திமுக முன்வைக்கும் சட்டப்போராட்டத்தினால் நீட் தேர்வு விலக்கைப் பெற முடியுமா?

பாஜக-வின் மனமாற்றத்திற்காகக் காத்திருப்பதை விட ஒன்றியத்தில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தத் தமிழக மக்கள் உழைக்க வேண்டியதைவிட மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலம் நீட் தேர்வு விலக்குப் பெறுவது சுலபம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காததைக் எதிர்த்து சிலதினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது திமுக அரசாங்கம். இதில் “மூன்றரை வருடங்களுக்கும் மேலாக எந்தப் பதிலும் சொல்லாமல் மசோசாதவை கிடப்பில் போட்டிருந்ததாகவும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றவில்லையென்பதால் உச்சநீதிமன்றமே இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என திமுக கோரியுள்ளது.

மோடி தலைமையிலான கேபினட் அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் குடியரசு தலைவர் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்வில்லை. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் அது தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தங்களிலிருந்து விலக்கோ அல்லது திருத்தங்கள் வேண்டுமென்று மாநிலங்கள் இயற்றும் சட்டத்திற்கு கட்டாயமாக ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

எனவே தமிழ்நாடு அரசாங்கம் கொண்டு வந்த நீட் விலக்கு மசோதா சட்டமாக வேண்டுமென்றால் கட்டாயமாக மோடி அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டும். தற்போதைக்கு அதற்கு வாய்ப்பே கிடையாது என அறிந்த திமுக, குடியரசுத் தலைவர்(அதாவது ஒன்றிய அமைச்சரவை) மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு சொல்ல வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, மூன்றாண்டுகள் பதில் சொல்லாமல் கிடப்பில் போட்டிருந்ததால் உச்ச நீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இம்மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

மருத்துவக் கல்விக்கான பொதுத் தேர்வு என்பது (நீட் தேர்வு) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துக் கவுன்சில் சட்டத்தின் அங்கம் என்பதால், மாநிலப் பட்டியலில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததைப் போல, இதற்கு உச்ச நீதிமன்றம் நேரடியாக ஒப்புதல் கொடுக்கமுடியாது. இது திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் தெரியும். சட்ட ரீதியாக நீட் விலக்கிற்கு இனி வாய்ப்பே இல்லை என்பதால் நிலைமைகளைச் சமாளிக்க திமுக இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

2016 லிருந்தே நீட் தேர்வு தமிழக அரசியலின் முக்கிய விவாதப்பொருளாக இருந்து வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நீட்டுக்கு எதிரான ஏராளமானப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் இப்போராட்டங்களை திமுக கட்டியமைக்கவில்லை. தன்னிச்சியயாக எழுந்த போராட்டங்களும் கூடவே பல்வேறு கல்வி அமைப்புகளும், ஜனநாயக-புரட்சிகர அமைப்புகளும் தொடர்ச்சியாக நடத்திய நீட் எதிர்ப்பு நடவடிக்கைகளாலும் அப்பொழுது இருந்த நீட் எதிர்ப்பு பொது மனநிலை திமுக தனக்குச் சாதகமாக்கி கொள்வதற்கான வேலைகளைச் செய்தது. 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், திமுக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நீட் தேர்வு விலக்கு பெறுவோம் என உறுதியளித்துப் பிரச்சாரம் செய்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே. ராஜன் கமிட்டி தந்த தரவுகளின் அடிப்படையில் நீட் விலக்கு மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, திருத்தங்களுக்குப் பிறகு 2022 பிப்ரவரியில் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ரவியும் இதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். இதை, மூன்று வருடங்கள் கிடப்பில் போட்டுவிட்டு ஏப்ரல் 2025 இல் ஒப்புதல் அளிக்கமுடியாது என மோடி அரசாங்கம் பதிலளித்தது. அப்போது அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் ஸ்டாலின், “தோய்வின்றி சட்டப் போராட்டத்தை நடத்தினால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும்” என்று பேசியிருந்தார்.

இக்கூட்டத்திற்கு சில தினங்களுக்கு முன்புதான் ஆளுநர் கிடப்பில் போட்டிருந்த பத்து மசோதாவிற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. அதை மேற்கோள் காட்டிதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும் பேசியிருந்தார். ஆனால், ஜனவரியில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய முதல் ஸ்டாலின், “நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிப்போம் என்று நாங்கள் கூறியது உண்மைதான். எங்கள் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறியிருந்தார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது” என்றார். கடந்த ஏழு வருடங்களில் நீட் தேர்வு ரத்தை ஒட்டி திமுக பேசிய ஒரே முழு உண்மை இது தான்.

மோடி யின் பாஜக நீட்-க்கு விலக்கு கொடுக்கப்போவதில்லை. தற்போதைய நிலையில் காங்கிரசும் ஆட்சிக்கு வருவதற்கான சாத்தியமும் இல்லை. எனவே சட்ட ரீதியாக நீட் தேர்விற்கு விலக்கும் வரப்போவதில்லை. முதல்வர் கூற்றுப்படி, நீட் விலக்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டு மக்கள் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆட்சியில் கொண்டுவந்தால் மட்டும் போதாது இந்தியா அளவிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நடைமுறை ரீதியாகவும் சட்டரீதியாகவும் சாத்தியமில்லாத ஒன்றை உறுதியாகச் செய்து விடுவோம் என்று கடந்த ஏழு வருட காலமாக திமுக திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. இதற்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்பது குறித்து திமுகவிற்குத் தெரியாமல் இல்லை. அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு கூட சட்ட நீட் விலக்கு சாத்தியம் இல்லை என்று தெரியும். ஆனால் பாஜகவிற்கு எதிரான தங்களுடைய ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உன் வீட்டுக்கு எதிராக மக்களைப் போராட விடாமல் மடைமாற்றி அதை தங்களது ஓட்டு அரசியலுக்கான வாக்காக மாற்றுவதற்கும் இக்கட்சிகள் அனைத்துமே இந்த வேலையைச் செய்து வருகின்றனர்
பணக்காரர்களுக்கும் உயர் சாதியினருக்கே மருத்துவக் கல்வி, மருத்துவக் கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவது, கோச்சிங் நிறுவனங்களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டிலிருந்து பாஜக நீட் தேர்வு கட்டாயம் என்கிறது. எனவே ஏழை-எளிய மக்களின் மருத்துவக் கல்விக்கான உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை நாம் எதிர்கிறோம்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிராக இருப்பதால் அதனை எதிர்ப்பதாகக் கூறும் திமுக, நீட் விலக்கிற்குச் சட்ட ரீதியாக வாய்ப்பே இல்லை எனத் தெரிந்தும் திமுக வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆதரவாளர்களும் தொடர்ந்து சட்டவழி முறைகளை நம்பச் சொல்வதும் நீதிமன்றத்தை நம்பச் சொல்வதும் மக்களை ஏமாற்று இல்லையா? இதன் மூலம் திமுக, நீட் க்கு எதிரான மக்கள் போராட்டங்களை மழுக்கடிக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல் நீட் தேர்வை அனைவரையும் ஏற்றுக் கொள்ள வைக்க மறைமுகமாக உதவியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சட்டரீதியாக அல்ல, மக்கள் போராட்டங்களின் மூலமே நீட் தேர்வை ஒழிக்க முடியும். இதற்கு நம் முன் பல உதாரணங்கள் உள்ளன. தமிழகத்தில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமாக இருக்கட்டும் அல்லது ஜல்லிக்கட்டுக்கு ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடந்த போராட்டமாக இருக்கட்டும், தில்லியில் நடந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும் அல்லது சிஏஏ-விற்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும் இவையனைத்துமே பெரும்பான்மையான மக்களின் போராட்டத்தின் விளைவாகவே கிடைத்த வெற்றிகளாகும்.

மக்களின் போராட்டங்களின் விளைவாகவே ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்தனர். வெறும் சட்டமன்ற தீர்மானங்கள்/மசோதாக்களோ அல்லது நீதிமன்ற வழக்குகளோ இதனைச் சாதிக்கவில்லை. இது நீட்டுக்கும் பொருந்தும்.

பாஜக-வின் மனமாற்றத்திற்காகக் காத்திருப்பதை விட ஒன்றியத்தில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தத் தமிழக மக்கள் உழைக்க வேண்டியதைவிட மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலம் நீட் தேர்வு விலக்குப் பெறுவது சுலபம்.

  • செல்வம்

செய்தி ஆதாரம் 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன