சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) மாற்றங்களை அறிவித்திருக்கிறது மோடி அரசு. இப்புதிய வரியின் படி, பொருள்கள் மீது ஏற்கனவே இருந்துவருகின்ற 5%, 12%, 18%, 28% என இருந்த வரி அடுக்குகளை திருத்தி, 0%, 5% மற்றும் 18% என்ற மூன்று வரி அடுக்குகளாக மாற்றியுள்ளனர். மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு (400 பொருட்கள்) நிர்ணயிக்கப்பட்டிருந்த 5%, 12%, 18%, சதவிகித வரிகள் தற்போது 0% மற்றும் 5% வரி அடுக்குகளுக்கு மாற்றியுள்ளனர். மேலும், ஆடம்பரப் பொருட்களுக்கு 40% வரி நிர்ணயித்துள்ளனர். செப்டம்பர் 22-இல் இருந்து இப்புதிய வரிவிதிப்புக்கள் நடைமுறைக்கு வருவதாகவும் இந்த வரி மாற்றத்தின் காரணமாக ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு 48,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் கூறியிருக்கிறார்.
இது கடந்த எட்டாண்டு காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் என்கிறார் மோடி. விவசாயிகள், தொழில் முனைவோர்கள், சிறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் என பலரும் பயனடைய போவதாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு (5 டிரிலியன் பொருளாதாரம்) இது முக்கிய பங்களிப்பு செலுத்தும்” என்கிறார் பிரதமர் மோடி.
நிர்மலா சீதாராமனோ, இது மக்களுக்கான சீர்திருத்தம் என்கிறார். GST மாற்றத்தின் காரணமாக இந்தாண்டு பொருளாதார வளர்ச்சியானது எதிர்பாக்கப்படுகிற 6.3%-6.8% ஐ விட அதிகமாக இருக்கும் என்கிறார்.
இந்த வாய்சவடால்களால் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இருக்கப்போவதில்லை. காரணம், 2017-இல் GST அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இதே வசனத்தை (MSME-க்கு சாதகமானது, சிறு தொழில்கள் வளர்ச்சியடையும், வேலைவாய்ப்புகள் பெருகும், பொருளாதாரம் உயரும்) மோடி உள்ளிட்ட இந்திய ஆளும்வர்க்க அடிவருடிகள் நியாயப்படுத்திவந்தனர். ஆனால் கடந்த எட்டாண்டுகளில், GST-யினால் இலட்சக்கணக்கான சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. உற்பத்தித்துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துள்ளது. மக்கள் தொழில்துறைச் சார்ந்த வேலைகளிலிருந்து விவசாயத்தை நோக்கி செல்வதாக மோடி கும்பலின் அறிக்கைகளே கூறுகின்றன.
GST வரி விகிதங்களினால் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரி செய்யுமாறு ஒரு வருடத்திற்கு முன் மோடி கேட்டுக்கொண்டாராம். அதன் காரணமாகவே வரி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக வசனம் பேசுகிறார் நிர்மலா சீதாராமன். GST வரி விகிதங்களை மாற்றக் கோரி கடந்த எட்டாண்டுகளாக பல்வேறு தொழில் மற்றும் மக்கள் பிரிவினரும் முன்வைத்த கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் GST-யால் பொருளாதாரம் வளர்கிறது என்று மக்களை ஏளனம் செய்த இந்த பாசிச கும்பலுக்கு, மக்களின் கஷ்டம் திடீரென கண்ணக்குப்பட்டது எப்படி என்பது உலகதிசயம் தான்.
இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும் கூடிய விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளரும் என்றும் பிரதமர் மோடி உறுதியாகக் கூறுகிறார். கடந்த காலாண்டில் கூட எதிர்பார்த்ததைவிட உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP) கூடுதல் வளர்ச்சி அடைந்திருப்பதாக நிதி அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் சமீபத்திய மாதாந்திர அறிக்கை கூட “உள்நாட்டுத் தேவை வலுவாக இருப்பதாகவும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திரிப்பதாகவும்” கூறுகிறது. நாட்டின் பொருளாதாரம் இவ்வளவு சிறப்பாக இருக்கும் பொழுது, பொருள்களின் மீதான வரியைக் குறைத்துதான் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வைக்க வேண்டுமா என்ன?
மோடி கும்பல் பெருமைப்பட்டுக்கொள்ளும் பொருளாதார வளர்ச்சி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன வளர்ச்சியையும், முதலாளிகளின் சொத்து வளர்ச்சியையும் தான். பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. எனவே உள்நாட்டு தேவையானது (domestic demand) தேக்க நிலையை அடைந்துள்ளது. அதாவது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சோப்பு, பற்பசை, டீ தூள், உணவு வகைகள், மருந்துப் பொருட்கள், துணி வகைகள், காலணிகள் ஆகியவற்றை வாங்குவதற்குக் கூட போதிய வருவாய் இல்லாமல் உள்ளனர் என்பதே இதன் பொருள். கடந்த பத்து வருடங்களாக இப்பொருள்களின் ஆண்டு உற்பத்தி விகிதம் குறைந்து வந்துள்ளதே இதற்கு சாட்சி.
அத்தியாவசியப் பொருட்களின் ஆண்டு உற்பத்தி விகிதமானது 2012-13 இல் 6 சதவிகிதத்தில் தொடங்கி படிப்படியாக குறைந்து 2024-25 இல் பூஜ்ஜியத்துக்கு கீழே சென்றுவிட்டது. பெரும்பாலான இந்திய மக்களிடம் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான வாங்கும் சக்தி இல்லை என்பதே இது உணர்த்தும் உண்மை.
வேலையின்மை அதிகரித்தது தான் உள்நாட்டு தேவை குறைந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. ஆனால் மோடி அரசாங்கமோ வேலையின்மை விகிதம் மிகக் குறைவாக இருப்பதாகக் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, விவசாயம் மற்றும் சுயதொழில் (குடும்பத் தொழிலும் அடக்கம்) போன்ற முறைசாராத் தொழில்களும் (informal sectors) மற்றும் MSME தொழில்களும் வேலைவாய்ப்பில் 90 சதவிதம் பங்களிப்பைக் கொண்டுள்ளன. பணமதிப்பிழப்பு மற்றும் GST-யால் முறைசாராத் தொழில்கள் நலிவடைந்து விட்டன. மேலும் முறைசாராத் தொழிற்துறைகளில் ஏற்படும் வேலையிழப்பு மற்றும் ஊதிய குறைவையோ அரசாங்கம் கணக்கில் கொள்வதில்லை. இதன் காரணமாக வேலையின்மை குறித்து அரசாங்கம் தரும் விவரங்கள் கள எதார்த்தத்திற்கு மாறாகவே உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து 2024-25 பொருளாதார அறிக்கை சில விவரங்களைத் தந்துள்ளது. வருடாந்திர தொழில்துறைக் கணக்கெடுப்பு தரவுகளின் படி, 2022-23 ஆம் ஆண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சாலைத் துறையில் (organized industry sector) பணிபுரியும் ஒரு தொழிலாளியின் மொத்த ஊதியம், 2018-19 ஆம் ஆண்டில் (நான்கு ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததை விட 3 சதவீதம் குறைந்துள்ளது.
விவசாயம் மற்றும் விவசாயம் சாராத வேலைகளுக்கான உண்மையான கிராமப்புற கூலியின் (real rural wage) அளவு பத்தாண்டு காலமாக எந்த மாற்றமும் அடையாமல் தேக்கமடைந்துள்ளது.
2017-18 ஆம் ஆண்டிலிருந்து, மாதச்சம்பளம் அல்லது நிரந்தர வேலையிலுள்ள தொழிலாளர்களின் உண்மை ஊதியம் ஆண்களுக்கு 6 சதவிகிதமும், பெண்களுக்கு 13 சதவிகிதமும் குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின் வருவாய், ஆண் தொழிலாளர்களுக்கு 9 சதவிகிதம், பெண் தொழிலாளர்களுக்கு 32 சதவிகிதம் என கடுமையாகச் சரிந்துள்ளது.
இலட்சக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்கள் மூடப்பட்டது, விவசாயம் மற்றும் சுயதொழில்களின் வீழ்ச்சி, பல ஆண்டுகளாக உண்மை ஊதியம் அதிகரிக்காமல் இருப்பது, தொழில்துறை வேலை வாய்ப்பு குறைந்தது இவையே மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததற்கான மிக முக்கிய காரணமாகும். இதன் விளைவாகவே உள்நாட்டு தேவையும் தேக்கநிலையை அடைந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துணிவில்லாத மோடி கும்பல், நிலைமை மோசமடையவே, வரிக்குறைப்பு, மக்கள் நலன் என்று நாடகமாடுகின்றது. அதற்கு மீடியாக்களும் ஒத்தூதுகின்றன.
* * * * * * * * * * * * * * *
தற்போது அறிவித்துள்ள GST வரி குறைப்பின் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையும் என்பது உண்மையே. அதேவேளையில், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதை ஒப்புக்கொள்ளும் நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவதற்கான வழிகளை மட்டும் வெளிப்படையாகப் பேசமறுக்கிறார்.
இந்திய பொருளாதார நிலைமைகளைப் பொறுத்தவரை, வரி வருமான இழப்பை மூன்று வழிகளில் ஈடுகட்ட முடியும்.
- கார்ப்பரேட் வருமான வரி உள்ளிட்ட பிற வரிகளை அதிகரிப்பது.
- சர்வதேச சந்தைகளில் இந்திய அரசு வாங்கும் கடன் அளவை அதிகரிப்பது.
- அரசினுடைய செலவினங்களை குறைப்பது.
இந்த மூன்று வழிகளில் ஏதாவது ஒன்றை மோடி அரசாங்கம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தனிநபர் வருமான வரியையோ அல்லது கார்ப்பரேட்டுகளின் வருமான வரியை அதிகப்படுத்துவதின் மூலம் இந்த வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால் நடப்பு (2025-26) பட்ஜெட்டில் தான் தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது. உடனே அதை திரும்பப்பெற முடியாது. மேலும் 2019-இல் கார்ப்பரேட்டுகளின் வருமான வரி குறைக்கப்பட்டது. அதை உயர்த்தினால் சர்வதேச கடன் தரக்குறியீட்டு நிறுவனங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, கார்ப்பரேட் வருமான வரி உயர்த்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.
S&P, Moody’s rating, Fitch rating போன்ற சர்வதேச கடன் தரக்குறியீட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கான கடன் தரக்குறியீட்டு மதிப்பை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக மோடி அரசு அந்நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்து வருகிறது. கடன் தரக்குறியீட்டு மதிப்பை அதிகரிப்பதன் மூலம் இந்திய அரசோ அல்லது இந்திய தரகு முதலாளிகளோ சர்வதேச சந்தையில் கடன் வாங்குவது எளிமையாக்குவதுடன் அதற்கான வட்டி விகிதங்கள் குறைவதற்கும் வாய்ப்பாக அமையும் என்பதால் இதனை மோடி அரசாங்கம் வலியுறுத்துகிறது. சமீபத்தில், S&P நிறுவனம் இந்தியாவுக்கான தரக்குறியீட்டை BBB – லிருந்து BBB க்கு உயர்த்தியது. அதேவேளையில் இந்தியா தனது fiscal deficit-யை குறைக்க வேண்டும் என்றும் அது கட்டளையிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்தியா வாங்கக்கூடிய கடனின் அளவைக் குறைக்க வேண்டும் என்பதே இதன் மறைமுகப்பொருள். எனவே GST வரிக்குறைப்பால் ஏற்படும் இழப்பை சர்வதேச கடன்கள் மூலம் ஈடுகட்டுவதென்ற வழியை மோடி அரசாங்கம் ஒத்துக்கொள்ளாது.
இறுதியாகவுள்ள ஒரே வாய்ப்பு, அரசு தனது செலவீனங்களைக் குறைத்துக்கொள்வதுதான். ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக தனியார்மயத்தை புகுத்தி வருவதன் மூலம் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாக குறைத்து வந்துள்ளது. இந்த நிதி வெட்டுக்கெதிரான பெரிய எதிர்ப்பு மக்களிடையே இல்லையென்பதால் மேலும் நிதியைக் குறைப்பதென்பது அரசுக்கு மிகவும் எளிமையானது.
GST வரி இழப்பானது நேரடியாக மாநில அரசுகளுக்கு ஒதுக்கவேண்டிய வரி பங்கீட்டையே குறைக்க செய்யும். இதனால் ஒவ்வொரு மாநில அரசும் சராசரியாக 7000-9000 கோடி வரை தனக்கான GST வரி வருவாயை இழக்க நேரிடும். பொதுவாக கல்வி, பொதுசுகாதாரம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களுக்கான நிதியின் பெரும் பகுதி மாநில அரசின் நிதி வருவாயிலிருந்தே ஒதுக்கப்படுகிறது. இந்த ஒன்பதனாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது மாநில அரசுகள் அமல்படுத்தும் சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாகப் பாதிக்கச் செய்யும். இது இன்னும் தீவிரமாக தனியார்மயத்தை ஊக்குவிக்கும். இவ்விழப்பை ஈடுகட்ட மாநில அரசுகள் தங்களுடைய வரியின் அளவை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகிவிடும். இது மேலும் மக்கள் மீதான சுமையை அதிகரிக்கவே செய்யும்.
அரசு தனது செலவீனங்களைக் குறைப்பதினால் உள்நாட்டுத் தேவையில் ஏற்படும் பாதிப்பை GST வரி குறைப்பின் மூலமாக சரிகட்ட முடியுமா? இல்லை என்பதே இதற்கான பதில்.
முதலாளித்துவப் பொருளாதாரத்தில், அரசு தரப்பிலிருந்து தொடர்ச்சியாக செய்யப்படும் செலவீனங்கள் (ரோடு போடுவது, பாலம் கட்டுவது, பெரிய கட்டடங்கள்-ஏர்போர்ட் கட்டுவது, கல்வி, மருத்துவம், மானியங்கள், உதவித்தொகைகள்) மூலமே உள்நாட்டு தேவையை அதாவது மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்யமுடியும். மாறாக, GST வரியைக் குறைபதன் மூலம் பெரிய அளவில் உள்நாட்டுத்தேவையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. பொருட்களின் மீதான வரியைக் குறைத்து, அரசு செலவீனங்களைக் (மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி) குறைப்பது என்பது மக்களின் வாங்கும் சக்தியை (உள்நாட்டுத் தேவையை) ஒருபோதும் உயர்த்தாது. மேலும் குறைக்கவே செய்யும்.
ஒருபுறம் வரியைக் குறைத்தும், மறுபுறம் வரி குறைப்பு காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பினால் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை குறைப்பதன் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி மேலும் குறையவே செய்யும். எனவே மோடி கும்பலின் தற்போதைய அறிவிப்பானது இதற்கு முன்னால் இவர்கள் பெரிய விளம்பரத்தோடு அறிவித்த பல பொருளாதாரக் கொள்கைகள் எப்படி மக்களின் வாழ்நிலையில் எதிர் விளைவை ஏற்படுத்தியதோ அதைப்போலவே இந்த GST வரி குறைப்பும், வெற்றுப் பிரச்சாரமே தவிர, மக்களின் பொருளாதார வாழ்நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை
- செல்வம்
https://rupeindia.wordpress.com/2025/08/28/this-diwali-gift-wont-relieve-the-economic-slump/
https://rupeindia.wordpress.com/2025/06/19/the-depression-of-mass-consumption/
https://www.newindianexpress.com/explainers/2025/Sep/06/gst-20-a-landmark-overhaul-2