உச்சநீதிமன்றத்தில் அதிகரிக்கும் குஜராத் நீதிபதிகள், நீதித்துறையைக் கட்டுக்குள் கொண்டுவரும் காவி பாசிஸ்டுகள்.

நீதிபதி பஞ்சோலியுடம் சேர்த்தால், உச்சநீதிமன்றத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3-ஆக அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகளே அடுத்தடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் நீதிபதி நாகரத்னா எச்சரிக்கிறார்.

காவி பாசிஸ்டுகள் நீதித்துறையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேசிய நீதித்துறை நியமன ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி, நாட்டிலுள்ள எல்லா நீதிமன்றங்களிலும் காவி பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஆட்களை மட்டுமே நிரப்புவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை ஏற்படுத்திய பிறகு, தற்போது உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் மூலமாகவே இந்த வேலையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியம், குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி பஞ்சோலி உட்பட, இரண்டு நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப்  பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை கொலீஜியம் ஆகஸ்டு மாதம் 25-ஆம் தேதி அறிவித்தது, அடுத்த இரண்டு நாட்களில் அரசு அந்தப் பரிந்துரையை ஏற்று ஆகஸ்டு 27-ஆம் தேதியன்றே அவர்களை நியமனம்  செய்வதாக அறிவித்து அடுத்த நாளே இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து உடனடியாக அதனை அரசு ஏற்றுக் கொண்டு அவர்களை நியமனம் செய்ததும் தற்போது விவாதமாகி இருக்கிறது.

அதுவும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் உறுப்பினரான நீதிபதி நாகரத்னா நீதிபதி பஞ்சோலியின் நியமனத்தை எதிர்த்து தனது “கருத்து வேறுபாட்டை” (dissent) பதிவு செய்திருந்த நிலையில், அதனைக் கருத்தில் கொள்ளாமல், அவசர அவசரமாக, நீதிபதி பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது.

முன்னதாக, நீதிபதி நாகரத்னா, பஞ்சோலியின் நியமனம் குறித்து முக்கியமான குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி பஞ்சோலி நீதிபதிகளுக்கான அகில இந்திய பணிமூப்புப் பட்டியலில் ( All India Seniority list) 57-வது இடத்தில், இருந்தாலும் மற்ற மூத்த நீதிபதிகளைப் புறந்தள்ளிவிட்டு அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்திருப்பது, உச்சநீதிமன்றத்தில் ஒரு பிராந்தியத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக மாறும் எனக் கூறியிருந்தார்.

நீதிபதி பஞ்சோலியுடம் சேர்த்தால், உச்சநீதிமன்றத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3-ஆக அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகளே அடுத்தடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் நீதிபதி நாகரத்னா எச்சரிக்கிறார்.

அதே போல குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பஞ்சோலியை 2023-ஆம் ஆண்டில் பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு வழமையான முறையில் இல்லாமல் மாறுதல் செய்தது என்பது அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்குவதற்காகச் செய்யப்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

நீதிபதி நாகரத்னாவின் இந்த எதிர்ப்பை உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவு செய்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அதனை உச்சநீதிமன்றம் நிறைவேற்றவில்லை. இந்தக்  கருத்து வேறுபாடு குறித்து பத்திரிக்கைகளில் வெளியான பிறகே அனைவருக்கும் தெரியவந்தது.

நீதிபதி நாகரத்னா கூறியிருப்பது போல நீதிபதி பஞ்சோலியின் முந்தைய பதவி உயர்வுகள், பணி மாறுதல்கள் குறித்து நாம் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. குஜராத் மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி பஞ்சோலி தொடர்ந்து அந்த மாநிலத்திலேயே நீதிபதியாகப் பணியாற்றியிருந்தால், பணிமுப்பு அடிப்படையில் அவர் ஜூனியர் என்பதால், அவரால் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவே அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ ஆகியிருக்க முடியாது. 2023-ஆம் ஆண்டு அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர் அதே ஆண்டு ஜூலை மாதத்தில் பாட்னா உயர்நீதிமன்றத்திற்குப்  பணிமாறுதல் செய்யப்படுகிறார்.

இந்தப் பணி மாறுதலுக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டிலிருந்து நீதிபதி பஞ்சோலி விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர் மீண்டும் குஜராத் நீதிமன்றத்திற்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் குஜராத்திற்கு திருப்பியனுப்பப்படவில்லை. மாறாக அவர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகத் தொடர்ந்ததுடன், அங்கே அவரைவிட மூத்த நீதிபதிகள் இல்லை என்பதால் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாட்னா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அடுத்த ஐந்து மாதங்களில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் ஜூனியர் நீதிபதியாக இருந்த ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இவ்வளவு வேகமாக, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் நீதிபதி அருண் மிஷ்ராவும் இதே போல பணிமூப்பு அடிப்படையில் நீதிபதிகள் பட்டியலில் மிகவும் கீழே இருந்த போதும் மற்ற நீதிபதிகளைப் புறந்தள்ளி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு காவி பாசிச கும்பலின் இந்துத்துவா  கருத்தியலுக்கும், அவர்களது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கும் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தும் நீதிபதி அருண் மிஷ்ராவுக்கே ஒதுக்கப்பட்டன, அதில் பல வழக்குகளில் அவர் காவி கும்பலுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதுமட்டுமன்றி 2020-ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில், நரேந்திர மோடியைப் “பல்துறை வித்தகர்” எனவும் “சர்வதேச அளவில் பாராட்டப்படும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்” எனவும் நீதிபதி அருண் மிஷ்ரா பாராட்டிப்பேசினார். சர்ச்சைக்குரிய முறையில் பதவி உயர்வுபெற்று உச்சநீதிமன்ற நீதிபதியான அருண் மிஷ்ரா தொடர்ந்து காவி கும்பலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கிவந்ததால் அவர் ஓய்வுபெற்றபோது நடந்த வழியனுப்பு விழாவினை உச்சநீதிமன்ற பார் கவுன்சிலும், முக்கிய நீதிபதிகளும் புறக்கணித்தனர்.

தற்போது அருண் மிஷ்ராவை போலவே, பஞ்சோலிக்கும் அதே பாணியில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது நீதித்துறையில் காவி பாசிச சக்திகளின் ஊடுருவல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி விக்டோரிய கௌரி கடந்த 2023-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். காவி பாசிச சித்தாந்தத்தை வெளிப்படையாக ஆதரிப்பவரும், பொதுவெளியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் வகையில் பல சந்தர்ப்பங்களில் பேசியவருமான விக்டோரியா கௌரியின் நியமனம் குறித்து பரவலாகக்  கண்டனங்கள் எழுந்த போதும், அதற்கு எதிராக மாநிலங்களவையில் புகாரளிக்கப்பட்ட போதும், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டார்.

அதேபோல பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஆர்த்தி சாதே பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாகக்  கடந்த மாதம் நியமிக்கப்பட்டிருக்கிறார். பரவலான கண்டனத்திற்குள்ளான இந்த நியமனத்தையும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியான சேகர் குமார் யாதவ் கடந்த ஆண்டு இறுதியில் பிரயாக்ராஜில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது இஸ்லாமியர்கள் குறித்துத் தரக்குறைவாகப் பேசியதுடன், பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவரைப் பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தன. அத்துடன் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா இது குறித்து துறைசார்ந்த விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால் ராஜ்யசபா செயலகம் இந்த விசயத்தில் தலையிட்டு மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதபடி தடுத்துவிட்டது. ராஜ்யசபா தலைவரின் தலையீட்டை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அன்றைக்குக் கண்டித்திருக்கிறார்.

இவையெல்லாவற்றையும் ஒன்றியத்தில் ஆளும் காவி பாசிசக் கும்பல் கண்டுகொள்வதுமில்லை, இதற்காக நீதித்துறையைப் பாசிசமயமாக்கும் வேலையை நிறுத்திவைப்பதும் இல்லை.

தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தைப்  பாசிச சக்திகள் கொண்டுவந்த போது, அதனை எதிர்த்து, கொலீஜியத்தின் கட்டுப்பாட்டிற்குள் நீதிபதிகள் நியமனம் இருந்தால் அது தனித்து இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கும், ஆளுங்கட்சியின் விருப்பப்படி நீதிபதிகளை நியமனம் செய்ய முடியாது என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன. ஆனால் இன்றைக்கோ கொலீஜியத்தின் மூலமாகவே பணி மாறுதல் என்ற குறுக்கு வழியின் மூலமாகத் தனக்கு சாதகமான ஆட்களை எவ்வித தடங்களும் இன்றி கொண்டு வர முடியும் என்பதைக்  காவி பாசிஸ்டுகள் நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கின்றனர்.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன