எலான் மஸ்க்கின் டிரில்லியனர் பேராசையும் தொழிலாளர் வர்க்கத்தின் வேலையிழப்பும்!

டிரில்லியினர் கனவு டெஸ்லாவோடு நிற்க போவதில்லை. இதே பேராசையோடும், கனவோடும் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், என்விடியா, ஆரக்கில் போன்றவை உற்பத்தியை விரிவுபடுத்த (சாத்தியமில்லாத) புதுப்புது திட்டங்களோடு வரலாம். இது பிற நாடுகளின் சந்தையைக் கைப்பற்றுவதற்கான உள்நாட்டு அரசியல் நெருக்கடியையும் அல்லது பிற நாடுகள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி/மறைமுக பொருளாதாரத் தடைகளாகவும் அல்லது அமெரிக்காவின் ஆதரவுடன்  நாடுகளுக்கிடையேயான போர்களாகவும் வெளிப்படும்.

ஒரு நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறக்கூடியவர் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பார். அவரது சம்பளம், அந்நிறுவனத்தில் வேலைசெய்யும் இடைநிலை ஊழியரை விட பலமடங்கு அதிகமாக இருக்கும். இது பொதுத்துறை நிறுவனமான sbi வங்கிக்கோ அல்லது தனியார் மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் இன் தலைமை செயல் அதிகாரிக்கோ பொருந்தக் கூடியதுதான். ஆனால் முதலாளித்துவ சகாப்தத்திலேயே நடக்காத ஒன்றாக, ஒரு நிறுவனத்தின் பங்குச்சந்தை மூலதனத்திற்கு இணையான தொகையை அந்நிறுவனத்தின் செயல் அதிகாரிக்கு தொகுப்பு ஊதியமாக பெறுகின்ற யோகம் டெஸ்லாவின் எலான் மஸ்க்கிற்கு கிடைத்திருக்கிறது.

கடந்த வாரம் நடந்த டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில், ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்கத் தொகையை எலான் மஸ்கிற்கு கொடுப்பதற்கு 75% பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இத்தொகையை எலான் மாஸ்க் பெறவேண்டுமென்றால் அடுத்த பத்துவருடத்திற்குள் கீழ்கண்ட இலக்குகளை டெஸ்லா நிறுவனம் எட்ட வேண்டும்.

டெஸ்லாவின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு 1.03 டிரில்லியன் டாலரிலிருந்து குறுகிய காலத்திற்குள் 2 டிரில்லியன் டாலராகவும் பத்து வருடத்திற்குள் 8.6 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும்.

2035-க்குள் 2கோடி டெஸ்லா கார்களை விற்பனை செய்திருக்க வேண்டும்.

2035-க்குள் 10 இலட்சம் மனித ரோபோக்களையும், 10 இலட்சம் தானியங்கி வாடகைக் கார்களையும் விற்பனை செய்திருக்க வேண்டும். 

இந்த இலக்குகளை அடைவது சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் கண்டறிய வேண்டிய அதே வேளையில் இதனால் தொழிலாளர் வர்க்கம் அடையக்கூடிய துன்பங்கள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.

எலான் மாஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 469 பில்லியன் டாலர். தற்போது அறிவித்துள்ள தொகுப்பு ஊதியத்தைச் சேர்த்தால் முதலாளித்துவ சகாப்தத்தின் முதல் டிரில்லியனர் என்கிற அந்தஸ்தை எலான் மாஸ்க் பெற போகிறார். டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ள இந்த புதிய ஊதியத்தின் படி, எலான் மஸ்க்கின் ஒரு மணி நேர ஊதியம் 50 மில்லியன் டாலர். இந்திய மதிப்பிற்கு 440 கோடி ரூபாய். ஒரு நாளைக்கான சம்பளம் 3520 கோடி ரூபாய்.  இது இந்திய அரசின் கடந்த இரண்டாண்டு பட்ஜெட் அளவை விட அதிகமாகும்.

டெஸ்லாவின் இந்த அறிவிப்பிற்கு பின்னால் மார்கன் ஸ்டேன்லி, பிளாக் ராக், கோல்டுமென் சாக்ஸ் மற்றும் வான்கார்டு போன்ற நிதி முதலீட்டு நிறுவனங்களின் ஆதரவும் உள்ளது. இந்த அறிவிப்பு வந்த அதே நேரத்தில் தான் வேலையற்ற அமெரிக்கர்களின் இலவச உணவுக்காக வழங்கப்பட்டு வந்த food stamp நிதியை பாதியாக டிரம்ப் நிர்வாகம் குறைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக இல்லாத அளவிற்கு வேலையிழப்பு அக்டோபர் மாதத்தில் நடந்துள்ளது. மேலும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பெடரல் ஊழியர்களுக்கு 43 நாட்களாக டிரம்ப் அரசாங்கம் சம்பளம் கொடுக்கவில்லை. ஒருபுறம் சராசரி அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கான வேலைகளை டிரம்ப் நிர்வாகம் செய்துவர மறுபுறம் புது டிரில்லியனரை உருவாக்கும் வேலையில் அமெரிக்க நிதிமூலதனம் இறங்கியுள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இரண்டு கோடி கார்களை டெஸ்லா விற்பனை செய்து விடுமா? டெஸ்லா ஆரம்பித்து கடந்த 17 வருடங்களில் இன்று வரை 80 இலட்சம் கார்களைத்தான் விற்பனை செய்துள்ளது அடுத்த 10 வருடங்களுக்குள் இது 1.2 கோடி கார்களை விற்பனை செய்ய என்ன வாய்ப்பு? ஏற்கனவே அமெரிக்கா சந்தைக்கு வெளியே டெஸ்லாவின் கார்களின் விற்பனை பெருமளவு தேக்கம் அடைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் மற்ற ஆசிய நாடுகளிலும் டெஸ்லாவிற்கு போட்டியாக சீனாவின் BYD கார்கள் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் அந்தந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியாளர்களே மின்சக்தியில் இயங்கும் கார்களை உற்பத்தியும் செய்து வருகின்றனர். எனவே 1.2 கோடி கார்களை அடுத்த 10 வருடங்களுக்குள் விற்பனை செய்வது என்பது சாத்தியமில்லாதது. மற்ற நாடுகள் மீதான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்கள்/நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலமும், அதன் சந்தைகளைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும்.

அமெரிக்க பெரு நிறுவனங்கள், நிதி மூலதன கும்பல்களின் நலங்களுக்காகவும் அதன் பிராந்திய மேலாதிக்கத்திற்காகவும் அமெரிக்கா பல்வேறு நாடுகளின் மீது நடத்திவரும் நேரடி மற்றும் மறைமுக போர்கள், பொருளாதார தடைகள் போன்ற நடவடிக்கைகளையே  இதற்கு உதாரணமாக கூறலாம். ட்ரம்ப் ஆட்சியின் தொடக்கத்தில்,  மோடியும் எலன் மஸ்க்கும் நேரடியான சந்திப்பிற்கு பிறகு, நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த,   ஸ்டார்லிங்க்-இன் செயற்கைக்கோள் உதவி உடன் கூடிய இணையதள சேவையை இந்தியாவில் அனுமதிப்பதற்கான ஒப்புதலை மோடி அரசாங்கம் கொடுத்தது.

நோட்டோ விரிவாக்கம் மற்றும் உக்ரைன் கனிமவளங்களைக் கைப்பற்றுவதற்காக, உக்ரைன்-இரஷ்யா போரில் இரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க, இரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படையாக அழுத்தம் கொடுத்தது. அதை மோடி அரசாங்கம் உடனடியாக அமல்படுத்தாததால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மீது 50 சதவீத வரி விதிப்பை ட்ரம்ப் நிர்வாகம் விதித்தது. இதனால் கணிசமான அளவிற்கு இந்திய உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தொழிற் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இந்திய சிறு உற்பத்தியாளர்கள் நடுவீதியில் நிற்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இரஷ்யா-உக்ரைன் போரில், உக்ரைன் இராணுவத்திற்கான தகவல் தொடர்பு சேவையை எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் தான் வழங்கி வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் கூட ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் பங்கு கணிசமாக உள்ளது. மேலும் பிற நாடுகளின் இராணுவ பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த விவகாரங்களில் ஸ்டார்லிங்க் நிறுவனம் பெரிய அளவு ஒப்பந்தங்களை செய்துள்ளது. இவ்வாறு உலக நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் அமெரிக்க நிறுவனங்களின் நலனுக்காக உலக சந்தையை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கும் போர் போன்ற நாசகர வேலைகளையும் பல்வேறு விதமான  அரசியல்/பொருளாதார நெருக்கடிகளையும் பிற நாடுகள் மீது  அமெரிக்க அரசாங்கம் செய்து வருகிறது. 

இதை டெஸ்லாவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பொருத்தலாம். பிற நாடுகளின்  உள்நாட்டு உற்பத்தியை மட்டுப்படுத்தியும், மின்சக்தி கார்கள் தொடர்பான அறிவியல்-தொழில்நுட்பங்களை முடக்கியும் டெஸ்லாவிற்கான சந்தையை அமெரிக்க ஏகாதிபத்தியங்களால்  விரிவுபடுத்த முடியும். எனவே டெஸ்லாவின் வளர்ச்சி என்பது வெறும் அந்த நிறுவனத்தினுடைய வளர்ச்சி என்பது மட்டுமல்ல இது உலக சந்தையை இந்த நிதி மூலதன கும்பல்கள் எவ்வாறு கட்டுப்படுத்த போகின்றன என்பதும் உள்நாட்டில் அதனால் ஏற்படபோகும் பாதிப்பையும் சார்ந்தது.

மேலும் 10 இலட்சம் மனித ரோபோக்கள் உற்பத்தி என்பது தொழிற்சாலைகளிலும் மற்ற சேவை துறைகளிலும் மனிதர்களுக்கு பதிலாக பயன்படுத்துவதையும் அவற்றை போர்களில் பயன்படுத்துவதையும் சார்ந்தது.  10 இலட்சம் தானியங்கி வாடகை கார்கள் உற்பத்தி என்பதன் உள்நோக்கமே மனிதர்கள் இல்லாத தானியங்கி முறையில் இயங்கக்கூடிய கார்களை நடைமுறைக்கு கொண்டு வருவதுதான். டெஸ்லா நிறுவனத்தின் இந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உற்பத்தி என்பது அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்காகவும் உலகம் முழுவதிலும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கும் காரணமாகவே இருக்கப்போகிறது.

எனவே டெஸ்லாவின் அடுத்த பத்து ஆண்டு இலக்கு என்பது வெறும் அந்நிறுவனத்தின் வளர்ச்சி என்பதை தாண்டி இதற்காக அமெரிக்க நிதி மூலதன கும்பல்கள் பிற நாடுகளின் மீது ஏற்படுத்தக்கூடிய மோசமான பாதிப்புகளையும் சார்ந்தது தான். அந்தவகையில், இது அமெரிக்க தொழிலாளர்களின் வேலை இழப்பு என்பதை தாண்டி பிற நாடுகளில் இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வேலையிழப்போடும் தொடர்புடையது.

அமெரிக்க தொழிலாளர்களையும் பெரும்பான்மை மக்களையும் ஓட்டாண்டிகளாக்குவதோடு மட்டுமல்லாமல் பிற நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தையும் மேலும் நெருக்கடிக்கு தள்ளக்கூடிய இந்நடவடிக்கைகளை செய்வதற்காகத்தான் எலான் மஸ்கிற்கு, முதலாளித்துவ சகாப்தத்திலேயே இல்லாத அளவிலான ஒரு பெரும் தொகையை பங்குகளாகக் கொடுக்க  அமெரிக்க நிதி மூலதன கும்பல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இது டெஸ்லாவோடு நிற்க போவதில்லை. தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியாக உள்ள கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், என்விடியா, ஆரக்கில் போன்ற இன்னும் பல நிறுவனங்கள் டிரில்லியினர் கனவோடு புதுப்புது திட்டங்களை அறிவிப்பு செய்வர்கள். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளை எந்தெந்த நிறுவனங்கள் பங்கிட்டுக் கொள்வது என்ற நெருக்கடியை இன்னும் தீவிரப்படுத்தவே செய்யும். இந்த நெருக்கடி பிற நாடுகளில் உள்நாட்டு அரசியல் நெருக்கடியையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி/மறைமுக ஆதரவுடன் நாடுகளுக்கிடையேயான போர்களாகவும் வெளிப்படும்.

செல்வம்

 

செய்தி ஆதாரம்:

https://restofworld.org/2025/elon-musk-trillionaire/

https://www.ainvest.com/news/tech-layoffs-soar-october-musk-1-trillion-pay-package-approved-market-volatility-2511/

https://timesofindia.indiatimes.com/technology/tech-news/elon-musks-1-trillion-pay-top-targets-tesla-ceo-must-achieve-to-become-worlds-highest-paid-ceo/articleshow/125180686.cms

https://timesofindia.indiatimes.com/technology/tech-news/americas-proxy-advisory-firm-to-tesla-shareholders-on-elon-musks-1-trillion-pay-package-there-is-no-guarantee-he-will/articleshow/124661795.cms

https://www.aljazeera.com/news/2025/9/5/tesla-proposes-trillion-dollar-compensation-package-for-ceo-elon-musk

https://www.wsws.org/en/articles/2025/11/08/gqvw-n08.html

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன