நேபாளம்: ஜென் – ஜி தலைமுறையின் போராட்டப் பலனை கொத்திச் செல்லக் காத்திருக்கும் வல்லூறுகள்

பலமான ஒரு அரசியல் தலைமை இல்லாமல் நடந்திருக்கும் இந்த போராட்டத்தின் பலனை அறுவடை செய்ய தங்களுக்குச் சாதகமான தலைமையை அரசில் அமரவைக்க அண்டை நாடுகளான இந்தியா சீனா முதல் பதவியிழந்த மன்னர் வரைப் பலரும் காத்திருக்கிறார்கள்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நேபாள அரசு முகநூல், வாட்ஸாப், எக்ஸ், யூடியூப், ரெட்டிட் உள்ளிட்ட 26 முக்கியமான சமூக ஊடகங்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தது. இந்தச் சிறு நெருப்பு பெரும் போராட்டத் தீயாகப் பற்றிக் கொண்டது. 

செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தலைநகர் காத்மண்டுவிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் இளைஞர்கள் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இன்னமும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜென்-ஜி என அழைக்கப்படும் 16-26 வயதான இளைஞர்கள் அரசின் இந்த முடிவுக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டங்களில் இறங்கினார்கள். 

போராட்டத்தினை ஒடுக்குவதற்கு போலீசும் இராணுவமும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இது இன்னமும் போராட்டத்தின் வீரியத்தை அதிகரிக்கவே அடுத்த இரு நாட்களும் காத்மண்டுவிலிருந்த பாராளுமன்றக் கட்டிடம், பிரதமர் இல்லம் ஆகியவை தாக்கப்பட்டன. பல அரசு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இராணுவம் களமிறக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இந்த போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளப் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கூடி விவாதித்த பிறகு தற்போது அங்கே ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்க்கியின் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றிருக்கிறது. இனி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அங்கே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதுவரையில் இந்த இடைக்கால அரசு பொறுப்பில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

சமூக ஊடகத் தடை என்பது போராட்டங்கள் நடைபெறுவதற்கான சிறு நெருப்பு என்றாலும், அது மிகப்பெரிய அளவில் வெடித்துச் சிதறுவதற்கு நீண்ட காலமாக மக்கள் மனதில் ஆளும் அரசு குறித்து நிலவி வந்த அதிருப்தியும், அவநம்பிக்கையும் முக்கிய காரணமாக இருக்கிறது. அரசுத் துறையில் எங்கும் வியாபித்திருக்கும் ஊழலும் முறைகேடுகளும், வாரிசு அரசியலும், பொருளாதாரத் தேக்கமும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததும், அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் மிகப்பெரிய அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது. இவ்வாறு மக்கள் மனது ஆற்றாமையினால் கொதித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த சமூக ஊடகத் தடை வந்து அதனை வெடித்துக் கிளம்பச் செய்திருக்கிறது. 

தற்போது பதவி விலகியிருக்கும் நேபாளப் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கிரிபந்து தேயிலைத் தோட்ட நிலத்தில் ஊழல் செய்தது, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் செய்தது. நில அபகரிப்பு மாபியா கும்பல்களை ஆதரித்தது என சர்மா ஒலி மீதான ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலும் ஆளும் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலரின் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி கூட்டணிக் கட்சியான நேபாள தேசிய காங்கிரசின் தலைவர்கள் பலரும் இத்தகைய ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், அவர்களை ஆளுங்கட்சி பாதுகாக்கிறது எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

நேபாளத்தை அளும் வலது சந்தர்ப்பவாத கம்யூனிஸ்ட் கட்சியானது, மறுகாலனியாக்க கொள்கைகளையும், இந்திய மற்றும் சீன முதலாளிகளின் இலாபவெறிக்கு துணை செய்யும் பொருளாதார கொள்கைகளையும் எவ்வித தயக்கமும் இன்றி தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. இதனால் கல்வி, சுகாதாரம் ஆகியவை மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிவருகிறது. வேலைவாய்ப்பின்மை, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நகர்ப்புற-கிராமப்புற ஏற்றத்தாழ்வு, தொழில்மயமாக்கல் இல்லாமை, மந்தமான பொருளாதாரம், வேலைதேடி மற்ற நாடுகளுக்கு (குறிப்பாக இந்தியாவுக்கு) இடம் பெயர்வது மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகக் குழுக்களுக்கு பொதுத்துறைகளில் பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக மக்களை வாட்டி வருகின்றனர். 

நேபாளத்தில் இளைஞர்கள் மத்தியிலான வேலைவாய்பின்மை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது கடந்த ஆண்டில் மட்டும் 20.82 சதவீதமாக இருந்திருக்கிறது. அதாவது பத்தில் இரண்டு இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலைமை அங்கே நீடிக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டிற்கு வேலைதேடிச் செல்ல வேண்டிய அவல நிலையில் இருக்கின்றனர். நேபாளத்தின் ஒட்டுமொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 சதவீதம் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அனுப்பும் பணத்திலிருந்து வருகிறது என்றால் அந்த அளவிற்கு அங்கே வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் 

பொருளாதாரம் நீண்டகாலமாகத் தேக்க நிலையிலேயே இருப்பதால் நேபாளத்தில் விலைவாசி உயர்வு, குறிப்பாக உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும், வீடு நிலம் ஆகியவற்றின் வாடகையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக வேலையில் இருந்தாலும் அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிப்பதற்கே மிகவும் சிரமப்பட வேண்டிய சூழலில் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவையெல்லாம் ஒன்று சேர்ந்துதான் அங்கே மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடக்க காரணமாக இருந்திருக்கின்றன. 

இந்தப் போராட்டங்களில் பெரும்பாலும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக கலந்து கொண்டதாக கூறப்பட்டாலும், மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகளும், பத்திரிக்கையாளர்கள் குழுமங்களும், சில அரசு சாரா நிறுவனங்களும் (என்.ஜி.ஓ.க்கள்) இணைந்து இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். 

பலமான ஒரு அரசியல் தலைமை இல்லாமல் நடந்திருக்கும் இந்த போராட்டத்தின் பலனை அறுவடை செய்ய தங்களுக்குச் சாதகமான தலைமையை அரசில் அமரவைக்க அண்டை நாடுகளான இந்தியா சீனா முதல் பதவியிழந்த மன்னர் வரைப் பலரும் காத்திருக்கிறார்கள்.

வங்கதேசத்தைப் போன்றே இங்கேயும் ஆளுங்கட்சியின் மீதான எதிர்ப்பைப் பயன்படுத்தித் தனக்கு தோதான ஆட்களை ஆட்சியில் அமர வைக்க அமெரிக்கா இந்த போராட்டங்களைப் பின்னால் இருந்து இயக்குவதாகச் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்த ஹமி நேபாள் என்ற என்.ஜி.ஓ. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களான கோகோ கோலா, வைபர், கோல்டுஸ்டார் மற்றும் மல்பெரி ஓட்டல்ஸ் ஆகியவற்றிடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளதை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது அமெரிக்க தலையீட்டிற்கான சாத்தியங்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். 

ஆனால் அதேசமயம் முடியாட்சி மீட்புக் குழுக்கள் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் மன்னராட்சியை நிறுவுவதற்காக முயற்சிப்பார்கள் என்பதில் ஐய்யமில்லை. சமீப ஆண்டுகளில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்கள் நேபாளத்தில் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. 

2006-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திராவை மீண்டும் ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். தேசிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியையும் தொடங்கி மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேபாளத்தை ஆளும் கூட்டணிக் கட்சிகளின் ஊழல்களும் முறைகேடுகளும், மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு மன்னராட்சிக்கு ஆதரவு திரட்டவும் அவர்கள் தற்போது களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.   

இலங்கையையும், வங்கதேசத்தையும் தொடர்ந்து தற்போது நேபாளத்திலும் ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக மக்கள் வாழ வழிதெரியாத நிலைக்குத் தள்ளப்படுவதும், அதேசமயம் அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஊழல் முறைகேடுகள் மூலம் சொத்துச் சேர்த்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வதும் என்ற முரண்நிலை, ஆட்சியாளர்களைத் துரத்தியடிக்கும் மக்கள் போராட்டங்களைத் தோற்றுவித்துள்ளது.  

ஆனால் போராட்டக் களத்தில் முன்நிற்கும் இளைஞர்களுக்கு, இருக்கும் ஆட்சியாளர்களைத் தூக்கி விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதைத் தாண்டி பெரிய கோரிக்கைகள் எதுவும் இல்லை. மார்ச் மாதத்தில் தேர்தல் நடந்தால் அதில் மீண்டும் இதே அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியமைப்பார்கள். இதே பொருளாதாரக் கொள்கையைத்தான் மீண்டும் நடைமுறைப்படுத்துவார்கள். இளைஞர்களின் போராட்டத்தின் பலனை இன்னுமொரு ஊழல் அரசியல்வாதி அறுவடை செய்துகொள்வார் என்ற அவல நிலைதான் நேபாளத்தில் நீடிக்கிறது.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன