CAA போராட்டத்தை ஒட்டி 2020-இல் தில்லியில் நடந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட உமர் காலித், ஜர்ஜில் இமாம், குல்ஃபிஸ் பாத்திமா உள்ளிட்ட ஒன்பது பேரினுடைய பிணையை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்து விட்டது. இவர்கள் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
பிணைக் கேட்டு கடந்தாண்டு ஜூலையில் தொடரப்பட்ட இவ்வழக்கு, தில்லி உயர்நீதிமன்றத்தினால் 407 நாட்களுக்கு இழுத்தடிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் பிணை மறுப்பதாக தீர்ப்பு வழங்கியுள்ளது தில்லி உயர்நீதிமன்றம். இந்த ஒன்பது பேரில் ஏழு பேர் ஏற்கனவே ஐந்து வருடங்களாக சிறையில் உள்ளனர்.
ஐந்தாண்டுகள் கடந்த பிறகும், இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்காமல் திட்டமிட்டே காலம் தாழ்த்துவதோடு மட்டுமில்லாமல்; பிணை வழங்காமல் முட்டுக்கட்டைப் போடுகிறது மோடி-அமித்ஷா கும்பல். இவ்வழக்கில் 700-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளது. தற்போது விசாரணையைத் தொடங்கினாலே அது முடிய ஐந்து வருடங்களுக்கு மேலாகும். விசாரணை நடத்தாமலே உமர் காலித் உள்ளிட்டோரை நிரந்தரமாக சிறையில் அடைக்க திட்டமிடும் காவி பாசிச கும்பலுக்கு உடந்தையாக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளும் செயல்படுகின்றனர்.
2020-இல் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தில்லியின் ஷாகின்பாகில் நடந்த போராட்டத்தில் உமர் காலித், ஜர்ஜில் இமாம் உள்ளிட்ட பல மாணவர்கள்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்திற்கு இந்திய அளவில் பரவலான ஆதரவு பெருகவே இப்போராட்டத்தை கலைக்க பல மறைமுக வேலைகளை ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் செய்தது. பிப்ரவரி 24-இல் இப்போராட்டம் கலவரமானது. ஒன்றிய அமைச்சர் அனுராக் தக்கூர் “போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று பொதுவெளியில் பிரச்சாரம் செய்தார். தில்லியின் சட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா (பாஜக) மற்றும் எம்எல்ஏ மோகன் சிங் பிஸ்த் (பாஜக) ஆகியோர் கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் போலீசின் உதவியோடு இக்கலவரத்தை நடத்தியது.
இக்கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருந்தனர். இவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். முஸ்லிம்களின் கடைகள் வீடுகள், உடைமைகள் சூறையாடப்பட்டன.
கலவரம் நடந்து கொண்டிருக்கும்போது, அதாவது 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்தியா வருகையும் அமைந்தது. தங்களுடைய ‘பொற்கால ஆட்சியின் சிறப்பு’ தனது எஜமானனின் முன் காற்றில் பறந்ததை மோடி கும்பலால் சகித்துக்கொள்ள முடியவில்லை. உடனே சிஏஏ போராட்டத்தின் முன்னணியாளர்கள் மீது “இந்தியாவின் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்துள்ளனர் உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளனர். சிஏஏ போராட்ட கலவரத்தை திட்டமிட்டு நடத்தினர்” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊபாவில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். கடந்த ஐந்து வருடங்களில் ஐந்து முறை உமர் காலித்தின் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
“தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள்; விசாரணை முடியும் வரை சிறையில் இருப்பதுதான் நல்லது” என்கிறது தில்லி போலீஸ். தில்லி கலவரத்திற்கு மூளையாக உமர் காலித், ஜர்ஜில் இமாம் உள்ளிட ஒன்பது பேரும் இருப்பதாக கூறும் போலீசின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி பிணையை மறுப்பதாக தில்லி உயர்நீதிமன்றம் கூறுகிறது.
உமர் காலித், ஜர்ஜில் இமாம் ஆகியோர் கலவரங்களுக்கு மூளையாக செயல்பட்டனர் என்பதற்கான ஒரு ஆதாரத்தைக்கூட தில்லி போலீஸ் சமர்பிக்கவில்லை. சிஏஏ போராட்டத்தின் போது, கூட்டங்களில் பேசியதையும் வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பிய செய்திகளையும் வெட்டியும் ஒட்டியும் திரித்தும் ஆதாரமாக காட்டுகிறது தில்லி போலீஸ். மேலும் கலவரத்தை திட்டமிடுவதற்காக இரகசிய கூட்டங்கள் நடத்தியதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் கூறும் தில்லி போலீஸ், இன்றுவரை அந்த சாட்சியத்தை இரகசியமாகவே வைத்திருக்கிறது.
இதனோடு, வாட்ஸ்அப் செய்திகளையும் இணைத்து தில்லி கலவரத்திற்கு இவர்கள்தான் மூளையாக செயல்பட்டனர் என்ற திரைக்கதையை (சதிக் கோட்பாட்டை) தொடர்ந்து சொல்லி வருகிறது தில்லி போலீஸ். இத்திரைக்கதைக்கான ஆதாரங்களை கேட்காத நீதிமன்றமும் போலீஸ் திரைக்கதையை அப்படியே ஏற்றுக்கொண்டு பிணையை மறுத்து வருகிறது.
சிஏஏ போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் விதத்தில், பாஜகவின் அனுராக் தக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் பேசிய காணொளிகள் இன்றும் இணையத்தில் உள்ளன. இக்கானொளிகளை ஆதாரமாகக் கொண்டு 2022-இல் இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு கூறிய தில்லி உயர்நீதிமன்றம் “அவர்கள் அவ்வாறு பேசியதில் உள்ள குற்றத்தன்மை என்ன என்று பார்க்க வேண்டும். நீங்கள் சிரித்த முகத்துடன் ஒன்றைச் சொல்லும் போது அதில் குற்றத்தன்மை எதுவும் இல்லை ஆனால் வெறுப்பூட்டுகிற தன்மையோடு ஒன்றைச் சொல்லும் போது அதில் குற்றத்தன்மை உள்ளதாகவே கருதவேண்டும்” என சிலிர்க்க வைக்கும் விளக்கத்தைக் கொடுத்து வழக்கை முடித்து வைத்தது.
தில்லி கலவர வழக்கில், போதிய ஆதாரங்கள் இருந்தும் பாஜகவினர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்த தில்லி உயர்நீதிமன்றம் அனுமானங்களின் அடிப்படையில் போலீசின் திரைக்கதையை (சதிக் கோட்பாட்டை) ஏற்றுக்கொண்டு உமர் காலித், ஜர்ஜில் இமாம் உள்ளிட ஒன்பது பேருக்கு பிணையை மறுக்கிறது. கலவரத்தைத் தூண்டியவர்கள் தற்போது அமைச்சர்களாகி விட்டனர். ஆனால் மக்களின் நலனுக்காகப் போராடிய மாணவர்கள் தேசவிரோதிகளாக முத்திரை குத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
- செல்வம்
https://sabrangindia.in/no-criminality-if-hate-speech-made-smile-delhi-hc-judge/
https://www.newsclick.in/how-long-too-long-umar-gulfisha-sharjeel-crisis-credibility-courts