பாலஸ்தீனத்திற்கு எதிரான இனப்படுகொலை ஆக்கிரமிப்புப் போரில் இஸ்ரேலோடு கூட்டுச்சேரும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள்!

இனப்படுகொலைக்கு ஒரு பரந்த வலைப்பின்னலும், பில்லியன் கணக்கான டாலர் பணமும், தொழில்நுட்பமும் தேவை. அதனை இஸ்ரேலுக்குக் கொடுத்ததன் மூலம் இஸ்ரேல் அரசோடு கைகோர்த்து நிற்கும் கார்பரேட் நிறுவனங்களும் இஸ்ரேல் பாசிச அரசைப் போல இனப்படுகொலை குற்றவாளிகளே!

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனஅழிப்பு ஆக்கிரமிப்புப்போரில் இதுவரை 60,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவும் குடிநீரும் இன்றி 20 லட்சம் மக்கள் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். உணவு வழங்கும் மையங்களில் உணவுக்காக வரிசையில் நிற்கும் குழந்தைகளும், பெண்களும் சுடப்படுகின்றனர். அங்கே மூன்றில் ஒருவர் பல நாட்களாகச் சாப்பிடாமல் இருக்கிறார். சராசரியாகத் தினமும் 28 குழந்தைகள் இறக்கின்றனர்.

பாலஸ்தீனர்களைப் பட்டினி போட வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு உணவு ஆதாரங்களை அழிப்பது, காசாவிற்கு உணவு வழங்குவதைத் தடுப்பது என இனப்படுகொலையின் தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேல் பாசிச அரசு செயல்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து குண்டுவீச்சுக்கு ஆளான காசா நகரத்தின் வீடுகள் எல்லாம் தரைமட்டமாகி, நிலவின் ஏதோவொரு பகுதி போலக் கல்லும் மண்ணுமாகக் காசா காட்சியளிக்கிறது. வீடுகள், மருத்துவமனைகள், நீர்சுத்திகரிப்பு நிலையங்கள், மசூதிகள், பள்ளிகள் என அனைத்தும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. காசாவில் கிட்டத்தட்ட அனைவரும் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கூடாரங்களிலும், திறந்த வெளியிலும் வசித்து வரும் பாலஸ்தீன சிவில் சமுகம் கொத்து கொத்தாகக் கொல்லப்படுகிறது. பட்டினியால் வாடும் பாலஸ்தீனர்கள் புல், பூச்சிகள் என உயிர் வாழ எதையும் சாப்பிடுகிறார்கள். இதனால் அம்மக்களுக்கு வயிற்றுப்போக்கு, சுவாச நோய், சிறுநீரக செயலிழப்பு, டைபாய்டு, காலரா போன்ற தொற்றுநோய்கள், இரத்தம் ஒட்டம் குறைவு, இதய தசை செயலிழப்பு, கண்பார்வை குறைவு எனப் பல நோய்கள் தாக்கி குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை விரைவிலேயே இறந்து விடுகின்றனர். மருத்துவர்களும், செவிலியர்களும் பட்டினியால் வாடுவதால். அம்மக்களுக்கு மருத்துவம் கூட பார்க்க முடியாமல் திணறுகின்றனர்.

இவ்வாறு மனிதத்தன்மையற்ற கொடூர தாக்குதலைத் தொடுப்பதன் மூலம் காசா பகுதியை விட்டு பாலஸ்தீனர்களை முற்றிலுமாக வெளியேற்றி, அங்கே இஸ்ரேலியர்களை குடியேற்றம் செய்ய, இஸ்ரேல் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாலஸ்தீனர்களை வெளியேற்றிய பிறகு காசா பகுதியை மறு நிர்மாணம் செய்து, இஸ்ரேலியர்களின் எதிர்காலத்திற்காக அங்கே ஒரு சொர்க்கத்தை படைக்கப்போவதாகக் கூறி வருகிறார்கள்.

இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கிலா காம்லீல் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்தார். அக்காணொளியில் “நெதன்யாகு மற்றும் அவரது மனைவி கடலோரத்தில் உலா வருகின்றனர்.” இஸ்ரேலியர்கள் கடலோர உணவகங்களில் சாப்பிடுகின்றனர். மத்திய தரைக்கடல் பகுதி மினுங்க ஆடம்பர படகுகள், பளபளப்பான விடுதிகள், வானுயுர்ந்த கட்டிடங்கள் காட்சியளிக்கின்றன. பல்லாயிரம் பாலஸ்தீனர்களைக் கொன்றொழித்து அவர்களின் பிணங்களுக்கு மேலே தான் இஸ்ரேல் எனும் யூத நாடு உருவாகி விரிவடைந்து கொண்டு வருகிறது.

இந்த இன அழிப்புப் போரில் பங்குதாரர்களாக இஸ்ரேலோடு பல பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள், கைகோர்த்திருக்கின்றன என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான சிறப்பு கண்காணிப்பாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ்.

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வழிகளில் உதவி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலையும் அதுசார்ந்த விரிவான அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இனப்படுகொலை தொடங்கி, காசாவில் இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளை கட்டி எழுப்பும் பணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வாறு இலாபம் ஈட்டுகின்றன என்பதை அந்நிறுவனங்களின் இணையத் தரவுகள் மூலம் அல்பானீஸ் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆயுத விற்பனை-இனப்படுகொலையின் இலாபம் கொழிக்கும் வணிகம்:

அமெரிக்கா தனது அடியாளான இஸ்ரேலுக்கு 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.1,61,500 கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ மற்றும் நேரடி நிதி உதவி செய்துள்ளது. இதில் 60% அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குச் சென்றுள்ளது. காசாவின் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசியதில் முக்கியப் பங்காற்றியது லாக் ஹீட் மார்ட்டின் எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்த எப் ரக போர் விமானங்கள் தான். இந்த விமானங்கள் 18,000 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை சுமந்து சென்று தாக்கவல்லது.

எப்16 மற்றும் எப்35 விமானங்கள் 85,000 டன்னுக்கும் அதிகமான குண்டுகளை வீசி காசாவை நிர்மூலமாக்கின. இந்த விமானங்கள் லாக் ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டாலும் சுமார் 1650 நிறுவனங்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பாகங்களை செய்து கொடுக்கின்றன. இதில் லியனார்டோ எஸ்பிஏ ( SPA) எனும் இத்தாலிய நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை லாக் ஹூட் நிறுவனம் சுமார் 1,11,945 கோடி ரூபாய்க்கு எப் ரக விமானங்களை இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் அரசு காசா மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிநவீன இராணுவத் திறன்களுக்கான ஒரு சோதனைக்களமாக மாறியுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பங்களின் வெற்றியைக் காட்டி தமது சந்தையை விரிவுபடுத்துகின்றன
காசாவின் வானில் பலவகையிலான அதிநவீன ட்ரோன்கள் (ஹெக்ஸாகாப்டர்கள் மற்றும் குவாட்காப்டர்கள்) பறந்து கொண்டே இருக்கின்றன. போர் விமானங்களிலிருந்து வீசப்படும் குண்டுகளால் மட்டுமில்லாமல் டிரோன்களாலும் காசா மக்கள் கொல்லப்படுகிறார்கள். இஸ்ரேல் அரசு மாட்ரைஸ் 600 மற்றும் லானியஸ் எனப்படும் டிரோன்களை ஆரம்பத்தில் உளவு பார்ப்பதற்கு பயன்படுத்தியது. பின்னர் அவற்றில் ஆயுதங்களைப் பொருத்தி காசா மக்களை கொன்றொழித்தது. ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கில் பறக்கவிடப்படும் இந்தத் தானியங்கி டிரோன்கள் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் இலக்குகளின் இருப்பிடம் மற்றும் வரைபடங்கள் உள்ளிட்டவற்றை அறியும் வகையிலான தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டவை.

எல்பிட் சிஸ்டம்ஸ் மற்றும் இஸ்ரேல் ஏரோ ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற இரு நிறுவனங்களுமே பல ஆயிரக்கணக்கான காசா மக்களை கொன்றொழித்த டிரோன்களை உற்பத்தி செய்ததற்காக பல பில்லியன் டாலர்களை இலாபமாக ஈட்டியுள்ளன.

இந்நிறுவனங்கள் தயாரிக்கும் டிரோன்களுக்கு தானியங்கி தொழில்நுட்பத்தை வழங்குவது அமெரிக்க கல்வி நிறுவனமான மாஸாசூஸெட்ஸ் (massachusetts) எனப்படும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். அதே போல இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் ரோபோக்களை தயாரித்துக் கொடுப்பது ஃபனுக் (fanuc) எனும் ஜப்பானிய நிறுவனம் ஆகும். எல்பிட் சிஸ்டம்ஸ் 2024ஆம் ஆண்டு மட்டும் ரூ.2,490 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதானி குழுமமும் இஸ்ரேலின் எல்பிட் நிறுவனமும் இணைந்து கூட்டு நிறுவனத்தை இந்தியாவில் அமைத்துள்ளன. ஹெர்மஸ் 900 எனப்படும் மிக நவீன டிரோன்களை உற்பத்தி செய்து இஸ்ரேலுக்கு ஏற்கனவே இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கம்:

பாலஸ்தீனர்களின் மீதான கண்காணிப்புக்கு பல கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனங்கள் தானியங்கி தொழில்நுட்பத்தை வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றன. சிசிடிவி வலைப்பின்னலை ஏற்படுத்துவது, பயோமெட்ரிக் கண்காணிப்பு, மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனைச் சாவடிகளை ஒருங்கிணைப்பது, செயற்கை நுண்ணறிவு மூலம் தரவுகளை பிரித்தறிவது என இஸ்ரேல் இராணுவத்திற்குப் பல தொழில்நுட்பங்களை இந்த மென்பொருள் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

அதுமட்டுமன்றி லெவண்டர், காஸ்பல், வேர் இஸ் டாடி, பெகாசஸ் ஆகிய உளவு மென்பொருள்களை உருவாக்கி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு கண்காணிக்கிறது. பாலண்டிர் எனும் அமெரிக்க மென்பொருள் நிறுவனம் இஸ்ரேல் போலீசின் அனைத்து நடவடிக்கைகளையும் தானியங்கி தொழில்நுட்பத்துடன் இணைத்து வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது. இதன் மூலமே இஸ்ரேல் போலீசார் காசா பகுதியை உளவுப் பார்த்து வருகின்றனர்.

அமெரிக்க மென்பொருள் பகாசுர நிறுவனங்களான ஐ.பி.எம், ஹெல்வர்டு பேக்வர்டு (HP), மைக்ரோ சாஃப்ட், கூகுளின் ஆல்ஃபாபெட், அமேசான் போன்றவை இஸ்ரேலின் இன அழிப்பில் கூட்டுச் சேர்ந்து உதவி வருகின்றன.
ஐ.பி.எம் நிறுவனம் 1972 ஆம் ஆண்டிலிருந்தே இஸ்ரேலில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இரானுவத்திற்கும் உளவுத்துறைக்கும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்து வருகிறது. மேலும் இஸ்ரேலின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, குடியேற்றப் பதிவு தளத்தை ஐ.பி.எம் இயக்கி மேம்படுத்தியுள்ளது. எச்.பி, நிறுவனமோ பாலஸ்தீனர்களை பற்றிய பயோ மெட்ரிக் தரவுகளைச் சேகரித்து இஸ்ரேல் அரசு செயல்படுத்துவதற்கான தரவுத் தளத்தை பராமரித்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இஸ்ரேலின் சிறைத்துறை, போலீசு, பல்கலைக்கழகங்கள், இராணுவத்தின் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து வருகிறது. பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கையகப்படுத்தி பல்வேறு உளவுத் தகவல்களை வழங்கி வருகிறது.

இனப்படுகொலைக்குச் சேவை செய்யும் கனரக இயந்திரங்கள்:

இஸ்ரேலின் பாசிச அரசு ஆக்கிரமிப்பு கால கட்டத்திலும், தற்போதைய இன அழிப்பு கால கட்டத்திலும் பாலஸ்தீனர்களின் வீடுகள், மருத்துவமனைகள், மசூதிகள், பள்ளிகள், சாலைகள் என அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கியது. இந்த நாசவேலைக்கு கேட்டர்பில்லர் எனும் கார்ப்பரேட் நிறுவனம் தனது டி9 எனும் நவீன புல்டோசரை இஸ்ரேல் அரசுக்கு விற்று கொள்ளை இலாபத்தை ஈட்டியுள்ளது. கேட்டர்பில்லர் மட்டுமில்லாமல் தனது தயாரிப்புகள் இன அழிப்புக்கே பயன்படுத்தப்படுகிறது என்பது தெரிந்தும் கொரியாவின் ஹூண்டாய்- தூசான், சுவீடனின் வால்வோ ஆகிய நிறுவனங்களும் தமது புல்டோசர்களை விற்றுள்ளன.

பாலஸ்தீன பகுதிகளை தரைமட்டமாக்குவதற்கு மட்டுமில்லாமல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கும், பல கார்ப்பரேட் நிறுவனங்கள் உடந்தையாக இருக்கின்றன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை கட்டுவது, அதற்கான கட்டுமானப் பொருட்கள், கட்டுமான இயந்திரங்கள், குடிநீர், மின்சாரம் போன்றவற்றை வழங்குவது, குடியிருப்புகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவது என தமது வணிகத்தைக் கடை விரிக்கின்றன இந்நிறுவனங்கள்.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு சுமார் 371 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அங்கு கட்டப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் மூலம் பாலஸ்தீன பகுதியில் விற்பனை செய்யப்படும் குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் போன்றவற்றை துண்டித்து அவர்களுக்கு அடிப்படை வசதி கூட கிடைக்காமல் அம்மக்களை வெளியேற்றுவதில் இந்நிறுவனங்கள் இஸ்ரேலோடு கூட்டுச் சேர்ந்து கொள்கின்றன.

கேட்டர்பில்லர், வால்வோ, ஹூண்டாய் நிறுவனங்களின் கனரக இயந்திரங்களே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்றத்திற்கு கடந்த பத்து ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஜெர்மனியைச் சார்ந்த ஹைடெல்பெர்க் எனும் நிறுவனம் இஸ்ரேல் கைப்பற்றிய மேற்கு கரையில் உள்ள நஹல் பா எனும் குவாரியிலிருந்து பல மில்லியன் டன் கணக்கில் டோலமைட் உள்ளிட்ட கட்டுமாத்திற்கு உதவும் பொருட்களை கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இஸ்ரேலின் டெண்டரை வென்ற இந்நிறுவனத்தால் தற்போது இக்குவாரி முழுவதும் தோண்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் சாலைகள், உள்கட்டமைப்புகள், பொதுப் போக்குவரத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது வணிகத்தைப் பெருக்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் அமைக்கும் சாலைகள் இஸ்ரேலிய குடியிருப்புகளை விரிவுபடுத்துவதோடு அப்பகுதியில் பாலஸ்தீனர்களை நுழைய விடாதபடி உள்கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் இஸ்ரேலிய போலீசு அனுமதியில்லாமல் நுழையக் கூட முடியாது. ஸ்பெயினின் பாஸ்க் எனும் கட்டுமான நிறுவனம் மேற்கு கரை மற்றும் மேற்கு ஜெருசலேத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இணைப்பதற்காக சுமார் 27 கிமீ நீளச் சாலையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

ஆக்கிரமிக்கப்படும் நிலத்தில் உருவாகும் கட்டுமானங்கள்:

காசாவில் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இஸ்ரேலியர்களுக்கு மனைகளை விற்பதற்குப் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்துள்ளன. பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனமான கெல்லர் வில்லியம்ஸ் எனும் நிறுவனம் தனது துணை நிறுவனமான ஹோம் இன் இஸ்ரேல் மற்றும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூட்டிணைவோடு இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான அபார்ட்மெண்ட்களை கட்டி விற்பனை செய்யப்போவதாக கனடா மற்றும் அமெரிக்காவில் சமீபத்தில் ரோடு ஷோவை நடத்தியுள்ளன.

புக்கிங் டாட் காம் மற்றும் ஏர்பின்பி நிறுவனங்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் பல சொகுசு விடுதிகளைக் கட்டி தங்களது வணிகத்தைப் பன்மடங்கு பெருக்கியுள்ளன. மேலும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் இஸ்ரேலியர்கள் குடியேறுவதற்கென பல நிறுவனங்கள் சட்ட ஆலோசனைகள், கடன்கள் வழங்குவது, இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு விளம்பரங்கள் செய்வது என இனப்படுகொலையைப் பயன்படுத்தி வணிகம் செய்து வருகின்றன. உலக பகாசுர நிதிமூலதன கும்பலான பிளாக்ராக், வான்கார்ட், அலையன்ஸ் அசெர்ட் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் இஸ்ரேலின் நிதிப் பத்திரங்களை வாங்கி அதன் கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் பிளாக்ராக் என்ற நிதி மூலதன நிறுவனம் பலாந்திர் (8.6 சதவீதம்), மைக்ரோசாப்ட் (7.8 சதவீதம்), அமேசான்.காம் (6.6 சதவீதம்), ஆல்பாபெட் (6.6 சதவீதம்) மற்றும் ஐபிஎம் (8.6 சதவீதம்) ஆகியவற்றில் இரண்டாவது பெரிய நிறுவன முதலீட்டாளராகவும், லாக்ஹீட் மார்ட்டின் (7.2 சதவீதம்) மற்றும் கேட்டர்பில்லர் (7.5 சதவீதம்) ஆகியவற்றில் மூன்றாவது பெரிய நிறுவன முதலீட்டாளராகவும் உள்ளது. வான்கார்டு நிதி மூலதன நிறுவனமோ கேட்டர்பில்லர் (9.8 சதவீதம்), செவ்ரான் (8.9 சதவீதம்) மற்றும் பாலந்திர் (9.1 சதவீதம்) ஆகியவற்றில் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளராகவும், லாக்ஹீட் மார்டினில் (9.2 சதவீதம்) இரண்டாவது பெரிய நிறுவன முதலீட்டாளராகவும் உள்ளது. இது மட்டுமில்லாமல் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் (2.0 சதவீதம்) பங்குகளை வான்கார்டு நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் அரசு பாலஸ்தீனப் பகுதியில் குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் போன்றவற்றை துண்டித்ததால், பாலஸ்தீனர்கள் இவை அனைத்தையுமே தனியார் நிறுவனங்கள் மூலம் அதிக விலை கொடுத்தே வாங்கும் அவல நிலைக்கு ஆளாகினர். இஸ்ரேலின் தேசிய நீர் நிறுவனமான மெகோரோட் எனும் நிறுவனமே பாலஸ்தீனப் பகுதியில் குடிநீர் விநியோகிப்பதில் ஏகபோக கட்டுப்பாட்டை வைத்துள்ளது. இந்நிறுவனம் குடிநீரை கூட இனப்படுகொலைக்கான ஒரு கருவியாக பயன்படுத்தியது. ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகான முதல் ஆறு மாதங்களில் காசா மக்களுக்கு வெறும் 22 விழுக்காடு குடிநீர் தான் வழங்கப்பட்டது. காசா நகர்ப்புறத்தில் 95% நேரம் குடிநீர் கிடைக்காமல் அம்மக்களை துரத்தியதில் இந்நிறுவனம் உடந்தையாக இருந்தது இதேப் போன்று மின்சாரம், எரிபொருள், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவற்றை தடுத்து அம்மக்களை வெளியேற்றி வருவதில் பல நிறுவனங்கள் உடந்தையாக இருந்து வருகின்றன.

இஸ்ரேல் பாசிச அரசின் இனப்படுகொலை என்பது பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இலாபகரமான தொழில் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இனப்படுகொலைக்கு ஒரு பரந்த வலைப்பின்னலும், பில்லியன் கணக்கான டாலர்களும், தொழில்நுட்பமும் தேவை. தமது தொழில்துறை வன்முறை மூலம் இஸ்ரேலோடு கூட்டுச் சேர்ந்து காசா மக்களை கொன்றொழிக்கும் இக்கார்ப்பரேட் நிறுவனங்களும் இஸ்ரேல் பாசிச அரசைப் போல இனப்படுகொலை குற்றவாளிகள். இனப்படுகொலையில் இலாபம் ஈட்டும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களை அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்கள் தண்டித்தே தீர வேண்டும்.

  • தாமிரபரணி

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. கார்ப்பரேட் பாசிசத்தை மக்களுக்கு உணர்த்தாத வரையில், இனப்படுகொலையை நிறுத்த முடியாது.