இந்தியாவில் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பான என்ஐஏ குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மார்ச் 21, 2025 அன்று நாடாளுமன்றத்தின் மேலவையில் “பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில்” தனது அரசாங்கம் பல சாதனைளைப் புரிந்துள்ளதாக வெற்றிப் பெருமிதத்துடன் பேசியுள்ளார். அதில் தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குகள் பதிவு செய்வதிலும், நீதிமன்றங்களில் தண்டனைகளைப் பெற்றுத் தருவதிலும் பல சாதனைகளைப் புரிந்துள்ளதற்கு பயங்கரவாதத்தின் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கையே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளுடன் ஒப்பிடும் பொழுது என்.ஐ.ஏ தனித்துவத்துடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
என்.ஐ.ஏ தனது ஆண்டறிக்கையை டிசம்பர் 31, 2024 அன்று வெளியிட்டிருந்தது. அதில் 2024-ஆம் ஆண்டு 100% தண்டனை பெற்றுத் தந்துள்ளதாக பெருமை பொங்க கூறியிருந்தது. ஏனென்றால் இதற்கு முன்பு 95% வரையே தண்டனை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக 2024-ஆம் ஆண்டில் 25 வழக்குகளில் தண்டனைகளைப் பெற்றுத் தந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டறிக்கையுடன், தனது வழமையான இந்து தேசியப் பெருமிதத்தையும் சேர்த்து அமித்ஷா பேசியுள்ளார் என்பதையே அவரின் நாடாளுமன்ற உரை காட்டுகிறது.
அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள் கூட தனது துறையில் அடையமுடியாத வெற்றியை என்.ஐ.ஏ பெற்றுள்ளது. இந்த வெற்றிகளுக்காக என்.ஐ.ஏ தனித்து நிற்கிறது என்று புளகாங்கிதம் அடைந்துள்ளது மோடி-அமித்ஷா கும்பல்.
உண்மையில் மற்றெல்லா அமைப்புகளையும் விட, என்.ஐ.ஏ-வின் நிகரற்ற இந்த வெற்றியானது, அந்த அமைப்பு தனது வழக்குகளைக் கையாளும் விதத்தில் ஒளிந்துள்ளது என்பதை தி வயர் பத்திரிகை, என்.ஐ.ஏ-வின் தொடக்கம் முதல் செப்டம்பர் 2025 வரையிலான அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில் புதைந்துள்ள அச்சமூட்டும் உண்மை இந்து தேசியத்தை கட்டியெழுப்புவதற்காக அரசின் ஒவ்வொரு உறுப்புக்களையும் (ED, CBI, NIA) பாசிசமயமாக்கி வேட்டையாடி வருகிறது. அந்த வகையில் என்.ஐ.ஏ-வின் மூலம் இஸ்லாமியர்களைக் குறிவைத்து வேட்டையாடுகிறது.
யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் நீண்ட கால விசாரணைக்கு முன்பு தடுப்புக் காவலில் இருக்க வேண்டும். பல வழக்குகளில் இந்தத் தடுப்புக் காவல் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை நீடித்துள்ளது. மேலும் சில வழக்குகளில் 14 ஆண்டுகளையும் கடந்து நீடித்துள்ளது. இது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு ‘ஆயுள் தண்டனைக்கு’ சமமான காலமாகும். உதாரணமாக, உள்நாட்டுத் தீவிரவாதக் குழுவான இந்தியன் முஜாஹிதீனில் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 2008 முதல் பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட பல முஸ்லிம் ஆண்கள் இன்னும் விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர் என்பதிலிருந்தே தடுப்புக் காவலின் தன்மையையும், விசாரணையை வரைமுறையின்றி இழுத்தடிக்கப்படுவதையும் புரிந்துகொள்ள முடியும்.
தில்லியைச் சேர்ந்த வழக்குறைஞர் அபினவ் சேகரி, யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை பிணையில் எடுப்பது என்பது ஆழமான தண்ணீரில் தள்ளிவிட்டு, அவரது இரு கைகளையும் பின்னால் கட்டி நீந்தச் சொல்வது போன்றதாகும் என்கிறார். “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்ற பழமொழியின் பொருளாக இவரது கூற்று உள்ளது.
இதற்கு கட்டியம் கூறும் வகையில் பம்பாய் உயர் நீதிமன்றம் எல்கர் பரிஷத் வழக்கில், நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனி பாபு எம்.டி.க்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிணை கிடைக்கும் என்று கூறியதை நினைவில் கொள்ளவேண்டும்.
இதிலிருந்து நீண்டகாலக் காவலும், பிணை கிடைப்பதற்கு ஏறக்குறைய சாத்தியமில்லாத சூழ்நிலையும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி தூண்டுகின்றன. இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொள்வது, குற்றம் சாட்டப்பட்டவரின் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாகவும், முடிவில்லாத சட்டப் போராட்டங்களில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியாகவே இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் அவநம்பிக்கையின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை. மேலும் இந்த செயல்பாடுகளை “குற்றம் செய்ததற்கான” அங்கீகாரமாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
அவ்வாறு ஏற்றுக்கொண்டுதான் என்.ஐ.ஏ தனது ஆண்டறிக்கையில் பெருமையாகக் கூறியிருக்கிறது. அதனை வழிமொழிந்துதான் அமித்ஷா நாடாளுமன்ற மேலவையில் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார். இந்த செய்தியைத்தான் ஊதுகுழல் ஊடகங்களும், இந்து தேசிய ஆதரவாளர்களும் தொடர்ந்து வாந்தியெடுத்தும், பரப்பியும் வருகின்றனர்.
என்.ஐ.ஏ ஏன் அவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏனென்றால் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி தூண்டுவதற்கு அடிக்கொள்ளியாக இருந்தது இவ்வமைப்புதான் என்பதை தி வயர் இணையதளம் தனது நீண்ட ஆய்வின் மூலம் தோலுரித்துக் காட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை என்.ஐ.ஏ-வினுடைய மக்கள் தொடர்பு அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்து வந்தாலும், நீதிமன்றங்களும், வழக்குறைஞர்களும், NIA-வின் தரவுகளும் இவற்றிற்கு நேரெதிராக உள்ளது என்பது ஒரு தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது.
என்.ஐ.ஏ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி (டிசம்பர் 9, 2025 நிலவரப்படி), என்.ஐ.ஏ தொடங்கப்பட்டதிலிருந்து செப்டம்பர் 30, 2025 வரை பதிவு செய்யப்பட்ட 633 வழக்குகளில், இதுவரை 133 வழக்குகளில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே.
இந்த 133 வழக்குகளில், 79 வழக்குகளில் மட்டுமே என்.ஐ.ஏ சாட்சிகளை முறையாக விசாரித்து, ஆதாரங்களைச் சமர்ப்பித்து முழுமையான விசாரணையை நடத்தியுள்ளது. இதில் சில வழக்குகளில் தண்டனையும், சில வழக்குகளில் விடுதலையும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 54 வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் உண்மையான அர்த்தம், என்.ஐ.ஏ தனது வழக்குகளில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமானவற்றில் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் மூலமே தண்டனை பெற்றுத்தந்துள்ளது. மேலும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்ட 54 வழக்குகளில் 49 வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்துவிட்டு என்.ஐ.ஏ தனது ஆண்டறிக்கையில் அமலாக்கத்துறை, ஒன்றிய புலனாய்வுத்துறை ஆகியவற்றை ஒப்பிடும்பொழுது 100 சதவீதம் வழக்குகளை முறையாக நடத்தியுள்ளதாக எழுதுவதும், அதனை வழிமொழிந்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா பெருமை பொங்கப் பேசுவதும்,. இதற்கு ”ஜீரோ சகிப்புத்தன்மை” கொண்ட மோடி காரணம் என்று கூறுவது என்.ஐ.ஏ-வை பாசிசமயமாக்கிவிட்டோம் என்று கூறுவதேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
இருப்பினும், இந்தச் செயல்பாட்டில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று என்.ஐ.ஏ மறுக்கிறது. மேலும் “ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள முடிவு செய்து நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் அதன்பிறகு, அவருக்கும் நீதிபதிக்கும் இடையே மட்டுமே நீதி விசாரணை நடைபெறும். இதற்கும் என்.ஐ.ஏ-வுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் சாதிக்கிறார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரின் முடிவு குறித்து நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே தங்களுக்குத் தெரியவருவதாகவும், சில சமயங்களில் நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுக்கொண்ட பிறகுதான் அதுபற்றித் தெரியவரும்வதாகவும் என்.ஐ.ஏ கூறிவருகிறது. ஏனெனில் இது நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்பதை நிரூபிப்பதற்காக சொல்லப்படும் பொய்களாகும். விசாரணைக்காக என்.ஐ.ஏ அதிகாரிகளும், அரசுத் தரப்பு வழக்குறைஞரும் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகிறார்கள் என்பதிலிருந்தே இவர்கள் கூறுவது கடைந்தெடுத்த பொய் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும்.
அதேபோல் பொதுவெளியில் மக்கள் பார்வைக்காக தனது இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ள தீர்ப்புகளை பதிவேற்றாமல் திடீரென்று நிறுத்திவிட்டது, மேலும் பழைய தீர்ப்புகளும் கூட இணையதளத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டுள்ளது. இதேபோல், பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் இணையதளங்களும் என்.ஐ.ஏ வழக்குகளின் தீர்ப்புகளைப் பதிவேற்றுவதில்லை. இந்த நடைமுறைகளில் இருந்து உண்மையை மூடிமறைக்க எத்தனிக்கும் என்.ஐ.ஏ-வின் தகிடுதித்தங்கள் அம்பலமாகின்றன.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதும் (‘குற்றத்தை ஒப்புக்கொள்வது), செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி (குற்ற ஒப்புதல் பேரம்) பேரம் பேசுவதும் ஒன்றல்ல. இந்த உண்மை தெரிந்தும் என்.ஐ.ஏ தெரியாதது போல் போல் நாடகமாடி வருகிறது.
அதாவது “குற்றத்தை ஒப்புக்கொள்வது” மற்றும் “குற்ற ஒப்புதல் பேரம் பேசுவது ஆகிய சொற்கள் என்.ஐ.ஏ-வால் குழப்பப்படுகின்றன. ஆனால் இந்தியச் சட்டத்தின் கீழ் அவை வெவ்வேறானவை. குற்றத்தை ஒப்புக்கொள்வது என்பது, கருணை காட்டப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகும். அதே சமயம், 2005-ஆம் ஆண்டில் குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட குற்ற ஒப்புதல் பேரம் பேசுவது (குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 265A–265J-இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது), குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனைகளைக் குறைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த அனுமதிப்பதாகும். இது ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு மட்டுமே வரம்பிடப்பட்டுள்ளது. மேலும், என்.ஐ.ஏ-வால் தொடரப்படும் UAPA போன்ற சட்டங்களின் கீழ் வரும் கடுமையான குற்றங்களுக்கு இது பொருந்தாது என்பது ஒரு வெளிப்படையான உண்மை. ஆனாலும் இந்த உண்மையை மறைத்து என்.ஐ.ஏ-வும், நீதிமன்றமும் சேர்ந்து கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எவ்வாறு பேரம் பேசி வருகிறது என்பதை புரிந்துகொள்வதற்காக ஒரு உதாரணத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
2019-ஆம் ஆண்டில். 24 வயதான ராகேஷ் சௌத்ரி, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து ஒரு சிறிய கடனைப் பெற்றுக்கொண்டு பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள பெட்டியா கிராமத்தில் ஒரு சிறிய மீன் மற்றும் காய்கறி வியாபாரத்தைத் தொடங்கினார். அந்தத் தொழிலின் மூலம் சௌத்ரிக்கு சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் திருமணம் செய்துகொள்வதற்கான வயதும், பொறுப்பும் சௌத்ரிக்கு வந்துவிட்டதாக அவரது பெற்றோர் நம்பினர். இருப்பினும், திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. மணமகள் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் சடங்கான ‘கௌனா’ நிகழ்ச்சிக்குச் சில நாட்களுக்கு முன்பு, கள்ள நோட்டுகளைப் பெற்ற வழக்கில் என்.ஐ.ஏ சௌத்ரியைக் கைது செய்தது. இதில் அவரை ஐந்தாவது குற்றவாளியாகச் சேர்த்திருந்தது.
இந்தச் சிக்கல், சௌத்ரியின் தாய்மாமனான மன்னாலால், ஒரு கள்ள நோட்டு வழக்கில் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி சீர்திருத்த இல்லத்தில் சிறையில் இருந்தபோது, சௌத்ரியை அவசரமாகச் சிறைக்கு வந்து சந்திக்குமாறு அழைத்ததிலிருந்து தொடங்கியது. சௌத்ரியும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், பிப்ரவரி 2019-இல் அவர் பெட்டியாவுக்குத் திரும்பியபோது, போலி இந்திய ரூபாய் நோட்டுகளை (FICN) கடத்தியதாக என்.ஐ.ஏ-வால் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
விரைவில் மன்னாலால் பாட்னாவில் உள்ள பியூர் ஆதர்ஷ் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். FICN வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று பேர் – ஷாநவாஜ் ஷேக், செலிம் எஸ்கே மற்றும் கமீருஜ்ஜமான் – ஆகியோரும் சௌத்ரியைப் போலவே இச்சிறையில் அடைக்கப்பட்டனர். “சிறைக்குள், எனக்கு என் மாமாவை மட்டும்தான் தெரியும். மேலும், என்னை இந்தச் சிக்கலில் மாட்டிவிட்டதற்கு அவர்தான் காரணம் என்று நான் நினைத்தேன், அதனால் நான் அவரிடமிருந்து விலகியே இருந்தேன். மற்ற மூவரும் என் மீது விரோதத்துடன் இருந்தனர்,” என்று சௌத்ரி நினைவு கூர்கிறார்.
மே 2019 (அவர் கைது செய்யப்பட்டபோது) மற்றும் ஜனவரி 2022-க்கு இடையில், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. “சில நாட்களில், பாதுகாப்புப் படை வீரர்கள் கிடைக்கும்போது, அவர்கள் எங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வார்கள். நீதிபதி அடுத்த தேதியை (விசாரணைக்கு) குறித்துவிட்டு, எங்களை மீண்டும் சிறைக்கு அனுப்பிவிடுவார்.” சௌத்ரியின் அப்போதைய வழக்குறைஞர் வாசிஃப் கான், இந்த விசாரணையை ஒரு “இயந்திரத்தனமான செயல்” என்று விவரிக்கிறார். “தங்கள் முன் யார் ஆஜர்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்க்க நீதிபதிகள் அரிதாகவே நிமிர்ந்து பார்க்கிறார்கள். சிறையில் இருந்து அழைத்து வரப்படும் நபர் நல்ல நிலையில் இருக்கிறாரா?, அவருக்கு ஏதேனும் புகார்கள் அல்லது கோரிக்கைகள் உள்ளதா?, அவரைப் பாதுகாக்க ஒரு வழக்குறைஞர் இருக்கிறாரா? என்பதைப் பற்றி யாரும் சரிபார்ப்பதாகத் தெரியவில்லை” என்று கான் கூறுகிறார்.
இருப்பினும், ஜனவரி 2022-இல், நிலைமைகள் திடீரென்று மாறத் தொடங்கின.
சௌத்ரியும் அவரது சக குற்றவாளிகளும் சிறை அதிகாரியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அந்த இடம் பொதுவாக கைதிகளுக்கு அனுமதிக்கப்படாத ஒரு பகுதியாகும். அங்கே, அவர்கள் தரையில் ஒரு வரிசையில் அமர வைக்கப்பட்டனர். “பிறகு, மூன்று பேர் உள்ளே வந்தனர்,” என்று சௌத்ரி நினைவு கூர்கிறார். அவர்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று அவருக்குத் தெரியும் – அவர் கைது செய்யப்பட்டபோதும், நீதிமன்றத்தில் சில முறையும் அவர்களைப் பார்த்திருந்தார், ஆனால் அவர்களில் யாருடனும் அவர் பேசியதில்லை.
என்.ஐ.ஏ அதிகாரிகள் ஒரு கட்டு வெள்ளைத் தாள்களை வைத்திருந்தனர், என்று சௌத்ரி கூறுகிறார். “உங்களுக்கு இந்தியில் படிக்கவும் எழுதவும் தெரியுமா? என்று எங்களிடம் கேட்டார்கள். நாங்கள் தலையசைத்தோம்.” பின்னர், அந்த மூன்று பேரும், தங்கள் வழக்கை விரிவாகவும், தாங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கான சாத்தியமான தண்டனை குறித்தும் விளக்கினார்கள் என்று அவர் கூறுகிறார். “நாங்கள் குறைந்தது 10 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும் என்று எங்களிடம் சொன்னார்கள்.” மேலும் அந்த வெள்ளைத் தாள்களில் எங்களிடமிருந்து வாக்குமூலங்களை எழுதி கையெழுத்திடுவதற்காக கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.
பின்னர், என்.ஐ.ஏ அதிகாரிகளில் ஒருவர் ஒரு சலுகையை வழங்கினார்: “குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்கள், நாங்கள் நீதிமன்றத்துடன் பேசி தண்டனையைக் குறைத்து விடுகிறோம். மொத்தத்தில், ஐந்து ஆண்டுகளில் வழக்கை முடித்துவிடலாம்.”
குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கூறியது ஒரு கரிசனமானக் கோரிக்கையாகத் தெரியவில்லை. மேலும் அது ஒரு மறைமுக மிரட்டல் என்று சௌத்ரி கூறுகிறார். அவர்களில் ஒவ்வொருவரும் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததால், ஐந்து பேரில் நான்கு பேர் உடனடியாக ஒப்புக்கொண்டனர். சௌத்ரி மட்டுமே ஒப்புக்கொள்ளவில்லை. “நான் ஒருபோதும் பிணையில் விடுவிக்கப்பட மாட்டேன் என்றும், பல ஆண்டுகள் சிறையிலேயே அழுகிப் போவேன் என்றும் என்னிடம் சொன்னார்கள்.” ஆனால், இப்போது எதற்கும் தான் தயாராக இருந்ததாக சௌத்ரி கூறுகிறார். “நான் சம்பந்தப்படாத ஒரு வழக்கில் ஏற்கனவே மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டேன். இதைவிட மோசமான நிலைமை ஏற்பட முடியுமா என்ன?”
இறுதியாக, சௌத்ரி தனது முடிவில் உறுதியாக இருந்தபோது, அவர் மற்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டார். ஜனவரி 22, 2022 அன்று, மற்றவர்கள் தங்கள் சொந்த கையெழுத்தில் ஒரே மாதிரியான வரிகளை எழுதும்படி கேட்கப்பட்டனர். ஆதர்ஷ் மத்திய சிறையின் கண்காணிப்பாளரும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது, அவரது பெயர் சௌத்ரிக்கு நினைவில் இல்லை. “நாங்கள் செய்த குற்றத்திற்காக வருந்துகிறோம். தயவுசெய்து எங்கள் வாக்குமூலத்தைக் கருத்தில் கொண்டு, தண்டனையின் அளவைத் தீர்மானிக்கும்போது கருணையுடன் அணுகவும்,” என்று அவர்களின் விண்ணப்பங்களில் எழுதப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக மனு அளித்திருந்தனர். அதுவரை எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை. நீதிமன்றம் இன்னும் குற்றச்சாட்டுகளைக் கூடப் பதிவு செய்யவில்லை – இது உண்மையான விசாரணை தொடங்குவதற்கு முந்தைய ஒரு கட்டம். என்.ஐ.ஏ நீதிபதி குரிந்தர் சிங் மல்ஹோத்ரா அவர்களின் குற்ற ஒப்புதல் மனுக்களை உடனடியாக ஏற்றுக்கொண்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட நான்கு பேரில் மூவர் முஸ்லிம் ஆண்கள் ஆவர்.
தீர்ப்பில், நீதிபதி மல்ஹோத்ரா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 229-ல் குறிப்பிடப்பட்டுள்ள ”இருக்கலாம்” (may) என்ற வார்த்தையை மேற்கோளிட்டு அந்தப் பிரிவு, “குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால், நீதிபதி அந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து, தனது விருப்பப்படி, அதன் அடிப்படையில் அவரைத் தண்டிக்கலாம்” என்று கூறுகிறது. தனது உத்தரவில், மல்ஹோத்ரா, “இருக்கலாம்” என்ற வார்த்தையின் பொருள் என்னவென்றால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும், அவர்கள் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி, திட்டவட்டமாக, எந்தவித தூண்டுதல், மிரட்டல் அல்லது வாக்குறுதியின்றி குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார். இருப்பினும், நான்கு நபர்கள் ஒரே மாதிரியான மனுக்களுடன் ஒருமனதாக ஏன் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்பதை நீதிபதி விசாரிக்கவில்லை. அதேபோல் குற்ற ஒப்புதல் வாக்குமூலச் செயல்பாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரிக்கப்படவில்லை. தனது சக குற்றவாளிகளைப் போல சௌத்ரி ஏன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வழியைப் பின்பற்றவில்லை என்றும் நீதிபதி விசாரிக்கவில்லை.
என்.ஐ.ஏ-வின் சலுகையை நிராகரித்த சௌத்ரி, இறுதியில் ஏப்ரல் 12, 2023 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ‘தி வயர்’ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர், என்.ஐ.ஏ அதிகாரிகள் சிறையில் எந்தக் குற்றவாளிகளையும் சந்தித்ததை திட்டவட்டமாக மறுத்து விட்டார். மேலும் “முறையான நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எங்கள் அதிகாரிகள் எந்தக் குற்றவாளியையும் சந்திப்பதில்லை,” என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
விடுதலையாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு, சௌத்ரி செய்தியாளரைச் பாட்னாவில் சந்தித்தார். திரும்பிப் பார்க்கும்போது, என்.ஐ.ஏ-வின் அழுத்தத்திற்குப் பணியாததற்காகத் தான் இன்னமும் பெருமைப்பட வேண்டுமா? அல்லது அந்தச் செயலை ஒரு முட்டாள்தனமாக கருத வேண்டுமா? என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். “நான் பெரும் சிரமப்பட்டு உருவாக்கிய சிறு தொழில் அழிந்துவிட்டது. நான் இன்னும் வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. என் மனைவி அவளுடைய பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். எனக்கு முறையான தங்குமிடமும் அல்லது அவளைக் கவனித்துக்கொள்ளும் நிதி வசதியும் கிடைக்கும் வரை அவள் திரும்பி வரமாட்டேன் என்று கூறுகிறாள்.”
சௌத்ரியின் சட்டப் போராட்டம் தொடர்கிறது.
அதேபோல் மராட்டியத்தின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தில் வசித்து வந்த முகமது ரைசுதீன் ஏறக்குறைய இதே போன்ற ஒரு போராட்டத்தை என்.ஐ.ஏ-வுடன் நடத்தினார்.
2019-ஆம் ஆண்டு ஒரு வழக்கில், சஜ்ஜாத் அகமது கான், பிலால் அகமது மிர், முசாபர் அகமது பட், இஷ்ஃபாக் அகமது பட், மெஹ்ராஜ்-உத்-தின் சோபன் மற்றும் தன்வீர் அகமது கனி ஆகிய ஆறு காஷ்மீர் ஆண்களை என்.ஐ.ஏ கைது செய்தது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் (“JeM”) மறைமுக உதவியாளர்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தும், தங்கள் வழக்கில் உறுதியான முன்னேற்றம் எதுவும் இல்லாததால், அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
சௌத்ரி, ரைசுதீன் மற்றும் அகமது ஆகியோரின் வழக்குகளை தனிப்பட்ட சம்பவங்களாகத கருத முடியாது. இதனை முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்குகளாகவே கருதமுடியும். மேலும் எந்தவித விசாரணையுமின்றி காலத்தை கடத்துவதும் இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்வதற்கு வழக்குறைஞர்களையும், நீதிமன்றங்களையும் கூட்டுச்சேர்த்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு சூத்திரதாரியாக என்.ஐ.ஏ செயல்பட்டு வருவது அம்பலமாகி இருக்கிறது.
- மகேஷ்







