டை விட்டே வெளியேறிவிட வேண்டும். இதுதான் காவி பாசிஸ்டுகள் வழங்கும் இறுதித் தீர்ப்பு.
- சந்திரன்




