உழைப்புச் சுரண்டல் எனும் இருட்டின் மீது எழுப்பப்பட்டிருக்கும் “தீப ஒளியின்” கொண்டாட்டம்

பட்டாசு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்குத் தங்களது குழந்தைகள் இந்த வேலையைச் செய்வதில் விருப்பமில்லை. ஆனால் வருமானம் இல்லாமல் வறுமை வாட்டியெடுக்கும்போது, சோறு முக்கியமா குழந்தைகள் வேலைக்குச் செல்லாமல் பள்ளிக்குச் செல்வது முக்கியமா எனும் கேள்வி எழும்போது, பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு பட்டாசுத் தொழிலுக்கு அனுப்புவதை, வேறு வழியின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். பசியில் ஒட்டிய வயிற்றுடன், உடம்பு முழுவதும் வெடிமருந்து மினுமினுக்க, கந்தக நெடியுடன் நடமாடும் இளைஞர்களையும், குழந்தைகளையும் பார்ப்பது இந்த நகரத்தில் சர்வ சாதாரணம்.

“விளக்குகளின் பண்டிகை” என தீபாவளியை மக்கள் கொண்டாடி வரும் வேளையில், இந்தியாவின் பட்டாசுகளில் கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பங்கை (80%) உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டின் பட்டாசு மையமான சிவகாசியின் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை எனும் விளக்கு என்றைக்கு அணைந்து போகுமோ என்ற அச்சத்துடன், இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறார்கள். இந்தத் தொழிலாளர்களின் அயராத உழைப்பும், எதிர்கொள்ளும் சுரண்டலும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் அத்துக் கூலியும், பண்டிகைக் கொண்டாட்டங்களின் வெடிச் சத்தங்களுக்கு மத்தியில் மெல்லிய ஓசையாகக் கூட ஒலிப்பதில்லை.

சிவகாசி – வெடிபொருட்களால் கட்டப்பட்ட நகரம்

சிவகாசியின் பட்டாசுத் தொழில் ஒரு நூற்றாண்டு பழமையானது. இங்கே, பல பத்து ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் உரிமம் பெற்ற பெரிய தொழிற்சாலைகள், அவர்களிடம் ஆர்டர் எடுத்து வேலை செய்யும் சிறிய உரிமம் பெறாத பலநூறு தொழிற்கூடங்கள், அவர்களிடம் வேலையை வாங்கி வீட்டில் வைத்து துண்டு கணக்கிற்கு முடித்துக் கொடுக்கும் பல ஆயிரம் பெண்களும் குழந்தைகளும் என ஒரு வலைப்பின்னல் மூலமாகவே இந்த தொழில் நடைபெற்று வருகிறது.

சிவகாசியின் பொருளாதாரம் முழுவதுமே இந்தத் தொழிலை அடிப்படியாக கொண்டே இயங்குகிறது. இந்த நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்திலும் மட்டும் 40 முதல் 50 ஆயிரம் பேர்வரை இந்தத் தொழிலைத் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தொழிற்சாலையில் முறையாகப் பணி ஆணை அல்லது ஒப்பந்தம் பெற்று மாதச் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். ஆகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 ருபாயை மட்டுமே பெறும் கூலித் தொழிலாளர்களாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை இருக்காது. தீபாவளிக்கு ஓரு சில மாதங்களுக்கு முன்னதாக, வந்திருக்கும் ஆர்டர்களைப் பொருத்தே வேலைகள் தொடங்கும். நாள் ஒன்றுக்கு 12 முதல் 15 மணி நேரம் கூட வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனை அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையாகப் பார்ப்பதில்லை, தங்களது வாழ்வாதாரமாகவே பார்க்கிறார்கள். தீபாவளிக்கு முந்தைய சில மாதங்களில் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டுதான் அவர்கள் அடுத்து வரும் மாதங்களில் பசியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சிவகாசியின் பட்டாசு ஆலைகள், எப்போதுமே வெடி விபத்துகளுக்குப் பெயர் போனது. 2018 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகாலத்தில் மட்டும் சிவகாசி நகரம் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் சிக்கி 120 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும் தொழிற்சாலைகளில் மட்டும் நடந்த உயிரிழப்புகள். பதிவு செய்யப்படாமல் நடைபெறும் பல தொழிற்சாலைகளில் நடைபெறும் விபத்துகளும், மரணங்களும் அரசின் புள்ளி விபரங்களில் இடம்பெறுவதில்லை.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உரிமம் பெற்றதொரு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அப்போது ஊடகங்களில் பேசிய தொழிலாளி ஒருவர், உரிமம் பெற்ற தொழிற்சாலையாக இருந்தாலும் கூட அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் கையுறைகூட அணியாமல் ஆபத்தான இரசாயனங்களைக் கையாள்வதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதன் காரணமாக வெடிவிபத்தில் சிக்கவில்லை என்றாலும் கூட இரசாயனங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு காரணமாக நிரந்தர நோயாளிகளாக மாறி வெகு விரைவில் அந்த தொழிலாளர்கள் இறந்து போகும் அவலநிலை அங்கே நீடிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

 

தொழிலாளர்கள் பேரியம் நைட்ரேட், அலுமினிய தூள் மற்றும் சல்பர் போன்ற சேர்மங்களைக் கையுறையின்றிக் கையாளுகின்றனர். இவை அனைத்தும் தீக்காயங்கள், சுவாச நோய்கள் மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தும். சில தொழிற்சாலைகளில் மட்டுமே சரியான காற்றோட்டம் அல்லது தீ கட்டுப்பாட்டு வழிமுறைகள் உள்ளன. நகரத்தில் இருக்கும் தீயணைப்பு வாகனமும் கூட அவசர அழைப்புக் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதில்லை. குறுகிய சந்துகள், மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்கள் என தீயணைப்பு துறையினர் விளக்கம் கொடுத்தாலும், தீ விபத்து ஏற்படும் போது பெரும்பாலான சமயங்களில் தொழிலாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என தனித்து விடப்படுகிறார்கள்.

தொழிலாளர்களின் துயரம்

சிவகாசியின் பட்டாசு ஆலைகளில் கிட்டத்தட்ட 60% பேர் பெண்கள் பணியாற்றுகின்றனர். பலர் துண்டு விகித (piece rate) அடிப்படையில் பணிபுரிகின்றனர், ஒவ்வொரு நாளும் அவர்கள் முடிக்கும் பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பாதிக்கின்றனர். கணிசமான பகுதியினர் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள், காகிதக் குழாய்களை உருட்டுதல் அல்லது சிறிய கூறுகளை நிரப்புதல் என  எந்த முறையான பதிவும் இல்லாமல் வேலை செய்கின்றனர்.

வீட்டில் வைத்து வேலை செய்து கொடுப்பவர்கள் அரசின் கணக்குகளில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. விபத்து நடந்தால், இழப்பீடு இல்லை, பொறுப்புக்கூறல் இல்லை, எதுவும் இல்லை. இது போன்ற ஆபத்தான தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது, அதிகாரப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை நுட்பமான பல வடிவங்களில் இங்கே தொடர்கிறார்கள். குழந்தைகள் பெற்றோருக்கு திரி வெட்டுதல், ஸ்டிக்கர் ஒட்டுதல் அல்லது வரிசைப்படுத்துதல் ஆகியவற்றில் உதவுகிறார்கள். பெரும்பாலும் வேலை செய்வது என்பதற்குப் பதிலாக “உதவி செய்தல்” என்ற போர்வையில் இது நியாயப்படுத்தப்படுகிறது.

பட்டாசு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்குத் தங்களது குழந்தைகள் இந்த வேலையைச் செய்வதில் விருப்பமில்லை. ஆனால் வருமானம் இல்லாமல் வறுமை வாட்டியெடுக்கும்போது, சோறு முக்கியமா குழந்தைகள் வேலைக்குச் செல்லாமல் பள்ளிக்குச் செல்வது முக்கியமா எனும் கேள்வி எழும்போது, பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு பட்டாசுத் தொழிலுக்கு அனுப்புவதை, வேறு வழியின்றி ஏற்றுக் கொள்கிறார்கள்.

பசியில் ஒட்டிய வயிற்றுடன், உடம்பு முழுவதும் வெடிமருந்து மினுமினுக்க, கந்தக நெடியுடன் நடமாடும் இளைஞர்களையும், குழந்தைகளையும் பார்ப்பது இந்த நகரத்தில் சர்வ சாதாரணம். இவ்வளவு சுரண்டலும், வலியும் நிறைந்த இந்தத் தொழிலாளர்களது வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து, இந்தத் துறையினை முறைப்படுத்துவது குறித்து அரசு எப்போதும் கண்டுகொண்டது கிடையாது. வெடிவிபத்து குறித்த செய்திகள் வரும்போது அதனை வெளியிடும் ஊடகங்கள் கூட அதில் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி கிடைத்ததா எனக் கூட உறுதிசெய்வது கிடையாது. சில சந்தர்ப்பங்களில் உயிரிழந்தவர்களுக்கு வெறும் 50 ஆயிரம் ருபாய் மட்டும் கொடுத்துவிட்டு முதலாளிகள் ஏமாற்றுவது நடக்கிறது.

இந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் எவ்வித பாதுகாப்பையும் வழங்குவதில்லை. பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் சிறிய பிரிவுத் தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கங்களில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து பல நூறு சிறு சிறு பட்டறைகளில், வீடுகளில் பட்டாசுகளை உற்பத்தி செய்பவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இதனை பட்டாசு ஆலை முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மீது சுரண்டலை ஏவுகின்றனர்.

 “பசுமை பட்டாசு” – சட்டம் தன் கடமையைச் செய்கிறது.

அரசு பாராமுகத்துடன் இருப்பது மட்டுமன்றி, இந்தத் தொழிலாளர்களுக்கு எவ்வித மாற்றுத் தொழிலும் ஏற்பாடு செய்துகொடுக்காமல் இந்த தொழிலை முற்றிலுமாக முடக்கும் திசையில் சட்டங்களைக் கொண்டுவருகின்றது. காற்று மாசுபடுகிறது என்றும் வெடிச் சத்தம் நிம்மதியைக் குலைக்கிறது என்று கூறிக் கொண்டும் பட்டாசு உற்பத்திக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் இந்தத் தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் பட்டினிக்குள் தள்ளப்படும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு சட்டம் பின்வாங்கப்பட்டாலும் கூட வழக்குகள் தொடுக்கப்படுவதும், அதனையொட்டி வாரக் கணக்கில் தொழிற்சாலைகள் மூடப்படுவதும், தொழிலாளர்கள் வேலையின்றி நிற்பதும் மீண்டும் மீண்டும் நடைபெற்று வருகின்றன.

பிரச்சனையை தீர்க்கிறோம் எனக் கூறிக் கொண்டு, பெரிய விளம்பரங்களுடன், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட “பசுமை பட்டாசுகள்” வெற்று விளம்பரங்களாக நின்றுவிட்டன. இந்த பட்டாசுகளுக்கான இரசாயனங்கள் மற்றும் இதர மூலப் பொருட்கள் சீராகக் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் அவற்றின் விலை மிக அதிகமாக இருப்பது, இந்தப் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் உபகரணங்கள் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இல்லாமல் இருப்பது ஆகிய காரணங்களால் பசுமைப் பட்டாசு என்பது வெடிகளின் அட்டையில் ஒட்டப்படும் “ஸ்டிக்கரில்” மட்டுமே ஜொலிக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரப் பாதுகாப்புக்கும் இடையிலான தொடர்ச்சியான விவாதம் ஒரு ஆழமான கேள்வியைத் தவறவிடுகிறது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக இத்தகைய ஆபத்தான, வேலையில் சிக்கித் தவிப்பது ஏன்? சிவகாசியின் தொழிலாளர்கள் பட்டாசு வர்த்தகத்தை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை மாறாமல் பின்தங்கியிருக்கிறார்கள். பல தசாப்தங்களாக, அடுத்தடுத்த அரசாங்கங்கள் இந்த நகரத்தை தொழில்முனைவோர் வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடி வந்தன, ஆனால் தொழிலாளர்களின் நிலைமையை மாற்றிட அவர்கள் எதுவுமே செய்யவில்லை.

சிவகாசியின் துயரம் வெறும் விபத்துகள் மற்றும் மாசுபாடுகள் பற்றியது மட்டுமல்ல. பத்திரிக்கைகள் அவற்றை மட்டுமே காட்சிப்படுத்தியிருக்கின்றன. மக்களின் இந்த ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக, பல்லாயிரம் தொழிலாளர்கள், கந்தக நெருப்பில் தினம் தினம் வெந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இருண்ட வாழ்க்கையின் மீதுதான் இந்த ஒளிமயமான கொண்டாட்டம் உருவாக்கப்படுகிறது.

  • சந்திரன்

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன