தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது திமுக அரசாங்கம். ஏற்கனவே இருந்த சட்டத்தில், புதிதாக தொடங்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து தரப்படும் என்று இருந்தது. கல்வி முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று, இதனை மாற்றி நடப்பிலுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளையும், சுயநிதிக் கல்லூரிகளையும் தனியார் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு ஏற்றவகையில் பழையச் சட்டத்தில் சில விதிமுறைகளைத் தளர்த்தியும், புதிய சரத்துக்களைச் சேர்த்தும் இச்சட்டத்திருத்த மசோதாவை திமுக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் விரும்பினால் தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற தகுதியுடன் செயல்படலாம். அவ்வாறு மாறிய பின்பு அரசின் சலுகைகள் நிறுத்தப்படுவதோடு அக்கல்லூரிகள் மீதான மாநில அரசின் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும்.
பழையச் சட்டத்தின்படி தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க 100 ஏக்கர் பரப்பளவு நிலம் கட்டாயம் இருக்க வேண்டும். இந்நிபந்தனையைத் தளர்த்தி 25 ஏக்கர் நிலம் உள்ள கல்லூரிகள் கூட தனியார் பல்கலைக்கழகத் தகுதிக்கு விண்ணப்பிக்கலாம் என மாற்றியுள்ளனர். இத்திருத்தத்தின் மூலம் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களை சுற்றியுள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்வதற்கு ஏதுவாக திராவிட மாடல் அரசாங்கம் வழிவகை செய்துகொடுத்துள்ளது. தனியார் கல்வி நிர்வாகங்கள் இச்சட்டத்திருத்தத்தினை வரவேற்று பேசியுள்ளனர்.
உதாரணமாக, அரசு உதவி பெறும் லயோலா கல்லூரி, தன்னை சிறுபான்மையினர் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றிக் கொண்டால், அங்கு இதுவரைப் பின்பற்றி வந்த இடஒதுக்கீடு, அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம், அரசின் நிதி உதவி, பேராசிரியர் நியமனம் மற்றும் ஊதியம், அரசின் மேற்பார்வை என அனைத்தும் இரத்து செய்யப்படும். இவையனைத்தையும் பல்கலைக்கழக நிர்வாகமே முடிவு செய்துக் கொள்ளலாம். அரசு உதவி பெறும் கல்லூரியில் இளங்கலை அறிவியல் படிக்கும் ஒரு மாணவனுக்கான பருவக் கட்டணம் சுமார் இரண்டாயிரம் என வைத்துக்கொண்டால், அக்கல்லூரி தனியார் பல்கலைக்கழகமாக மாறிய பிறகு பருவக்கட்டணம் முப்பதாயிரமாக இருக்கும். மேலும் அங்கு இடஒதுக்கீடும் பின்பற்றப்படமாட்டாது.
இச்சட்டத்திருத்தத்தின் படி, தனியார் பல்கலைக்கழகங்களில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு இடஒதுக்கீடுகள் கிடையாது. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, சிறுபான்மை தனியார் பல்கலைக்கழகங்களில் 50 சதவிகித இடங்களும் சிறுபான்மை இல்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் 65 சதவிகித இடங்களும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும். 69 சதவிகித இடஒதுக்கீடு திராவிட இயக்கத்தின் சாதனையென உரிமை கொண்டாடும் திமுக, கல்வி தனியார்மயம் என்று வரும் போது இடஒதுக்கீட்டை காவுகொடுத்து விடுகிறது. சமூகநீதியா அல்லது தனியார்மயமா என்று கேட்டால் கல்வி வசூல் தான் முக்கியம் என்கிறது. இது ஓரிரவில் ஏற்ப்பட்டதள்ள, கடந்த 40 வருடங்களாக படிப்படியாக அமல்படுத்தி வந்த உலகமயம்-தனியார்மயம்-தாராளமயக் கொள்கைகளின் விளைவாக வந்தவை. இன்னும் பத்து வருடங்களுக்குள் அரசு கல்லூரிகளையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான சட்டத்திருத்தத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
* * * * *
தமிழகத்தில் மொத்தம் 163 அரசு உதவிபெறும் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் பெரும்பாலும் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வியளிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இக்கல்லூரிகள், நூறு ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்நாட்டு சமூக வளர்ச்சியின் வெவ்வேறு காலங்களில், பல்வேறு புரவலர்களாலும் சிறுபான்மை அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டவை. 1970-களில் நடைபெற்ற மாணவர்கள்-ஆசிரியர்களின் போராட்டங்களின் விளைவாக அவை அரசு உதவி பெறும் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.
1990-களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயக் கொள்கைகளுக்குப் பிறகு கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதிச் சலுகைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்த நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சுயநிதி பிரிவுகளில் படிப்புகளை வழங்க அரசு அனுமதித்தது. இதனால், கல்லூரிப் பாட வேலையை காலை மற்றும் மாலை பாடப்பிரிவுகளாக பிரித்து காலையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதும், மாலையில் சுயநிதிக் கல்லூரிகளாக நடத்துவதும் அமலுக்கு வந்தன. பிறகு இதே முறையை அரசு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, 2008-இல் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு அப்போதைய திமுக அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது.
2016-களுக்குப் பிறகு மோடியின் தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக கல்வித் துறையில் தனியார்மயமானது மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டது. 2017-இல் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில் தமிழக உயர்கல்வி நிலையங்கள் போட்டி போட்டுக் கொண்டு முதல் நிலைக்கு வந்தன. இது, NEP-இன் கூறுகளையும் தனியார்மயத்தையும் அமல்படுத்தியதன் விளைவாக கிடைத்தவை. குறிப்பாக, அரசு கல்லூரிகளில் அவுட்சோர்சிங் முறைக்கு அனுமதி மற்றும் நிதி தன்னாட்சியை கட்டாயமாக்குவது, கார்ப்பரேட்டுகள் கல்லூரிகள் தொடங்க அனுமதி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி போன்றவைகளை திமுகவும், அதிமுகவும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. அதாவது 2019-இல் அதிமுக அரசாங்கம் தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தினை நிறைவேற்றியது. தற்போது திமுக அரசாங்கம் ஒருபடி மேலே சென்று அரசு உதவிபெறும் கல்லூரிகளையும் தனியார்மயப் படுத்துகின்ற வேலையை செய்துள்ளது. கூடவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதற்கான வேலையையும் செய்துவருகிறது.
இதற்கு இணையாக, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றின் மீதான புகார்களும் அதிகரித்தன. இக்கல்லூரிகளில் நடைபெறும் கல்வி கட்டண கொள்ளை, சட்ட விதிமீறல்கள், மாணவர்கள்-ஆசிரியர்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றிய புகார்கள் மீதான நடவடிக்கைகளை திமுகவும் அதிமுகவும் தவிர்த்தே வந்தன. உதாரணமாக எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி முறைகேடு, குருநானக் கல்லூரி கல்விக் கட்டண கொள்ளை, டி பி ஜெயின் கல்லூரியின் விதிமீறல்கள், தனியார் பொறியியல் கல்லூரிகள் செய்துள்ள போலி பேராசிரியர் நியமன முறைகேடுகள் ஆகியவை குறித்த ஆதாரங்கள் இருந்தும் இக்கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒருபுறம் சமூகநீதி, திராவிட மாடல் எனப் பேசிக்கொண்டு உயர்கல்விக்கான நிதியைப் படிப்படியாக குறைத்துள்ளனர் (percentage of state GDP) மறுபுறம் உயர்கல்வியை தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு ஏற்றவகையில் சட்டபூர்வமாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாக, கல்விக்கான செலவுகள் அனைத்தும் மக்கள் தலையில் கடன் சுமையாக ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கல்விக்கடன் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பள்ளி மற்றும் உயர்கல்விக்காக சராசரியாக மாதம் ஏழாயிரம் ரூபாய்க்கு மேல் ஒவ்வொரு குடும்பமும் செலவு செய்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மேடைதோறும் பேசிவருகிறார். ஆனால் கடந்த வாரம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட திருத்தம் கூட தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல் தான். NEP, இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் தன்னாட்சி கல்லூரிகளாக மாற்ற பரிந்துரைக்கிறது. இங்கு தன்னாட்சி என்பது நிதி தன்னாட்சி, நிர்வாக தன்னாட்சி மற்றும் பட்டப் படிப்புகள்/பாடத்திட்டம் முடிவு செய்வதில் தன்னாட்சியை குறிக்கிறது. கல்லூரி விவகாரங்கள் எதிலும் அரசாங்கம் தலையிடாது என்பதே இதன் பொருள். உள்ளடக்கத்தில், தனியார் பல்கலைக்கழகச் சட்ட திருத்தத்தின் கூறுகளும் மேற்சொன்னதையே வழிமொழிகின்றன.
சட்டசபையில் இச்சட்டத்திருத்தத்தை அறிமுகப்படுத்தி பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், “நமது மாணவர்களுடைய உயர்கல்வி பாதிக்கப்படாமல், அதிலும் ஆராய்ச்சிக் கல்வியாக உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக” விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஆசிரியர்களோ, மாணவர்களோ, கல்வியாளர்களோ மாணவர்கள் உயர்கல்வியில் பாதிக்கப்படுவதாகவோ, போதுமான ஆராய்ச்சிக் கல்வி நிலையங்கள் இல்லையெனவோ கூறவும் இல்லை, திமுக அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கவுமில்லை. மேலும், தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தத்தினாலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதனாலும் பாதிக்கப்படப்போவது மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான். இந்த உண்மையை மறைத்துவிட்டு சமூக நீதி, இட ஒதுக்கீட்டு, திராவிட மாடல் 2.0 எனப்பேசுவதெல்லாம் மக்களை ஏமாற்றி தனியார்மயத்தை அமல்படுத்துவதேயற்றி வேறொன்றுமில்லை.
- செல்வம்





அப்பன் கொடுத்தான்
பிள்ளை பிடுங்குகிறான்
சரி கேட்போம் என்று
அறிவுறுத்தும் விதமாக போராடிக்கொண்டு இருக்கும் போது
ஓய்வூதியம் கேட்டால்,
உழைப்பையே உதாசீனம் செய்கிறார்கள். முப்பது வருடம் உழைத்த ஆசிரியர்கள் முதுமையில் வாழவழியேது.
தேர்தலில் ஒரு முறை வென்றுவிட்டால்
ஆயுள் முழுவதும் பென்சன்
அவர்களைவிட ஆசிரியர்கள் உழைப்பு அவ்வளவு குறைவானதா
மண்ணின் மகிமை
மலைகளின் புனிதம்
மழையின் அருமை
ஆறுகளின் கொடை
நீரின் இன்றியமையாமை
இயற்கை வளங்களின் தேவை
எதையும் பொருட்ப்படுத்தாத இந்த அரசு எங்கிருந்து குதித்து வந்தது.
அதுசரி
சாராயம் விற்பவனுக்கு சரித்திரம் தெரியுமா
பூமிமாதாவின் பொறுமை தெரியுமா
அனைத்து வளங்களும் மனிதவளமேம்பாட்டிற்கே என்ற மாண்பாவது தெரியுமா
முன்னோர் மூத்தோர் வலிதெரியுமா
அவர்கள் வாழ்ந்த நடைமுறை தெரியுமா
சுதந்திர நாட்டில் உரிமை இழந்து
உயிர்களைப் பனையம் வைத்துப் போராடிக்கொண்டு இருக்கிறோம்.
உயிரற்ற ஜடமாக
உண்மையான மனிதநேயம் இல்லாமல் உல்லாச வாழ்க்கை வாழும் ஆட்சியாளர்ஙள் ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்க வேண்டாமா?
இந்த ஆட்சி அதிகாரம் அனைத்தும் மக்கள் போட்ட பிச்சை என்று
ஜனநாயக நாட்டில்
பணநாயகத்தைக் கட்டவிழ்த்துவிட்டு
காசுகொடுத்து வாக்கைப் பெற்றுக்கொண்டு
நாட்டை நாசமாக்குகிறார்கள்.
வளர்ச்சி என்று வாயில் வடை சுட்டு
மீடியாக்களில் அதைபரவவிட்டு
சாக்கடையாக வாழுகிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் வாழும் உங்களுக்கே இவ்வளவு என்றால்
உயரிய நோக்கத்தில் படித்து
பட்டங்கள் பெற்று
பலரையும் பட்டங்கள் பெறவழிகாட்டும்
(ஆசிரியர்கள்)எங்களுக்கு எவ்வளவு தெளிவு இருக்கும்.
ஒரு மனிதனுக்கு
தன்னறிவு வேண்டும் இல்லை என்றால்
சொல் அறிவு வேண்டும்
இரண்டுமே இல்லையென்றால் இந்த
ஆட்சி இல்லை
எந்த ஆட்சி
ஆனாலும்
நிலைக்காது.
உலகில்
ஹிட்லர்,
முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் மடிந்த வரலாறு எல்லாம் தெரியாது போலும்.
நடத்துவோம் பாடத்தை நடுவீதியில்(போராட்டம்) நின்று
படித்தவர்கள் பிழைக்கட்டும்
பிடித்தவர்கள் நம்மோடு (போராட்டத்தில்)இணையட்டும்
இருமாப்பு இரும்பானாலும் உடைப்போம்
உண்மை என்னவென்று ஊரறியச்செய்வோம்
போலிகளைப் பொய் என்று நிருபித்து
மண்ணுயிர் வாழ இன்னுயிரைத் துச்சமென அச்சம் தவிர்த்து அனைவரும் ஒன்று சேருவோம்
போராடுவோம்
வென்றெடுப்போம்
வெற்றி நமதே
வீரம் நமதே
நாளை நமதே
நாடும் நமதே
நல்லதே நடக்கும்!!!
🙏🙏🙏🙏👍👍👍👍👍