சுயநிதிக் கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவமதிக்கப்படுவதை அனுமதியோம்!

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அவசியம் என்கிற, ஒரு அட்டூழியத்தை, பாசிச மோடி அரசு, அடிமை பழனிச்சாமி ஆட்சியில் புகுத்திவிட்டது. இதைத் தடுக்கத் துப்பில்லாத அன்றைய பழனிச்சாமி அரசு, நீட் தேர்வை அங்கீகரித்து நடைமுறைப்படுத்திய ஆட்டூழியத்தை அமுக்கிவிடும் முயற்சியாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டைத் திணித்து நீட் தேர்வை நிரந்தரமாக்கி விட்டது.

இந்த ஒதுக்கீட்டின் மூலம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் அனைத்தையும் அரசே ஏற்கும் என்று அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டது. அடிமை பழனிச்சாமி ஆட்சிக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த திராவிட மாடல் ஸ்டாலின் அரசு, பொறியியல், வேளாண்மை, சட்டம், மீன்வளம், கால்நடை போன்ற துறைகளுக்கும் இவ்வொதுக்கீட்டை விரிவுபடுத்தியதைப் பீற்றிக்கொண்டதே ஒழிய, நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.

இதன் அடிப்படையில் மேற்கண்ட துறைகளில் மொத்தம் 40168 அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். இவர்கள், அனைவருக்கும், ‘அரசே அனைத்துக் கட்டணங்களையும் செலுத்தி விடுவதால், மேற்கண்ட கல்லூரிகள் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. இதர மாணவர்களுக்கு வழங்கப்பட்டும் அனைத்து வசதிகளும், இவர்களுக்கும் வழங்குவதோடு, பாரபட்சமின்றி, கண்ணியத்துடன், மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். இல்லையேல், அக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்பையும், கல்லூரி முதல்வர்களின் ஒப்புதலோடு அரசு ஆவணப்படுத்தியுள்ளது.

அரசின் அரசாணையையும், அவை, ஆவணப்படுத்தியுள்ள அறிவிப்புகளையும், எச்சரிக்கைகளையும் கல்லூரிகள் எவையும் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. விளைவு, 7.5% ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உட்பட அனைத்துக் கட்டணங்களையும் கட்டாயப்படுத்திக் கறந்து விடுகின்றனர். அனைத்துக் கட்டணங்களைக் கறந்த பிறகும் உணவு, தங்கும் விடுதி உட்பட அனைத்துப் பிரச்சனைகளிலும் ‘இரண்டாம் தரக் குடிமகனைப் போல நடத்தும் அநியாயங்களும் அரங்கேற்றப் படுகின்றன.

எல்லாக் கட்டணங்களையும் அரசே செலுத்திவிடும் என்ற நம்பிக்கையுடன் கல்லூரிகளில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு, அரசின் வஞ்சகத்தையும், தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணரத் தொடங்கியவுடன், இவற்றை எதிர்த்துக் குரலெழுப்பும் மாணவர்களை ஓரங்கட்டுவது, விடுதிகளில் தனியாக அறைகளை ஒதுக்கிக் கேவலப்படுத்துவது என்பது நடந்தேறுகிறது.

இந்த அட்டூழியம் போதாதென்று, எவ்விதக் கட்டமைப்பு வசதியும் இல்லாத கல்லூரிகளில் கவுன்சிலிங் என்ற பெயரில் புரோக்கர்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களை 7.5% ஒதுக்கீட்டின் மூலம் புகுத்தி காசையும் கறந்து விடுகின்றனர். இம்மாதிரியான கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கிடையாது. தேர்ச்சி விகிதம் குறைவு, கல்லூரி வளாகத்தில் தேர்வுகள் நடக்காது. இதனால், மாணவர்களின் எதிர்காலமே சூன்யமயமாக்கப்படுவதைப் பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் 7.5% ஒதுக்கீட்டை வழங்கிவிட்டோம். இனி நமக்கென்ன என்று எறுமைத்தோல் ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கப்பட்ட 7. 5% ஒதுக்கீட்டில் நடந்த இதே அட்டூழியம்தான், கல்வி உரிமைச் சட்டப்படி ஏழை, எளியப் பிள்ளைகளுக்கு ஒதுக்கப்பட்ட 25% அடிப்படையில் தனியார் பள்ளிகளில் சேர்த்தப் பிள்ளைகளுக்கும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இப்படி சேர்க்கப்பட்டப் பிள்ளைகளுக்கு முறையான கட்டணத்தையும் அரசு செலுத்தாததால் அப்பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் நடந்தேறுகிறது.

இதுகுறித்து அக்கறைப்பட வேண்டிய அரசே, அலட்சியமாக இருப்பதற்குக் காரணம், பெரும்பான்மைக் கல்லூரிகள், பள்ளிகள், அரசியல் மேலும், 7.5% ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்குச் சைவ உணவும், மற்றவர்களுக்கு அசைவ உணவும் வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினால், ‘அரசாங்கம் உங்கள் சாப்பாட்டுக்குத் தரும் காசுக்கு இதுவே அதிகம்’ என்கிற அதிகாரத் திமிரில் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

7.5% ஒதுக்கீட்டில் கல்லூரியில் நுழைந்ததும், அனைத்துக் கட்டணங்களையும் தாங்களே கட்டவேண்டிய கட்டாயத்தால் ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இருப்பினும், கிடைத்த இடத்தை விடக்கூடாது என்பதற்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைவில் நிறுத்தியும் கந்து வட்டிக்காரனிடம் மண்டியிடுகின்றனர். விளைவு, கடன் என்கிற மரணக் குழியில் தள்ளப்படுகின்றனர். இதுவும் இயலாத போது, வேறு வழியின்றி இடைநிறுத்தத்தோடு கல்லூரி கனவிற்கு சமாதிக் கட்டி விடுகின்றனர்.

சுயநிதிக் கல்லூரிகளில்தான் இந்தக் கொடுமை, அட்டூழியம் என்றால், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கூட, சில கட்டணங்களைக் கட்டாயப்படுத்தி பிடுங்கி விடுகின்றனர். எடுத்துக்காட்டாக, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூபாய் 10,000/- வரை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அடுத்து, கடலூர் வேளாண் கல்லூரியில் அரசு தருகின்ற கட்டணம் போக ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 50,000/- கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர். அப்படிக் கட்ட மறுக்கும் மாணவர்களைத் தேர்வு எழுதவிடாமல் தடுத்து விடுகின்றனர். இது போன்ற கல்லூரிகள், மாவட்ட அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளதால் அவர்களை மீறி எதுவும் நடக்காது என்பது நடைமுறை உண்மையாகிவிட்டது.

ஏழை, எளிய மாணவர்களை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி இரண்டாம் தர மக்களாக நடத்தும் ஓட்டுப் பொறுக்குவதற்காக தரப்படும் இது போன்ற ஒதுக்கீடுகளைச் சலுகைகளை அரசு நமக்காகச் செய்கிறது என நம்பி ஏமாறாமல், கல்வியானது அடிப்படை உரிமை என்கிற அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்கும் இலவச – உயர் கல்வி வரை அறிவியல் பூர்வமான, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கப் போராடுவோம். இதற்கு கேடாக, தடையாகக் கல்வியில் தனியார் மயத்தைத் திணித்து வரும் அரசுகளின் மாணவர் விரோதப் (போக்கை) கொள்கையை முறியடிக்க மாணவர்களாகிய நாம் அனைவரும் பெற்றோர்களுடன் இணைந்து களமிறங்குவோம். விருப்பபூர்வமான பாடப்பிரிவைத் தெரிவு செய்யும் உரிமையை நிலைநாட்டுவோம்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன