நடிகர் விஜய், கரூர் நகரத்தில் நடத்திய தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கின்றனர். அதில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டையே உலுக்கியிருக்கும் இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு எல்லா கட்சியினரும் இறந்தவர்களது உறவினர்களுக்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்திருக்கின்றனர். தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் இது குறித்துப் பல்வேறு விவாதங்களும், உரையாடல்களும் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இது சம்பந்தமாக வெளியாகியுள்ள காணொளிகள், செய்தித்தாள்களில் வந்திருக்கும் செய்திகள். சம்பவம் நடந்த போது அங்கேயிருந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருக்கும் பேட்டிகள், நேரில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் என அனைவரும் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, நடிகர் விஜயின், நட்சத்திரப் பெருமைக்கு, சுயமோக அரிப்புக்கு, இத்தனை உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. தனது ரசிகர்கள் தன்னை கடவுளுக்குச் சமமாக நினைக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்ற விஜயின் விருப்பத்தின் காரணமாகத்தான் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கிறது.
திருச்சியில் நடந்த இந்த தேர்தல் பரப்புரையின் முதல் கூட்டத்தில் கூட திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் பேச வேண்டிய இடத்திற்கு வருவதற்கு, ஆறு மணி நேரம் ஆகின்ற அளவிற்கு கூட்டத்தைக் கூட்டி அவரது வாகனத்திற்கு முன்பும் பின்பும் ஊர்வலமாக வரச் செய்தார். அதுமட்டுமன்றி விளக்குகளை அணைப்பது, மீண்டும் போடுவது அதன் மூலம் ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்வது, என தனது நாயக பிம்பத்திற்கு எவ்வளவு சக்தி இருக்கிறது பார் எனக் காட்டி புலங்காகிதமடைந்தார்.
கரூர் நகருக்குத் தேர்தல் பரப்புரைக்கு வருவதற்கு முன்னதாக, அன்று காலையில் முதலில் நாமக்கல் நகரில்தான் விஜய் பேசினார். காலை 8:45 மணிக்கு நாமக்கல்லில் அவர் பேசுவதாக விஜயின் த.வெ.க. கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள (எக்ஸ்) பக்கத்தில், அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கே அதிகாலை 3 – 4 மணிக்கெல்லாம் விஜயைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் வந்து குவியத் தொடங்கிவிட்டனர். காலை 8:45க்கு நாமக்கல்லில் ரசிகர்களைச் சந்திப்பதாக கூறியிருந்த விஜய் சென்னையில் அவரது இல்லத்திலிருந்து காலை 8:40க்குத்தான் கிளம்பியிருக்கிறார்.
அதாவது அதிகாலை முதல் தன்னைக் காண்பதற்காக வந்து குவிந்து கிடந்த கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் தான் வரும் வரை காத்துக் கிடக்கட்டும் எனத் திமிறாகக் காலதாமதமாக இந்தக் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டிருக்கிறார். கரூரில் மதியம் 12:00 மணிக்கு கூட்டம் என அறிவித்துவிட்டு, இரவு 7:00 மணிக்கு விஜய் அங்கே வந்து சேர்கிறார்.
கரூரில் விஜய் பேசவிருந்த இடத்தில் காலை 10 மணி முதலே ரசிகர்கள் வந்து குவியத் தொடங்கிவிட்டனர். இரவு 7:00 மணி வரையில் காத்திருந்த அவர்களுக்கு குடி தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. விஜய் பேசுவதற்காக வந்த போது காத்திருந்தவர்கள் அனைவரும் மிகவும் சோர்ந்துபோய்விட்டிருந்தனர். தன்னைக் காண்பதற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு குடிப்பதற்குத் தண்ணீர் ஏற்பாடு கூட செய்து தரவேண்டும் என விஜய் நினைக்கவில்லை. எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் தன்னைக் காண்பதற்காக அவற்றையெல்லாம் ரசிகர்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்ற நடிகர் விஜயின் எண்ணத்தின் பிரதிபலிப்பே இது.
நாமக்கல்லில் இருந்து கரூர் பைபாஸ்வரை தனது பிரச்சார வாகனத்தின் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே இருந்தவர்களைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டு வந்த விஜய், கரூர் நகரில் நுழைந்தவுடன் பிரச்சார வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கருப்பு ஷட்டர் கொண்டு மூடிவிட்டார். இதன் காரணமாக அவரைக் காணக் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயின் வாகனத்தின் பின்னால் வரத் தொடங்கியிருக்கின்றனர். அதாவது தான் விரும்பிய இடத்தில் வைத்துத்தான் தன்னை ரசிகர்கள் பார்க்க வேண்டும். அவ்வளவு எளிதாகத் தனது தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதில் விஜய் குறியாக இருந்திருக்கிறார்.
பரப்புரை நடக்கவிருந்த இடத்தில் ஏற்கெனவே பல்லாயிரம் ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், விஜயின் வாகனத்திற்குப் பின்னால் வந்த ரசிகர்களும் அவரைப் பார்ப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு அவரது பிரச்சார வாகனத்தைச் சூழ்ந்து கொண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்தான் மக்கள் சிக்கிக் கொண்டு உயிரிழந்திருக்கின்றனர். விஜய் பேசிக் கொண்டிருந்த போதே கீழே இருந்து தண்ணீர் தண்ணீர் என ரசிகர்கள் கத்தினார்கள். அப்படி தண்ணீர் வேண்டும் எனக் கேட்டவர்களுக்கு, நாய்க்கு ரொட்டித் துண்டைப் போடுவதைப் போல தண்ணீர் பாட்டிலைத் தூக்கி வீசுகிறார் விஜய். அதனைப் பிடிப்பதற்காக ரசிகர்கள் முந்தியடித்தது, நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
தன் கண்முன்னாள், இருபதடி தொலைவில் மக்கள் மூச்சுத் திணறிச் செத்துக் கொண்டிருந்த போதும், விஜய் அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவதை உணர்ந்த அடுத்த நொடியே அங்கிருந்து தப்பிச் சென்ற விஜய், திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களிடம் கூடப் பேசாமல், சென்னை திரும்பி தனது வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார். இரண்டு நாட்கள் ஆகியும் தனது வீட்டைவிட்டு வெளியே வரவில்லை, கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை. இறந்தவர்கள் குடும்பத்தையோ, காயமடைந்தவர்களையோ கூடச் சென்று சந்திக்கவில்லை. ஏனெனில் இதையெல்லாம் செய்யத் தேவையில்லை என விஜய் நினைக்கிறார்.
இதுபோன்றதொரு அசம்பாவித சம்பவம் நடந்த பிறகு அதற்குத் தார்மீக ரீதியில் பொறுப்பெடுக்க வேண்டும் என்று விஜய் நினைக்கவில்லை. குறைந்தபட்சம் அந்தப் பகுதியிலேயே தங்கியிருந்து, கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தனது கட்சி நிர்வாகிகளுக்கு வழிகாட்டுவது என்பதைக் கூட விஜய் செய்யவில்லை. விஜய் கரூரில் இருந்து கிளம்பிய அடுத்த நொடியே, இரசிகர்களை அம்போவெனத் தெருவில் விட்டுவிட்டு த.வெ.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மாயமாக மறைந்துவிட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களை அப்பகுதி மக்களும், மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும்தான் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள்.
விஜய் தனது நாயக பிம்பத்தின் சக்தியைக் கண்டு தானே இரசிப்பதற்காகவும், அதனைக் காட்டிப் பேசிப் புலங்காகிதம் அடைவதற்காவும் நடத்திய கூத்துகள் தான் இத்தனை பேரின் சாவில் முடிந்திருக்கிறது.
இந்த துயரச் சம்பவத்தைப் பற்றி ஆளுங்கட்சியான திமுக தொடங்கி, தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடுவது, செய்தியாளர் சந்திப்பு நடத்துவது என தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் இத்தனை பேர் உயிரிழந்த இந்தத் துயர நிகழ்விற்கு விஜய்தான் பொறுப்பு என்று வெளிப்படையாகக் கூறிக் கண்டிக்கவில்லை. அனைவரும் பொத்தம் பொதுவாக, “இது ஒரு துயர சம்பவம்”, “இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்கிற ரீதியிலேயே கருத்துக் கூறியிருக்கின்றனர்.
இந்த துயரச் சம்பவம் நடந்த அன்றிரவே கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்துத் தான் அரசியல் பேசப் போவதில்லை எனவும், இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த கமிசனின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தெலுங்கானாவில், ஒரு திரையரங்கத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் உயிரிழந்த போது, அதற்குக் காரணமான அவரை அம்மாநில அரசு கைது செய்தது. ஆனால் 41 பேரின் சாவுக்குக் காரணம் விஜய்தான் எனக் கூறுவதற்குக் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார். அருணா ஜெகதீசன் அறிக்கை யாரைக் குற்றவாளி என கூறுகிறதோ அவரைக் கைது செய்வோம் என நழுவுகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே மு.க.ஸ்டாலின் இது போன்று பேசுகிறார். விஜயை அவசரப் பட்டுக் கைது செய்தால் எங்கே அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குச் சென்றுவிடுவாறோ என்று அஞ்சுகிறார் தமிழக முதல்வர்.
அண்ணன் சீமானோ தம்பி விஜயை யாரும் பொறுப்பாக்கிவிடக் கூடாது, யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதால் நடந்ததைப் பற்றிப் பயன் ஒன்றும் இல்லை இனி நடப்பதைப் பற்றிப் பேசுங்கள் என அடுத்த கட்டத்திற்கு அனைவரையும் இழுத்துச் செல்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரான அதிமுகவின் எடப்பாடிப் பழனிச்சாமியோ போலீசின் மீதும் தப்பிருக்கிறது, கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் மீதும் தப்பிருக்கிறது என்று இந்தப் பழியிலிருந்து விஜயைக் காப்பாற்றும் விதமாகப் பேசியிருக்கிறார்.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, இன்னும் ஒருபடி மேலே போய் திமுக அரசும் போலீசும் தான் இந்த விபத்திற்குக் காரணம், அவர்கள் ஒழுங்காக திட்டமிட்டிருந்தால், போதிய பாதுகாப்பளித்திருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது என குற்றஞ்சாட்டுகிறார். அதன் மூலம் நடிகர் விஜயைப் பாதுகாக்கிறார். விஜயை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு இவர்கள் இருவரும் இதனை நல்ல வாய்ப்பாக பார்க்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
தற்போது நடிகர் விஜயை இந்தப் பழியிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கான அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுபோடப்பட்டுள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கரூருக்கு வந்திருக்கிறார். திமுக அரசும், போலீசும் தான் இந்த நிகழ்வுக்குக் காரணம் என்ற பிரச்சாரத்தை காவி ஆதரவு ஊடகங்கள் தொடங்கியிருக்கின்றன.
மொத்தத்தில் கரூரில் நடைபெற்றிருக்கும் இந்தத் துயரச் சம்பவத்தினை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக, தேர்தல் கூட்டணி பேரத்திற்குப் பயன்படுத்துவதற்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஒன்றியத்தில் ஆளுங்கட்சி என எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு முன்நிற்கின்றனர்.
இதன் விளைவாக, விஜய் எனும் நார்சிஸ்ட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த 41 பேரின் உயிரிழப்பிற்கு பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுதாமல், தங்களின் சுய இலாபத்திற்காக விஜயைப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதுடன், இழப்பீடு வழங்குவது ஆறுதல் கூறுவது குற்றத்திற்கு காரணமானவர்களை நிச்சயம் தண்டிப்போம் என வீரவசனம் பேசுவது என்ற வரம்பிற்குள் நின்றுகொண்டு தங்களுக்கும், இந்தக் குற்றத்திற்கும் சிறிதும் தொடர்பில்லாதவர்கள் போல் தங்களையும் விடுவித்துக் கொண்டுள்ளனர்.
- அறிவு








ஏழைகள் இறந்தால், அரசியல் எஜமானர்களுக்கு கொண்டாட்டம்.