சத்திஸ்கர், ஜார்கண்டு, ஒரிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர், தங்களது வளங்களைப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்கு எதிராகப் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நக்சல்பாரிப் புரட்சியாளர்கள், மாவோயிஸ்டுகளும் இணைந்து போராடி வருகின்றனர். இந்த எதிர்ப்பை முனை மழுங்கச் செய்வதற்கு இந்திய ஆளும் வர்க்கம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஓராண்டாக மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துப் படுகொலை செய்வதன் மூலம் அந்த அமைப்பை முற்றிலுமாக அழித்துவிட மோடி அமித்ஷா கும்பல் சபதமெடுத்துள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் பழங்குடியினரின் மத்தியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் வேலையில் காவி பாசிசக் கும்பல் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவதன் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக போராடி வரும் பழங்குடியினருக்குள் பிளவை உண்டாக்கும் இந்த நடவடிக்கை, இந்துத்துவ பயங்கரவாதமும், கார்ப்பரேட் பாசிசமும் இணைந்த வீரிய ஒட்டுரகமான காவி கார்ப்பரேட் பாசிச தாக்குதலில் காவிகளின் விருப்பமும், கார்ப்பரேட்டுகளின் நலனும் ஒத்துப் போவதற்கு ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு.
சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மத்தியில், கிறிஸ்தவர்கள் மதமாற்றம் மூலமாக பழங்குடியினரின் கலாச்சாரங்களை அழித்து வருவதாக காவிக் கும்பல் பிரச்சாரம் செய்கிறது. கிறிஸ்தவர்களாக மாறிவிட்டவர்களை, அவர்கள் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் இறந்த பிறகு பழங்குடியின நிலத்தில் கிறிஸ்தவ மதச் சடங்குகளுடன் புதைக்க அனுமதிக்க கூடாது என்ற நச்சுப் பிரச்சாரத்தை காவிக் கலவரக் கும்பல் கையில் எடுத்துள்ளது.
டிசம்பர் 19-ஆம் தேதியன்று பாசிஸ்டுகளின் இந்த நச்சுப் பிரச்சாரம் கலவரமாக வெடித்தது. சத்திஸ்கர் மாநிலத்தில் கன்கேர் மாவட்டத்தில் உள்ள அமாபேதா என்ற கிராமத்தில், கிறித்தவ மதச் சடங்குகளுடன் புதைக்கப்பட்ட ஒருவருடைய உடலை பழங்குடியினரின் குற்றச்சாட்டின் பேரில் தோண்டியெடுத்து அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து, அங்கே மோதல் வெடித்தது. கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு எதிராக பழங்குடியினரின் ஒரு பிரிவினர் தாக்குதலில் இறங்கினர். இந்த தாக்குதலில் இரண்டு கிறித்துவ தேவாலயங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கிறிஸ்தவர்களது வீடுகளும் தாக்கப்பட்டன. இதில் பலரும் பலத்த காயமடைந்துள்ளனர்[1]. அங்கே தற்போது மத்திய ரிசர்வ் படைப்பிரிவுகள் கொண்டுவரப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு எல்லாம் தங்களைத் தடுக்காது என்பதை உணர்த்துவது போல, இந்தத் தடைகளை மீறி, கிறிஸ்துமஸ் தினத்தன்று காவிக் கும்பல் மாநிலம் முழுவதும் பல இடங்களில் கலவரத்திலும் தாக்குதலிலும் இறங்கியிருக்கிறது.
ராய்ப்பூரில், ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டிருந்த ஒரு ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த 50 – 60 பேர் கொண்ட காவி கும்பலானது அங்கிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்ததுடன், பொருட்களையும் கொள்ளயடித்துச் சென்றுள்ளது[2].
சத்திஸ்கரைப் போன்றே அசாம் மாநிலத்திலும், பழங்குடியினருக்கு இடையில் பிளவை உண்டாக்கும் வேலையைக் காவிக் கும்பல் செய்துவருகிறது. பழங்குடியினர் அல்லாதவர்களை பழங்குடியின நிலங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறிக்கொண்டு கலவரத்தை தூண்டி வருகின்றது. மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது இன மோதலாகத் தோன்றினாலும், உள்ளே மதரீதியிலான பிளவை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே இந்தப் பிரச்சாரமும் கலவரமும் காவிக் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. மணிப்பூரில் இதே போன்று காவிக் கும்பல் தூவிய கலவர விதை அம்மாநிலம் முழுவதும் பற்றியெரியக் காரணமாக இருந்ததை நாம் மறந்துவிட முடியாது. மணிப்பூரைப் போன்றே அசாமிலும் கலவரத்தை உருவாக்கிட காவிக் கும்பல் விரும்புகிறது.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அசாமின் மலை மாவட்டங்களில் ஒன்றான கர்பி அங்லாங் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில், பழங்குடியினர் அல்லாதவர்களைப் பழங்குடியினர் நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடத்தப்பட்ட பேரணியில் கலவரம் வெடித்தது. அதனைத் தொடர்ந்து நடந்த மோதலில் இரண்டுபேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அம்மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன.
ஆனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கலவரத்தில் ஈடுபடாமல், காவி குண்டர் படையால் அமைதியாக இருக்க முடியுமா? நல்பாரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தல் அமைப்புகளைச் சேர்ந்த கலவரக் கும்பல் தாக்குதல் தொடுத்துள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸ் தினத்தன்று, நல்பாரி மாவட்டத்தின், பனிகோன் பகுதியில் உள்ள செயிண்ட் மேரி ஆங்கிலப் பள்ளிக்குள் நுழைந்த இந்த குண்டர் படை, கிறிஸ்துமஸ் அலங்காரங்களை எல்லாம் கிழித்தெறிந்து, அங்கிருந்த பொருட்களை தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றனர். கிறித்தவர்களுக்கு எதிராக முழக்கமிட்டதுடன், அங்கிருந்தவர்களை மிரட்டி துரத்தியிருக்கின்றனர்[3].
குஜராத்தின் வலசாத் மாவட்டத்தில் உள்ள 25 பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கலந்து கொள்ள தடைவிதிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனுச் செய்திருக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் மூலமாக பழங்குடியினரை மதமாற்றும் முயற்சி நடப்பதாக காவி பாசிஸ்டுகள் திட்டமிட்டு நடத்திவரும் பொய் பிரச்சாரத்தின் காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் ஒரே சமயத்தில் நடந்திருக்கின்றன.
இவை தவிர நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னரும் அதற்கு பிறகும் கூட கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவங்களைக் காவிக் குண்டர் படை நிகழ்த்தியிருக்கிறது.
உத்தரபிரதேசத்தின் பெரேய்லில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், பஜ்ரங்தளத்தை சேர்ந்த காலிகள், ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வெளியே கூடி நின்று அனுமன் மந்திரங்களைப் பாடியதுடன், மதவெறி கோஷம் எழுப்பி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியிருக்கின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் மதமாற்றம் நடப்பதாக கூறி அங்கிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டதுடன், உடனடியாக கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் என மிரட்டியிருக்கின்றனர்.
அதேபோல் தில்லியில், தலையில் சிகப்புக் குல்லா அணிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பஜ்ரங்தள் கும்பல்கள் மிரட்டிய காணொளி வெளியாகியிருக்கிறது. சிகப்புக் குல்லா அணிந்து சாலையில் நடந்து செல்லவும் கூடாது என காவிக் கும்பல் கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கிவிட்டது.
மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் பாஜகவின் மாவட்ட துணைத்தலைவர் அஞ்சு பார்க்கவ், ஒரு கண் தெரியாத கிறிஸ்தவப் பெண்ணை கிறிஸ்துமஸ் கரோல் பாடியதாக குற்றஞ்சாட்டி எல்லோர் முன்னிலையிலும் தாக்கியிருக்கிறான். இதே போன்று மத்தியபிரதேச மாநிலத்தின் பல இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
உத்தரபிரதேசத்தில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என அறிவித்த யோகி ஆதித்யநாத் அரசு அன்றைக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு வாஜ்பாய் குறித்து பாடம் நடத்தப்படும் என கூறியிருக்கிறது.
வட இந்தியாவில் மட்டுமல்ல தென்னகத்திலும், குறிப்பாக கேரளாவிலும் காவிக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்களை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவன் தாக்கியிருக்கிறான். கேரள மாநிலத்தில் தபால்துறை ஊழியர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தனர். இந்தக் கொண்டாட்டங்களின் போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பாடல் ஒன்றைப் பாட வேண்டும் என பாஜகவின் தொழிற்சங்கம் கூறி பிரச்சனை செய்ததால் அந்தக் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.
இதற்கு முன்னதாக இஸ்லாமியர்களைக் குறிவைத்து காவி பாசிஸ்டு கும்பல் இதே போன்ற தாக்குதல்களை நடத்தியது. இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போது, கூட்டுத் தொழுகை நடத்தக் கூடாது, விடுமுறை விட முடியாது, இறைச்சிக் கடைகளை அடைக்க வேண்டும் என தொடர்ந்து அச்சுறுத்தினார்கள்.
கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரித் போன்ற சிறுபான்மையின மதங்களை பின்பற்றுபவர்களின் வழக்கமான மதவிழாக்களைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதன் மூலம், காவி பாசிஸ்டுகள் தாங்கள் உருவாக்கும் இந்து ராஜ்ஜியத்தில் சிறுபான்மையினர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்திவருகிறார்கள்.
இன்று இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக இந்து கலாச்சாரத்தை சனாதன தர்மத்தை முன்னிறுத்தும் இதே காவிக் கும்பல், நாளை இதே சனாதன தர்மத்தைக் காட்டியே பழங்குடியினர்களையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒடுக்கும். தங்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒடுக்கும். காவி பாசிஸ்டுகளின் பிளவுவாத அரசியல் உடைக்கப்படாதவரை இந்த ஆபத்தைத் தடுக்க முடியாது.
- அறிவு
[1] https://www.newindianexpress.com/nation/2025/Dec/19/churches-set-ablaze-as-burial-dispute-sparks-violence-in-chhattisgarh-village
[2] https://www.newindianexpress.com/nation/2025/Dec/19/churches-set-ablaze-as-burial-dispute-sparks-violence-in-chhattisgarh-village
[3] https://www.newsgram.com/amp/story/law-order/2025/12/25/bajrang-dal-members-target-christmas-celebrations





