நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் சர்வாதிகார போக்கைக் கண்டிப்போம்!
வழக்கறிஞர்களின் சட்டபூர்வ உரிமையை பாதுக்காக்க வீதியில் இறங்கி போராடுவோம்!

பத்திரிக்கைச் செய்தி

புரட்சிகர மக்கள் அதிகாரம்
27-07-2025

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் சாதி, மத சார்பான தீர்ப்புகள், மாநில உரிமைக்கு எதிரான தீர்ப்புகள், மக்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தும் சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் அவரது பேச்சுக்கள் முதலியவற்றை தமிழகத்தின் அரசியல் சக்திகள் அறிவார்கள். குறிப்பாக பார்ப்பனர்கள் சாப்பிட்டு விட்டு போடும் எச்சில் இலையில் மற்ற சாதியினர் படுத்து உருள்வது இந்துக்களின் பழக்க வழக்கம், இந்துக்களின் நம்பிக்கை என்பன போன்ற சட்ட விரோத தீர்ப்புகளை வழங்கி வருபவர்தான் ஜிஆர் சுவாமிநாதன்.

இது போன்ற விசயங்களைத்தான் அவர் மீது மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதி மன்றத்திற்கு புகாராக தெரிவித்துள்ளார். பதிவு தபாலில் அனுப்பபட்ட அவரது புகார் கடிதம் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியுள்ளதற்கு உச்சநீதி மன்றம்தான் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். வழக்கறிஞர் நீதிபதி குறித்து புகார் கொடுப்பது சாதாரண சட்டபூர்வ நடவடிக்கைதான்.

இதற்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதனை அழைத்து சட்டவிரோதமான முறையில் திறந்த நீதிமன்றத்தில் அவரை கோழை என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன். அவமதிப்பு செய்துள்ளதோடு வாஞ்சிநாதன் மீதே அந்த நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க முயற்சிக்கிறார். மேலும், ஒரு நீதிபதி தன் மீதான புகாரை தானே விசாரிக்க கூடாது என்பதுதான் நீதி. ஆனால் இந்த இயற்கை நீதிக்கு எதிரான முறையில் சட்ட விரோதமாக ஜிஆர் சுவாமிநாதன் செயல்படுகிறார். உண்மையில் இங்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதனை மட்டுமல்ல, நீதிமன்றத்தையே அவமதித்தது நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்தான் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் இந்த சர்வாதிகார நடவடிக்கையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

சாதாரண குடிமகன் அனைவருக்கும் சட்டபூர்வமான உரிமை உண்டு. அப்படி இருக்க. நீதி பரிபாலனத்தை காப்பாற்ற வேண்டிய நீதிபதிகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும்போது அது குறித்து புகார் தெரிவிக்க வழக்கறிஞர்களுக்கும் உரிமை உண்டு. இந்த உரிமையை பறிக்கும் வகையில் ஜிஆர் சுவாமிநாதன் செயல்படுவதற்கு எதிராக வழக்கறிஞர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகமும் குரல் கொடுக்க வேண்டும்.
ஒட்டுமொத்த அரசு அமைப்பும் இன்று சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை மக்கள் அறிவர். குறிப்பாக சமீபத்திய திருப்புவனம் கொட்டடி கொலை சட்டவிரோத படுகொலைக்கு சாட்சியாக நிகழ்ந்துள்ளது. இதைப்போல நீதிபதிகள் பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் நீதியை படுகொலை செய்வது படுவேகமாக நடைபெற்று வருகிறது.

ஆகவே, இது போன்ற நீதிபதிகளின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக புகார் தெரிவிப்பதைக் கூட குற்றமாக்குவது பாசிச நடவடிக்கை ஆகும். எனவே, இது நீதிமன்ற விவகாரம் என்று நாம் ஒதுங்க முடியாது. இன்று நீதிமன்றங்கள் காவி பாசிசத்தின் கூடாரமாக மாறிவருகின்றன. இது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும் பாதிக்க கூடிய விசயம்.

உலகெங்கிலும் உரிமைக்கான குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் உள்ளன. நீதிபதிகள் ஒன்றும் பதினெட்டுப்பட்டி நாட்டாமைகள் அல்ல. உயர்நீதிமன்ற நீதிபதிகளாகட்டும், உச்சநீதிமன்ற நீதிபதிகளாகட்டும் யார் தவறிழைத்தாலும் மக்கள் மன்றங்கள்தான் உரிய ஒழுங்கை நிலைநாட்ட முடியும். மக்களின் போராட்டங்கள்தான் இன்று நீதியை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன்- கே. இராஜசேகர் அமர்வு கைவிட ஒட்டு மொத்த உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் குரல் கொடுத்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்..

இப்படிக்கு
இரா. முத்துக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன