பொறியியல் கல்லூரி விதிமீறல் – திராவிட மாடல் என்பது அப்பட்டமான தனியார்மயம் தான்!

உயர்நீதிமன்ற உத்திரவை அமல்படுத்துகிறோம் என்று நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய தூய்மைப் பணியாளர்களை போலீசின் அராஜகத்தின் மூலம் வெளியேற்ற சட்டத்தை அமல்படுத்திய திராவிட மாடல் அரசாங்கம், தரமற்ற, விதிமுறைகளைப் பின்பற்றாத, குறைபாடுகளுடையக் கல்லூரிகள் எனத் தெரிந்த பின்பும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியளித்தது எப்படி? இங்கு திமுக முன்வைக்கும் திராவிட மாடல் என்ற இனிப்பு தடவிய அப்பட்டமானத் தனியார்மயம் என்பதே எதார்த்தம்.

ஏப்ரல் வந்தாலே நகைக்கடை முதலாளிகளுக்கு கொண்டாட்டம். அக்க்ஷயத் திரிதியை காரணம் காட்டி எப்படியாவது அனைவரையும் சிறு குண்டுமணியளவு தங்கத்தையாவது வாங்க வைக்க, சினிமா நடிகர்களின் விளம்பரத்தில் தொடங்கி ஜோதிடர்களின் அருள்வாக்கு வரை பல யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதைப் பார்த்திருப்போம்.

அதைப்போலவே ஏப்ரல் வந்தாலே தனியார் கல்லூரி முதலாளிகளுக்கும் கொண்டாட்டம் தான். தங்களது கல்லூரிகளில் நூறு சதிவிகித மாணவர் சேர்க்கைக்காக உறுதிப்படுத்த, உத்திரவாதமான வளாக வேலைவாய்ப்பு, மாதம் ஐம்பதினாயிரத்திற்கும் மேல் ஊதியம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு என பல பொய்யான வாக்குறுதிகளை, நகைக்கடை விளம்பரம் போல, கிரிக்கெட் வீரர் பும்ராவில் இருந்து உள்ளூர் சினிமா நடிகர் வரை அனைவரையும் வைத்து விளம்பரப்படுத்தி ஆள் பிடிக்கின்ற வேலையை செய்கின்றனர்.

கூடவே கல்வியாளர்கள் போர்வையில் வரும் தனியார் கல்லூரிகளின் ஏஜென்டுகள், வெறும் கம்யூட்டர் சயின்ஸ் மட்டும் படிக்காதே செயற்கை நூண்ணறிவையும் (AI) சேர்ந்துப் படித்தால்தான் வேலை கிடைக்கும், சிவில் வேண்டாம் மெக்கானிக்கலுடன் மிஷின் லேர்னிங்கும் சேர்ந்துப்படி என்று பெற்றோர்களை ஏமாற்றுகின்றனர்.

இந்தப் பிரச்சாரங்களெல்லாம் ஓய்ந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்துவரும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. பொறியியல் படிப்புக்கான இரண்டு லட்சம் இடங்களில் 50,000 க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளது. எப்படியாவது விண்ணப்பித்த அனைவரையும் இந்த வலையில் சிக்கவைத்து பொறியியல் அறிவை வழங்கிட (காசைக் கரந்துவிட வேண்டும்) வேண்டும் என்று தனியார் கல்வித் தந்தைகள் விரும்புவதால் அதற்கான அனைத்து வசதிகளையும் (விதிமீறகள் உட்பட) அண்ணா பல்கலைக்கழகமும் திமுக அரசும் செய்துவருகிறது.     

இக்கல்லூரிகள் செய்யும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை என்ன? முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் அறிவித்துக்கொண்டிருக்கும் வேளையில் 80 சதிவிகித வேலைவாய்ப்பு என்று தனியார் கல்லூரிகள் பிரச்சாரம் நம்பத்தகுந்தவையா? இக்கல்லூரிகள் சொல்லும் வளாக வேலைவாய்ப்பு எண்ணிக்கையின்படி பார்த்தால் கடந்தாண்டு பொறியியல் முடித்து வெளிவந்த முக்கால்வாசி பேருக்கு வேலை கிடைத்து விட்டதாக முடிவு செய்யவேண்டும்.  ஆனால் இது அப்பட்டமான பொய் என்று பொறியியல் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.

அண்ணா பல்கலைக்கழகமோ அல்லது திராவிட மாடல் அரசாங்கமோ, பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்தோ அவைகளின் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்தோ  பரிசோதித்ததும் இல்லை நடவடிக்கை எடுத்ததும் இல்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான இணைவு அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வை (Affiliation Inspection) சில மாதங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இதில், மொத்தமுள்ள 460 இணைவுக் கல்லூரிகளில் 400 கல்லூரிகள் குறைபாடுள்ளவை (போதிய பேராசிரியர்கள் இல்லாமை, ஆய்வக வசதிகள் இல்லாமை, உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு, நூலகக் குறைபாடு) எனக் கண்டறிந்தது. தனியார் கல்லூரிகள் இக்குறைபாடுகளை சரிசெய்ய கொடுக்கப்பட்ட அவகாசமும் முடிந்து விட்டது.

எனவே  149 கல்லூரிகளுக்கு, 45 நாட்கள் கூடுதல் அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்துள்ளது. ஏறத்தாழ பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிந்து முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், ஆய்வக வசதிகளோ அல்லது போதிய பேராசிரியர்களோ இல்லை எனத்தெரிந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை கலந்தாய்வில் பங்குபெற அனுமதித்தது எப்படி?

கடந்த ஆண்டும் இணைவு அங்கீகாரத்திற்கான ஆய்வை நடத்திய அண்ணா பல்கலைக்கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் குறைபாடு உடையவையாக அறிவித்தது. அதேவேளையில் அக்கல்லூரிகளை கலந்தாய்வில் பங்குகொள்ளவும் அனுமதித்தது. ஆனால் அது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இணைவுக் கல்லூரிகளில், 352 பேராசிரியர்கள் போலியாக 972 இடங்களில் முழுநேர பேராசிரியராக பணிபுரிவதாக கணக்கு காண்பிக்கப்பட்டு மோசடியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் பெற்றுள்ளனர் என்றும் இந்த மோசடியில் சுமார் 224 பொறியியல் கல்லூரிகள் ஈடுபட்டுள்ளது என்றும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியது. உதாரணமாக மாரிச்சாமி என்ற ஒரு பேராசிரியர் ஒரே நேரத்தில் பதினொன்று கல்லூரிகளில் வேலை செய்வதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதை அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக் குழுக்களும் உண்மை என்று அங்கீகரித்துள்ளது.

ஒரு நபர் ஒரே நேரத்தில் பதினோறு கல்லூரிகளில் எப்படி வேலை செய்யமுடியும்?  இதேபோல 224 பொறியியல் கல்லூரிகள் (50 சதவிகிதம்) வேலையில் இல்லாத ஒருவரை பேராசிரியராக கணக்கு காட்டியுள்ளனர். இதை அண்ணா பல்கலைக்கழகமும் ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் கொடுத்துள்ளது. போலி பேராசிரியர்கள் முறையீட்டில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரிகளில் கணிசமானவை திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், பாஜகவின் ஆதரவாளர்கள் என அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் நடத்தும் கல்லூரிகள்.

இந்த ஊழல் முறைகேடுகள் ஆதாரங்களுடன் அம்பலமானவுடன், பதில் சொல்லவேண்டிய நெருக்கடியின் காரணமாக, கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக அண்ணா பல்கலைக்கழகமும் திராவிட மாடல் அரசாங்கமும் அறிவித்தது. ஆனால் இந்த ஆதாரங்கள் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் இந்த ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ள பேராசிரியர்களையோ, சம்பந்தப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தையோ, இணைவு  கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குழுவையோ விசாரிக்ககூட இல்லை. இவர்கள் அனைவரின் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இது குறித்த அறிக்கைகளைக்கூட அண்ணா பல்கலைக்கழகம் வெளிவிடாமல் இரகசியமாகவே வைத்து இருக்கிறது. இந்த களேபரம் ஓய்வதற்குள் மீண்டும் 149 கல்லூரிகள் தகுதியற்றவை என நிருபணமாகியுள்ளது.  

கல்வியில் சிறந்தது தமிழ்நாடு அதற்கு முக்கியக் காரணம் திராவிட மாடல் ஆட்சி என்று தொடர்ந்து பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் திமுக முன்வைக்கும் திராவிட மாடல் என்பது இனிப்பு தடவிய அப்பட்டமானத் தனியார்மயம் என்பதுதான் எதார்த்தம். தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 80 சதவீகிதத்திற்கும் மேல் தனியார்களால் நிர்வகிக்கப்படுபவை தான் இக்கல்லூரிகளின் ஊழல் முறைகேடுகள் குறித்தும், நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், அங்கு தொழிலாளர்கள் மீதான கடுமையான சுரண்டல்கள் குறித்தும் திராவிட மாடல் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. இந்த முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகமும் உடந்தை.

உயர்நீதிமன்ற உத்திரவை அமல்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை போலீசின் அராஜகத்தின் மூலம் வெளியேற்ற  ‘சட்டத்தை அமல்படுத்திய’ திராவிட மாடல் அரசாங்கம், தரமற்ற, விதிமுறைகளைப் பின்பற்றாத, குறைபாடுகளுடைய கல்லூரிகள் எனத் தெரிந்த பின்பும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியளித்தது எப்படி என்று திராவிட மாடலின் “வக்கீல்கள்“ தான் பதில் சொல்ல வேண்டும்.

  •  செல்வம்

https://www.seithipunal.com/tamilnadu/arappor-iyakkam-dmk-govt-engineering-college-affiliation-inspection

https://www.youtube.com/watch?v=P8hkCoPy9Ss

https://www.etvbharat.com/ta/!state/arappor-iyakkam-asks-govt-to-publish-engineering-colleges-details-of-all-features-and-faculties-tamil-nadu-news-tns25071602721

https://www.thinaboomi.com/2025/06/25/252547.html

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன