குறிப்பு: இக்கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள், தகவல்கள் சற்றே சலிப்பையும் மலைப்பையும் சோர்வையும் ஏற்படுத்தலாம். எனினும், காவி பாசிசக் கும்பலின் தேர்தல் மோசடிகள், தில்லுமுல்லுகளின் பரிமாணத்தை விளக்க அவை தவிர்க்க முடியாதவையாகும்! எனவே, ஒன்றுக்கு பலமுறை ஊன்றிப் படித்து அவற்றைப் புரிந்து கொள்ளுமாறு வாசகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
***
ஓட்டுத் திருட்டு – அளவிலும் தன்மையிலும் வேறுபட்டது!
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஹரியானா, மகாராஷ்டிரம் போன்ற பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களிலும் பல முறைகேடுகள், மோசடிகள் நடந்திருப்பதாகவும் “மக்களின் தீர்ப்பு திருடப்பட்டிருப்ப”தாகவும் எதிர்க் கட்சிகளும் பல்வேறு அறிவுஜீவிகளும் குற்றச்சாட்டுக்களைக் கூறிவருகின்றனர், இவற்றில் உண்மை உள்ளதா? இல்லை இவை வெறும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களா? என்பதைப் பார்ப்போம்.
கர்நாடகா – ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் : கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி ஒரு ‘அணுகுண்டை’ பொதுவெளியில் வீசினார். அதில், கர்நாடகாவின் மத்திய பெங்களூர் தொகுதியான மஹாதேவ்புரா தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் நடந்திருப்பதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினார். சுமார் 7 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட அத்தொகுதியின் வாக்காளர் பட்டியலை காங்கிரசு கட்சி சார்பில் சுமார் 6 மாதங்கள் 30 – 40 பேரை ஒதுக்கி ஆராய்ந்த பின்னர் அதிர்ச்சிதரும் உண்மைகள் தெரியவந்துள்ளதாகக் கூறினார். சுமார் ஒரு இலட்சம் போலி வாக்காளர்கள் அத்தொகுதியில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த மோசடித்தனம் 5 வகையில் நடந்திருப்பதாகவும் அம்பலப்படுத்தியுள்ளார்.
1) போலி வாக்காளர்கள் (அதாவது ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குரிமை இருப்பது) 11,965 பேர் 2) போலியான அல்லது முறையற்ற முகவரியில் 40,000 வாக்காளர்கள். அதாவது, பல முகவரிகளின் கதவு எண்களே பூஜ்ஜியம் என்றும் பிற வகையிலும் இருக்கும் அளவுக்குப் போலியானவை 3) ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் இருப்பது என்ற வகையில் 10,452 பேர். உதாரணமாக, 4 பேர் வசிக்கும் ஒரு வீட்டில் 80, 300, 3000 என்ற மிகப்பெரிய எண்ணிக்கையில் மனிதர்கள் வசிக்க முடியுமா? ஆனால், அவ்வாறு வசிப்பதாகவும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் 4) போலியான புகைப்படங்கள் 4,132 பேர் 5) விண்ணப்பம் 6-ஐ முறைகேடாகப் பயன்படுத்தி 33,692 பேர். இந்த விண்ணப்பமானது முதல்முறை வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கானதாகும். ஆனால், இதன்படி பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் வயதோ 50, 60, 70 என்று உள்ளது.
7 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட மஹாதேவ்புரா தொகுதியில் மட்டும் இவ்வாறான 5 வகையான மோசடிகளின் மூலம் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது அம்பலமாகியுள்ளது. தேர்தல் ஜனநாயகத்தைக் கண்ணெதிரே சவக்குழிக்கு அனுப்பிவரும் அப்பட்டமான இந்த மோசடியை அம்பலப்படுத்திய ராகுல்காந்தி, “இந்தியத் தேர்தல் அமைப்பே இறந்துவிட்டது” என்று இதைக் கூறினார்.
இந்த ஒரு தொகுதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகளையும் மோசடிகளையும் வைத்து மட்டுமே “ஓட்டுத் திருட்டு” என்றும் “இந்தியத் தேர்தல் அமைப்பே இறந்துவிட்டது” என்றும் கூறுவது சரியா? என்ற கேள்வி எழலாம். உண்மையில் இந்த மஹாதேவ்புரா மோசடிகளை ஆராய்ந்து கண்டறியவே 6 மாதங்கள் ஆகின. மஹாதேவ்புராவின் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் தேர்தல் ஆணையம் தரவில்லை. அவ்வாறு கொடுத்திருந்தால் சில மணிநேரங்களில் இந்த மோசடிகளைக் கண்டுபிடித்திருக்க முடியும். சாதாரண காகிதங்களில் அச்சிட்டுக் கொடுத்தால் கூட OCR ஸ்கேன் செய்து அதை டிஜிட்டலாக்கி சில மணி நேரங்களில் மோசடிகளைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், தேர்தல் ஆணையம் என்ன செய்துள்ளது தெரியுமா? ஸ்கேன் செய்ய இயலாத வகையிலான சிறப்பு வகையிலான காகிதங்களில் (special kind of papers that cannot be scanned) சுமார் 20 அடி உயரத்திற்கு வாக்காளர் பட்டியலை அடுக்கி கொடுத்துள்ளது. இதனால், இப்பட்டியலை ஆராய சுமார் 6 மாதங்கள் 40 பேர் கொண்ட குழு காங்கிரசு கட்சி சார்பில் வேலை செய்தது. எனவே, இம்முறைகேடுகள் தெரியாமல் நடந்த தவறுகள் அல்ல, தெரிந்தே செய்யப்பட்ட மோசடிகள் என்பதும் இதன் மூலம் சொல்லாமலே விளங்கும்!
எனவே, அம்பலமாகியுள்ள மஹாதேவ்புரா மோசடிகள் ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் ஆகும்! நாடுமுழுவதும் உள்ள தொகுதிகளை ஆராய்ந்தால் இன்னும் மிகப்பெரிய பூதங்கள் கிளம்பும் என்பதில் ஐயம் இல்லை!
எனினும், இந்த ஒரு சம்பவம் மட்டுமின்றி ஏராளமான சம்பவங்களும் மிகப்பெரிய அளவில் (maasive scale) “ஓட்டுத் திருட்டு” நடந்துள்ளதை நிரூபிக்கின்றன. உதாரணமாக, மகராஷ்டிரத்தில் கடந்த நவம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. சமீபத்தில் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தேர்தல் ஆணையத்திடமிருந்து தி வயர் இணையதளம் பெற்ற தகவல்கள் ராகுலின் குற்றச்சாட்டுக்களுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாய் அமைந்துள்ளன. அவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
| அட்டவணை 1: நாள்வாரியாக பொதுவாக்காளர்களின் விவரம் | |||
|---|---|---|---|
| தேதி (2024) | வாக்காளர்களின் எண்ணிக்கை (கோடிகளில்) | நிகர அதிகரிப்பு (இலட்சங்களில்) | அதிகரிக்கப்பட்டுள்ள 40.81 இலட்சம் வாக்காளர்களின் பின்னம் (fraction of total surge of 40.81 lakh voters) (சதவீதத்தில்) |
| ஜூன் 1 | 9.29 | ||
| ஆகஸ்டு 6 | 9.37 | 7.3 | 18% |
| ஆகஸ்டு 30 | 9.54 | 17 | 42% |
| அக்டோபர் 15 | 9.64 | 9.9 | 24% |
| அக்டோபர் 19 | 9.70 | 6.6 | 16% |
| ஆதாரம் : மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தி | |||
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 9.9 கோடி வாக்காளர்கள் உள்ளதாக ஆணையம் கூறுகிறது. இதில், 2019 – 2024 பொதுத் தேர்தல்களுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மொத்தமாகவே 32 இலட்சம் புதிய வாக்காளர்கள்தான் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், ஏப்ரல் 2024 பொதுத் தேர்தலுக்கும் நவம்பர் 2024 சட்டமன்றத் தேர்தலுக்கும் (அதாவது வெறும் 5 மாதங்களில்) இடையில் 40.81 இலட்சம் புதிய வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது! 5 மாதங்களுக்குள் இத்தனை பேர் 18 வயதை அடைந்தனரா?! அல்லது இவ்வளவு பெரிய புலம் பெயர்தல் மராட்டியத்தை நோக்கி நடந்துள்ளதா?! எதுவும் இல்லை! எனவே, 5 வருடங்களில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களை விட 5 மாதங்களில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்கள் சுமார் 41 இலட்சம் பேர் என்ற விவரம் மிகப்பெரிய மோசடித்தனம் நடைபெற்றுள்ளதையே அப்பட்டமாக நிரூபிக்கிறது!
மேற்கூறிய அட்டவணை 1-இன்படி, இந்த 5 மாதங்களில் ஆகஸ்டு 6 – 30 வரையில் மட்டுமே 20.78 இலட்சம் புதிய வாக்காளர்கள் – அதாவது 42% – சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 3 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம் சேர்த்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சம் பேராகும். இவர்களில், 3.68 இலட்சம் பேர்தான் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவராவர். எஞ்சிய அனைவரும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்!
அதேபோல, ஆகஸ்டு 30 – அக்டோபர் 15 வரையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 9.9 இலட்சம் வாக்காளர்களிலும் 2.26 இலட்சம் பேர்தான் 18 வயதுடையவர்களாவர். எஞ்சியோர் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களே!
இவ்வாறு போலியான வாக்காளர்களை நுழைப்பது மட்டுமின்றி, தகுதியான, உண்மையான வாக்காளர்களை நீக்கும் வேலையிலும் தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரத்தில் ஈடுபட்டுள்ளது. உதாரணமாக, 2024-இல் அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தலித்துக்கள், பழங்குடியினர், இசுலாமியர்கள், சிறுபான்மையினரின் பல இலட்சம் பேருடைய வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு “நீக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை [போலியாகச்] சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்” என்றும் காங்கிரசு குற்றஞ்சாட்டியுள்ளது. மேற்கண்ட பிரிவினர் பா.ஜ.க.வுக்கு எதிராக வாய்ப்புள்ளவர்கள் என்பதே நீக்கப்பட்டதற்கான காரணம் என்பது சொல்லமலே விளங்கும்!
இவ்வாறு நீக்கப்பட்டவர்களில், அக்டோபர் 15 – 19-க்கு இடைப்பட்ட நான்கு நாட்களில் மட்டும் சுமார் 6.6 இலட்சம் வாக்காளர்கள் அடங்குவர். அதாவது, மொத்தமாக நீக்கப்பட்டவர்களில் 16% பேர் வெறும் நான்கு நாட்களில் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய மகாராஷ்டிரத் தேர்தலை பல்வேறு நொண்டிச் சாக்குகளைச் சொல்லி நவம்பர் வரை தேர்தல் ஆணையம் தள்ளிப் போட்டது. இத்தகைய தில்லுமுல்லுகளையும் திருட்டுத்தனங்களையும் செய்யவே இந்த அவகாசம் தேவைப்பட்டுள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது!
| அட்டவணை 2: புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் சதவீதத்திற்கும் பா.ஜ.க. (மஹாயுதி) கூட்டணியின் வெற்றிக்குமான தகவுப் பொருத்தம் (proportion) | ||
|---|---|---|
| புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் சதவீதம் | சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை | பா.ஜ.க. (மஹாயுதி) கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் |
| 0 – 39 % | 113 | 84 (74%) |
| 40% மற்றும் அதற்குமேல் | 175 | 151 (86%) |
| ஆதாரம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் (தி வயரால்) மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பெறப்பட்ட தரவுகள் | ||
இந்த 41 இலட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கையானது மாநிலம் முழுவதும் சமச்சீராக நடைபெறவில்லை. மாறாக, குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே நடந்தேறியுள்ளது. எங்கெல்லாம் புதிய வாக்காளர்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளார்களோ அங்கெல்லாம் பா.ஜ.க. (மஹாயுதி) கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
மேற்கூறிய அட்டவணை 2-இன்படி, 4%-க்கும் குறைவான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் 113, இவற்றில் 84 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வென்றுள்ளது! அதுவே, 4%-க்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள தொகுதிகள் 175, இவற்றில் 151 தொகுதிகளை பா.ஜ.க. கூட்டணி வென்றுள்ளது!!
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டலே, “4% மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்க்கப்பட்டால் அதை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்” என்று கூறுகிறது. ஆனால், மராட்டியத்தில் மிகப் பெரும்பாலான தொகுதிகளில் 4% மேல் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எவ்வித விளக்கமும் இல்லை!
மேலும், 8%-க்கும் அதிகமான புதிய வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் 23-ஐ பா.ஜ.க. கூட்டணிதான் வென்றுள்ளது! அதற்கு அடுதப்படியாக புதிய வாக்காளர்கள் அதிகம் இணைக்கப்பட்ட புனேவின் 5 தொகுதிகளில் 4 ஐயும்., நாக்பூரின் 4 தொகுதிகளில் அனைத்தையும் பா.ஜ.க. கூட்டணியே வென்றுள்ளது! நாக்பூரின் இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளில் நாக்பூரின் தென்மேற்கு தொகுதியில்தான் (Nagpur South West) முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவிஸ் 39,710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் மட்டும் 38,161 வாக்குகள் (அதாவது 10.1%) புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன!
அதேபோல, 8%-க்கும் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட ஒருதொகுதியில் கூட காங்கிரசு கூட்டணி வெற்றிபெறவே இல்லை!
இதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் வயது வந்தோரின் (18 வயதானோர்) மொத்த எண்ணிக்கையே (adult population) 9.56 கோடி பேர்தான். ஆனால், வாக்காளர் பட்டியலில் 9.70 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். அதாவது, அம்மாநிலத்தில் வசிக்கும் வயது வந்தோர் எண்ணிக்கையை விட சுமார் 16 இலட்சம் பேர் அதிகமாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
காங்கிரசு போன்ற எதிர்க் கட்சிகள் பேசத் தொடங்கும் முன்பிருந்தே “ஜனநாயக சீர்திருத்திற்கான அமைப்பு” “ஜனநாயகத்திற்கான வாக்குரிமை” (Assosiation For Democratic Reforms – ADR & Vote for Democracy – VD) போன்ற சிவில் சமூக அமைப்புகளும் பரகலா பிரபாகர், அவே சுக்லா போன்ற சில முன்னாள் அதிகாரிகளும் ஆளும் வர்க்க அறிவுஜீவிகளும் பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தி வருகின்றனர்.
உதாரணமாக, இதே 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முறைகேடுகளை வேறொரு கோணத்தில் இருந்தும் விரிவாக டாக்டர் பரகலா பிரபாகர் அம்பலப்படுத்தியுள்ளார். அதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த மோசடியைப் புரிந்து கொள்வதற்கு முன்னர், தற்காலிக, இறுதி வாக்குப் பதிவு என்றால் என்ன என்பதைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம். நமது நாட்டில் நடக்கும் சட்டமன்றம், நாடாளுமன்றம் என எல்லாத் தேர்தல்களின் போதும், ஒவ்வொரு நாள் வாக்குப் பதிவையும் இரண்டு வகைகளில் தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வெளியிடும். 1) மாலை 5 மணி வரை பதிவான வாக்குகளைத் தற்காலிக வாக்குப் பதிவு (provisional figure) என்றும் 2) 5 மணிக்கு மேல் பதிவாகும் வாக்குகளை இறுதி வாக்குப் பதிவு (final figure) என்றும் தேர்தல் ஆணையம் வெளியிடும். 5 மணியோடு வாக்குச் சாவடிகள் மூடப்பட்டு உள்ளேயிருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்படும். 5 மணிக்கு மேல் புதிதாக வாக்குச் சாவடிக்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். உள்ளே இருப்பவர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும்; வாசலில் கடைசியாக உள்ள நபர் 1 என்ற டோக்கனையும் முதலாக உள்ள நபர் இறுதி டோக்கனையும் பெறுவார். அதாவது டோக்கன் தலைகீழாக வழங்கப்படும். புதிதாக யாரும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடு. பின்னர், உள்ளே இருப்பவர்கள் வாக்களிக்கும் மொத்தக் காட்சியும் – சி.சி.டி.வி பதிவுகள் தாண்டி – பிரத்யேக வீடியோ பதிவு செய்யப்படும். எனவே, 5 மணிக்குமேல் – அதாவது தற்காலிக வாக்குப் பதிவு அறிவிக்கப்பட்ட பின்னர் – அதிகம் பேர் வாக்களித்துவிட முடியாது, அதிகபட்சம் அரைசதவீதம் அல்லது ஒரு சதவீதம் தான் அதிகமாக வாக்களிக்க முடியும். 1925 முதல் 2024-க்கு முன்பு வரை எப்போதும் இந்த வேறுபாடு (difference or hike between provisional and final figure) ஒரு சதவீதத்தைத் தாண்டியதில்லை. இதை நினைவில் கொள்க!
இப்போது விசயத்துக்கு வருவோம். கடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்கு சதவீதம் 66.05%, அதாவது சுமார் 6.42 கோடிக்கும் மேற்பட்டோராவார். இதில் மாலை 5 மணிக்கு மேல் வாக்களித்தவர்கள் சதவீதம் 7.82% பேர்! அதாவது மாலை 5 மணிக்கு மேல் வாக்களித்தவர்கள் சுமார் 76 இலட்சம் பேர்! மேற்கூறிய நடைமுறையைக் கொண்டு, இந்த உயர்வை (அ) வேறுபாட்டைப் பரிசீலித்தால் எத்தகைய பிரம்மாண்டமான மோசடி, திருட்டுத்தனம் அரங்கேறியுள்ளது என்பது விளங்கும்!
உயர்ந்துள்ள இந்த 76 இலட்சம் (8%) வாக்குகளைத் தொகுதி வாரியாகக் கணக்குப் போட்டால், ஒரு தொகுதிக்கு சுமார் 26,000 வாக்குகள், அதாவது ஒரு தொகுதியின் வெற்றி தோல்வியைத் தீர்மாணிக்கும் அளவிலானது ஆகும். மகாராஷ்டிராவில் மொத்த 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 235-இல் பா.ஜ.க. கூட்டணி வென்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி விகிதம் 26,000 வாக்குகளுக்கும் குறைவானவையே என்கிறார், அவேசுக்லா.
மேற்கூறிய மகாராஷ்டிர தேர்தல் முறைகேடுகள், மோசடிகள் குறித்த விளக்கமோ, சி.சி.டி.வி வீடியோ காட்சிகளோ, 5 மணிக்கு மேலான பிரத்யேக வீடியோ பதிவுகளோ எதையும் தேர்தல் ஆணையம் தர மறுத்துவிட்டது. எனவே, மகாராஷ்டிரத்தில் காங்கிரசு கூட்டணிதான் ஆட்சிக்கு வரும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறிய போதிலும், பா.ஜ.க. கூட்டணி ‘இமாலய’ வெற்றியைப் பெற்றதன் இரகசியம் இந்த “ஓட்டுத் திருட்டில்தான்” ஒளிந்துள்ளது என்பதையே மேற்கூறிய புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன!
தற்காலிக, இறுதி வாக்குப் பதிவுகளுக்கிடையிலான இந்த வேறுபாடு (அ) உயர்வு (difference or hike between provisional and final figure) மிகவும் முக்கியத்துவம் உடையதாகும். சி.சி.டி.வி பதிவுகள், டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் என எதையும் தேர்தல் ஆணையம் தர மறுப்பதால், தேர்தல் முறைகேடுகள், மோசடிகளைப் புரிந்துகொள்ள இதுவே முக்கியமாகப் பயன்படுகிறது.
ஏ.டி.ஆர். செய்த விரிவான ஆய்வின்படி, கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்குகள் இவ்வாறு உயர்ந்துள்ளதாக (அ) வேறுபட்டுள்ளதாகக் கூறுகிறது. சுமார், 15 மாநிலங்களில் உள்ள 79 நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை இது மாற்றியுள்ளதாக பரகலா பிரபாகர் கூறுகிறார். அதாவது, ஒருவேளை இந்த மோசடி, தில்லுமுல்லுகள் நடந்திருக்காவிட்டால், 2024 தேர்தலில் 293 தொகுதிகளை வென்ற பா.ஜ.க. கூட்டணி 214 இடங்களையே வென்றிருக்கும்; 234 தொகுதிகளை வென்ற இந்தியா கூட்டணி 313 இடங்களையே வென்றிருக்கும் என்று கூறுகிறார், பரகலா.
ஏழு கட்டங்களாக நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவின் தற்காலிக, இறுதி வாக்குப் பதிவுகளை வெளியிட பல நாட்கள் தேர்தல் ஆணையம் எடுத்துக் கொண்டுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவை வெளியிட 11 நாட்கள், இரண்டாம் கட்டத்திற்கு 4 நாட்கள் எடுத்துக் கொண்டது, மூன்றாம் கட்டத்திற்கு 4 நாட்கள், நான்காம் கட்டத்திற்கு 4 நாட்கள், ஐந்தாம் கட்டத்திற்கு 3 நாட்கள், ஆறாம் கட்டத்திற்கு 4 நாட்கள் – என இறுதி வாக்குப் பதிவை அறிவிக்க தேர்தல் ஆணையம் இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டது. அப்போதும் தற்காலிக, இறுதி வாக்குப் பதிவுகளின் வேறுபாட்டை சதவீதத்தில்தான் கூறியுள்ளது; நிகர எண்ணிக்கையில் (gross numbers) கூறவில்லை. தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில், தொலைபேசி இணைப்புகள் இல்லாத அல்லது மிக மோசமாக இருந்த காலத்தில் நடந்த தேர்தல்களில் கூட இரவே இந்த வேறுபாடு வெளியிடப்படும் என்றும்; ஆனால், பிரம்மாண்டமான தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், அதிவிரைவு இணையவசதிகள் கொண்ட டிஜிட்டல் இந்தியாவில் இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டதற்கு எந்தவிதக் காரணமும் கூறப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகிறார், பரகலா.
அதேபோல, ஏழாம் கட்ட வாக்குப் பதிவின் வேறுபாட்டை தேர்தல் முடிவுகள் வெளியாகி (ஜூன் 4, 2024) 2 நாட்கள் கழித்து (ஜூன் 6, 2024) வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் தொகுதி வாரியாக தற்காலிகப் பதிவைக் கூட கொடுக்கவில்லை, எனவே இரண்டாம் கட்டத்தில் எவ்வளவு உயர்வு (அ) வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதைக் கூட நாம் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளோம் என்கிறார், பரகலா. ஏன் இரண்டாம் கட்டத்தில் இந்த விவரம் கூட தரப்படவில்லை. ஏனென்றால், இக்கட்டத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய தில்லுமுல்லு, மோசடிகளில் இறங்கியுள்ளது. இரண்டாம் கட்டத்தில், மேற்கு வங்கத்தில், 3 தொகுதிகளில் தேர்தல் நடந்தது, அந்த 3-உம் பாஜக-வுக்குச் சென்றன; உத்தரப்பிரதேசத்தில், 8 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது, அந்த 8-உம் பாஜக-வுக்குச் சென்றன; மத்தியப் பிரதேசத்தில், 6 தொகுதிகளில் தேர்தல் நடந்தது, 6-உம் பாஜக-வுக்குச் சென்றன; சத்தீஸ்கரில் 3 தொகுதிகளில் தேர்தல் நடந்தது, 3-உம் பாஜக-வுக்குச் சென்றன; திரிபுராவில் 1 தொகுதியில் தேர்தல் நடந்தது, அந்த ஒரு தொகுதியும் பாஜக-வுக்குத்தான் சென்றது; ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் தேர்தல் நடந்தது, அந்த தொகுதியும்கூட பாஜக-வுக்குச் சென்றது; கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடந்தது, அவற்றில் 12 பாஜக-வுக்குச் சென்றன; ராஜஸ்தானில், 13 தொகுதிகளில் தேர்தல் நடந்தது, அவற்றில் 10 தொகுதிகள் பாஜக-வுக்குச் சென்றன; அசாமில் 5 தொகுதிகளில் தேர்தல் நடந்தது, அவற்றில் 4 தொகுதிகள் பாஜக-வுக்குச் சென்றன; என்கிறார், பரகலா. எனவே, இரண்டாம் கட்டத்தில் தற்காலிக வாக்குப் பதிவைக் கொடுக்காமல் இருப்பதும் அக்கட்டத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. அசாதாரண வெற்றியைப் பெற்றிருப்பதும் இணைத்துப் பரிசீலித்தால், இது எந்தளவு மோசடியானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
எங்கெங்கெல்லாம் இந்த வேறுபாடு (அ) உயர்வு அதிகமாக இருந்துள்ளதோ அங்கெல்லாம் பா.ஜ.க. அசாதாரண வெற்றி பெற்றுள்ளது; அதேசமயம் இந்த வேறுபாடு 1% குறைவாக இருந்துள்ள இடங்களில் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது.
உதாரணமாக, ஒடிசாவில், இந்த வேறுபாடு 12.48% ஆக இருந்தது, அங்கே 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக வென்றது. ஆந்திரப் பிரதேசத்தில், வேறுபாடு 12.54% இருந்தது. அங்கே 25 தொகுதிகளில் 21 தொகுதிகளை பா.ஜ.க. கூட்டணி வென்றது. வேறுபாடு மிகக் குறைவாக இருந்தபோது என்ன நடந்தது? வரலாற்று ரீதியாக, தற்காலிக மற்றும் இறுதி புள்ளிவிவரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு எப்போதும் [எந்தத் தேர்தலிலும்] 1%-க்கும் மேல் இருந்ததில்லை. பல நேரங்களில் அது அரை சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகவே இருந்துள்ளது என்று மேலே கூறினோம். ஏழு கட்டங்களிலும் வாக்குப் பதிவு நடந்த உத்தரப்பிரதேசத்தில், முதல் கட்டத்தில், வேறுபாடு 3.25% இருந்தது. இரண்டாம் கட்டத்திற்கான தரவுகள் நம்மிடம் இல்லை. அதில் நாம் ஏற்கனவே பார்த்தது போல 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது, அனைத்திலும் பாஜக-வே வென்றது. மூன்றாம் கட்டத்தில், 0.2% வேறுபாடு. நான்காம் கட்டத்தில், 0.34%. ஐந்தாம் கட்டம், 0.23%. ஆறாம் கட்டம், 0.01%. ஏழாம் கட்டம், 0.25% வேறுபாடுகள். எனவே, உத்திரப் பிரதேசத்தில் 2019-இல் 67 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. கூட்டணி, 2024-இல் 36 இடங்கள்தான் வென்றது. (இவையனைத்தும் வி.டி., ஏ.டி.ஆர். மற்றும் பரகலா கூறும் மறுக்கவியலாத விவரங்கள் ஆகும்)
எனவே, மிகப்பெரிய அளவில் “ஓட்டுத் திருட்டும்” தேர்தல் மோசடிகளும் நடைபெற்றுள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகின்றன! இந்த நாடாளுமன்றமும் மோடி 3.0 ஆட்சியும் மிகப்பெரிய மோசடிகள், தில்லுமுல்லுகளின் விளைவாகவே சட்ட விரோதமாக, ‘ஜனநாயக’ விரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவு! இந்த அயோக்கியத்தனங்கள் அனைத்துக்கும் பா.ஜ.க.வுக்கு உறுதுணையாக இந்தியத் தேர்தல் ஆணையம் நின்றுள்ளது என்பதும் தெளிவு! இதைத்தான் பரகலா, “நம்மிடம் இருப்பது இந்தியத் தேர்தல் ஆணையம் அல்ல. பா.ஜ.க.வின் தேர்தல் அணி” என்கிறார்.
இந்த மோசடிகளைப் பற்றி ராகுல் காந்தியோ பிறரோ கேள்வியெழுப்பினால், தரவுகளைத் தரும்படிக் கோரினால், “டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்காளர்களின் தனியுரிமை (privacy) பாதிக்கப்படும்” என்றும் “சி.சி.டி.வி., வீடியோ காட்சிகளை வெளியிட்டால் பெண்களின் தனியுரிமை பறிபோகும்” என்றும் நகைக்கத்தக பதிலைத் தருகிறது தேர்தல் ஆணையம். அதன் தரவுகளில் உள்ள குளறுபடிகள், முறைகேடுகள், மோசடிகளை அம்பலப்படுத்தினால், அதற்கு பதிலளிக்காமல் “எழுத்துப் பூர்வமாக உறுதிச் சான்று” (affidavit) அளிக்குமாறும் இல்லையென்றால் மன்னிப்புக் கோருமாறும் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது!!
அதுமட்டுமின்றி, இந்தக் குற்றச் சாட்டுகள் எழுந்தபிறகு, தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களில் சி.சி.டி.வி. காட்சிகளையே அழித்துவிடும் (destroy) வகையில் விதிகளையே திருத்தியுள்ளது. சி.சி.டி.வி. காட்சிகள் இருந்தால்தானே இனி கேட்பீர்கள், அதையே அழித்துவிடும் வகையில் செய்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று இதன் மூலம் எதிர்க் கட்சிகளையும் மக்களையும் பார்த்து எக்காளமிடுகிறது, தேர்தல் ஆணையம். எனவே, இனி உச்சநீதிமன்றமே ஆணையிட்டாலும் எதிர்காலத்தில் வேறு அரசே அமைந்தாலும் இந்த முறைகேடுகள் எதையும் யாரும் இனி வெளிக் கொண்டுவரவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல்களில் கள்ள ஓட்டுப் போடுவது, மோசடிகள் செய்வது காலங்காலமாக நடந்துவருகிறதுதானே என்று கேட்கலாம். ஆம்! சகல ஓட்டுக் கட்சிகளும் கள்ள ஓட்டுக்களைப் போடுகின்றன / போட முயல்கின்றன என்பதும் உண்மைதான்! ஆனால், தேர்தல் ஆணையம் என்ற சொல்லப்பட சுயேச்சையான (so-called independent) அமைப்பையே தனது கைப்பாவையாக, அடிமையாக வைத்துக் கொண்டு கோடிக்கணக்கில் வாக்காளர்களை சேர்ப்பதும் நீக்குவதும் இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒன்றாகும்! பா.ஜ.க. மோற்கொண்டுவரும் இந்த மோசடிகள் அளவில் மட்டுமல்ல தன்மையிலேயே மிகப்பெரியதும், வேறுபட்டதும் ஆகும்! தேர்தல் ஆணையத்தையே பாசிசத்தின் துணையுறுப்பாக, தனது கையில் ஏந்திக் கொண்டுள்ள ஒரு ஆயுதமாக காவி பாசிசக் கும்பல் மாற்றியுள்ளதையே இந்நிகழ்வுகள் நிரூபிக்கின்றன!
என்.ஆர்.சி.யின் இன்னொரு வடிவமே எஸ்.ஐ.ஆர்.!
கடந்த ஜூன் 24, 2025 அன்று, சரியாக பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பாக, தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தம் திருத்தத்தை அறிவித்தது. 1950 பிரதிநிதித்துவச் சட்டப்படி வாக்காளர் பட்டியலை தொகுப்பாகவோ (summary-SSR) அல்லது தீவிரமாகவோ (intensive-SIR) திருத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இதில் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர்தான் – அக்டோபர் 2024 – ஜனவரி 2025 – SSR பீகாரில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இருக்கையில் உடனே SIR-ஐ மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அதுவும் சட்டமன்றத் தேர்தலுக்கு 4 மாதங்கள் முன்னதாக அவசரம் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன?
வாக்காளர் பட்டியலில் நிறைய குளறுபடிகள் உள்ளன; நிறைய போலி வாக்காளர்களும் புலம்பெயர்ந்தோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்; எனவே, அவற்றையெல்லாம் நீக்கி, சரிசெய்து உண்மையான, நேர்மையான வாக்காளர் பட்டியலை (integral voter list) உருவாக்குவதுதான் நோக்கம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
ஆனால் உண்மையில், பா.ஜ.க.வை எதிர்த்து வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களின் – குறிப்பாக இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர் – வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் நோக்கத்தோடே இந்த பிரம்மாஸ்திரத்தைத் தேர்தல் ஆணையத்தின் மூலம் காவி பாசிசக் கும்பல் ஏவியுள்ளது. இது பீகாரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் குறிவைத்தே ஏவப்பட்டடுள்ளது.
எப்படி?
ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட எஸ்.ஐ.ஆர். அறிவிப்பு பீகாருக்கான அறிவிப்பல்ல, நாடுதழுவிய அறிவிப்பாகும். எனவே, இந்த அறிவிப்பில் என்னென்ன கூறப்பட்டுள்ளதோ அது நாடு முழுமைக்கும் பொருந்தும். இந்த ஜூன் 24 அறிவிப்பில் வாக்காளர்களை இரண்டு பெரும் பிரிவுகளாகத் தேர்தல் ஆணையம் பிரிக்கிறது. ஒன்று, 2003-ஆம் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள். இரண்டு, 2003-க்குப் பிறகு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள். முதல் பிரிவில் உள்ளவர்கள் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பே தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததை நிரூபிக்கும் வகையில், வாக்காளர் பட்டியலின் நகலை இணைத்தால் போதுமானது. இரண்டாவது பிரிவில் உள்ளவர்கள், அதாவது 2003-க்குப் பிறகு சேர்க்கப்பட்டவர்கள், தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களுள் ஒன்றைச் சமர்ப்பித்து தான் இந்தியக் குடிமகன்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். தாங்கள் இந்தியக் குடிமக்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆவணம் ஒன்றைக் கட்டாயம் இணைக்க வேண்டும்.
இந்த இரண்டாவது பிரிவையும் மூன்று பெரும் உட்பிரிவுகளாக தேர்தல் ஆணையம் பிரிக்கிறது:
1) ஜூலை 1, 1987-க்கு முன்னர் பிறந்தவர்கள் தனது பிறப்புச் சான்றிதழையும் (date and place of birth) ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களுள் சிலவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
2) ஜூலை 1, 1987 – டிசம்பர் 2, 2004 வரையிலான காலத்தில் பிறந்தவர்கள் தன்னுடைய பிறப்புச் சான்றிதழுடன், தனது பெற்றோர் இருவருள் ஒருவரின் (one of their parents) பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
3) 2005-க்குப் பிறகு பிறந்தவர்கள், தன்னுடைய பிறப்புச் சான்றிதழ், பெற்றோர் இருவருடைய பிறப்புச் சான்றிதழ் (both of their parents) என அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பீகாரில் இப்போது நடத்தப்படுவதற்கு முன்பு நாடெங்கும் பல இடங்களில் எஸ்.ஐ.ஆர். நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த எஸ்.ஐ.ஆர். முதன்முறையாக ஒருவர் வாக்குரிமை பெற குடியுரிமையை நிரூபிக்கச் சொல்கிறது. எஸ்.ஐ.ஆர்.க்கான பல்வேறு காரணங்களோடு “சட்டவிரோதக் குடியேறிகள் அதிகம் நுழைந்துள்ளனர்” என்ற காரணத்தையும் தேர்தல் ஆணையம் கூறுகிறது. குடியுரிமையை நிரூபிப்பதற்கான தேதி வரம்பாக (cutoff dates) ஜூலை, 1 1987, டிசம்பர் 2 2004 ஐ நிர்ணயித்துள்ளது. முந்தைய எஸ்.ஐ.ஆர்.களில் ஒப்புக் கொள்ளப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை (EPIC), ஆதார் அட்டை போன்றவை தற்போது ஒப்புக் கொள்ளப்படாது என்று அறிவித்துள்ளது. ஏன் இவ்வாறான அறிவிப்புகள்? இவற்றின் நோக்கம் என்ன? இந்த எஸ்.ஐ.ஆர். முன்னெடுப்பையும் தேதி வரம்பையும் புரிந்துகொள்ள வேண்டுமானால், தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் (என்.ஆர்.சி.) பற்றி முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து குடியேறியவரகள் (அமித்ஷாவின் மொழியில் சொன்னால் கரையாண்கள்) நமது நாட்டின் வளங்களையும் அரித்துத் திண்பதோடு, வாக்குரிமையும் பெற்று ‘பாரதத்திற்கு எதிரான சக்திகளுக்கு’ வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள்; எனவே அவர்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்க வேண்டுமென்ற நச்சுப் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். பல காலமாகச் செய்து வருகிறது. நாட்டில் உள்ள இசுலாமியர்கள் அனைவரையுமே “அந்நியர்கள்” “ஊடுருவல்காரர்கள்” “சட்டவிரோதக் குடியேறிகள்” “சந்தேகிக்கத்தக்கவர்கள்” என்றுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல் சித்தரிக்கிறது. எனவே, அவர்களின் குடியுரிமையைப் பறித்து நாடுகடத்த வேண்டும்; சிறையில் அடைக்க வேண்டும் என இந்துக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வெறியூட்டி வருகிறது.
இந்த நச்சுப் பிரச்சாரம் 2003-இல் சட்டப்பூர்வ வடிவம் பெற்றது. “தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்” என்று கருணாநிதியால் போற்றப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையிலான பா.ஜ.க. அரசில் 2003-இல் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம்தான் (சி.ஏ.ஏ.) முதன் முதலில் “சட்டவிரோதக் குடியேறிகள்” என்ற புதிய சொல்லை குடியுரிமைச் சட்டத்தில் சேர்த்தது; “அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் அல்லது திருப்பியனுப்பப்பட வேண்டும்” என்ற ஷரத்துகளையும் அதில் சேர்த்தது; இதன் மூலம் பிறப்பின் அடிப்படையில் ஒருவர் குடியுரிமை (by birth) பெறுவதற்கு அவரது “பெற்றோர்கள் இந்தியராக இருக்க வேண்டும்” என்ற கட்டாயத்தைப் புகுத்தியது. இந்த அடிப்படையில், யாரெல்லாம் “ஊடுருவல்காரர்கள்” என்று கண்டறிந்து களையெடுப்பது என்ற பெயரில், இசுலாமியர்கள், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களின் குடியுரிமையைப் பறிக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) நாடெங்கும் நடத்தும்படிக் கூறியது.[1] இந்த என்.ஆர்.சி.க்காகவே மேற்கூறிய தேதி வரம்பு (cutoff dates) நிர்ணயக்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான் 2019 முதல் மோடி கும்பல் என்.ஆர்.சி.யை அமல்படுத்தத் துடித்து வருகிறது. மக்களின் போராட்டம், கடும் எதிர்ப்புகள் போன்றவற்றின் காரணமாக தற்காலிகமாக அதை நிறுத்திவைத்துள்ளது. என்.ஆர்.சி. நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடெங்கும் உள்ள மொத்த குடிமக்களும் முதலில் குடியுரிமைப் பறிப்பு (decitizenize) செய்யப்படுவர். பின்னர், மோடி கும்பல் கேட்கும் ஆவணங்களைச் சமர்ப்பித்து 100 கோடி மக்கள் ஒவ்வொரும் தான் இந்தியன் தான் என்பதை அவர்களிடம் நிரூபிக்க வேண்டும். எனவே, மோடி கும்பல் வெறுக்கும் யாரையும் குடியுரிமைப் பறிப்புச் செய்து தடுப்பு முகாம்களில் அடைப்பதோ நாடு கடத்துவதோ எளிதில் செய்ய முடியும்.
எனவே, தேர்தல் ஆணையம் செய்வது வாக்காளர் திருத்தம் மட்டுமல்ல! “குடியுரிமை சரிபார்ப்பும்” ஆகும்! வேறுவார்த்தைகளில் சொன்னால் மக்களின் போராட்டங்கள், வழக்குகள், கடும் எதிர்ப்புகளின் விளைவாக எந்த என்.ஆர்.சி.யை மோடி கும்பல் அமல்படுத்த முடியாமல் தவிக்கிறதோ, அதே என்.ஆர்.சி.யை தேர்தல் ஆணையத்தின் மூலம் பீகாரில் கள்ளத்தனமாக அமல்படுத்தி வருகிறது, மோடி கும்பல்.
ஜூன் 24, 2025 தேர்தல் ஆணையம் வெளியிட்ட எஸ்.ஐ.ஆர். அறிவிப்பு பீகாருக்கானது அல்ல, நாடுமுழுமைக்குமானது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்! வெறும் அறிவிப்பு மட்டுமல்ல, பீகாரை அடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் எஸ்.அர்.ஐ. மேற்கொள்வதற்கான பணிகளை இப்போதே தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்திரவும் போட்டுள்ளது. எனவே, நாடெங்கும் இந்த எஸ்.ஐ.ஆர். என்ற பிரம்மாஸ்திரம் ஏவப்படவுள்ளது! இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் என அனைவரின் வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்படவிருக்கிறது. ஏற்கனவே என்.ஆர்.சி. அமல்படுத்தப்பட்ட அசாமில் சுமார் 20 இலட்சம் இசுலாமியரது குடியுரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், நாடெங்கும் இது விரிவாக்கப்பட்டால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்!
இதுவெறும் ஊகமோ, மிகைப்படுத்தப்பட்ட கூற்றோ அல்ல. சமீபத்தில், பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளரான சுதான்சு திரிவேதி “எஸ்.ஐ.ஆர்.ஐ. விமர்சிப்பவர்கள் எல்லாம் அந்நிய ஊடுருவல்காரர்களுக்காக இந்திய ஜனநாயகத்தைத் திருட நினைக்கிறார்கள்” என்று எஸ்.ஐ.ஆர்.இன் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஐ.ஆர். நடைமுறையின்போது ஒருவர் தேர்தல் ஆணையம் கோரியுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்கத்தவறினாலோ (அ) வேறு காரணங்களாலோ அவரின் குடியுரிமைக்கான தகுதி நிரூபிக்கப்பட முடியாவிட்டால் அவரை “சந்தேகிக்கத்தக்க அந்நியர்கள்” என்று அதிகாரிகள் அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ வழிகாட்டுதல் பகிரங்கமாகக் கூறுகிறது. (If a person’s eligibility cannot be proved during the SIR, “due to non-submission of requisite documents or otherwise,” officials may designate them as “suspected foreign nationals.”)
இந்தக் கண்ணோட்டத்தில்தான் பீகாரில் சுமார் 80,000 பூத் லெவல் அதிகாரிகள் (BLOs) பயிற்சியளிக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பீகாரியும் மேற்கூறிய ஆவணங்கள் இல்லாத தனது அண்டைவீட்டு இசுலாமியர்களை வங்கதேசத்திலிருந்து வந்த “சட்டவிரோதக் குடியேறிகள்” “அந்நியர்கள்” “சந்தேகிக்கத் தக்கவர்கள்” என்று ஏற்கனவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். மக்களின் மனங்களின் நச்சு விதைகள் ஏற்கனவே விதைக்கப்பட்டுவிட்டன. இதுதான் நாளை நாடெங்கும் நடக்கவுள்ளது!
பீகாரில் எஸ்.ஐ.ஆர்.இன் அமலாக்கம்
எஸ்.ஐ.ஆர்.இன் நோக்கம் என்.ஆர்.சி.யின் நோக்கம் தான் என்று பார்த்தோம். பீகாரில் எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்தால் அது மேலும் கண்கூடாகத் தெரியும்.
1) 2003-க்கு முன் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தவர்கள் 2) 2003-க்குப் பின்பு சேர்க்கப்பட்டவர்கள் என்று இருபிரிவாக வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் பிரித்துள்ளது என்று மேலே பார்த்தோம். பீகாரில் மொத்தம் உள்ள 7 கோடி வாக்காளர்களில் முதல் பிரிவில் 4 கோடி பேரும், இரண்டாவது பிரிவில் 3 கோடி பேரும் அடங்குவர். முதல் பிரிவினர் 2003-க்கு முன்பிருந்தே தான் வாக்களித்து வருவதற்கான வாக்காளர் பட்டியலின் நகலைக் கொடுத்து இணைந்துவிட முடியும் என்றாலும், ஆகப் பெரும்பாலான மக்கள் அதை வைத்திருக்கவோ, பெறவோ வாய்ப்பில்லாத நிலையில்தான் உள்ளனர். உதாரணமாக, எஸ்.ஐ.ஆர். அமலான பின்பு பீகாரில் விரிவான கள ஆய்வு நடத்தி கேரவன் இதழில் நீண்ட கட்டுரையை எழுதியிருக்கும் சாகர், பின்வருமாறு இதைக் கூறுகிறார்: “70 வயதுக்கு மேற்பட்ட முதியவரை நான் சந்தித்தேன். 1970-இல் இருந்து தான் வாக்களித்து வருவதாகக் கூறினார். ஆனால், அவரிடம் அதற்கான வாக்காளர் பட்டியலின் நகல் இல்லை.” இதுதான் முதல் பிரிவினருக்கும் நிலை!
இரண்டாவது பிரிவில் உள்ளவர்கள் 11 ஆவணங்களுள் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட், சாதிச் சான்றிதழ், உயர்நிலைப் பள்ளி படித்தமைக்கான சான்றிதழ், வங்கி பாஸ்புக், நிலம் (அ) சொத்துக்கள் இருப்பின் அதற்கான ஆவணம், அரசு ஊழியர் என்றால் அதற்கான அடையாள அட்டை, பென்சன் பெறுவதற்கான ஆவணங்கள், பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவை இதில் அடங்கும்.[2] ஜூன் 24 இல் எஸ்.ஐ.ஆர். அறிவிப்பு வெளியானது, ஒருமாத காலத்திற்குள் 7 கோடி வாக்காளும் மேற்கூறியவற்றைச் சமர்ப்பித்து தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். ஆகஸ்டு 1 ஆம் தேதி ஆணையம் வரைவு பட்டியலையும் செப்டம்பர் 30 ஆம் தேதி இறுதி பட்டியலையும் வெளியிடும். அதாவது மொத்த நடைமுறையுமே மூன்றே மாதங்களுக்கும் முடிக்கப்படும். (அனைத்து அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தன்னார்வலர்களும் உறங்காமல் வேலைசெய்தால் கூட 7 கோடி வாக்காளர்களின் விவரங்களை மூன்றுமாத காலத்திற்குள் சரிபார்ப்பது சாத்தியமில்லை, குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார், சாகர்)
ஆனால், பீகாரில் உள்ள ஆகப் பெரும்பாலான மக்கள் இவற்றைப் பெற்றிருக்கவில்லை; விண்ணப்பித்துப் பெறுவதற்கான அவகாசத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. நன்றாக செயல்படும் அரசு அலுவலகங்களில் மேற்கூறிய ஆவணங்களை விண்ணப்பித்தாலே மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும்; ஆனால், பீகாரில் பல அரசு அலுவலகங்கள் முறையாகச் செயல்படுவதே இல்லை; அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டிடங்களும் வைக்கோல்கள் போட்டுவைத்திருக்கும் இடங்களும்தான் அரசு அலுவலகங்களாகவே இங்கே உள்ளன என்கிறார், சாகர். இப்படியிருக்கையில், மக்கள் எவ்வாறு ஒருமாத காலத்திற்குள் இந்த ஆவணங்களைப் பெறுவார்கள். அரசின் புள்ளிவிவரப்படி பீகாரில் 1.1% பேர்தான் கணினிகளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்; எஞ்சியவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பார்கள்; மக்களின் பின் தங்கிய நிலை, கல்வியறிவு, புலம்பெயர்தல் மட்டுமின்றி இயற்கைச் சீற்றங்களாலும் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். பீகாரின் கங்கை, கோசி போன்ற நதிக்கரைகளில் அமைந்துள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் அடிக்கடி மிகப்பெரும் வெள்ள பாதிப்புக்குள்ளாகுபவையாகும். கோசி நதியானது “பீகாரின் துயரம்” (sorrow of Bihar) என அழைக்கப்படும் அளவுக்கு மிகப்பெரிய சேதங்களையும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகும். இத்தகைய நிலைமையில் தனது உயிரையும் குடும்பத்தையும் காப்பாற்றவே போராடிவரும் அந்த பாவப்பட்ட மக்கள் மேற்கூறிய ஆவணங்களை எப்படி வைத்திருக்க முடியும்?! எனவே, கிராமப்புற மக்கள், ஏழை எளியவர்கள், பெண்கள், புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமை மிகப்பெரிய அளவில் கேள்விக்குரியாகியுள்ளது என்கிறார், சாகர். பீகாரில் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளில் மக்களின் நிலை ஏறக்குறைய இதுதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை!
தற்போது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படியே, எஸ்.ஐ.ஆர். மூலம் பீகாரின் 7 கோடி வாக்காளர்களில் 65 இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை மேலும் பலமடங்கு – ஏறக்குறைய ஒருகோடிக்கும் மேல் – இருக்கும் என்று எதிர்க் கட்சிகளும் செயல்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.
இந்த வாக்குப் பறிப்பானது பீகார் முழுவதும் ஒரே சீராகவோ அல்லது பரவலாகவோ நடக்கவில்லை; இசுலாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் வரலாற்று ரீதியாக அர்.ஜே.டி., காங்கிரசு போன்ற எதிர்க் கட்சிகள் அதிகம் வெற்றி பெறும் மாவட்டங்கள், தொகுதிகள், இடங்களைக் குறிவைத்துமே நிகழ்த்தப்பட்டுள்ளதை நீக்கப்பட்டவர்களின் பட்டியல் நிரூபிக்கிறது.
பீகாரில் மொத்தம் 90,712 வாக்குச் சாவடிகள் உள்ளன. மொத்தம் நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்களில் வெறும் 20,368 வாக்குச் சாவடிகளில் மட்டும் 30 இலட்சம் வாக்காளர்கள் – நீக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ சரிபாதி – கொத்தாக நீக்கபட்டுள்ளனர். பீகாரின் புர்னியா, கத்திதா, அராரியா, கிஷான்கஞ்ச் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய வடகிழக்குப் பகுதி “சீமாஞ்சல்” என அழைக்கப்படுகிறது. இந்த சீமாஞ்சல் – பீகாரின் மொத்த 234 சட்டமன்றத் தொகுதிகளில் – 24 சட்டமன்றத் தொகுதிகளையும் 4 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்டதாகும். இந்த சீமாஞ்சல் இசுலாமியர்கள், தலித்துகள், ஏழை உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதி மட்டுமல்ல, வரலாற்று ரீதியாக ஆர்.ஜே.டி., காங்கிரசு போன்ற கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெற்று வரும் பகுதியுமாகும். இங்கே பெரும்பாலானோரின் – 7,69,914 பேரின் – வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் எஸ்.ஐ.ஆர். குறித்த விழிப்புணர்வே வந்தடையவில்லை என்றும் மிகப் பெரும்பாலான மக்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் தரவுகளே கூறுகிறது என்றும் சாகர் கூறுகிறார்.
எஸ்.ஐ.ஆர் நடைமுறையாகிக் கொண்டிருக்கும் போது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்த பீகாரின் (பா.ஜ.க.வைச் சேர்ந்த) துணைமுதல்வர் சாம்ராத் செளத்ரி, பின்வருமாறு கூறினார்: இந்த சீமாஞ்சலில் “இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இந்த விண்ணப்பதாரர்களில் பலர் வேறு நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களே ஆவர். கிஷான்கஞ்ச் [சீமாஞ்சல் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம்] மாவட்டத்தில் உள்ள பலர் வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இருந்து வந்திருக்கக் கூடும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, இந்தியாவில் சட்டவிரோதக் குடியேறிகள் திருட்டுத்தனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா என்பதை மத்திய, மாநில அரசுகளும் தேர்தல் ஆணையமும் கண்காணிக்க வேண்டும்” என்று வெறுப்பைக் கக்கினார். சீமாஞ்சலில் ஏழே முக்கால் இலட்சம் பேரின் வாக்குரிமையைப் பறித்ததன் மூலம் பா.ஜ.க.வின் காலால் இட்ட இந்தக் கட்டளையைத் தேர்தல் ஆணையம் தலையால் நிறைவேற்றியுள்ளது.
6 சட்டமன்றத் தொகுதிகள், 1 நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்ட இன்னொரு மாவட்டம் கோபால்கஞ்ச் ஆகும். இங்கு மட்டும் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளனர். இங்கும் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களில் ஆகப்பெரும்பாலோர் இசுலாமியர்களும், தலித்துகளுமே ஆவர்.
அதேபோல “வாக்காளர்கள் மரணமடைந்துவிட்டனர்” என்ற காரணத்தைச் சொல்லி நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். 80 வாக்குச் சாவடிகளில் இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் 50% பேர் 50 வயதுக்கும் குறைவானவர்களே. பகல்பூரில் ஒருவாக்குச் சாவடிக்குட்பட்ட பட்டியலில் நீக்கப்பட்ட 58 பேரில் 50 பேர் இறந்துபோனதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 50 வயதுக்கு உட்பட்டவர்களே. மேலும், ஒரே வாக்குச் சாவடியில் அதிகளவில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் உள்ள எல்லா வாக்குச் சாவடிகளிலும் அதிகபட்சம் ஒவ்வொன்றிலும் 1,000 முதல் 1,200 பேர்தான் இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்க! கோபல்கஞ்ச் மாவட்டத்தில் “நிரஞ்சனா” என்ற வாக்குச் சாவடி ஒன்றில் மட்டும் 641 பேர் ஒரே அடியாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 1,925 வாக்குச் சாவடிகள் ஒவ்வொன்றிலும் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பெயர் நீக்கம் மட்டுமன்றி இன்னும் சில முறைகேடுகளும், தில்லுமுல்லுகளு அம்பலமாகியுள்ளன. கிழக்குச் சம்பரான், கத்தியார் போன்ற மாவட்டங்களில், 200 முதல் 389 வாக்காளர்கள் ஒரே முகவரியில் குடியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
எனவே, ஓட்டுத் திருட்டு தில்லுமுல்லுகளின் மூலம் போலியான வாக்காளர்களை கோடிக் கணக்கில் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ளார்கள் என்றால், எஸ்.ஐ.ஆர். மூலம் பா.ஜ.க.வுக்கு எதிரான உண்மையான வாக்காளர்களைக் கோடிக் கணக்கில் சட்டப் பூர்வமாகவே நீக்கவுள்ளார்கள்! எனவே, இவையிரண்டும் வேறுவேறல்ல! ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே!
பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாற்றப்பட்டுள்ள தேர்தல் ஆணையம்
எந்தெந்த தொகுதிகளில் எதிர்க் கட்சிகள் வரலாற்று ரீதியாக வெற்றி பெறுவார்கள், எங்கெங்கு இசுலாமியர்கள், பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் அதிகம் உள்ளன என்பதைக் குறிவைத்துக் கொத்துக் கொத்தாக வாக்குரிமைப் பறிப்பு அரங்கேறியுள்ளதை மேலே கண்டோம். இது தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாறியுள்ளதையே நிரூபிக்கிறது. இதைத்தான் பரகலா, “நம்மிடம் இருப்பது இந்தியத் தேர்தல் ஆணையம் அல்ல. பா.ஜ.க.வின் ஒரு தேர்தல் அணியே” என்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அதன் செயல்பாடுகள் இக்கருத்தை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கிறன.
2014 முதல் பல்வேறு தில்லுமுல்லுகள், மோசடிகளை தேர்தல ஆணையம் பா.ஜ.க.வுக்குச் சாதகமாகச் செய்து வந்தாலும், அதன் சொல்லப்பட்ட சுயேச்சைத் தன்மைக்கான இறுதியான சாவுமணி 2023-இல் அடிக்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு – சரியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் – தேர்தல் ஆணையர் நியமன சட்டத் திருத்தத்தை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது. அதாவது, தலைமைத் தேர்தல் ஆணையரை நியமனம் செய்யும் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் – என்றிருந்ததில் நீதிபதியின் பாத்திரத்தை நீக்கிவிட்டு கேபினேட் அமைச்சர் என்று சேர்க்கப்பட்டது. அதன்படி, பா.ஜ.க. கைகாட்டும் நபர்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற நிலையை உருவாக்கியது. 2027 வரை பதவிக்காலம் இருந்த அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரை நிர்ப்பந்தித்து இராஜினாமா செய்ய வைத்தது பா.ஜ.க. பின்னர் பா.ஜ.க.வின் அடிமைகளான ராஜீவ் குமாரும், ஞானேஷ் குமாரும் அடுத்தடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர்களாயினர்.
இவ்வாறு முற்றாக பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாற்றப்பட்ட தேர்தல் ஆணையம் பிரதமரின் சுற்றுப் பயணங்களுக்கும் மேற்கூறிய ஓட்டுத் திருட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும் தோதாக 7 கட்டங்களாகத் தேர்தலை அறிவித்தது. குறிப்பாக மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மோடி விரிவாகச் சென்று சுற்றுப் பயணம் மேற்கோள்ளும் வகையிலு தேதிகளை அப்பட்டமாக வடிவமைத்துக் கொடுத்தது. இதற்கான எந்தவித காரணத்தையும் நியாயத்தையும் கூறவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பிரதமர் மோடி மட்டும் சுமர் 110 இடங்களில் வெளிப்படையான இசுலாமியர் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் ஒரேயொரு நோட்டிசு கூட மோடிக்கு வழங்கப்படவில்லை. மாறாக, எதிர்க் கட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது, அவர்களது வங்கிக் கணக்கை முடக்கி வைப்பது உள்ளிட பல்வேறு சதித்தனங்களிலும் அப்பட்டமாக ஈடுபட்டது. பின்னர், இவையெல்லாவற்றுக்கும் மேலாக, ஆனையம் எத்தகைய தில்லுமுல்லுகளில் ஓட்டுத் திருட்டுத்தனங்களில் ஈடுபட்டு பா.ஜ.க.வை வெற்றியடையச் செய்துள்ளது என்பதை மேலே கண்டோம்.
எஸ்.ஐ.ஆரை. நாடுமுழுவதும் நடத்தி இசுலாமியர்கள், பா.ஜக. எதிர்ப்பாளர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறிக்க ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே கூறியது போல இந்த எஸ்.ஐ.ஆர். வாக்குரிமை, குடியுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி இந்துக்கள் / இசுலாமியர்கள் என்ற மிக ஆழமான பிளவை, நச்சு விதையை நாடெங்கும் பரப்பவுள்ளது. மீண்டும் சரிசெய்யவே முடியாத மாற்றங்களை (irreversible changes) ஏற்படுத்தவுள்ளது. பீகாரில் இது ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
இத்தனைக்கும் பிறகு, இதை “சுயேச்சையான அமைப்பு” என்றும் இது நடத்தும் தேர்தலை “நடுநிலையான தேர்தல்” என்றும் நம்புவதற்கு ஏதேனும் அடிப்படை உண்டா?!
உச்ச (அ)நீதிமன்றத்தின் கள்ளக் கூட்டு
ஒவ்வொரு வழக்கின்போதும், மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் சிலகேள்விகளைக் கேட்டதுமே, சில கண்டனங்களைத் தெரிவித்ததுமே இங்குள்ள இந்தியா கூட்டணி ஆதரவாளர்களும்., தி.மு.க.வின் இணையக் கூலிப்படைகளும் துள்ளிக் குதிக்கின்றனர். “மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டுவைத்து விட்டது” என்றும் “இனிமேல் மோடியின் ஆட்டம் அவ்வளவுதான்” என்றும் கற்பனைக் குதிரையில் சவாரி செய்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் மீது பிரமையைப் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில், ஒவ்வொரு வழக்கின்போதும், தொடக்கத்தில் மோடி கும்பலைக் கண்டிப்பது போலவும், அரசியலமைப்பு, ஜனநாயகத்தைப் பாதுகாப்பது போலவும் நடித்துவிட்டு, பின்னர் மோடி அரசுக்குச் சாதாகமான உத்திரவுகளையும் தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றம் வழங்குகிறது. இதை ஒரு உத்தியாகவே சமீபகாலமாகக் கடைபிடித்தும் வருகிறது.
இத்தேர்தல் தில்லுமுல்லுகள், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கும் உச்ச, உயர் நீதிமன்றங்கள் உடந்தையாக மட்டுமின்றி உறுதுணையாகவும் இருந்துள்ளது / இருந்து வருகிறது. மேற்கூறிய உத்தியையே கடைபிடித்து வருகிறது.
தேர்தல் பத்திரங்களை சட்டவிரோதமானது, அரசியல் சாசன விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அதன் மூலம் பெற்ற நிதியைப் பயன்படுத்திப் பெற்ற தேர்தல் வெற்றிகளைக் கேள்விக்குள்ளாக்கவில்லை; குறைந்தபடசம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட அந்த பணத்தை தேர்தல் கட்சிகளிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்திரவைக் கூடப் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் ஒரு தீர்ப்பைக் கொடுத்தது. அடுத்ததாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மிகப்பெரிய குளறுபடிகள், மோசடிகள் நடப்பதாகவும்; பதிவான வாக்குகளை மட்டும் எண்ணாமல், வி.வி.பேட் ஸ்லிப்-களையும் 100% எண்ண வேண்டும் என்றும் ஏ.டி.ஆர். சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சொன்ன வாதங்களை ஏற்று 100% வாக்குகளை எண்ணத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம். “வி.வி.பேட் ஸ்லிப்-களையும் 100% எண்ணினால் அதிகபட்சம் தேர்தல் முடிவுகள் வர கூடுதலாக ஒருநாள் ஆகலாம்; நாட்டின் தலைவிதியைத் தீர்மாணிக்கும் தேர்தல் முடிவுகளை ஒரு நாள் தாமதமாகத் தெரிந்துகொள்வதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது” என்று பரகலா பிரபாகர் போன்றோர் வாதிட்டனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை!
2024 தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. நாளை உச்ச நீதிமன்றம் அதை ஒருவேளை அந்த வழக்கையே தள்ளுபடி செய்யலாம் அல்லது “தேர்தல் பத்திரங்கள் போல” இச்சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கலாம். ஒருவேளை இரண்டாவது விசயம் நடந்தலும், சட்டவிரோதமான இந்த தேர்தல் ஆணையம் செய்த நடவடிக்கைகளையும் சேர்த்து செல்லாது என்று ஒருபோதும் அறிவிக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. உச்சநீதிமன்றம் ‘உறக்கத்தில் இருந்து விழிப்பதற்குள்’ தேர்தல் ஆணையம் நாடெங்கும் எஸ்.ஐ.ஆர்.ஐ நடத்தி முடித்தாலும் வியப்பேதுமில்லை!
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நடந்துகொண்ட விதம், எந்தளவு பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு வைத்துள்ளது என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கிறது! நடைமுறைப்படுத்தப்படும் எஸ்.ஐ.ஆர். ஆகப் பெரும்பாலான வாக்காளர்களை உள்ளடக்குவதற்கு பதிலாக வெளியேற்றும் நோக்கம் கொண்டது (mass exclsion instead of mass inclusion) என்று ஏ.டி.ஆர்., பி.யூ.சி.எல் போன்ற சிவில் சமூக அமைப்புகளும் எதிர்க் கட்சிகளும் வழக்குத் தொடர்ந்து வாதாடி வந்தன. எனவே, எஸ்.ஐ.ஆர்.ஐயே முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்றும் வாதாடினர். முதலில் “அவ்வாறு நடந்தால் நீதிமன்றம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது” என்று சீறியெழுந்தது; ஆனால், நாட்கள் போகப் போக தேர்தல் ஆணையத்தின் வாதங்களை ஏற்றுக் கொண்டது. “ஆதார் சட்டப் பிரிவு 9 ஆதாரை குடியுரிமைக்கான சான்றாகக் கூற முடியாது” என்று ஆணையம் கூறியதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களிலும் 5 குடியுரிமையை நிரூபிப்பவை அல்ல என்ற வாதத்தைப் பொருட்படுத்தவே இல்லை. எஸ்.ஐ.அர்.க்கு தற்காலிகத் தடை கூட (stay) கூட போட மறுத்துவிட்டது.
பின்னர், 12 ஆவது ஆவணமாக ஆதாரை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையத்திற்கு உத்திரவிட்ட போதிலும், ஜூன் 24 வெளியிட்ட அறிவிப்பில் எந்த விதத் திருத்தத்தையும் இன்றுவரையில் ஆணையம் செய்யவில்லை. இது ஒரு நாடு தழுவிய அறிவுப்பு என்று ஏற்கனவே கூறியிருந்தோம்! பீகாரில் இப்போது ஆதார் பெயரளவில் ஒப்புக் கொண்டாலும் நாடு தழுவிய எஸ்.ஐ.ஆர்.இன் போது ஒப்புக் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே! “குடியுரிமைக்கான சான்றாக ஆதாரை ஏற்க முடியாது” என்ற ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதால், ஆதார் ஒப்புக் கொள்ளப்பட்டாலும் பெரிய மாற்றம் ஏதும் இருக்கப் போவதில்லை! இவ்வாறு மிகவும் தெளிவற்ற (vague) முறையில் தேர்தல் ஆணையத்திற்குச் சாதகமான வகையில் உத்திரவுகளை உச்ச நீதிமன்றம் போட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். ஆனது அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, 326, 15 ஆகிய ஷரத்துக்களுக்கு அப்பட்டமாக நேரெதிரானதாகும். அதேவேளையில், குடியுரிமை தொடர்பான பிரச்சனையில் தலையிட சட்டப் பூர்வமாக தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. அது முழுக்க முழுக்க உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டி ஏ.டி.ஆர். போன்ற அமைப்புகள் வாதிட்ட போதிலும் அதைக் கடுகளவும் மதிக்கவில்லை. “பெருமளிவிலான வாக்களார்களை நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது” என்று தொடக்கத்தில் சீறியெழுந்த உச்ச நீதிமன்றம், தற்போது 65 இலட்சம் வாக்காளர்களை நீக்கிய பிறகு, சமீபத்திய உத்திரவில், எஸ்.ஐ.ஆர். பெரும்பாலான மக்களை “உள்ளடக்கும் வகையிலும்” “வாக்காளர்களுக்கு உகந்த செயல்முறை” என்றும் (inclusionary and voter-friendly) பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது! மேலும், “விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்க எதிர்க் கட்சிகள் உதவி செய்ய வேண்டும்” “மாறாக, பொறுப்பின்றி இருக்கக் கூடாது” என்றும் உத்திரவிட்டுள்ளது!!
எஸ்.ஐ.ஆர்.ஐ. எதிர்த்த வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கவில்லை என்றாலும், இவ்வளவுக்கும் பிறகு என்ன நடக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, படிப்படியாக நீதிமன்றங்கள் காவி பாசிசக் கும்பலின் பிடியில் செல்வது பலமடங்கு வேகத்தில் நடந்துவருகிறது. காவி பாசிசக் கும்பல் செய்யும் அனைத்து சட்டவிரோத, அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகளையும் அங்கீகரித்து வழிமொழியும் பணியையே உச்ச, உயர் நீதிமன்றங்கள் செய்து வருகின்றன. இந்த உண்மை மூடி மறைக்கப்பட்டு அல்லது சிறுமைப்படுத்தப்பட்டு நீதிமன்றங்களின் மீதான பிரமை பரப்பப்படுகிறது. இந்த மையமான போக்கை மறுக்கும் அல்லது சிறுமைப்படுத்தும் விதமாக, நீதிபதிகளின் தனிப்பட்ட பண்புகள், நேர்மை ஆகியவை முன்னுக்குத் தள்ளப்படுகிறது. ஆனால், மோடி கும்பலோ எல்லா நீதிபதிகளையும் ஏதோவொரு வகையில் பணியவைத்து விடுகிறது என்பதே உண்மை.
ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் வந்தடைந்துள்ள முடிவுகள்
அதிகார வர்க்கம், சி.பி.ஐ., இராணுவம், நீதிமன்றங்கள் என சிறுகச் சிறுக ஒவ்வொரு நிறுவனமாகக் கைப்பற்றி வந்த பாசிசக் கும்பல், இன்று தேர்தல் ஆணையத்தை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைப்பாவையாக மாற்றியுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை, பத்திரிக்கைச் சுதந்திரம் என சொல்லப்படும் அரைகுறை உரிமைகளை படிப்படியாக வெட்டிச் சுருக்கி வந்த மோடி கும்பல் இன்று “ஜனநாயகத்தின் அதிவுயர்ந்த உரிமை” என்று விதந்தோதப்பட்ட “வாக்குரிமையை”யும் கண்ணெதிரே மக்களிடமிருந்து பறித்து வருகிறது. இந்திய வரலாற்றில் தாம் கண்ணெதிரே காணாத பேரழிவு நடந்துகொண்டிருப்பதைக் கண்டு ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளே அஞ்சி நடுங்கிப் போயுள்ளனர்.
இந்த நிலைமையில் இருந்து, பரகலா பிரபாகர், அவே சுக்லா, தெபாஷிஸ் போன்ற சில ஆளும் வர்க்க அறிவு ஜீவிகள் தவிர்க்கவியலாமலும் தர்க்க ரீதியிலும் (inevitable and logical) இரண்டு முடிவுகளுக்கு வந்துள்ளனர்.
1) தேர்தல் ஆணையம், மோடி அரசு, உச்ச நீதிமன்றம், எதிர்க் கட்சிகள் இவர்களை நம்பிப் பலனில்லை. இங்கே முறையிடுவதாலோ மன்றாடுவதாலோ எந்தவித மாற்றமும் வந்துவிடப் போவதில்லை! 2) இந்திய ஜனநாயகத்தைக் காப்பதென்றால் இனி தேர்தலைப் புறக்கணித்துவிட்டு, மக்கள் வீதியில் திரண்டாலொழிய வேறு வழியில்லை!
சட்ட விரோதமாக, திருட்டுத் தனமாக அமைக்கப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் கலைக்க வேண்டும்; எதிர்க் கட்சிகள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்; ஆணையத்தைக் கலைத்துவிட்டு புதிய ஆணையம் அமைக்கப்பட்டு, புதிய நேர்மையான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும் வரை எதிர்க் கட்சிகள் தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்; புறக்கணித்துவிட்டு இந்தக் கோரிக்கைக்காக மக்களிடம் பேச வேண்டும்; இவையெல்லாம் தற்போது நடைமுறைக்குச் சாத்தியமற்றது போலத் தெரியலாம், ஆனால் எதிர்க் கட்சிகள் தவிர்க்கவியலாமல் இந்த முடிவுகளுக்கு ஒருநாள் வந்தடைவார்கள்; இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை; இந்த தேர்தல் என்பது ஒரு சூதாட்டம் போல, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வெற்றியடைவதைக் கண்டு ஏமாறாதீர்கள், சூதாட்ட கிளப் அப்படித்தான் உங்களை நம்ப வைக்கும்; எங்கு வெற்றி பெறுகிறீர்கள் என்று பார்க்காதீர்கள்; எதை இழக்கிறோம் என்று பாருங்கள்; நீங்கள் சில மாநிலங்களில், சில தொகுதிகளில் வெற்றி பெறலாம் ஆனால் நாடளுமன்றத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது; 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 5 கோடி வாக்குகள் மோசடி செய்யப்பட்டுள்ளன; இனி இது 10 கோடி, 20 கோடி என உயரலாம்; இந்த மோசடியான தேர்தலில் பங்கேற்று தேர்தல் நடைமுறைக்கும் அமையவிருக்கும் ஆட்சிக்கும் சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்காதீர்கள்; புறக்கணித்துவிட்டு மக்களை நோக்கித் திரும்புங்கள்; புறக்கணிப்பதன் மூலம் பா.ஜ.க. அசுரப் பெரும்பான்மை பெற்று ஆளும் என்று நினைக்காதீர்கள்; அது ஒருபோதும் நடக்காது, மக்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள்; இப்போது நாம் இதைத் தடுத்து நிறுத்தத் தவறினால் இந்தியக் குடியரசு, இந்திய ஜனநாயகம் இனி இருக்காது; ஒரு பெரும்பான்மைவாத, மதவாத சர்வாதிகார அரசுக்குள் நாம் நுழைந்துவிடுவோம்;
– இவையெல்லாம் நமது வார்த்தைகள் அல்ல, பரகலா பிரபாகரின் வார்த்தைகள்.
இவர்களின் இந்த முடிவு வெறும் தேர்தல் ஆணையம், மோடி அரசு இவற்றின் மீதான அதிருப்தி, நம்பிக்கையின்மையில் இருந்து மட்டும் பிறக்கவில்லை! தேர்தல் நடைமுறை மீதே முற்றாக அதிருப்திகொள்ள இவர்கள் புரட்சியாளர்களும் அல்ல! மாறாக, நிலவும் அரசியலமைப்பு நிறுவனங்கள் அனைத்தும் பாசிசமயமாகி வருகின்றன என்ற உண்மையை உணர்ந்ததில் இருந்தும், வேறு எந்த வழியிலும் மோடி கும்பலைத் தடுத்து நிறுத்தும் சாத்தியப்பாடு கண்ணுக்குத் தெரியவில்லை என்ற உணர்விலிருந்துமே பிறக்கிறது!
இவர்கள் புரட்சியாளர்கள் அல்ல, இந்த அரசமைப்பைப் பாதுகாக்கும் கண்ணோட்டம் கொண்டவர்களே! வரலாற்றுச் சக்கரத்தை அவர்கள் 2014-க்கு முன்பு சுழற்றப் பார்க்கிறார்கள்! எனினும், இப்போது இவர்கள் வந்தடைந்துள்ள முடிவுகள் நாடு தழுவிய ஒரு கலகத்தை, எழுச்சியைத் தவிர்க்கவியலாமல் கோருகிறது என்பதே உண்மை!
எதிர்க் கட்சிகளின் நிலைமை
இவ்வாறான முடிவுகளுக்கு வந்தடைவது இருக்கட்டும்; ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பைக் கூட எதிர்க் கட்சிகள் உறுதியாக மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை! நாடுதழுவிய அளவில் இந்தப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்லாமல், பீகார் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தியாக மட்டுமே சுருக்கி இந்தியா கூட்டணிக் கட்சிகள் பேசுகின்றன; பிரச்சாரம் செய்கின்றன.
இந்த ஓட்டுத் திருட்டுக்கு எதிராக பரகலா பிரபாகர், ஏ.டி.ஆர். போன்ற அமைப்புகள் 2024 தேர்தல் நடக்கும் காலத்தில் இருந்து கரடியாகக் கத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்களின் வார்த்தைகளைக் கூட எதிர்க் கட்சிகள் செவிசாய்க்கவே இல்லை. நீண்ட உறக்கத்திலிருந்து எழுந்த காங்கிரசு – அதுவும் ராகுல் காந்தி போன்ற ஒருசிலர்தான் – சமீபத்தில் இதைப் பேசு பொருளாக்க முயன்றது. மகாராஷ்டிரம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடந்தேறிய ஓட்டுத் திருட்டு குறித்துப் பேசத் தொடங்கியுள்ளன. ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் மட்டும் “வாக்கு அதிகார யாத்திரை” “பாராளுமன்றத்திற்கு வெளியே சில ஆர்ப்பட்டங்கள்” என மிகவும் வரம்புக்குட்பட்ட அளவில்தான் அவர்களது எதிர்ப்புகள் உள்ளன. காங்கிரசு, ஆர்.ஜே.டி., திரிணாமுல் தவிர பிற இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த அளவில் கூட இதற்கான முன்னெடுப்பை எடுக்கவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டை ஆண்டுவரும் தி.மு.க. “தமிழகத்தில் எதுவும் நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று அறிக்கை கொடுக்கிறது.
எஸ்.ஐ.ஆர். விவகாரத்திலும் தொடக்கத்தில் எஸ்.ஐ.ஆர்.ஐயே இரத்து செய்ய வேண்டும் எனப் பேசிய ஓட்டுக் கட்சிகள், பின்னர் ஆதாரை ஒப்புக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட பிறகு எதிர்ப்பை படிப்படியாகக் குறைத்துக் கொண்டனர். முறைகேடுகள், குளறுபடிகள் இல்லாமல் எஸ்.ஐ.ஆர்.ஐ நடத்தினால் போதும் என்ற நிலைக்கு வரும் நாட்களில் அவர்கள் சீரழிந்தாலும் வியப்பில்லை!
ஓட்டுத் திருட்டு ஒருபுறம், பா.ஜ.க. எதிர்ப்பு வாக்காளர்களின் வாக்குரிமையையே பறிப்பது மறுபுறம் என இத்தனையும் ஏவப்பட்ட பிறகு, அதாவது தேர்தல் நடக்கும் முன்னரே அதன் முடிவுகள் திருடப்பட்டுவிட்டன என்பது ஐயத்திற்கிடமின்றி தெளிவாகிவிட்ட பிறகு “தேர்தலைப் புறக்கணிப்பதுதான்” தர்க்க ரீதியான முடிவாக (logical conclusion) இருக்க முடியும். ஆனால், இத்தகைய முடிவைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பினால் ஆர்.ஜே.டி.யும் காங்கிரசும் சம்பிரதாயமாகத் தலையசைக்கின்றன. “எல்லா வாய்ப்புகளும் திறந்திருக்கிறது” என்கிறது, காங்கிரசு. “அப்படியென்றால் போட்டியிடுவதில் அர்த்தமென்ன” என்று உதட்டளவில் பேசுகிறது, ஆர்.ஜே.டி. பிற கட்சிகளிடையே இத்தகைய முணுமுணுப்பு கூட இல்லை.
மேலும், இந்த எஸ்.ஐ.ஆர். குறித்து ஸ்க்ரோல் இணையதளத்துக்குப் பேட்டியளித்த காங்கிரசு கட்சியின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் (Research wing head) அமிதாப் துபே, “இதுபற்றி இந்தியா கூட்டணிதான் முடிவெடுக்க வேண்டும் என்றாலும், தேர்தலைப் புறக்கணிப்பது எதிர்க் கட்சிகளுக்கு எந்தப் பலனையும் தராது; மாறாக, பா.ஜ.க. 90% மேற்பட்ட பெரும்பான்மை பெறுவதில்தான் போய் முடியும்; எனவே அவர்கள் எளிதில் அரசியலமைப்புச் சட்டத்தை மொத்தமாக மாற்றிவிடுவார்கள்; எனவே தேர்தல் புறக்கணிப்பு என்பது மோசமான ஒரு யோசனை என்பதே எனது கருத்து” என்று பயமுறுத்துகிறார். அமிதாப் துபேவின் கருத்தை நாளை ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் வழிமொழிந்தாலும் வியப்பேதுமில்லை!
மேலும், “பா.ஜ.க.வுக்குள்ளேயும் என்.டி.ஏ கூட்டணிக்குள்ளேயும் இந்திய ஜனநாயகத்தை மதிக்கும் நிறைய பேர் உள்ளனர். எனவே, பா.ஜ.க.வுக்குள்ளும் ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். மோடி-ஷா தலைமையிலான பா.ஜ.க.வானது அதற்கு முந்தைய [பழைய] பா.ஜக.வில் இருந்து வேறுபட்டது என்று நாங்கள் நம்புகிறோம். அந்த [பழைய] பா.ஜ.க. இன்னும் மறைந்து போய்விடவில்லை என்று நம்புகிறோம். எனவே, பா.ஜ.க.வுக்குள்ளும் இதுகுறித்த [ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். குறித்த] விவாதங்கள் எழுந்திருக்கக் கூடும், அவர்கள் [பழைய பா.ஜ.க.வினர்] வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்கவும் கூடும் என்றும் ஒருவர் நம்பலாம்” என்று மனப்பால் குடிக்கிறார், அமிதாப் துபே. பா.ஜ.க.வுக்கு உள்ளேயே ஓட்டுத் திருட்டுக்கு எதிரான குரல்கள் இருக்கிறதாம்! மோடி-ஷா தலைமையிலான பா.ஜ.க.தான் மோசமானதாம்! பழைய பா.ஜ.க. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒன்றாம்! பா.ஜ.க.வுக்குள்ளேயே நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இதைப் பின்வாங்க வைப்பார்களாம்! கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போன்ற இந்தக் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்ல!!
அமிதாப் துபே மட்டுமல்ல, பல்வேறு இந்தியா கூட்டணியின் அடிவருடிகளும் இவ்வாறுதான் பா.ஜ.க.வுக்குள் மோடி-ஷா-வின் ஆட்டம் முடிவுக்கு வரும் என்றும், “ஏதோ ஒன்று நிகழும்” என்றும் மனப்பால் குடிக்கின்றனர்.
ஏன் இவர்கள் இவ்வாறு சிந்திக்கிறார்கள்? ஏனென்றால், நாடு தழுவியல் அளவில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதும்; தேர்தலைப் புறக்கணித்துவிட்டு மக்களை வீதியில் அணிதிரளச் சொல்வதும் பாசிச எதிர்ப்பை வேறு ஒரு பரிமாணத்திற்குக் கொண்டு செல்லும்! இத்தகைய சூழலை எதிர்க் கட்சிகள் விரும்பவில்லை / எக்காலத்திலும் விரும்பாது. ஏன்? இந்தியா கூட்டணி கட்சிகளைப் பொறுத்தளவில் பாசிச எதிர்ப்பு என்பது பா.ஜ.க. எதிர்ப்புதான்; பாசிசத்தை ஒழிப்பது என்பது பா.ஜ.க.வை ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்குவதுதான்; எனவே, மக்கள் தமக்கு வாக்களிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகின்றன, பிரச்சாரம் செய்கின்றன. பாசிச எதிர்ப்பு என்பது தனது கைகளுக்குள்ளும்; தான் விரும்பு வரம்புக்குள்ளும்; தனது நலன்கள் அனுமதிக்கு வரம்புக்குள்ளும்; சுருங்கக் கூறினால், நாடாளுமன்ற வரம்புக்குள்ளும் – நிறுத்துவதில் தான் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வர்க்க நலன் அடங்கியுள்ளது.
மேற்கூறியவாறு பாசிச எதிர்ப்பு நாடாளுமன்ற வரம்புகளை மீறி, இந்தியா கூட்டணி கட்சிகளின் கைகளை மீறிச் சென்றால், பாசிசத்தை எதிர்த்து வீதியில் திரளும் மக்கள் நாளை தம்மை எதிர்த்தும் வீதியில் திரண்டுவிடுவார்கள் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். எனவே, அவர்கள் பாசிசக் கும்பலோடு சமரசத்துக்கு வரவும், இந்தப் பிரச்சனையை நாடாளுமன்ற, நீதிமன்ற – அரசியல் சட்ட – வரம்புகளுக்குள் தீர்ப்பதற்கும்தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வர்! ஓட்டுத் திருட்டும், எஸ்.ஐ.ஆர்.உம். அவர்களது இருப்புக்கே குழிபறிப்பதாக இருந்தாலும் இந்த வரம்புகளைத் தாண்ட ஒருபோதும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்!
தேவை போலி ஜனநாயகத்தை மீட்டமைப்பதல்ல!
புதிய ஜனநாயகத்தைக் கட்டமைப்பதே!
தேர்தல் பத்திரங்களைக் கொண்டுவந்தது, தேர்தல் ஆணையர் நியமன மசோதா, ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். என்பதோடு நில்லாமல், அடுத்தகட்டமாக அரசியலமைப்புப் பிரிவு 130 ஐ மாற்றும் முயற்சியில் பா.ஜ.க. கும்பல் இறங்கியுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்டால் 30 நாட்களுக்கும் மேல் சிறையில் இருக்கும் எந்தவொரு மாநில முதலமைச்சர், அமைச்சர், நாடாளுமன்ற அமைச்சர்கள் – அனைவரையும் பதவி நீக்கம் செய்ய முடியும். இவற்றைத் தனித்தனியாகப் பார்த்தும் எதிர்த்தும் எதிர்க் கட்சிகள் போராடி வருகின்றன. தனித்தனியான துண்டு துக்கானியான பார்வையையே நாடெங்கும் ஏற்படுத்தி வருகின்றனர். உண்மையில் இவை தனித்தனி நிகழ்வுகளல்ல. நாட்டில் உள்ள அரைகுறை ஜனநாயகத்தை இரத்து செய்துவிட்டு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான முழுத் திட்டத்தின் பகுதிகளே! இந்து ராஷ்டிரத்தை நோக்கிய படிக்கட்டுகளே!
சொல்லப்படும் அரைகுறை ஜனநாயகம், குறிப்பாக தேர்தல் ஜனநாயகம், நம் கண்ணெதிரே சவக்குழிக்கு அனுப்பப்பட்டு வருகிறது! வேறு வார்த்தையில் சொன்னால், பாசிச சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கான தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது! இது மறுக்கவியலாத உண்மை! நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் பிற நிறுவனங்கள், எதிர்க் கட்சிகள் எவையும் இந்த அபாயத்திலிருந்து நாட்டைக் காக்கப் போவதில்லை! அரசியமைப்பின் நிறுவனங்கள் பாசிசத்தின் துணையுறுப்புகளாக, அடியாள் படையாக மாற்றப்பட்டு வருகின்றன! இந்த உண்மையையே ஆணித்தரமாக மேலே கண்டோம்! பாசிச எதிர்ப்பை தேர்தல் வரம்புகளுக்கு வெளியே, இந்தியா கூட்டணிகள் அனுமதிக்கும் வரம்புகளுக்கு வெளியே, வீதியில் நடத்தாமல் வேறு தீர்வில்லை என்ற முடிவுக்கு ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளே தள்ளப்பட்டிருப்பதையும் மேலே கண்டோம்!
மரணப்படுக்கையில் கிடக்கும் இந்த தேர்தல் ஜனநாயகத்தை வெறுமனே அப்படியே மீட்டெடுப்பதிலும், வரலாற்றுச் சக்கரத்தை 2014-க்கு முன்னர் சுழற்றுவதிலும் நமக்கு நன்மையேதுமில்லை! நாம் வரலாற்றை முன்னோக்கித் தள்ள விரும்புகிறோம்! நாடாளுமன்ற அமைப்பு முறை, அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது தகர்ந்துவரும் இந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதில் நமக்கு நன்மை ஏதும் இல்லை! ஆளும் வர்க்க அறிவுஜீவிகளைப் போல இந்த நோக்கத்திற்காக இந்த விவரங்களையும் நிகழ்வுகளையும் நாம் பயன்படுத்தவில்லை! மாறாக, அவற்றின் மீதான பிரமையையும் நம்பிக்கையையும் மேன்மேலும் தகர்த்தெறிய நாம் விரும்புகிறோம்! அதற்காகவே இவற்றைப் பயன்படுத்துகிறோம்!
பாசிசத்தை தேர்தல், அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் வீழ்த்த முடியாது என்றும் நாடு தழுவிய ஒரு எழுச்சி தேவை என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் ஒரு ஆயுதந்தாங்கிய உள்நாட்டுப் போரின் அவசியத்தையும், அதன் விளைவாக மக்கள் கைகளில் அதிகாரம் சென்றடைவதையும் நாம் முன்வைக்கிறோம்! நமக்குத் தேவை 2014-க்கு முந்தைய போலி ஜனநாயகத்தின் மீட்டமைப்பல்ல! அல்லவே அல்ல! நமக்குத் தேவை புதியதொரு ஜனநாயகம்! விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுவணிகர்களை உள்ளடக்கிய ஆகப் பெரும்பாலான மக்களுக்கான உண்மையான ஜனநாயகம்!!
காவி-கார்ப்பரேட் பாசிசத்தைத் தூக்கியெறியவும், அத்தகையதொரு புதிய ஜனநாயகத்தைப் படைக்கும் திசையில் முன்னேறவும் இந்த அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொள்வோம்!
- ரவி
***
[1] 2003-இல் இயற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) சட்டத்திற்கு காங்கிரசு, அதிமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தந்தன. தி.மு.க. இத்திருத்தத்தை எதிர்த்தாலும் பா.ஜ.க.வோடு கூட்டணியில்தான் அப்போது இருந்தது. இதுதான் ‘மதச்சார்பற்ற’, ‘ஜனநாயகக்’ கட்சிகளின் யோக்கியதை!
[2] 1930-களில் இந்தியாவில் – பிரிட்டிஷாரால் காலனிய எதிர்ப்பை மழுங்கடித்து, நிறுவனமயமாக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் – கல்வித் தகுதி, சொத்துரிமை அடிப்படையில் சுமார் 30% பேர்தான் வாக்குரிமை பெற்றனர். 1950 அதிகார மாற்றத்திற்குப் பிறகு வயதுவந்தோர் (18 வயதனோர்) அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த 11 ஆவணங்களும் கல்வித் தகுதி, சொத்துரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவ்வாறு ஒருவர் வாக்குரிமைபெற சொத்துரிமையையும் கல்வித் தகுதியையும் கட்டாயமாக்குவதன் மூலம் இந்தியத் தேர்தல் நடைமுறையை 100 ஆண்டுகள் – 1930 ஐ நோக்கி – பின்னோக்கித் தேர்தல் ஆணையம் தள்ளியுள்ளது என்கிறார், சாகர். 1950-கள் ஆகப் பெரும்பாலோரை உள்ளடக்கியதாக (mass inclusion) இருந்தது; ஆனால், 2020-களோ ஆகப் பெரும்பாலோரை வெளியேற்றுவதாக (mass exclusion) உள்ளது என்கிறார். சமூகப் பொருளாதாரக் காரணிகளைத் துண்டித்துவிட்டுப் பரிசீலிப்பதால், இது காவி பாசிசக் கும்பல் செய்யும் அடாவடித்தனம் போலவும் தன்னிச்சையான ஒன்று போலவும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் சிந்தனையில் பிரதிபலிக்கிறது. ஆனால், உலக அரங்கில் பாசிசம் தூக்கியெறியப்பட்டு, சோசலிச, ஜனநாயாக, புரட்சிகர இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்த 1950-களில் இந்திய நாடாளுமன்றத்திற்கு இந்த போலித் தோற்றம் தேவைப்பட்டது! வெறெந்த வகையிலும் அப்போது இருந்திருக்க முடியாது! தற்போதோ உலக அரங்கில் பாட்டாளி வர்க்கம் பலவீனமாகவும், முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக பாசிச முகாம் பலம் பெற்றும் வருகையில் அந்த போலித் தோற்றத்தைத் தூக்கியெறிவது அவசியமாகிவிட்டது! இப்போது இது வெறெந்த வகையிலும் இருக்க முடியாது! எனவே, அப்போதைய, இப்போதைய இரண்டு நிலைமைகளுக்கும் அடிப்படை முதலாளி வர்க்க நலனே.




