காசாவின் இளம் தலைமுறையினரின் கல்விக்காகப் போராடும் ஒரு ஆசிரியரின் அனுபவம்!

இஸ்ரேல் இனவெறி அரசு, காசாவில் நடத்திவரும் இனப்படுகொலையால் அங்குள்ள இளம் தலைமுறையினரின் கல்வி கேள்விக் குறியாக மாறிவருகிறது. இஸ்ரேலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், டிரோன்களும் காசாவிலுள்ள பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், நூலகங்கள் என கல்வி பயிலுவதற்கான அனைத்து இடங்களையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளன. இது மாணவர்களின் எதிர்காலத்தை சிதைப்பதற்கான ஒரு திட்டமிட்ட பாசிச நடவடிக்கயின் மூலம் அங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது.

காசாவிலுள்ள ஆசிரியர்கள் தங்களது பெற்றோர்களையும், பிள்ளைகளையும், உறவினர்களையும், வீடுகளையும் இழந்துள்ளனர். இவர்கள் தங்களது பசி, சோர்வு, காயம் போன்ற துயரங்களைத் தாங்கிக் கொண்டு காசாவின் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். அதேபோல் இஸ்ரேல் இனவெறி அரசின் இனப்படுகொலைக்குப் பலியான பெற்றோரையும், உறவினர்களையும் இழந்துள்ள போதிலும் கல்வி பயில வேண்டும் என்ற வேட்கையுடன் விடாப்பிடியாக தன்னலமற்ற ஆசிரியர்களுடன் இணைந்து பாடங்களை கற்று வருகின்றனர்.

அகமது கமல் ஜூனினா எனும் உதவிப் பேராசிரியர் அர்ப்பணிப்பு உணர்வுடன் இனப்படுகொலைக்கு மத்தியிலும் காசாவின் மாணவர்களுக்காக கற்பித்து வருகிறார். காசாவிலுள்ள அல்-அக்ஸா பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான அகமது கமல், தான் பெற்ற அனுபவங்களை தி கார்டியன், இண்டிபெண்டன்ட், கேரவன் போன்ற இதழ்களில் பதிவு செய்துள்ளார். வகுப்பறை அனுபவங்கள், மாணவர்களின் வாழ்நிலைமைகள், சூழல், காலநிலை, கல்வி அமைப்பு, போர்நிறுத்தம், இஸ்ரேல் இனவெறி அரசுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மாணவர்களின் போராட்டங்கள் என அவருடைய அனுபவங்கள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அதிலிருந்து சிலவற்றை வாசகர்களின் மேம்பட்ட புரிதலுக்காக தொகுத்து தருகிறோம்.

இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையில் அகமது கமலின் குடும்பத்தினர் மட்டும் 41 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவரது உறவினர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி அவருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அவரது 17 வயது மருமகன் முகமது டிரோன் மூலம் கழுத்தில் சுடப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு முகமது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது கூட, மருத்துவமனையிலிருந்து தனது கைகள் நடுங்கிக் கொண்டிருந்த போதிலும், குரலில் உறுதியுடன் ஆன்லைன் வகுப்பை எடுத்திருக்கிறார் அகமது கமல்.  

அங்கு இணைய இணைப்புகள் முறையாகக் கிடைப்பதில்லை. இருந்த போதிலும் தற்காலிகமாக கிடைக்கும் போதெல்லாம் அகமது கமலை, மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். மேலும் வாட்ஸ்அப் செய்திகள், அவசர அவசரமாக பதிவு செய்யப்பட்ட குரல் பதிவுகள், கையால் எழுதப்பட்ட பாடங்களின் புகைப்படங்கள் என அனைத்தையும் அகமது கமலுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அகமது கமல் தன்னுடைய பள்ளிப் பருவத்தைப் பற்றி குறிப்பிடுகையில், விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்லும் பொழுது மிகவும் உற்சாகமாக இருக்கும். ஏனென்றால் எனது தந்தையுடன் காசாவிலுள்ள பழமையான சந்தையான சூக் அல்-சாவியவிற்கு சென்று பள்ளிப் படிப்புக்குத் தேவையான பொருட்களை வாங்குவோம். பென்சில்கள், நோட்டுப் புத்தகங்கள், மிட்டாய் வாசனை கொண்ட அழிப்பான்கள், புத்தகத்தை சுமந்து செல்ல புதிய பை  என அனைத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்புவோம். நானும் எனது சகோதர்களும் புதிய நோட்டுப் புத்தகங்களை கவனமாக எங்களது புதிய பையில் அடுக்கி வைப்போம்.  அம்மாவோ எங்களுக்கான மதிய உணவை தயார் செய்து கொடுப்பார். மேலும் இரவு உணவின் போது, அன்று பள்ளியில் கற்ற பாடங்களைப் பற்றி பெற்றோரிடம் விவரிப்போம். பின்னர் கால அட்டவணைபடி வீட்டுப் பாடங்களைத் தொடங்குவோம் என்கிறார்.

இது போன்ற சந்தோஷமான தருணங்கள் இருந்த போதிலும், அவையாவும் நெரிசலான வகுப்பறை, மின்வெட்டு, கல்வி நிறுவனங்களிடம் போதிய நிதியின்மை போன்ற துயரங்களுடனே தொடர்ந்தன. இஸ்ரேலுடைய ஆக்கிரமிப்பின் கீழுள்ள வாழ்க்கை நிலைமைகளிலிருந்தும், அவற்றை மீறி தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற உறுதியிலிருந்தும் கல்வி மீதான ஈடுபாடும், அர்ப்பணிப்பும் பாலஸ்தீனியர்களுக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது என்று தனது மாணவப் பருவத்தை நினைவூட்டுகிறார்.

ஆனால் இன்று காசாவிலுள்ள வாழ்க்கை நிலைமைகள் துயரமாகிவிட்டன. பள்ளிக் காலங்களில் நான் அனுபவித்த மகிழ்ச்சியான காலங்கள் என்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லை. அது வெறும் நினைவுகளாகிப் போய்விட்டன.

என்னைப் போலவே அவர்களும் பள்ளி விடுமுறையைக் கழித்து மீண்டும் பள்ளிக்குச் செல்லும் பொழுது, அதிகாலையில் எழுந்து சுத்தமான சீருடைகள் அணிந்து, பதட்டமான உற்சாகத்துடன் புத்தகப் பையை சுமந்த படி, நண்பர்களை சந்திக்க விளையாட்டு மைதானங்களுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே அமைதியற்று இருக்கிறார்கள். படிப்பதற்கு புத்தகங்கள் இல்லை, பின்பற்றுவதற்கு கால அட்டவணைகள் இல்லை என்பதையெல்லாம் விட அவர்கள் வெளியில் சென்று பயில்வதற்கான எந்தக் கட்டிடமும் இல்லை.

அகமது கமல் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் அஞ்சவில்லை. காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 18,000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புள்ளிவிபரங்களின்படி நாளொன்றுக்கு சராசரியாக 28 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேறு வார்தைகளில் சொன்னால், ஒவ்வொரு நாளும் ஒரு வகுப்பறை வீதம் அழிக்கப்பட்டிருக்கிறது. 900 திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,769 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர். 97% பள்ளிகள் சேதமடைந்துள்ளன. அதில் ஏவுகணைத் தாக்குதல் மூலமாக 432 பள்ளிகளும், 12 பல்கலைக் கழங்களும் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சுமார் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகச் செல்லும் சூக் அல்-சாவியா சந்தை மாணவர்களின் ஆரவாரத்தால் நிறைந்திருக்கும். இன்று அது இடிந்து போயிருக்கிறது. அதைப்போலவே, மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

காசா மாணவர்களின் தற்போதைய நிலைமையை பற்றி அகமது கமல் மேலும் குறிப்பிடும் போது, ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் பல்கலைக் கழகங்களில் சேருவதற்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து செல்வதை ஒரு துறையின் தலைவராக பார்த்திருக்கிறேன். கடந்த மூன்றாண்டுகள் நடைபெறாத நிலையில் சுமார் 39,000 மாணவர்களின் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

காசாவிலுள்ள மாணவர்கள், பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும், உலகெங்கிலுமுள்ள மாணவர்களை ஒப்பிடும் பொழுது கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இதனால் காசாவிற்கான கல்வி வாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வுகள் அதிகமாகியுள்ளன. எங்களது மாணவர்கள் ஒருவேளைச் சோற்றையும், குடிநீரையும் பெறுவதற்காக சமூக சமையலைறைகளில் வரிசையில் நிற்கின்றனர். வீட்டில் ரொட்டி சமைக்க விறகுகளை தேடி அலைகின்றனர். உயிர் வாழ்வதற்காக தங்களால் முடிந்த பொருட்களை விற்கின்றனர். அப்பொழுது, மாணவர்கள் குண்டு வீச்சிற்கு இறையாகிப் போகின்றனர். அனைவருக்கும் ஒரு அடையாளத்தை உருவாக்கித் தருவதற்கான களமாக விளக்கும் பள்ளிக்கூடத்தை ஏவுகணைத் தாக்குதலின் மூலம் தரைமட்டமாக்கி அங்குள்ள மாணவர்களின் அடையாளத்தைப் பறித்திருக்கிறார்கள். இந்த உலகம் காசாவின் இளம் தலைமுறையினருக்கு இந்த நூற்றாண்டில் கொடுத்திருக்கும் மிகப் பெரிய தண்டனை இது.

ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தை பற்றி அகமது கமல் குறிப்பிடும் போது, பெரும்பாலான வகுப்புகள் கூடாரங்களிலோ, நெரிசலான தங்குமிடங்களிலோ, இணைய இணைப்பு அரிதாகக் கிடைக்கும் இடம் பெயர்ந்தோர் முகாம்களின் மூலைகளிலிருந்தோ நடைபெறுகின்றன. மேசைகள் இல்லை, புத்தகங்கள் இல்லை, மின்சாரம் இல்லை, இணையம் என எதுவும் இல்லை. அட்டைப் பெட்டிகள், உணவுப் பெட்டிகளின் பின்புறம், உடைந்து போன மரத் துண்டுகள் என தங்களுக்குக் கிடைக்கும் எந்தப் பொருட்களின் மீதும் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

இதுமட்டுமில்லாமல் வகுப்பின் போது ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து தலைக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அப்பொழுது பிற மாணவர்கள் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பிய குரல் பதிவுகளை கேட்க முடியாமல் தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும். அதேபோல் ஆம்புலன்ஸ் சைரன்களின் ஒலி எப்போதும் அருகிலேயே கேட்டுக் கொண்டிருக்கும்.

பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை கூட்டம் கூடும் இடங்களுக்கு அனுப்பத் தயங்குகிறார்கள். இது நாம் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஒவ்வொரு முறை வகுப்பெடுக்கும் பொழுது திடீரென்று ஏவுகணைகள் தாக்கக்கூடும் என்பதை அறிந்தே ஆசிரியர்கள் வகுப்பைத் தொடங்குகிறார்கள். தற்பொழுது கற்றுக் கொடுப்பதற்கு குறைந்த அளவில் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் மரணம் என்பது மனித உயிர்களின் இழப்பு என்பதாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக, காசாவின் கல்வியில் ஒரு காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தலைமுறைக்கும் தொடரும் வாடுவாக மாறியுள்ளது.

தற்போது காசா மாணவர்கள் கற்பதற்கு முதல் தடையாக இருப்பது அவர்களின் உளவியல் அதிர்ச்சியே என்கிறார் அகமது கமல். பள்ளிக்கு வர முடிந்த பல குழந்தைகள் தங்கள் பெற்றோரையோ அல்லது உடன்பிறந்தவர்களையோ இழந்துள்ளனர். அவர்களின் வீடுகள் அவர்கள் கண் முன்னே இடிந்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் காயங்களுடன் இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் பல மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் நடந்திருக்கின்றன. பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திறந்த வெளிக் கூடாரங்களில் வசித்து வருகின்றனர். மெல்லிய பிளாஸ்டிக் தாள்களால் கட்டப்பட்ட கூடாரங்களிலிருந்தும், குளிருக்குப் போர்த்திக் கொள்ள போர்வையில்லாமலும், மாற்றிக் கொள்ள துணியில்லாமலும் மாணவர்கள் கற்றுக் கொள்ள முன்வருகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலைகளில், பாடம் கற்றுக் கொடுப்பது எனக்கு அபத்தமாக தெரிகிறது. நீங்கள் ஒரு பாடப் புத்தகத்தைத் திறந்து, இந்த உலகம் இயல்பாக இயங்கி கொண்டிருக்கிறது என்று மாணவர்களிடம் கூற முடியுமா? ஒவ்வொரு வகுப்பு தொடங்கும் பொழுதும் முதலில் மாணவர்களின் உணர்ச்சி பூர்வமான நிலைமையை சரிசெய்வதில் இருந்தே தொடங்குகிறது. காசாவின் ஆசிரியர்கள் வெறுமனே பாடம் மட்டும் எடுப்பதில்லை. மாணவர்களின் ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள். மாணவர்கள் அடிக்கடி அழுகின்றனர். சில நாட்களில் எங்களின் உரையாடல்கள் பாடங்களைப் பற்றி இருப்பதை விட, எப்படி உயிர் வாழ்வது என்பதைப் பற்றி இருக்கும். ஆனாலும் இந்த வகுப்புகள் ஆசிரியர்-மாணவர்களின் மன உறுதியின் களங்களாக மாறியிருக்கின்றன. நாங்கள் நடத்தும் ஒரு மணி நேர வகுப்புதான் போரைப் பற்றி யோசிக்காத ஒரே நேரம் என்று மாணவர்கள் எங்கள் வகுப்புகளில் கூறுகிறார்கள். இந்த ஒற்றை சொல்தான் எங்களை ​​ தொடர்ந்து கற்றுக் கொடுக்க தூண்டுகிறது என்கிறார் அகமது கமல்.

இதே மன உறுதியுடன் இரண்டு ஆண்டுகாலப் போர் மற்றும் பேரழிவுக்கு பிறகு நவம்பர் 7-ஆம் தேதியன்று அல்-அக்ஸா பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த 130 மாணவிகளுக்குப் பட்டமளிப்பு விழா நடத்தினோம். தங்களுடைய கல்விக்கான அங்கீகாரத்தைப் பெற, அந்த இளம் பெண்கள் மேடையில் ஏறுவதை நான் கண்டபோது, ​​நாங்கள் ஏன் தொடர்ந்து கற்பிக்கித்து வருகிறோம் என்பதை அது எங்களுக்கு நினைவூட்டியது.

அகமது கமல், ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் அல்-அக்ஸா பல்கலைக் கழகம் தற்போது இடிந்து போய் தரைமட்டமாக காட்சியளிக்கிறது.  பல்கலைக் கழகம் குண்டு வீச்சினால் தரைமட்டமாக்கப்பட்ட பிறகு, அவ்வளாகத்திற்கு மூன்று முறை அகமது கமல் சென்று வந்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடும் போது, பல்கலைக் கழகத்தின் முழு கட்டிடங்களும் தரைமட்டமாகி கிடக்கின்றன. காகிதங்கள் சாம்பல் போல சிதறிக் கிடக்கின்றன. பல்கலைக் கழகத்தின் இதயமான எங்களது நூலகம் அழிக்கப்பட்டு விட்டன. புத்தகங்கள் கருகிப் போய் சிமெண்ட் தூசியுடன் கலந்து கீழே கிடக்கின்றன. மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக பல ஆண்டுகள் நான் வகுப்பு எடுத்த ஆங்கிலத் துறை, இப்போது தூண்களும் உடைந்த படிக்கட்டுகளும் கொண்ட ஒரு எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. அந்த வளாகத்தை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை.

இடிந்து போன கட்டிடத்தின் பெளதீக அழிவைத் தாண்டி, எனக்கு மிகவும் வேதனை அளிக்கும் விசயம் என்னவென்றால், இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியிலும், மாணவர்களின் கனவுகளுக்கும், இலட்சியங்களுக்கும் நம்பிக்கைக்குரிய ஒரு இடமாக அந்த வளாகம் இருந்தது. தற்போது இடிந்து போயுள்ளதை காணும் பொழுது என் கண் முன்னே எதிர்காலம் சரிந்து விழுவதைப் பார்ப்பது போல இருந்தது. ஆனாலும், இப்பேரழிவுக்கு மத்தியிலும் நம்பிக்கை நீடிக்கிறது. கற்றலின் உணர்வை முழுமையாக அழிக்க முடியாது என்பதை நான் ஓவ்வொரு முறை வளாகத்திற்கு வரும் போதும் உணர்கிறேன். மாணவர்கள், ஆசிரியர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட எண்ணங்கள், மாணவர்களின் சிரிப்பு மற்றும் அவர்களுடைய ஆர்வத்தின் நினைவுகள் இன்றும் காற்றில் நிலைத்திருக்கின்றன.

இடிந்த சுவர்களுக்குள் இருக்கும் எங்களின் கடந்த காலக் கனவுகள் ஏற்படுத்தும் உணர்வுகள் மட்டுமே, காசாவில் மனிதகுல வளர்ச்சிக்குத் தடையாயுள்ள போர்களினால் இழந்த கல்வியை மீட்டெடுக்கவும், இடிபாடுகளுக்கு இடையில் தொடர்ந்து கல்வியை வளரச் செய்யவும் எங்களைத் தூண்டுகின்றது.

  • தாமிரபரணி

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன