ஏகாதிபத்திய சேவையில் சிறந்த திராவிட மாடல்!

ஓட்டுக்காக சமூகநீதி பேசும் திமுக அரசாங்கம் ஊதிய உயர்விற்காகவும், சட்டப்படியான உரிமைகளுக்காகவும் போராடும் தொழிலாளர்களுடைய சமூகநீதியை பேச மறுக்கிறது. மாறாக முதலாளிகளுக்காக, தொழிலாளர்களை போலீசைக் கொண்டு கடுமையாக ஒடுக்குகிறது. உண்மையில் திராவிட மாடல் என்பது போலியான வேத-பார்ப்பனிய எதிர்ப்பையும், முதலாளித்துவ சேவையையும் சேர்ந்தக் கலவையாக இருக்கிறது. இவர்கள் நடத்தும் ரியாலிட்டி ஷோக்களின் திரையை விளக்கினால் இந்த உண்மை வெளிப்படும்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில், அப்பா-மகள் பாசம், அண்ணன்-தங்கை உறவின் முக்கியத்துவம், அம்மா கூலி வேலைக்கு போய் மகனை ஆளாக்குவது, சினிமா பிரபலங்கள் செய்கின்ற சிறு உதவியைக் கூட சேவையின் உச்சமாக காட்டுவது போன்ற பல உணர்ச்சிவயப்படக்கூடிய காட்சிகளைப்  பார்த்திருப்போம். கண்கலங்கியிருப்போம்.

இக்காட்சிகளில் சிறிது உண்மை இருந்தாலும், மிகவும் பிற்போக்கான இந்திய சமூக-குடும்ப உறவுகளைஅழகானதாகவும் சொந்த வாழ்க்கையில் சீரழிந்து கிடக்கும் சினிமா பிரபலங்களை உயர்ந்தவர்களாகவும் காட்டி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அழவைத்து அதன் மூலம் தங்களது டிஆர்பி ஐ அதிகப்படுத்துவதே இவர்களின் நோக்கம்.

இதே பாணியில் தமிழகத்தை ஆளும் திமுக, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக, கல்வித்துறைச் சார்ந்த உண்மையான பிரச்சனைகளை மறைத்து, அதனை மடைமாற்றுவதற்காக, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி மொத்த அரங்கத்தையும் கண்ணீரும் கைக்குட்டையுமாக மாற்றி இருக்கிறது.

காலை உணவுத்திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்களினால் பலனடைந்த மாணவர்களை முன்னிறுத்தி திமுக ஆட்சியில் மொத்தக் கல்வியுமே சிறப்புடன் இருப்பதாக ரியாலிட்டி ஷோக்களை நடத்தும் தொகுப்பாளினி முதல் முன்னணி சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குநர்களைக் கொண்டு பிரச்சாரம் செய்து முடித்து விட்டனர். கல்வித்துறை சார்ந்த இந்நிகழ்ச்சியில், மருந்துக்குக்கூடக் கல்வியாளர்களில் ஒருவரைக்கூட பேச வைக்கவில்லை. திமுக-வின் நான்காண்டு கல்விச் சாதனைகளை விளக்கிப் பேசியதே சினிமாக்காரர்கள் தான்.

திமுக ஆதரவு-பத்திரிக்கையாளர்கள், செய்தி ஊடகங்களில் பணிபுரிபவர்கள், யூடியூப்பர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள். பேச்சாளர்கள் என இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் தற்போது ஊடகங்களில் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு தான் அதற்கு திமுக தான் காரணம் என்று பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

* * * * *

தேசிய கல்விக் கொள்கை மூலமாக தமிழக ஏழை எளிய மக்களின் கல்வியை பறிக்க பாஜக முயற்சி செய்கிறது, அதனை எதிர்த்து அனைவருக்கும் கல்வி என்ற சமூக நீதியை முன்வைத்து திமுகவின் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டுவருவதாக இக்கூட்டத்தில் பேசிய பலரும் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினர். முதலமைச்சர் ஸ்டாலினும், ஒன்றிய அரசு நிதி தராத போதும், மாநில அரசு அதனை எதிர்கொண்டு மாணவர்களுக்கு பல நல திட்டங்களை செயல்படுத்துவதாக பெருமைப்பட்டுக் கொண்டார்.

உண்மையில் திமுக தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறதா? மேற்சொன்ன திட்டங்களுக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கும் தொடர்பில்லையா?

மாநில கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்த பேராசிரியர் ஜவகர் நேசன், தேசிய கல்விக் கொள்கையை தழுவியே மாநில கல்வி கொள்கை இருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுதாக திமுக-வை விமர்சித்து அக்குழுவில் இருந்து வெளியேறினார்.  

சமீபத்தில் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை முதல்வர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பரிந்துரைகள் மட்டுமே இருந்தது. உயர் கல்வி குறித்த பரிந்துரைகள் எதுவும் இடம்பெறவில்லை. தாங்கள் கொடுத்த அறிக்கையில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளதாகவும் பள்ளி கல்வி குறித்து கமிட்டி கொடுத்த பல பரிந்துரைகளை தமிழக அரசு எடுத்துக்கொள்ளவில்லையென்றும் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிய கமிட்டி உறுப்பினர்களே குற்றம் சாட்டினர்.  

நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் போன்ற திட்டங்கள் தேசிய கல்விக் கொள்கையின் பிரதிகள் என்று ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய ஆசிரியர் உமா மகேஸ்வரி மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது ‘சமூகநீதியைப் போற்றும் திராவிட மாடல்’ ஆட்சிதான்.

மாநில கல்விக் கொள்கையில் உயர் கல்வி குறித்து எதுவும் இடம்பெறாததற்கு முக்கியமான காரணம், பாஜக ஆளும் மாநிலங்களையும் தாண்டி உயர் கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை முழுமனதோடும் தீவிரமாகவும் அமல்படுத்தி வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு அமல்படுத்துவதன் விளைவாகவே, தேசிய தர வரிசை பட்டியலில் அவை முன்னிலையில் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானாவை தனியார் கல்லூரிகள்.

NEP-ஐ எதிர்ப்பதாகச் சொல்லும் திமுக தான் அதற்கு நேரெதிராக தேசிய தர வரிசை பட்டியலை மேற்கோள் காட்டி இந்தியாவின் பல முதன்மைக் கல்லூரிகள் தமிழகத்தில் இருப்பதாக பெருமைப் பீற்றிக் கொள்கிறது. உயர்கல்வி குறித்த NEP-இன் பல பரிந்துரைகள் திமுக அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அவை உயர்கல்வியில் நடைமுறைக்கும் வந்துள்ளது. எனவே அதையே  உயர்கல்விக்கான மாநில கொள்கையாக அறிவித்தால் பலரும் விமர்சிக்க வாய்ப்புள்ளதென்பதால் அதனை திமுக அரசாங்கம் வெளியிடவே இல்லை.

  * * * * *

நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமே தமிழகத்திற்கு இலாபமீட்ட வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் கோருகின்ற திறன் அறிவு படைத்த மாணவர்களை தயார்படுத்திக் கொடுப்பதுதான். தனியார் நிறுவனங்கள் நான் முதல்வன் பாடங்களைக் கல்லூரிகளில் நடத்துகின்றனர்.

எனவே, அடிப்படையில் தமிழகத்தில் தொழில் தொடங்கும் ஏகாதிபத்திய தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன் அறிவை கொண்ட உழைப்பு சக்தியை உருவாக்கிக் கொடுப்பதுதான் இவர்களின் நோக்கம். இத்தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இம்மாணவர்களின் வேலை நேரமோ மிக அதிகம். அதற்காக அவர்கள் பெறக்கூடிய சம்பளமோ மிகக் குறைவு. இந்த உழைப்புச் சுரண்டலுக்காகவே இந்த ஏற்பாடுகள்.

ஒரு கூலித்தொழிலாளியின் மகள் உயர்கல்வி பெற்று குறைக்கடத்தி நிறுவனத்தில் வேலைக்கு போவதும், அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடி-இல் சேருவதும், வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் விட்ட ஒரு பெண் பதினேழு வருடங்களுக்குப் பிறகு கல்லூரிக்குச் சென்று பயில்வதும் வரவேற்கத்தக்கதே. ஆனால் இவற்றுக்குப் பின்னால் இருப்பது மக்களின் மீதான உண்மையான அக்கறையா? அல்லது திமுக-வின் ஏகாதிபத்திய விசுவாசத்தின் வெளிப்பாடா? என்று பார்ப்பதே மிக முக்கியமானது.

தமிழக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்காகவே வெளிநாடு சென்று முதலீடு ஈட்டுவதாக ஸ்டாலின் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் அத்தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பட்டதாரி இளைஞர்களுக்கு சரியான ஊதியமோ அல்லது சட்ட ரீதியான உரிமைகளோ உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதியை அவர் மாணவர்களுக்கு கொடுப்பதில்லை. மாறாக குறைந்த சம்பளத்திற்கு பெண் தொழிலாளர்கள், பன்னிரெண்டு மணிநேர வேலை, தொழிலாளர் நலச் சட்டங்கள் பின்பற்றப்படாது போன்ற வாக்குறுதிகளை முதலாளிகளுக்குத் தருகின்றனர்.

உதாரணமாக, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதை இங்கே பொருத்திப் பார்த்தால் முதலீடு ஈர்ப்பு/வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பதன் உள்நோக்கம் புரிந்து கொள்ள முடியும். பணிபுரியம் நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக கொண்டு வரச் சொல்லி பன்னாட்டு நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக தங்கம் தென்னரசும், சான்சங் நிறுவனத்திற்கென்று சட்டங்கள் உண்டு அதில் நாம் தலையிட முடியாது என்று உதயநிதியும் விளக்கம் கொடுத்தனர். ஓட்டுக்காக சமூகநீதி சவடால் அடிக்கும் திமுக, ஊதிய உயர்விற்காகவும், சட்டப்படியான உரிமைகளுக்காகவும் போராடும் தொழிலாளர்களுடைய சமூகநீதியை பேச மறுக்கிறது.  மாறாக முதலாளிகளுக்காக, தொழிலாளர்களை போலீசைக் கொண்டு கடுமையாக ஒடுக்குகிறது.

  * * * * *

இந்தி, சமஸ்கிருத திணிப்பைத் தவிர, பள்ளி கல்லூரிகளில் பாஜக செய்து வரும் காவிமயமாக்கல் திட்டத்தை திமுக கண்டு கொள்ளதே இல்லை. பல வருடங்களுக்கு முன்பு பொறியியல் படிப்புகளில், இந்திய அறிவு மரபு என்ற பாடம் கட்டாயமாக்கப்பட்டது. இதில் வேதம், இராமாயணம். மகாபாரதம், பகவத்கீதை, யோகா ஆகியவை பாடமாக வைக்கப்பட்டன. தமிழக பல்கலைக்கழகங்கள் சங்கிகளால் நிரம்பி வழிகிறது. சடங்குக்குக் கூட திமுக இவற்றை எதிர்க்கவில்லை. கடந்த மாதம் யுஜிசி, இளங்கலை வேதியியல், கணிதம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட ஒன்பது  படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து பிரிவுக்கான பாடங்களிலும் வேத-பார்பனிய-புராணப் பழங்கதைகளை இந்திய அறிவு மரபு என்ற போர்வையில் அறிவியல் பாடங்களில் சேர்த்துள்ளது. இதற்கு இந்தியா முழுவதிலிருந்தும் பரவலான எதிர்ப்புகள் உருவாகி இருக்கிற சூழலில் தமிழக உயர்கல்வித் துறையோ வழக்கம் போல மௌனமாகவே இருக்கிறது.

திராவிட மாடல் என்பது போலியான வேத-பார்ப்பனிய எதிர்ப்பையும், உண்மையான முதலாளித்துவ சேவையையும் சேர்ந்தக் கலவையாகும். இவர்கள் நடத்தும் ரியாலிட்டி ஷோக்களின் திரைக்கு பின்னால் ஒளிந்துள்ள திராவிட மாடலின் உண்மையான இலட்சணம் இதுவாகத்தான் இருக்கிறது. 

  • செல்வம்

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன