திராவிட மாடலின் தனியார்மய வேட்கையும் சமூகநீதி ஆதரவாளர்களின் வெற்றுக் கண்டனங்களும்!

தமிழ்நாட்டின் உயர் கல்வியை தனியாரிடம் ஒப்படைப்பதென்பது திராவிட மாடலின் கொள்கை முடிவு. இதனை சமரசமின்றி அம்பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் மாணவர்களையும், பெரும்பான்மை உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறின்றி சமூகநீதி, இடஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு என்று திமுக அரசாங்கத்தின் மீது வெற்றுக் கண்டனங்களைக் கூறுவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற்றதுடன், அதனை மறுஆய்வு செய்யப்போவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார்.

மேலும் “இந்தியாவிலேயே உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில்  அதிகமான கல்லூரிகளை துவங்குவதற்கு இந்த தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்ததாகவும் அதேவேளையில் அக்கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணம், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு என எதற்கும் பாதிப்பு வராத வகையில் இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும்” அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் உயர் கல்வி தேவையை தனியார் கல்லூரிகளின் மூலமே (தனியார்மயம்) பூர்த்தி செய்ய வேண்டும் என்பது திமுகவின் கொள்கை முடிவு. அதையே கடந்த முப்பது வருடங்களாக அமல்படுத்தியும் வந்திருக்கின்றனர். அதிலிருந்தே இச்சட்டத்திருத்தத்தையும் கொண்டு வந்துள்ளனர். இதை திமுகவும் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறது.

ஆனால், அவ்வாறு தனியாரை அனுமதித்தாலும் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பிற்கோ அல்லது கட்டணக் கொள்ளையோ நடக்காது என்று நா கூசாமல் பொய் சொல்லுவதை நாம் எவ்வாறு நம்புவது?

பெரும்பான்மையான அரசு உதவி பெறும் கல்லூரிகள் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை விட கூடுதலானக் கட்டணத்தைத்தான் வசூலிக்கின்றனர். சுயநிதிக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் எனும் பகற்கொள்ளைக்கு எல்லையே இல்லை. மேலும் யுஜிசி நிர்ணயித்துள்ள ஊதியத்தில் நான்கில் ஒருபகுதியைத்தான் பேராசிரியர்களுக்கான ஊதியமாக இன்றும் தருகின்றனர்.

இந்த முறைகேடுகள் குறித்து அளிக்கப்படுகின்ற புகார்கள் மீது திமுக அரசாங்கம் எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் வெளிப்படையாக தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாகவே நடந்து கொள்கின்றனர். திமுகவின் கூட்டணிக் கட்சிகளே இம்முறைகேடுகளுக்கெதிராக அவ்வப்போது போராடவும் செய்துள்ளனர்.  இதற்கு மாறாக இப்புதிய சட்டத் திருத்தத்தினால் எவ்வித முறைகேடும் நடக்காது என்று நா கூசாமல் பொய் சொல்கிறார் உயர் கல்வித் துறை அமைச்சர்.

ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி தனியார் பல்கலைக்கழகமாக மாறிய பிறகு அரசின் நிதி உதவி நிறுத்தப்படும். அரசின் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்படும். கல்லூரி நிர்வாகமே ‘அனைத்தையும்’ முடிவு செய்துக் கொள்ளலாம் என்று சட்டத்திருத்தத்தை கொண்டுவந்து விட்டு, முறைகேடுகளே நடக்காது என்று கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.  இதனை மடைமாற்ற இடஒதுக்கீடு, சமூகநீதி, திராவிட மாடல் என்று உருட்டுகின்றனர். சுரண்டலும், இலாபமும் பொது விதியாக இருக்கும் தனியார் கல்லூரிகளில் சமூகநீதி, மாணவர் நலன் என பேசுவது மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றுவதாகும்.

தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பேராசிரியர் சங்கங்கள், மாணவ அமைப்புகள், கல்வியாளர்கள், கல்வி அமைப்பினர் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. இக்கண்டனங்கள் கூட இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி பாதிப்பு என்ற கோணத்தில் மட்டுமே இருந்தது. மாறாக திமுகவின் தானியார்மயக் கொள்கையை கடுகளவு கூட விமர்சிக்கவில்லை. திமுகவின் கொள்கை முடிவை மென்மையான கண்டனங்களுடன் கடந்து செல்வது யாருக்கு பலனளிக்கும் என்பதை கல்வியின் மீதும், மாணவர்கள்-பெற்றோர்கள் மீதும் அக்கறையுள்ளவர்கள் ஒருமுறையாவது சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020 கூட, படிப்படியானத் தனியார் மயத்தையே வலியுறுத்துகிறது. அனைத்து கல்லூரிகளையும் பட்டம் வழங்கக்கூடியத் தன்னாட்சிக் கல்லூரிகளாக மாற்றுவது; பணிநியமனம், பாடத்திட்டம், கல்விக்கட்டணம் ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கான நிர்வாகத் தன்னாட்சியை கல்லூரிகளுக்கு வழங்குவது; அரசு நிதியிலிருந்து இயங்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், தங்களுக்கான நிதி ஆதாரங்களை உருவாக்கிக் கொள்வதற்கான நிதித் தன்னாட்சியை அடையச் செய்வது  ஆகியவற்றை 2035-க்குள் எட்ட வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. [NEP (2020): 10.5, 10.12, 19.2] NEP-இன் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு தான் தனியார் பல்கலைக்கழக (திருத்த) மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளுக்குள் படிப்படியான நிதித் தன்னாட்சியை திணிப்பதின் மூலம் 2035- க்குள் அதனை தனியார் கல்லூரிகளாக மாற்றிவிட வேண்டும் என்று வழிகாட்டுகிறது மோடி அமிஷா கும்பல். ஆனால் திராவிட மாடலின் நாயகன் முதல்வர் ஸ்டாலினோ, ஒரேநாளில் 161 அரசு உதவிபெறும் கல்லூரிகளையும் தனியார் கல்லூரிகளாக மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார்.

தனியார் பல்கலைக்கழக (திருத்த) மசோதாவைக் கண்டிக்கும் பலரும், இச்சட்டத் திருத்தத்திற்கு பின்னால் உள்ள NEP-இன் கூறுகளையும், திமுக ஒருபுறம் NEP-ஐ கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டும், மறுபுறம் நைச்சியமாக NEP-ஐ திணித்தும் வருகிறது. திமுகவின் இந்த இரட்டை வேடத்தையும் கல்வியை நேசிப்பவர்கள் அம்பலப்படுத்துவதில்லை.

இது இலட்சக்கணக்கான ஏழை-எளிய மாணவர்களின் எதிர்காலத்தை குறித்தப் பிரச்சனை. நாம் மோடியை எதிர்க்கும் (அம்பலப்படுத்தும்) அதேவேளையில் மோடிக்கு கிஞ்சித்தும் குறைவில்லாமல் கல்வியில் தனியார்மயத்தை, சமூகநீதி முகமூடி அணிந்து கொண்டு,  அமல்படுத்திவரும் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளையும் சமரசமின்றி அம்பலப்படுத்தும் போதுதான் கல்வி தனியார்மயமாவதற்கு எதிரானப் போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களையும் இணைக்க முடியும்.

மக்களை அரசியல்படுத்துவதை புறந்தள்ளி விட்டு, வெறும் அரசு துறைசார்ந்த கோரிக்கை வைப்பது, வழக்குத் தொடுப்பது, கருப்பு பேட்ஜ் அணிவது போன்ற சம்பிரதாய வகைப்பட்ட எதிர்ப்புகளின் மூலம் கல்வித் தனியார்மய பேராபத்தை இம்மியளவும் தடுத்து நிறுத்த முடியாது.  

தமிழ்நாட்டின் உயர் கல்வியை தனியாரிடம் ஒப்படைப்பதென்பது திராவிட மாடலின் கொள்கை முடிவு. இதனை சமரசமின்றி அம்பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் மாணவர்களையும், பெரும்பான்மை உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறின்றி சமூகநீதி, இடஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு என்று திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் மீது வெற்றுக் கண்டனங்களை மட்டும் கூறிக்கொண்டிருந்தால், எஞ்சியுள்ள அரசு கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதை நம்மால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது.

  • செல்வம் 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன