விஜயின் நிழல் உலகமும், மக்களின் நிஜ உலகமும் மாறவேண்டியது யார்?

பெரும்பாலும் இத்தகைய நிழல் உலக கதாநாயகர்கள் சுயமோகிகளாக நார்சிஸ்ட் குணம் கொண்டவர்களாக இருப்பது தவிர்க்கவியலாதது. எம்ஜிஆர், ஜெயலலிதா போல் விஜயும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒருவர் தன்னுடைய தோற்றம், திறமை, அல்லது முக்கியத்துவம் குறித்து அதிகமாகப் பெருமை கொள்பவர், மற்றவர்கள் உணர்வுகளுக்கு அதிக மதிப்பு தராமல், தன்னை மட்டுமே முக்கியமாக நினைப்பவர், பாராட்டும், கவனமும், புகழும் நாடும் தன்மை கொண்டவர், மற்றவர்களைக் கட்டுப்படுத்த முயலும், அல்லது அவர்களைத் தன்னை உயர்த்தும் கருவியாகப் பயன்படுத்தும் நபரை நார்சிஸ்ட் என்று கூறுவர்.

கரூரில் 41 பேர் மரணமடைந்த துயரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது தன்னை நியாயப்படுத்தி, தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் பழிவாங்கப்படுவதாகவும் கூறி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய். நடப்பது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என அந்தக் காணொளியில் அவர் கூறியிருக்கிறார். ஆம் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது நடப்பதை மட்டுமல்ல இதுவரை விஜய் என்ன செய்தார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுவரை நடிகர் விஜய் நடத்திய கூட்டங்களில் ஏதாவது ஒன்றிலாவது ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களைப் பற்றி பேசியிருக்கிறாரா? ஓட்டைத் திருடித்தான் மோடி-அமித்ஷா கும்பல் வெற்றி பெற்றது என்ற செய்தி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறிய பிறகும் அதனை எதிர்த்தோ, ஆதரித்தோ கருத்துக் கூறியிருக்கிறாரா? டிரம்பின் அடாவடி வரி விதிப்பை எதிர்த்து வாய் திறந்திருக்கிறாரா? குறைந்த பட்சம் தனது கொள்கை எதிரி மோடி-அமித்ஷா கும்பல் இந்த நாட்டின் இறையாண்மையை டிரம்பின் காலடியில் அடமானம் வைத்துவிட்டது என்றாவது பேசியிருக்கிறாரா? இதுபோன்ற ஏதாவது ஒரு பிரச்சனைக்காவது வாய்திறந்திருக்கிறாரா? தலைமைப் பண்பு என்றால் என்னவென்றாவது தெரியுமா? தவெக கட்சியில் முக்கியப் பொறுப்பிலுள்ள யாருக்காவது அரசியல் அறிவு இருக்கிறதா? இப்படி எதுவுமே இல்லாத/தெரியாத ஒருவரை நம்பி பெரியார் பிறந்த மண் பின்செல்வது முரண்பாடாக்க தெரியவில்லையா? சிந்தியுங்கள்!

தமிழ்நாட்டிலுள்ள ஊழலையும், இந்தியாவிலுள்ள மதவாதத்தையும் ஒழிப்பது தான் விஜயின் இலட்சியம் என்றால் மேற்கூறிய நடவடிக்கைகளில் இருந்து இந்த நோக்கத்தை நிறைவேற்றிட முடியுமா? பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தனது உயர்ந்த கொள்கையை அடைவதற்கு ஏதேனும் வெளிச்சம் தென்படுகிறதா? இனிப்பே இல்லாத ஊருக்கு இழுப்பைப் பூ சக்கரையாம் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் நம்பி ஏமாந்து சலிப்புற்று இருக்கையில், ஏற்கனவே நிழல் பிம்பங்களை நம்பி நம்பி ஏமாந்த போதும் விஜயின் மீது இன்னும் சலிப்பு ஏற்படவில்லை ஏன்? சுருங்கக்கூறின் ரீலுக்கும், ரியலுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்பதை மக்கள் போகப் போக தெரிந்துகொள்வார்கள். எனினும், ரீலுக்கான பிம்பத்தை உடைத்து மக்களை ரியலுக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குண்டு என்பதால் அதனை இனி விரிவாகப் பார்க்கலாம்.

விஜய் திமுக-வை அரசியல் எதிரி என்றும், பாஜக-வை கொள்கை எதிரி என்றும் வரையறுத்துள்ளார். ஒரு பேச்சுக்காக இது சரியென்றே வைத்துக்கொள்வோம். திமுக எப்படி அரசியல் எதிரி என்று விளக்கிப் பேசியிருக்கிறாரா? அப்பா, மகன் என மன்னராட்சி நடக்கிறது, ஊழல் செய்கிறார்கள் என்று பொதுவில் பேசுவதையே அரசியல் என்று தன்னை நம்பி வரும் இரசிகர் பட்டாளத்தையும், கட்சித் தொண்டர்களையும் ஏமாற்றி வருகிறார். ஊழல் செய்யாத கட்சி தமிழகத்திலோ, இந்தியாவிலோ இருக்கிறது என்று விஜயால் அரிதியிட்டு கூறமுடியுமா? நாளை தவெக ஊழலற்ற கட்சியாக இருக்கும் என்பதற்குக் குறைந்த பட்சம் விஜயால் உத்திரவாதமாவது தரமுடியுமா? இவையெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்.

கொள்கை எதிரி பாஜகவுக்கு எதிராக இதுவரை எத்தனை சண்டமாருதம் செய்துள்ளார் விஜய்? அதற்கு பாராளுமன்ற தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்று பதில் சொல்லும் அளவுக்கு அரசியல் ஞானம் பெற்றவராக இருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு. திமுகவும், பாஜகவும் பாசிச கட்சிகள் என்று புரிந்து வைத்திருக்கும் விஜயின் அறிவு ஞானத்தை எண்ணி தமிழகமே வெட்கித் தலைகுனிய வேண்டாமா? ஒருவேளை அடுத்து வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் எதிரி பாஜக என்றும், கொள்கை எதிரி திமுக என்று விஜய் சொன்னாலும் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் அவரது அரசியல் ஞானம் அப்படி.

இப்படி அரசியல் அறிவு ஏதுமற்ற ஒரு தற்குறியை ஒரு கட்சியின் தலைவராகவும், நாளைய முதல்வராகவும் ஏற்றுக்கொண்டு விஜயின் பின்னால் மக்கள் செல்வதற்கு காரணம் என்ன?

எளிதில் யாராலும் செய்யமுடியாத ஒரு காரியத்தை, செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கும் ஒரு ஜனக்கூட்டத்திற்கு மத்தியில், திரையில் அதனைச் செய்வதாக காட்டுவதன் மூலம் விஜயின் பிம்பம் கட்டியமைக்கப்படுகிறது. இது நிழல் என்று தெரிந்திருந்தும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். நிழல் என்பது உண்மைக்கு இரண்டு மடங்கு தூரத்தில் இருக்கிறது என்ற உண்மையை மக்கள் புரிந்துகொள்ளாதவரை விஜயின் பின்னால் மக்கள் செல்வதை தடுக்க முடியாது.

பெரும்பாலும் இத்தகைய நிழல் உலக கதாநாயகர்கள் சுயமோகிகளாக நார்சிஸ்ட் குணம் கொண்டவர்களாக இருப்பது தவிர்க்கவியலாதது. எம்ஜிஆர், ஜெயலலிதா போல் விஜயும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒருவர் தன்னுடைய தோற்றம், திறமை, அல்லது முக்கியத்துவம் குறித்து அதிகமாகப் பெருமை கொள்பவர், மற்றவர்கள் உணர்வுகளுக்கு அதிக மதிப்பு தராமல், தன்னை மட்டுமே முக்கியமாக நினைப்பவர், பாராட்டும், கவனமும், புகழும் நாடும் தன்மை கொண்டவர், மற்றவர்களைக் கட்டுப்படுத்த முயலும், அல்லது அவர்களைத் தன்னை உயர்த்தும் கருவியாகப் பயன்படுத்தும் நபரை நார்சிஸ்ட் என்று கூறுவர்.

இதில் 10 பொருத்தமும் விஜய்கு உள்ளது என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. ஒருவேளை அப்படி இல்லை என்று சொல்பவர்களுக்காக சமீபத்தில் கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் இருந்து அப்படிதான் இருக்கிறது என்று பார்க்கலாம்.

  • காலை 8:45 மணிக்கு நாமக்கல்லில் அவர் பேசுவதாக விஜயின் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள (எக்ஸ்) பக்கத்தில், அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் சென்னையிலிருந்து காலை 8:40 மணிக்குத்தான் கிளம்பியிருக்கிறார்.
  • அதேபோல் கரூரில் மதியம் 12:00 மணிக்குக் கூட்டம் என அறிவித்துவிட்டு, இரவு 7:00 மணிக்கு விஜய் அங்கே வந்து சேர்கிறார்.
  • கூட்டத்திற்குத் தொண்டர்களும், இரசிகர்களும் என 10000 பேர் வருவார்கள் எனக் காவல் துறைக்கு எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். எனில் அவர்களுக்குக் குடி தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக் கூட செய்து கொடுக்கப்படவில்லை.
  • நாமக்கல்லில் இருந்து கரூர் பைபாஸ்வரை தனது பிரச்சார வாகனத்தின் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே இருந்தவர்களைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டு வந்த விஜய், கரூர் நகரில் நுழைந்தவுடன் பிரச்சார வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கருப்பு ஷட்டர் கொண்டு மூடிவிட்டார்.
  • விஜய் பேசிக் கொண்டிருந்த போதே கீழே இருந்து தண்ணீர் தண்ணீர் என ரசிகர்கள் கத்தினார்கள். அப்படி தண்ணீர் வேண்டும் எனக் கேட்டவர்களுக்கு, நாய்க்கு ரொட்டித் துண்டைப் போடுவதைப் போல தண்ணீர் பாட்டிலைத் தூக்கி வீசுகிறார்.
  • தன் கண்முன்னாள், இருபதடி தொலைவில் மக்கள் மூச்சுத் திணறிச் செத்துக் கொண்டிருந்த போதும், விஜய் அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
  • நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவதை உணர்ந்த அடுத்த நொடியே அங்கிருந்து தப்பிச் சென்ற விஜய், திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களிடம் கூடப் பேசாமல், சென்னை திரும்பி தனது வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.
  • இரண்டு நாட்கள் ஆகியும் தனது வீட்டைவிட்டு வெளியே வரவில்லை, கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை. இறந்தவர்கள் குடும்பத்தையோ, காயமடைந்தவர்களையோ கூடச் சென்று சந்திக்கவில்லை.
  • இதுபோன்றதொரு அசம்பாவித சம்பவம் நடந்த பிறகு அதற்குத் தார்மீக ரீதியில் பொறுப்பெடுக்க வேண்டும் என்று விஜய் நினைக்கவில்லை.
  • குறைந்தபட்சம் அந்தப் பகுதியிலேயே தங்கியிருந்து, கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தனது கட்சி நிர்வாகிகளுக்கு வழிகாட்டுவது என்பதைக் கூட விஜய் செய்யவில்லை.

விஜய் என்ன மனநிலை கொண்டவர் என்பதை கரூர் சம்பவம் மிகவும் துலக்கமாக தமிழக மக்களுக்குப் புரியவைத்திருக்கிறது என்று நம்புகின்றோம். இவரைப் போல் குணம் கொண்ட நபர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் தமிழகம் என்னவாகும் என்பதை வாசகர்களாகிய நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சுயமரியாதை கொண்ட தமிழ்நாடு என்று பெருமை பேசிக்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. மாறாக இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் சுயமரியாதை கொண்டவர்கள் தான் என்பதை நிரூபிக்கும் விதமாக நடந்துகொள்ளவேண்டும். ஒரு நார்சிஸ்ட்டை காண்பதற்கு 10 – 12 மணிநேரம் காத்துக் கிடப்பது எப்படி சுயமரியாதையாக இருக்க முடியும். மகனை பறிகொடுத்த தாய் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கையில் ”விஜயை யாருக்குத் தான் பிடிக்காது. என் மகன் விஜயை பார்க்கலாம் வாம்மா” என அழைத்தான் அதனால் வந்தேன் என்று கூறுகிறார். அந்த மகனின் வயது 7, கூட்டத்தில் இறந்துவிட்டார். நிலா அழகாக இருக்கிறது. எப்ப பார்த்தாலும் அதையே கூப்பிட்டு சோறுட்டுகிறாய். வாம்மா நாமும் ஒரு தடவை அது இருக்கும் இடத்திற்குப் போகலாம் என அழைத்தால். போவீர்களா? போவது சாத்தியமில்லை என்று எடுத்துக்கூறுவீர்களா? விஜயைப் பிடிக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும், அங்குச் சென்றால் லும்பன் மனநிலை கொண்ட கூட்டத்தில் எப்படி குழந்தையை பாதுகாப்பது என்று சிந்திக்க வேண்டாமா?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் மாண்டனர். இது ஒரு துயரச் சம்பவம் எனினும் அவர்கள் இறப்பிற்கு ஒரு அர்த்தம் இருந்தது. தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டம் நடத்தினர். இறுதியில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க சென்ற மக்களை அரசு பயங்கரவாதத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தது.

தமிழகத்தில் இதுபோன்ற உதாரணங்கள் கண்முன் இருக்கையில் ஒரு சினிமா கழிசடையைப் பார்ப்பதற்காக 41 உயிர்களைப் பலி கொடுப்பது என்பது எப்படி சுயமரியாதை கொண்ட தமிழ்நாடாக இருக்க முடியும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மின்சார கட்டண உயர்வு, பருத்திக்கு 50% ஏற்றுமதி வரி போன்ற நடவடிக்கையின் காரணமாக கரூரில் நெசவுத்தொழிலையும், வாகனங்களுக்குப் பாடி கட்டுதல், சிமெண்ட் உற்பத்தி. விவசாயம் என அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும். அத்தகையதொரு போராட்டத்தில் உயிர் நீத்திருந்தால் சுயமரியாதை கொண்ட தமிழ்நாடு என இந்தியாவே ஏன் உலகமே கொண்டாடியிருக்கும்.

அதைவிடுத்து தன்னை மனிதனாகக் கூட மதிக்காத ஒரு சுய மோக வெறியனை நம்பிச் சென்று கொத்துக் கொத்தாக மடிவது என்பது உழைக்கும் மக்களாகிய நமக்கு இழுக்கு. விஜய் போன்ற சினிமா கழிசடைகளைப் புறக்கணிப்போம், நமது வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் சக்தி உழைக்கும் வர்க்கமாகிய நாம் தான் என்பதை உணரவேண்டிய தருணம் இது.

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன