UGC கலைப்பு மசோதா – உயர்கல்வியில் அதிகார மையப்படுத்துலுக்கான காவி கும்பலின் செயல்திட்டம்!

இம்மசோதாவின் மூலம் மொத்த உயர்கல்வி அமைப்பையும் தன்னுடைய நேரடியானக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது மோடி கும்பல். கூடவே இம்மசோதாவின் மூலம் தனியார் பல்கலைக்கழகங்களின் முறைகேடுகளனைத்தும் தற்போது சட்டரீதியான பாதுகாப்புடன் நடக்கப்போகிறது.

கடந்த வாரம் திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி  அமைப்பு மசோதா (Viskit Bharath Shiksha Adhishthan – VBSA) விற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனவே மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்காக பரிந்துரைத்திருக்கிறார் சபாநாயகர். அதிகார மையப்படுத்துதல், இந்துத்துவ திணிப்பு, கார்ப்பரேட்மயம் ஆகியவற்றுக்கான நிர்வாக ரீதியான கட்டமைப்பு மாற்றத்தை திணிப்பதற்காகவே இம்மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. 2018-இல் மோடி கும்பல் கொண்டுவந்த  இந்திய உயர்கல்வி ஆணைய மசோதாவின் (HECI) நகலே தற்போதைய “வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி  அமைப்பு” மசோதாவாகும்.  

இம்மசோத குறித்த விவாதத்தில், மாநிலங்களின் உரிமையில் தலையிடமாட்டோம் என ஒன்றிய கல்வி அமைச்சர் பிரதான் பேசுகிறார். 2018-இல் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது, இம்மசோதாவை ஆய்வு செய்த கல்விக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, இம்மசோதா மாநிலங்களுக்கான அதிகாரத்தைக் குறைத்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உயர்கல்வியை கொண்டு போவதாகவும், உயர்கல்வியில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதாகவும்  கருத்துக் கூறியது. இம்முழு உண்மையை மறைத்து விட்டு, இம்மசோதா மாநிலங்களின் உரிமையைப் பறிக்காது என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார்.

இம்மசோதாவில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையம் (AICTE), பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தேசிய ஆசிரியர் கல்வி ஆணையம் (NCTE) ஆகிய மூன்றையும் கலைத்து விட்டு அதற்குப் பதிலாக இந்த VBSA முன்மொழியப்பட்டுள்ளது. இது, உயர்கல்வித் தரத்திற்கான  அளவுகளை நிர்ணயிப்பது, பாடத்திட்டத்தை வடிவமைப்பது, பல்கலைக்கழகத்திற்கான அங்கீகாரம் மற்றும் அதன் தரத்தினைச் சோதித்து சான்றழிப்பது ஆகியவற்றை முக்கிய வேலையாகக் கொண்டிருக்கும்.  

UGC உள்ளிட்ட பழைய அமைப்புக்கும் VBSA-விற்கும் உள்ள வேறுபாடே, இவ்வமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதும் தனியார் அமைப்புகளைக் கொண்டு பல்கலைக் கழங்களுக்கான அங்கீகாரம் மற்றும் தரநிர்ணயம் செய்வதும்தான். இதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் அதிகாரிகள் என்பது கவனிக்க வேண்டியது. அடிப்படையில், இம்மசோதாவின் மூலம் மொத்த உயர்கல்வி அமைப்பையும் தன்னுடைய நேரடியானக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது மோடி கும்பல். கூடவே இம்மசோதாவின் மூலம்  தனியார் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளும் இதன்பிறகு சட்டரீதியான பாதுகாப்புடன் நடைபெறப்போகிறது. இதைப் பற்றி பிறகு  விரிவாகப் பார்ப்போம்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஒன்றிய பாஜக-வின் முகமான ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடயேயான அதிகாரப் போட்டியில் ஏறத்தாழ பல மாநிலப் பல்கலைக் கழகங்கள் முடங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.  தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த மூன்று வருடங்களில் ஒன்பது பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமலே உள்ளது.  இதனால் மாணவர் சேர்க்கை குளறுபடிகள், ஒப்பந்த ஆசிரியர்கள் நியமன தமதத்தினால் தரமான கல்வி வழங்குவதில் போதாமை, மாணவர்கள் பயன்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யாமை, குறித்த காலத்தில் மதிப்பெண் சான்றிதல் மற்றும் பட்டம் வழங்குவதில் தாமதம் என கல்விச் செயல்பாடுகளின்  ஒவ்வொரு மட்டத்திலும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு, பஞ்சாப் மாநில அரசாங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குகள்  விசாரணையில் இருந்து வருகின்ற நிலையில், இவ்வருட தொடக்கத்தில், (ஜனவரியில்) துணைவேந்தர்கள் நியமிப்பதில் UGC-க்கும் ஆளுநருக்குமே அதிக அதிகாரம் உள்ளதாக சரத்துக்களை உள்ளடக்கிய துணைவேந்தர்கள் நியமனத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை UGC வெளியிட்டது.  அதன் அடுத்த கட்டமாக, தற்போது அறிமுகப்படுத்தியுள்ள VBSA மசோதாவின் மூலமாக பல்கலைக் கழகங்களின் அனைத்து விவகாரங்களிலும் ஒன்றிய அரசுக்கே அதிக அதிகாரம் என்பதை சட்டமாக்கியுள்ளது.

அதிகார மையப்படுத்தலுக்கான மற்றொரு உதாரணம், இம்மசோதா UGC-இன் நிதி வழங்கும் உரிமையை பறித்து ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் கொடுத்துள்ளது. இதற்கு முன்பு பல்கலைக்கழக மானியக் குழு மாநில பல்கலைக் கழகங்களில் புதிய ஆய்வைத் தொடங்குவதற்கும் அல்லது துறையைத் தொடங்குவதற்கும் திட்ட அடிப்படையில் நிதி வழங்கி வந்தது. ஆனால் தற்போது கல்விக்கான நிதி அல்லது ஆய்வுக்கான நிதி ஒதுக்குவதை ஒன்றிய கல்வி அமைச்சகம் மட்டுமே முடிவு செய்ய முடியும். அதாவது பாஜக–வின் அரசியல் திட்டத்திற்கு உட்படுகின்ற மாநிலங்களுக்கு மட்டுமே உயர்கல்வி சார்ந்த நிதிகள் ஒதுக்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் பள்ளிக் கல்விக்கான நிதியைத் தரமுடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் வெளிப்படையாகவே மிரட்டி வருவதே இதற்கு சான்று. 

இந்த அதிகார குவிப்பிற்கு காரணமே மோடி கும்பல் அமல்படுத்திவரும் தீவிரத் தனியார்மயமும் அதன் மற்றொரு பக்கமான காவிமயத் திணிப்பும் தான். நடப்பு  நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட ஆயுள் காப்பீட்டில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, அணு சக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி, சில வாரங்களுக்கு முன்பு தொழிலாளர் சட்டத் திருத்தத்தை அமலுக்குக் கொண்டுவந்தது. அதன் தொடர்ச்சியாகவே VBSA மசோதாவையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு துறையையும் அந்நிய நிதி மூலதனத்தின் சூறையாடலுக்கு திறந்து விடுவதற்காக கொண்டு வரப்படும் சட்டத்திருத்த வரிசையில் உயர்கல்வியை கபளீகரம் செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தமே  VBSA மசோதா. இதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

தொடரும்…

 

  • செல்வம்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன