நாட்டில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறிவிட்டதாகக் கூறி வேட்பாளர்கள், ஓட்டுக் கட்சி ஆதரவாளர்களிடம் பணம் பறி முதல் செய்வது, இதற்கான வழக்குகள் பதிவு செய்வது போன்ற நிகழ்வுகள் மூலம் இந்திய தேர்தல் ஜனநாயகம் ஏதோ நேர்மையாக நடத்தப்படுவது போல மக்களுக்கு உணர்த்தப்படுகிறது.
ஆனால் இதே தேர்தல் ஆணையம் தான் 2024-25 ஆம் நிதியாண்டில் ஓட்டுக்கட்சிகள் பெற்ற நன்கொடைகளை (ரூ 20,000 திற்கும் மேல்) சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த நன்கொடைகள் அனைத்தும் தேர்தல் அறக்கட்டளைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் ஓட்டுக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆளும் பா.ஜ.க அரசு, தேர்தல் அறக்கட்டளைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர்களான பெரும் காண்டிராக்டர்கள் மூலம் இந்நிதியாண்டில் சுமார் 6088 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றிருக்கிறது. இதில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் 3,744 கோடியும், தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் 2,344 கோடியும் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 520 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது.
மக்களின் உழைப்பு சக்தி, வரிப்பணம், நாட்டின் இயற்கை வளங்கள். அரசு சொத்துக்கள் ஆகியவற்றை கார்ப்பரேட்டுகள் பகற்கொள்ளையடிப்பதற்கும், இவர்களின் இலாப வேட்கைக்காக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களையும் கொடூரமாக சுரண்டி கொள்ளை இலாபமடிக்கவும், சுரண்டலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடைகளை வழங்கி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பகற்கொள்ளையைத் தங்கு தடையின்றித் தொடர்வதற்கான சன்மானம் நன்கொடைகள். இந்த நன்கொடைகளின் பெரும்பகுதி ஆளும் பா.ஜ.க கும்பலின் கைகளுக்கு போய்ச் சேர்கிறது.
2019-ஆம் ஆண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு வரை பா.ஜ.க மட்டும் 17,955 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் பா.ஜ.க-வின் வங்கி கணக்கு 87.96 கோடி ரூபாயிலிருந்து 10,107.2 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடைகளை விட 75 மடங்கு அதிகம் என்கிறார் காங்கிரசு எம்பி அஜய் மேக்கன்.
சென்ற பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஓட்டுக்கட்சிகள் நன்கொடைகள் பெறும் திட்டத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது எனக் கூறி இரத்து செய்தது. இதற்கு முன்பு அதாவது 2018-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் ஆண்டு வரை ஓட்டுக் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே வழங்க முடியும் என்ற முறை இருந்தது. இதன் மூலம் தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தேர்தல் அறக்கட்டளைகள் உள்ளிட்டவர்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் ஓட்டுக்கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது. மோடி அரசு 2018-ஆம் ஆண்டில் கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டத்தின் படி நன்கொடையாளர்களின் இரகசியத் தன்மையை உறுதி செய்ய முடியும்.
உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை இரத்து செய்த போதிலும், ஓட்டுக் கட்சிகள் நன்கொடைகள் பெறுவதை எந்த விதத்திலும் தடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தாண்டில் பா.ஜ.க முன்னிலும் அதிகமாகவே நன்கொடைகளைப் பெற்றிருக்கிறது. சென்ற 2024-ஆம் ஆண்டு முதல் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் மீண்டும் பழைய முறைப்படி தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral trust), கார்ப்பரேட்டுகள், தனிநபர்கள் மூலம் நன்கொடைகளை பெற்று வருகின்றன. தேர்தல் அறக்கட்டளைகளின் மூலம் நன்கொடைகளை பெறும் திட்டம் 2013-இல் மன்மோகன் சிங் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேர்தல் அறக்கட்டளைகள் தனிநபர்கள் மற்றும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்று அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கின்ற ஒரு நிறுவனமாகும். இத்திட்டத்திற்கான நெறிமுறைகளின் படி தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகள் மற்றும் அவை கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் நன்கொடைகள், எந்த அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கூறத் தேவையில்லை
இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் மூன்றாக இருந்த தேர்தல் அறக்கட்டளைகள் எண்ணிக்கை தற்போது 9 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிதியாண்டில் 9 தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு 3811.37 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது, புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை, ப்ரோக்ரெசிவ் தேர்தல் அறக்கட்டளை மற்றும் நியூ டெமாக்ரடிக் தேர்தல் அறக்கட்டளை போன்ற மூன்று நிறுவனங்கள் மட்டும் 98% நன்கொடைகளை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்திருக்கின்றன.
