பீகார் : திசை மாறுகிறதா சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டம்?

வாக்காளர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது என்ற கோணத்திலிருந்து விலகிவிட்ட நீதிமன்றம் தற்போது இந்தச் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படியாவது முடித்து உடனடியாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் அணுக ஆரம்பித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் “சிறப்பு தீவிர திருத்தம்” (எஸ்.ஐ.ஆர்.) நடைமுறைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து “வாக்கு அதிகாரத்திற்கான யாத்திரை” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவும் இணைந்து தொடர்ந்து பேரணியும், பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இது ஒன்றியத்தில் ஆளும் பாஜகவிற்கு ஒரு நெருக்கடியாக மாறியிருக்கிறது. இதனை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக ஒன்றிய அரசும் அம்மாநிலத்தை ஆளும் நிதிஷ்குமாரின் அரசும் அறிவித்து வருகின்றன.

பீகார் மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதிகளை மேம்படுத்துவதற்காக மொத்தம் 704 பாலங்கள்  கட்டப்படும்  என்றும் அதற்கான வேலைகள் செப்டம்பர் 10-ஆம் தேதி முதலே தொடங்கப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதே போல அம்மாநிலத்தில் உள்ள 6 கோடி குழந்தைகள் பயனடையும் விதமாக மிகப்பெரிய அளவில் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட போவதாக மாநில சுகாதாரத்துறை  அறிவித்திருக்கிறது. இவையெல்லாம் இந்த மாதத்திலேயே தொடங்கப்பட்டு உடனடியாக அமுலுக்குவரும் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு அடுத்தடுத்து சமூக நலத் திட்டங்களை அறிவித்தாலும் மறுபுறம் கொல்லைப்புற வழியில் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிரான போராட்டங்களை திசைதிருப்பவும், அதனை முனைமழுங்கச் செய்யும் வேலையும் தீவிரமாக நடைபெறுகிறது.

ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தை முடித்துத்  திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு அதுகுறித்துப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தச்  சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது 65 இலட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று காரணங்களின் அடிப்படையில் இந்த நீக்கம் நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்களாக, மரணம் (~22.34 இலட்சம்), நிரந்தரமாகக் குடிபெயர்தல் (~36.28 இலட்சம்) மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு (~7.01 இலட்சம்) போன்ற காரணங்கள் கூறப்பட்டன.

ஏற்கெனவே, பீகார் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தன. இந்நிலையில், இத்தனை இலட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டிருப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதத்தின் போது, தேர்தல் ஆணையம்  வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய  உச்சநீதிமன்றம், மாவட்ட ரீதியாக இணையதளம் தொடங்கி வாக்குச் சாவடி வாரியாக நீக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்றும் நீக்கப்பட்டதற்குக்  காரணம் என்னவென்று ஒவ்வொரு வாக்காளரும் அறியும் வகையில் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் கூறியது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் குறித்த மேலதிக தகவல்களில் இருந்து, இந்தச்  சிறப்பு தீவிர திருத்தம் என்பதே பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதை  உறுதி செய்வதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பது அம்பலமானது.

மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் 190 தொகுதிகளில் கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறக் காரணமான வாக்கு வித்தியாசத்தையும் விட அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் பெயர் நீக்கம் நடந்திருக்கிறது. இதன் மூலம் வரும் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்கு வித்தியாசத்தில் அளவு மிகவும் குறைந்து போகும், இதனால் பெரிதும் பயனடைவது பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வாக்காளர் பெயர் நீக்கம் என்பது மாநிலம் முழுவதும் சரிவிகிதத்தில் இல்லாமல் பல இடங்களில் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. வெறுமனே 20,368 வாக்குச்சாவடிகளில் இருந்து 30 இலட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு வழமையாக வாக்களிப்பவர்களாகக் கருதப்படும் இளம் வாக்காளர்கள், பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறுபான்மையினர் எனக்  குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் நடைபெற்றிருக்கிறது.

அதேபோல இந்தியா கூட்டணியினர் வெற்றி பெறக்கூடும் என்ற பகுதிகளில் குறிப்பாக சீமாஞ்ச்சல் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளைக் குறிவைத்து அதிக அளவில் வாக்காளர்களைப்   பட்டியலில் இருந்து நீக்குவது நடைபெற்றிருக்கிறது.

பாஜகவின் வெற்றியைச் சாத்தியப்படுத்துவதற்காக, கடந்த முறை எதிர்க்கட்சிகளுக்கு அதிக அளவில் வாக்களித்த வாக்குச் சாவடிகளாகப் பார்த்து அதிலிருக்கும் வாக்காளர்கள் அதிக அளவில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளி விவரங்களை விரிவாகப் பார்த்தோமானால் இவையெல்லாம்  உண்மை என்பது புலப்படும்.

வாக்காளர் மரணமடைந்துவிட்டார் எனக் கூறி நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 50 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்கின்றனர். 80 வாக்குச்சாவடி மையங்களில் இறந்துபோனவர்களில் 50% பேர் 50 வயதிற்கும் குறைவானவர்கள். பகல்பூரில் ஒரு வாக்குச் சாவடிக்குட்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 58 பேரில் 50 பேர் இறந்துவிட்டதாகக்  கூறப்பட்டுள்ளது. அதில் அனைவரும் 50 வயதுக்குக் குறைவானவர்கள். இது போன்ற தகவல்கள் இளம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகக் கூறி நீக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள்  பெண்கள். 127 இடங்களில் பெயர் நீக்கப்பட்டவர்களில் 80%-க்கும் அதிகமானவர்கள் பெண்கள். இவை அனைத்தும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்கள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.

ஒரே வாக்குச் சாவடியில் அதிக அளவிலான பெயர் நீக்கம் செய்வது என்பது நடந்துள்ளது. கிட்டத்தட்ட 1,985 வாக்குச் சாவடிகளில், ஒவ்வொன்றிலும்  200-க்கும் அதிகமானவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். கோபால்கஞ்சில் மட்டும் 641 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வேறு இடத்திற்கு மாறிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை அதிக அளவில் மரணமடைந்துவிட்டதாகக்  கூறி பலரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. 412 இடங்களில் 100-க்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 7,216 இடங்களில் 75%-க்கும் அதிகமான பெயர் நீக்கங்களுக்கு மரணம் காரணமாக கூறப்பட்டுள்ளது. 973 இடங்களில் நீக்கப்பட்டவர்கள் அனைவரும் (100%) இறந்துவிட்டதாக  காரணம் பதியப்பட்டுள்ளது.

புதிதாகத் தற்போது வாக்காளரைக்  காணவில்லை எனக் காரணம் கூறி அவர்களது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. 5,084 இடங்களில் 50-க்கும் அதிகமான வாக்காளர்களைக் காணவில்லை எனக் கூறி நீக்கியிருக்கிறார்கள். கோபால்கஞ்சில் ஒரு இடத்தில் மட்டும் 457 பேரைக் காணவில்லை எனக் கூறியிருக்கிறார்கள்.

இதுமட்டுமன்றி தற்போது அதிக அளவில் பெண்கள் குடிபெயர்ந்துவிட்டதாகக்  கூறப்பட்டுள்ளது. 633 இடங்களில் குறைந்தது 60 வாக்காளர்கள் இடமாறிச் சென்றுவிட்டதாக பதியப்பட்டுள்ளது. அதில் 75% பேர் பெண்கள். கோபால்கஞ்சில் 3 இடங்களில் இடமாறிச் சென்றுவிட்டதாக நீக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள்.

வாக்காளர் பெயர் நீக்கம் மட்டுமன்றி இன்னும் சில முறைகேடுகளும், குளறுபடி வேலைகளும் இந்தப் பட்டியலில் தெரிய வந்திருக்கிறது. அதில் ஒன்று ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கியிருப்பதாக கூறுவது. கிழக்குச் சம்பரான், கத்தியார் போன்ற மாவட்டங்களில், 200 முதல் 389 வாக்காளர்கள் ஒரே முகவரியில் குடியிருப்பதாக கூறப்பட்டுள்ளது குளறுபடி நடந்திருப்பதையே காட்டுகிறது.

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமாக உள்ள பகுதிகளில் அதிக அளவில் பெயர் நீக்கம் நடைபெற்றிருக்கிறது. சீமாச்சலில் ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் மிக அதிக அளவில் பெயர் நீக்கம் நடந்திருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 45% பேர் இந்த ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர். இங்கே நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் ஆனால் பட்டியலில் புதியதாகச்  சேர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலும் முஸ்லீம் அல்லாதவரே சேர்க்கப்பட்டுள்ளனர்.

சீமாச்சல் பகுதியில் – கிஷன்கஞ்ச், கத்தியார், புர்ணியா, அரைரா பகுதிகளில் – நீக்கப்பட்டவர்கள் சதவீதம், மாநில சராசரியை (8.31%) விட அதிகமாக 9.75% ஆக இருந்தது. குறிப்பாக கிஷன்கஞ்ச் பகுதியில் மட்டும் மிக அதிகபட்சமாக 11.82% பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசாராயில் காங்கிரஸ் கள ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தக் கள ஆய்வு பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள தெக்ரா, மதிஹானி மற்றும் பெகுசாராய் தொகுதிகளில் நடத்தப்பட்டது. அதில் சரியான வாக்காளர்களது பெயர்கள் பட்டியலில்  இருந்து நீக்கப்பட்டிருப்பது தெரியவந்து. அவர்களுக்கு மின்னணு  வாக்காளர்  அட்டை இருந்த போதிலும் அவர்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தெக்ராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 8 சரியான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் அதே சமயம் 37 இறந்து போனவர்களது பெயர்கள் பட்டியலில் அப்படியே இருக்கின்றன.

நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பதற்கான படிவங்கள் (Form 7 or 8) கொடுக்கப்படுவதற்குப்  பதிலாக அவர்களைப் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கும் படிவங்கள் (Form 6) கொடுக்கப்படுகின்றன.

ஏற்கெனவே 77,000-ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 90,000-ஆக உயர்த்திய போது பழைய புதிய வாக்குச்சாவடி எண்கள் இணைக்கப்படவில்லை இதன் காரணமாக பூத் அதிகாரிகள் மத்தியில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பின் போது பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி நடத்திய கள ஆய்வின் மூலம் வெளிவந்த இந்த விசயங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் எதுவும் அளிக்காமல் மௌனம் காக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஒருபுறம், பாஜகவும் இந்தியத் தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்தியிருக்கும் இந்த மோசடி வேலையை அம்பலப்படுத்தி, மக்கள் மத்தியில் பிரச்சாரமாக கொண்டு செல்லும் அதே சமயம், மறுபுறம் நீதிமன்றம் இந்த விசயத்தில் தங்களுக்குச் சாதகமான நிலையெடுத்து தீர்ப்பளிக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றமோ வழக்கம் போல, ஆரம்பத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சாட்டையைச்  சுழற்றுவது போல பம்மாத்துக் காட்டிவிட்டு தற்போது இந்த எஸ்.ஐ.ஆர். நடைமுறையை விரைந்து முடிக்க அவசரம் காட்டுகிறது.

இந்தப் பிரச்சனையின் ஆரம்பத்தில் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கண்டிப்புடனும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளைச் சந்தேகத்துடனும், அணுகுவதாக  காட்டிக் கொண்டது. தகவல்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கோரியது.

ஆகஸ்ட் 6 அன்று, வரைவுப் பட்டியலில் இருந்து விடுபட்ட சுமார் 65 இலட்சம் பெயர்கள் பற்றிய விவரங்களை வெளியிடவும், சில நாட்களுக்குள் விரிவான பதிலை தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன என்பதைச்  சரிபார்க்கும் வகையில் வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) “வாக்காளர்கள் மீதான ஒரு பெரிய மோசடி” என்று ஏ.டி.ஆர். மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் போலியான கணக்கெடுப்பு படிவங்கள், இறந்த நபர்கள் சேர்க்கப்பட்டதாகக் காட்டப்படுவது மற்றும் பெரிய அளவிலான நீக்கங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை அவர்கள் எழுப்பினார்கள். வெளிப்படைத்தன்மை குறித்து அவர்கள் எழுப்பிய சந்தேகங்களையும், கவலைகளையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்வதாக கூறி மேலும் அதிக தகவல்களை வெளியிட வேண்டும் எனக்  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

விரிவான தகவல்களைப் பகிரங்கப்படுத்துமாறு நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் பலமுறை கேட்டுக் கொண்டது – எ.கா., விடுபட்ட வாக்காளர்களின் மாவட்ட அளவிலான பட்டியல்கள் மற்றும் அவற்றின் காரணங்களை வெளியிட வேண்டும் எனக்  கூறியது. மக்கள் தாங்கள் விலக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை “சுயாதீனமாகச் சரிபார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று நீதிபதி சூரியகாந்த்  கூறினார்.

ஆகஸ்டு மாதத்தின் மத்தியில் நீதிமன்றத்தின் போக்கில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. எஸ்.ஐ.ஆர். மீதிருந்த சந்தேகம் எல்லாம் காணாமல் போய், அதனை “வாக்காளருக்கு ஏற்ற வகையில்” (Voter friendly) எவ்வாறு மாற்றுவது எனச் சிந்திக்கத் தொடங்கியது.

விடுபட்ட வாக்காளர்களது பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் வேலை செய்யவில்லை எனக் கண்டித்தது. இருந்த போதும் வாக்குரிமையைப்  பறிப்பது குறித்துக் கவலைப்படுவதாக காட்டிக் கொள்ள, ஆதார் எண்ணை ஒரு சான்றாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியது.

ஆனால் ஆகஸ்டு மாத இறுதியில் எப்படியாவது இந்த சிறப்புத் தீவிர திருத்தத்தை முடித்து உடனடியாக பீகார் மாநிலத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அவசரம் உச்சநீதிமன்றத்தின் தொனியில் தெரிய ஆரம்பித்துள்ளது. ஆதார்  எண்ணைக்  குடியுரிமைக்கான சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது. மேலும் எஸ்.ஐ.ஆர்.இல் ஆதார் அட்டையைக்  குடியுரிமைக்கான சான்றாக இல்லாமல் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம் எனவும் அது கூறியது.

ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் இணைக்கும் வேலையில் நிச்சயமாகப்  பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியது. இம்முறை கருத்தாக இல்லாமல் கறாரான உத்தரவாக இதனை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியது.

முன்பு “ஆயிரம் அல்ல, நூறு அல்ல, பத்து வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் கூட எஸ்.ஐ.ஆர். நடைமுறையை  இரத்து செய்து விடுவேன்” எனக் கொந்தளித்த உச்சநீதிமன்றம் இப்போது இத்தனை இலட்சம் வாக்காளர்களது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது அம்பலமான பிறகும் கூட எஸ்.ஐ.ஆர். நடைமுறையை ரத்து செய்யாமல் அதனை எப்படிச் சரிசெய்யலாம் என யோசிக்கிறது. வாக்காளர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது என்ற கோணத்திலிருந்து விலகிவிட்ட நீதிமன்றம் தற்போது இந்தச்  சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படியாவது முடித்து உடனடியாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன்  அணுக  ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம் சிறப்பு தீவிர திருத்தம் என்பதே பாஜகவின் வெற்றிக்காகத்  தேர்தல் ஆணையம் மேற்கொண்ட மோசடி நடவடிக்கை, ஆகையால் அதனை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலாக, இந்தச்  சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளைத் திருத்தி சரி செய்து, தேர்தலை நடத்த வேண்டும் என்ற திசையில் போராட்டத்தைத்  திருப்புவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

பீகார் மாநிலத்தில் இந்தப் போராட்டத்தை நடத்திச் செல்லும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற உடனடி நோக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே போராட்டங்களைத்  திட்டமிடுவதால், அவர்களுக்கும் இவ்வாறு செல்வதில் ஆட்சேபம் இல்லையென்றே தெரிகிறது.

ஆனால் பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். திருத்தத்தை இரத்து செய்யாமல், சட்டமன்றத் தேர்தலை நடத்திவிட்டால், அடுத்தகட்டமாக அதனை நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தக்  காவி பாசிச கும்பலுக்கு அது வசதியாக மாறிவிடும். எனவே பாஜகவின் தேர்தல் வெற்றியை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சிறப்பு தீவிர திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து விலகாமல் போராடுவதுதான் சரியான பாதையாகும். அதில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் விட்டுக் கொடுக்காமல், திசைமாறாமல் பயணிப்பார்களா என்பது சந்தேகமே.

  • அறிவு

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன