தூத்துக்குடி மென்பொறியாளர் கவின்
சாதி ஆணவப் படுகொலை!
கல்வியில் உயர்ந்தால் மட்டுமே சமூகத்தில் சாதி ஒழிந்து விடாது.!
சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் போராட்டங்களை முன்னெடுப்போம்.!
புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி
29-07-2025
துத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்த கவின் என்ற இளைஞர் மென்பொறியாளராக பணியாற்றிவருகிறார். லட்சத்தில் அவர் சம்பளம் வாங்குகிறார்.
அவர் சுபாசினி என்ற ஆதிக்கசாதி பெண்ணை காதலித்துவந்ததால் சாதி வெறிபிடித்த சுபாசினியின் தம்பி சுர்ஜித், சாதிவெறிபிடித்த காவல் உதவி ஆய்வாளர்களான தனது பெற்றோர்களுடன் இணைந்து கவினை கொலைசெய்துள்ளான்.
ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞன் படித்து தனிப்பட்ட வகையில் முன்னேறுவது என்பது இன்றைய சமூகத்தில் பெரிய விசயம்தான். ஆனால் எவ்வளவு முன்னேறினாலும் சாதி வெறிபிடித்த பிற்போக்கு சமூக அமைப்பு நீடிக்கும் வரை இந்த முன்னேற்றம் கானல்நீர்தான் என்பதையே கவினின் ஆணவப்படுகொலை உணர்த்துகிறது.
இதுபோன்ற சாதி ஆணவக்கொலைகளை பார்த்து பார்த்து தமிழக மக்களுக்கு மனம் மரத்துபோய்விட்டது. இதை தடுக்கமுடியாது என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இது இந்த அரசமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது.
அனைவருக்கும் கல்வி கொடுத்தால் சமூகம் முன்னேறிவிடும் என்பது தவறான வாதம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிவருகிறது. கொலையுண்டவரும் கொலைகாரர்களும் இங்கு நன்கு படித்தவர்கள்தான்.
சாதி சங்கங்கள் நாட்டில் அனுமதிக்கப்படுகின்றன. அரசியல் கட்சிகளே சாதிவெறி அமைப்புகளாக உள்ளன. இதை இந்த அரசு கட்டமைப்பு அங்கிகரிக்கிறது. இவற்றை இந்த அரசு அமைப்பு நிராகரிக்கவில்லை. சாதி “ஒரு அழகான சொல். தன் சாதிக்கு மட்டுமே ஒரு புராணம் இருக்கிறது” என்று சாதி பெருமிதம் பேசும் கட்சிகள் அரசியல் கட்சியாக வலம் வருகிறது. நான் ஸ்மார்த்த பார்ப்பான் என்று நீதிமன்றத்திலேயே கூறி பெருமைப்படும் அளவிற்கு நீதிபதிகளே சாதிவெறியர்களாக உள்ளனர்.
ஆக நாட்டின் சமூக அரசியல், பொருளாதார கலாச்சார மட்டங்கள் உள்ளிட்டு ஒட்டுமொத்த சமூகமே ஜனநாயகமற்ற அடிப்படையில் நிலைகொண்டுள்ளது. இதை பாதுகாப்பதுதான் அரசின் வேலை. சாதியை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் எல்லாம் கண்துடைப்பாகவே உள்ளன. எத்தனை சட்டங்கள் கொண்டுவந்தாலும் அதை அமல்படுத்துபவர்கள் சாதி வெறி கண்ணோட்த்தில் ஊறி திளைக்கும் போது அந்த சட்டங்கள் எல்லாம் கழிப்பறை காகிதமாகவே மாறிவிடுகின்றன. இவை சாக்கடைக்கு கொசுமருந்தடிப்பவையாகவே உள்ளன.
சாதி ஆணவக்கொலைகள், சாதி வெறித்தாக்குதல்கள் நடக்கும்போது வருத்தப்படுகிறோம். கடும் நடவடிக்கை தேவை என்று பேசுகிறோம். ஆனால் திரும்பவும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. ஆகவே சமூகத்தை நேசிக்கும் சக்திகள் அறிவியல் பூர்வமாக சிந்திக்கவேண்டும்.
சாதி சங்கங்கள், சாதிவெறியூட்டி ஓட்டு பொறுக்கும் கட்சிகள், சாதி வெறித்திரைப்படங்கள் அனுமதிக்கப்படும் அரசில் சாதி ஆணவக்கொலைகளை எப்படி தடுக்கமுடியும்?
சாதி வெறியர்கள், சாதி சங்கங்களுக்கு எதிரான கோபம், இவற்றை எல்லாம் அனுமதிக்கும் அரசிற்கு எதிராக திரும்பாத வரை இது போன்ற ஆணவக்கொலைகளை தடுக்க முடியாது.
சாதி சங்கங்களுக்கு எதிராகவும் இதை அனுமதித்து சாதி ஒழியாமல் பாதுகாக்கும் அரசிற்கு எதிராகவும் போராடுவதன் மூலம் சமூகத்தை ஜனநாயகபடுத்தும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
சாதிச்சங்கங்களை தடை செய்ய போராடுவோம்!
சாதி வெறியர்களை சமூகத்திலிருந்து தனிமை படுத்துவோம்!
சாதியை பாதுகாக்கும் அரசு கட்டமைப்புக்கு எதிராக சமூகத்தை ஜனநாயக படுத்தும் போராட்டங்களை முன்னெடுப்போம்.!
இப்படிக்கு
இரா முத்துக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614