இதில் புருடெண்ட் அறக்கட்டளை கொடுத்த மொத்த நன்கொடையான 2,668 கோடி ரூபாயில் பா.ஜ.க-விற்கு மட்டும் 2,180 கோடி ரூபாய் (81%) கொடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரசு கட்சிக்கு 216 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடந்த ஏப்ரல், மே மாதங்களிலேயே பெருமளவு நன்கொடை புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளை மூலம் பா.ஜ.க-விற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தே புருடெண்ட் அறக்கட்டளை நன்கொடையை வசூலித்து ஓட்டுக் கட்சிகளுக்கு கொடுத்திருக்கிறது. இதில் நாட்டின் நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ மற்றும் மின்சாரத் துறை போன்றவற்றில் கோலோச்சி வரும் எல் & டி நிறுவனம் (500 கோடி), அணை கட்டுதல், எண்ணெய், எரிவாயு உற்பத்தி, அனல் மின் நிலையம் போன்றவற்றில் கோலோச்சி வரும் ஹைதராபாத் நிறுவனமான MEIL நிறுவனம் (320 கோடி), ரியல் எஸ்டேட் நிறுவனமான DLF குழுமம் (100 கோடி), ஜிண்டால் குழுமம் (167 கோடி), டோரண்ட் குழுமம் (337 கோடி), அசோக் லேலண்ட் (100 கோடி) போன்றவை புருடெண்ட் அறக்கட்டளை மூலம் ஓட்டுக்கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
டாடா நிறுவனம் மட்டுமே 915 கோடி ரூபாயை ப்ரோக்ரெசிவ் தேர்தல் அறக்கட்டளை மூலம் அரசியல் கட்சிகளுக்கு கொடுத்திருக்கிறது. இதில் 758 கோடி ரூபாய் (82%) பா.ஜ.க-விற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு செமிகண்டக்டர் ஆலைகளை டாடா நிறுவனம் தொடங்க மோடி அரசு அனுமதியளித்து அதற்கு மானியமாக 44,203 கோடி ரூபாய் கொடுத்த நான்கு வாரங்களில் டாடா நிறுவனம் ப்ரோக்ரெசிவ் தேர்தல் அறக்கட்டளை மூலம் பா.ஜ.க-விற்கு நன்கொடையை கொடுத்திருக்கிறது
அடுத்ததாக நியூ டெமாக்ரடிக் தேர்தல் அறக்கட்டளை மூலம் மகிந்திரா எனும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனம் கொடுத்த 160 கோடி ரூபாயில் 150 கோடி ரூபாய் பா.ஜ.க-விற்கு சென்றிருக்கிறது.
இதுமட்டுமில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் தனித் தனியாக கொடுத்த நன்கொடைகளிலும் பா.ஜ.க-விற்கு 82% சென்றிருக்கிறது. கோவிட் சமயத்தில் மோடி அரசுடன் இணக்கமாக இருந்த சீரம் மருந்து நிறுவனம் (100 கோடி), இரும்பு கனிமச் சுரங்கம், எஃகு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் கொல்கத்தாவைச் சார்ந்த ருக்தா குழுமம் (95 கோடி), பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் ஈடுபடும் நாசகார வேதாந்த நிறுவனம் (67 கோடி), டெரைவ் முதலீடுகள் (53 கோடி), நாடு முழுவதும் அரசு-தனியார் பங்களிப்பில் சாலை அமைப்பதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் மார்டன் ரோடு மேக்கர்ஸ் நிறுவனம் (52 கோடி) குஜராத்தில் செமிகண்டக்டர்ஸ் தொழிற்சாலை அமைப்பதற்காக ரூ.2300 கோடியை மானியமாக பெற்ற கெய்னஸ் என்ற மின்னணுவியல் நிறுவனம் (28 கோடி) லோட்டஸ் ஹோம் டெக்ஸ்டைல்ஸ் (51 கோடி) போன்ற நிறுவனங்கள் தனியாக பா.ஜ.க-விற்கு நன்கொடைகளை கொடுத்திருக்கிறது.
மேலும் மருந்து உற்பத்தியில் ஈடுபடும் எம்க்யூர், நாட்கோ, டாக்டர் ரெட்டிஸ், அரோபிந்தோ, லுபின், ஹெட்ரோ, டிவிஸ் போன்ற நிறுவனங்களும் நன்கொடைகளை கொடுத்திருக்கின்றன.
கார்ப்பரேட்டுகள் சட்டப்பூர்வமாக கொள்ளையடிப்பதில் பா.ஜ.க அரசு தீவிரமாக வேலை செய்து வருவதற்கு சன்மானம் தான் இந்த நன்கொடைகள். கார்ப்பரேட்டுகள் அளிக்கும் சன்மானத்தை பெறுவதில் காங்கிரசும் மற்ற ஓட்டுக் கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள்.
இது மட்டுமில்லாமல் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு வரும் நன்கொடைகள் பற்றி ரிப்போர்ட்டஸ் கலெக்டிவ் எனும் இணையதளம் ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த அளவே முதலீடு செய்கிறது. ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதியை சார்ந்தே அம்மாநிலப் பொருளாதாரம் பெரும்பாலும் இயங்குகிறது. அரசு திட்டங்களின் ஒப்பந்தங்களை கைப்பற்றுவதற்காக வடகிழக்குப் பிராந்தியம் மற்றும் பிற பா.ஜ.க மாநிலங்களில் இருக்கும் ஒப்பந்ததாரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு, கனிமவளச் சுரண்டல் திட்டங்களை கைப்பற்றும் ஒப்பந்ததாரர்கள், வடகிழக்கு பிராந்திய பா.ஜ.க அரசுகளுடன் இணக்கமாக இருப்பதோடு நன்கொடைகளை வாரி வாரி வழங்குகிறார்கள்.
2022-24 நிதியாண்டுகளில், அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள நன்கொடையாளர்களிடமிருந்து பா.ஜ.க காசோலைகள் மற்றும் மின்னணுப் பரிமாற்றங்கள் மூலம் 77.63 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதில் 43 கோடி ரூபாயை (55%) மட்டும் ஒன்றிய, மாநில அரசுகள் மூலம் டெண்டர் பெற்ற ஒப்பந்த நிறுவனங்கள் கொடுத்திருக்கின்றன.
பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் மணிப்பூரிலும் 2022-24 நிதியாண்டில் பா.ஜ.க பெற்ற மொத்த நன்கொடைகளில் ஒப்பந்ததாரர்கள் வழங்கிய நன்கொடையின் சதவீதம் கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒப்பந்ததாரர்கள் அமைக்கும் பாலங்கள், சாலைகள் எந்த தரத்தில் இருக்கும் என்பதற்கு எஸ்.பி.எஸ். கன்ஸ்ட்ரக்சன் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் பிகாரின் அகுவானி—சுல்தான் கஞ்ச் எனும் இடத்தில் கட்டிய பாலம், 2023- ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதே ஆண்டில் இந்நிறுவனம் அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பான் பஜாரில் 8.4 கி.மீ பாலத்தை கட்டிகொண்டிருந்தது. இதற்கு சன்மானமாக அஸ்ஸாம் மாநில பா.ஜ.க அரசுக்கு ரூ.5 கோடியை நன்கொடையாக இந்நிறுவனம் கொடுத்திருக்கிறது.
உத்திரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இயங்கும் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு அறக்கட்டளை திரிபுரா பா.ஜ.க மாநில அரசிற்கு ரூ.50 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இந்த அறக்கட்டளைக்கு திரிபுராவில் ஒரு பல்கலைக்கழகத்தை நடத்த அம்மாநில அரசு, அனுமதியளித்திருக்கிறது. வடகிழக்கு பிராந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பா.ஜ.க அரசு எவ்வாரு உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு இச்சம்பவம் சாட்சியாக உள்ளது
அஸ்ஸாமின் தனுக்கா குழுமம் எனும் பெரும் நிறுவனம், வசிஷ்டா ரியல்டர்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம், கன்ஷியாம் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் போன்றவற்றை நடத்தி வருகிறது. இக்குழுமம் 2022-24 ஆம் ஆண்டில் பா.ஜ.க அரசுக்கு ரூ.4.25 கோடியை நன்கொடையாக கொடுத்திருக்கிறது. இதன் இயக்குநர் அசோக் குமார், ஜார்க்கண்ட் மாநில அரசை கவிழ்ப்பதற்கு காங்கிரசு எம்.எல்.ஏ-களை விலைக்கு வாங்க பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தி ஒயர் இணையதளம் நடத்திய விசாரனையின் படி ஒன்றிய அரசின் தேசிய சுகாதார இயக்ககத்திடம் (NHM) இருந்து விதிமுறைகளை மீறி இரண்டு டெண்டர்களைப் பெற்றிருக்கிறது.
அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பத்ரி ராய் அண்ட் கம்பெனி நிறுவனம் உள்கட்டமைப்புத் திட்டங்களான சாலைகள், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் அரசு கட்டிடங்களைக் கட்டி வருகிறது. ஹிலாகண்டி மாவட்டத்தில் உள்ள பிர்சிமாவில் புதிய அசாம் போலிசு பட்டாலியனுக்கான 140 கோடி ரூபாய் ஒப்பந்தம் உட்பட, அசாமிற்கான திட்டங்களுக்காக இந்நிறுவனம் குறைந்தது 15 ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் 2022-இல் கட்டிக் கொண்டிருந்த மேகாலயா சட்டமன்றக் கட்டிடத்தின் குவிமாடம் இடிந்து விழுந்தது.
அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரான சாம்சன் போராங்க் என்பவரின் ’செடி அலைடு ஏஜென்சிக்கு’ அம்மாநில பொதுப்பணித் துறை மற்றும் தேசிய நீர்மின் சக்தி கழகம் லிமிடெட் மூலம் மூன்று ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2023-24 நிதியாண்டில் இந்நிறுவனம் பாஜக-விற்கு ரூ.4.3 கோடியை நன்கொடையாக கொடுத்திருக்கிறது.
மேகாலயாவைத் தலைமையிடமாகக் கொண்ட சிமென்ட் நிறுவனமான ஸ்டார் சிமென்ட் எனும் நிறுவனம் அஸ்ஸாம் மாநில அரசின் ரூ.3,200 கோடி மதிப்பிலான சிமென்ட் கிளிங்கர் எனும் திட்டத்தை கையகப்படுத்தியுள்ளது. வடகிழக்குப் பிராந்தியத்தில் பா.ஜ.க அரசு மூலம் 18 ஒப்பந்தங்களை இந்நிறுவனம் பெற்றிருக்கிறது இந்நிறுவனம் 4 ஆண்டுகளில் பா.ஜ.க-விற்கு ரூ.6.68 கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களை முன்னேற்றப் போகிறோம் என வாய்ச்சவடால் அடிக்கும் பா.ஜ.க அரசின் யோக்கியதை இது தான். வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறோம் என்ற பெயரில் கார்ப்பரேட் நலன்களுக்காக அங்குள்ள இயற்கை வளங்களை அழிப்பதோடு மட்டுமில்லாமல் அத்திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து தங்களுக்கான நன்கொடைகளையும் வசூலித்து வருகிறது.
கார்ப்பரேட் கொள்ளையர்கள் நாட்டின் வளங்களை ஒட்டு மொத்தமாக சுரண்டிக் கொழுப்பதற்கும், விளைநிலங்கள் அனைத்தையும் சுடுகாடுகளாக மாற்றவும், நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்று கூறிக்கொண்டு தரமற்ற சாலைகளையும், கட்டிடங்களையும் அமைத்துத் தருவதற்கும் ஏற்றாற்போல் சட்டங்களை மாற்றி, திட்டங்களைப் போட்டுக்கொடுப்பதற்கான எலும்பு துண்டுதான் பாசிச பாஜக உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் பெற்றுவரும் நன்கொடைகள். இதில் காவி-பாசிஸ்டுகள் முன்னணியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு நாட்டுப்பற்று, நாட்டின் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு என்று பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
- தாமிரபரணி






