கடந்த வியாழக்கிழமை (21.08.2025) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை கூடகோவில் அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற்றது. இதற்கு முன்பு 27.10.2024 அன்று முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமம், விழுப்புரத்திலும், 2024-ஆம் ஆண்டு இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் முறையே சென்னை பனையூரிலும், இராசிபுரம், நாமக்கல் கிழக்கிலும், 28.03.2025 அன்று பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரிலும் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டங்களில் நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, இராஜ்மோகன் போன்றவர்கள் பேசியது, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தலைவர்களும், தோழர்-தோழியரும் நடந்துகொண்ட விதம் குறித்தும் பல்வேறு கட்சிகள் கடுமையான விமர்சனத்தை ஒவ்வொரு முறையும் முன்வைத்து வந்துள்ளன.
இதற்கு மறுப்பு தெரிவித்து த.வெ.க-வின் தோழர்-தோழியரும், ஊடகவியலாளர்களும் பல்வேறு எதிர் விமர்சனங்களை ஒவ்வொரு முறையும் முன்வைத்து வந்துள்ளனர். இருந்தும் நடிகர் விஜய் ஒவ்வொரு முறை பேசும் பொழுதும் இவர்கள் முன்வைக்கும் அதே வாதங்களை தனக்கே உரிய பாணியில் (நடிகனுக்கான உடல்மொழியுடன்) பேசி தனது தோழர்-தோழியரை உசுப்பேற்றி வந்துள்ளார். மற்றபடி தான் முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டதாகக் கூறிக்கொண்டாலும் அதற்கான சிறுநகர்வைகூட செய்ததில்லை.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆகிய நிலையில், இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் உட்பட மொத்தம் ஐந்து கூட்டங்களை நடத்தியுள்ளார். சராசரியாக நான்கு மாத இடைவெளியில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். இதுவும் தனது திரைப்படப் பணிகளுக்கு இடையில் நடத்தியுள்ளார்.
ஒரு நடிகர் தனது படம் வெளிவருவதற்கு முன்பு இசை வெளியீடு, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, முதல் நாள் முதல் காட்சி என இரசிகர்களை உசுப்பேற்றிப் படத்தை வெற்றி பெற செய்வதற்கும், இரசிகர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கும் எப்படி பயன்படுத்திக் கொள்வார்களோ அதேவேலையைத்தான் அரசியல்வாதி விஜய் இரசிகர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக தோழர்-தோழியர் என்று கூறிப் பயன்படுத்துகிறார். இந்த தோழர்-தோழியருக்குச் சமகால அரசியலில் (சிறப்பு தீவிர திருத்தம் ( SIR), ஓட்டுத்திருட்டு, தர்மஸ்தலா) தமது நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றியும், இது ஜனநாயகத்தை எப்படி கேலிக்குள்ளாக்கியுள்ளது என்பதைப் பற்றியோ அல்லது தான் தவறு என்று கருதுகின்ற சமகால அரசியல் பற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மாறாக இசை வெளியீட்டில் குட்டிக்கதை சொல்லி இரசிகர்களை உசுப்பேற்றுவதுபோல், மாநாட்டிலும் குட்டிக்கதை சொல்லி உசுப்பேற்றியுள்ளார்.
இரண்டு வர்க்கங்களிடையே (முதலாளிகள் vs தொழிலாளிகள்) இணக்கம் காண முடியாததின் விளைவாய் தோன்றியதே அரசு என்ற உண்மையை மறைத்து அரசு அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தை முதலாளித்துவம் மக்கள் மனதில் ஆழமாக விதைத்துள்ளது. எனவேதான் நிலவுகின்ற அரசு கட்டமைப்பில் தொடர்ந்து நெருக்கடிகள் ஏற்பட்டு மக்கள் சொல்லொன்றா துயரத்திற்கு ஆட்பட்டிருந்தாலும் இதற்குக் காரணம் அன்றைய ஆட்சியாளர்கள் தான் எனக் கருதுகிறார்கள். இதன் விளைவாக அன்றைய ஆட்சியாளர்களைத் தோற்கடித்து இதற்கு முன்னால் இதேபோன்ற நிலைக்கு ஆட்பட வைத்த வேறொரு ஆட்சியாளர்களை வெற்றிபெறச் செய்கிறார்கள். ஏனென்றால் நிலவுகின்ற அரசு கட்டமைப்பு சரியானது என்ற கருத்தை வெற்றி பெற்றவர்களும், தோல்வியுற்றவர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எனவே இதனை மக்களும் உண்மையென்று நம்பி மாறிமாறி வாக்களித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இவர்கள் மீது சலிப்பு ஏற்பட்டு தங்களை மீட்க ஒரு புதிய மேய்ப்பர் வருவாரா? என ஏங்குகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுதான் சினிமா வெளிச்சத்தின் மூலம் புகழ்பெற்ற சிவாஜி, சரத்குமார், விஜயகாந்த், கமலஹாசன் போன்றவர்கள் வரிசையில் தற்பொழுது விஜயும் இணைந்துள்ளார். இவர்களும் ஏழை-எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை மீட்கவந்த மீட்பராக தங்களை காட்டிக்கொள்வார்களே தவிர மறந்தும் நிலவுகின்ற அரசு நமக்கானது அல்ல என்ற உண்மையை ஒருபோதும் பேசப்போவது இல்லை.
எனவே இதனைப் புரிந்துகொண்டு நமக்கான மார்க்சிய-லெனினிய-மாவோ அரசியலை கற்றுத் தேர்வதும். இந்த அரசியலைப் பெருவாரியான உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்று பரப்பி அமைப்பாக்குவதன் மூலம் மட்டுமே அனைத்து உழைக்கும் மக்களுக்கான அரசியலை ஏற்படுத்த முடியும். மாறாக ஓட்டுக்கட்சிகளை நம்பி கலத்தில் நிற்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பானதாகும். இதில் விஜய் ஒன்றும் விதிவிலக்கல்ல.
- மகேஷ்
படிப்பறிவு இல்லாத ஏழை உழைக்கும் மக்கள் ஒரு முறை பார்ப்போம் என்று எதார்த்த நிலையில் அப்பாவித்தனமாக பரிசினை செய்கின்றனர். இந்த ஆபத்தை உடைக்க நாம் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்