ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஆகஸ்டு 15 அன்று தில்லியில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்குப் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் பாஜக ஆதரவு பேச்சாளர்கள், சமூக ஊடகக் கையாட்கள் வரை அனைவரும் மோடி அரசின் இந்த அறிவிப்பை மிகப்பெரிய சாதனை போல போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.
இதன் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு 48,000 கோடி ருபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரசு இந்த வருவாய் இழப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அரசின் தாராள மனதை பாஜக ஆதரவு பத்திரிக்கைகள் எழுதுகின்றன.
முதலில் இதனை மக்களுக்கு அரசு கொடுக்கும் சலுகை, என்று பேசுவதே தவறு. இதனை மக்கள் நலனிலிருந்து செய்திருந்தால் எப்போதோ செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் மறைமுக வரிவிதிப்பான ஜி.எஸ்.டி.யை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, நேரடி வரிவிதிப்பு முறையில் பெரும் பணக்கார முதலாளிகளிடம், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்கு ஏற்ப பல அடுக்கு வரிவிதித்து வசூல் செய்திருக்க வேண்டும். எனவே இவர்களது நோக்கம் மக்கள் நலன் அல்ல என்பதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஜி.எஸ்.டி. வரி குறைப்பை பாஜக கொண்டு வருவதன் நோக்கமே, முதலாளிகள் உற்பத்தி செய்து குவித்து வைத்துள்ள பொருட்களை வாங்கும் அளவிற்கு மக்களிடம் பணம் இல்லை, அதனால் பொருட்கள் விற்காமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது, இதனைச் சரி செய்ய ஜி.எஸ்.டி.யைக் குறைத்தால் விலைகள் குறையும் மக்களும் வாங்குவார்கள். இதனால் முதலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி சரியாகும். அதற்காகத்தான் ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பை காவிக் கும்பல் கொண்டு வருகிறது. இதனை மூடி மறைத்துவிட்டு மக்களுக்காகச் செய்வதாகப் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறது.
தாங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்கவில்லை என்றால் முதலாளிகள் என்ன செய்வார்கள், விலையைக் குறைப்பார்கள் அல்லது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் எனக் கூறி விளம்பரம் செய்வார்கள். இங்கே அரசு, முதலாளிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீது தான் விதிக்கும் வரியைக் குறைப்பதன் மூலம் பொருட்களின் விலையைக் குறைத்து முதலாளிகளைக் காப்பாற்றுகிறது.
இவ்வாறு முதலாளிகளைக் காப்பாற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் வேறு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது எனக் கவலைப்படும் சில முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, இது மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும், உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று வரவேற்றுள்ள அதே சமயம் இதன் மூலம் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட வெளியிலிருந்து கடன் வாங்க கூடாது என்றும், பொதுச் செலவீனங்களுக்கான ஒதுக்கீட்டினைக் குறைப்பதன் மூலம் இதனைச் சமாளிக்க வேண்டும் என்றும் கூறுகின்றன.
அதாவது ஜி.எஸ்.டி.யைக் குறைக்கிறேன் எனக் கூறி புதிதாக கடன் வாங்காதே, அதற்கு பதிலாக ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி அதன் மூலம் பற்றாக்குறையை சமாளி என அரசுக்கு முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர். அரசும் இதைத்தான் செய்யப்போகிறது.
மக்களிடமிருந்து வாங்கும் வரியைக் குறைப்பதற்கு வெளியிலிருந்து கடன் வாங்காதே எனக் கூறும் இந்த முதலாளித்துவ அறிவுஜீவிகள் யாரும் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இதுவரை அரசு வாரி வழங்கிய சலுகைகள், கடன் தள்ளுபடிகள், வரி விலக்குகள் குறித்து இது போல் கூறியதில்லை. அறிவுஜீவிகளை விடுங்கள், பிரதமரோ, நிதியமைச்சரோ அல்லது பாஜகவின் ஊதுகுழல்களோ கூட இதுவரை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இத்தனை இலட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறோம், வரிவிலக்கு கொடுத்திருக்கிறோம் எனப் பெருமை பொங்க பேட்டி கொடுத்ததில்லை.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வாரிக் கொடுக்கும் போது கமுக்கமாக கொடுப்பதும், மக்கள் மீது சுமத்திய அபரிமிதமான வரியைச் சற்று குறைக்கும் போது, அதனைப் ஊதிப்பெருக்கி தம்பட்டம் அடிப்பதும் தான் இவர்களது வேலை.
இந்த வரிக் குறைப்பின் காரணமாக ஏற்படும் நிதியிழப்பு என நிதியமைச்சர் கூறியுள்ள ஆண்டுக்கு 48,000 கோடி என்பதைப் பிரித்தால் மாதத்திற்கு 4,000 கோடி ருபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால் வசூலாகும் ஜி.எஸ்.டி.யின் அளவு என்பது மாதந்தோரும் 2 இலட்சம் கோடி ருபாய். ஒவ்வொரு மாதமும் வசூலாகும் ஜி.எஸ்.டி. தொகையுடன் ஒப்பிடும் போது இந்த வரிக் குறைப்பு என்பது மிகவும் சுண்டைக்காய் அளவுதான். இதற்கே இவர்கள் மூக்கால் அழுகின்றனர்.
மோடி அரசு இதுவரை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கிய சலுகைகள், வரிவிலக்குகள், தள்ளுபடிகளைப் பட்டியலிட்டு ஒப்பிட்டால் இந்த வரிக்குறைப்பு என்பது அரசுக்குத் தூசிக்குச் சமம் என்பது புரியும். மோடி அரசு பதவியேற்றது முதல் முதலாளிகளுக்குப் பல வழிகளில் சலுகைகளை அள்ளிக் கொடுத்து வருகிறது. நேரடி வரிச் சலுகை, வரிவிலக்கு, ஈவுத்தொகை விநியோக வரி (DDT) ஒழிப்பு, போன்ற வருவாய் இழப்புகள், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகள் (PLI) போன்ற பட்ஜெட் ஒதுக்கீடுகள், அவசர கடன் உத்தரவாதத் திட்டம் (ECLGS) போன்ற மறைமுக நிதி உதவிகள், எனப் பல வழிகளில் மோடி அரசு முதலாளிகள் நலனைக் காப்பதற்காக மக்கள் பணத்தை வாரியிறைத்திருக்கிறது.
2019-ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வரியினை 22 சதவீதமாக – அதுவும் புது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15 சதவீதமாக – குறைத்ததன் மூலமாக அந்த ஆண்டில் மட்டும் 1.45 இலட்சம் கோடி ருபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு இதுவரைத் தொடர்கிறது. இது தவிற பிற வரிச்சலுகைகள் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஆண்டுக்கு 75,000 கோடி முதல் 98,000 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது[1].
2020-ஆம் ஆண்டு முதல் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகள் (PLI) என்ற பெயரில் அரசு தனது வருவாயிலிருந்து, அதாவது மக்களின் வரிப்பணத்திலிருந்து, கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் கோடி ருபாய் அளவிற்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரொக்கமாக தூக்கிக் கொடுத்திருக்கிறது[2]. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகள் என்று கூறினாலும் சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து, அதனை அசம்பிளிங் செய்கிறோம் எனக் கூறி லேபிள் ஒட்டி விற்பனை செய்து, இந்தச் சலுகைகளை முதலாளிகள் மோசடியாக அனுபவிக்கிறார்கள் என முன்னாள் தேசிய பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்[3]. ஆனால் இன்றும் இந்த மோசடி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வேலையிழந்து மக்கள் வாழவழி தெரியாமல் விழிபிதுங்கி நின்றுகொண்டிருந்த போது, அவசர கடன் உத்தரவாதத் திட்டம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு 3 இலட்சம் கோடி ருபாய்க்கும் அதிகமான தொகையை வட்டியில்லா கடனாக கொடுத்து உதவியதுடன் அதில் 22,000 கோடி ருபாயைத் தள்ளுபடியும் செய்திருக்கிறது இந்த மோடி அரசு.
இது போதாதென்று பன்னாட்டு நிதியாதிக்க கும்பல்கள் பயனடையும் வகையில் ஈவுத்தொகை விநியோக வரி (DDT) ஒழிப்பு என்ற பெயரில், பங்குச் சந்தையில் சூதாடி நாட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்லும் பணத்திற்கு, 2020-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 25,000 கோடி ருபாய் வரித் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது மோடி அரசு.
ஸ்டார்டப் இந்தியா என்ற பெயரில் புதிய நிறுவனங்களைத் தொடங்க வசதி செய்வதாக கூறி ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ஒரு இலட்சம் கோடி ருபாய் அளவிற்கு வரித்தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் போதாதென்று கடந்த பத்து ஆண்டுகளில், சுமார் 100 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும், 16 இலட்சம் கோடி ருபாய் அளவிற்கு, வாராக் கடன் தள்ளுபடி செய்து வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.
இவையெல்லாவற்றையும் மறைத்துவிட்டு, அநியாய ஜிஎஸ்டி வரியை சற்று குறைத்ததைப் பெருமையென பேசித்திரிகிறது காவி கார்ப்பரேட் பாசிசக் கும்பல்.
- அறிவு
[1] https://www.thehindu.com/business/Economy/corporate-tax-revenue-foregone-at-99000-crore-in-fy24-mos-finance/article69843985.ece
[2] https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107825
[3] https://manufacturing.economictimes.indiatimes.com/news/industry/raghuram-rajan-slams-governments-manufacturing-subsidies-and-policies/110168596