போலீஸ் உங்கள் நண்பனா? புதிய ஜனநாயகம் – படக்கட்டுரை பகுதி-II

நான் செய்த குற்றமென்ன? பெண்ணாய்ப் பிறந்ததுதானா?” உடைந்துபோய் இப்படிக் கேள்வி எழுப்புகிறாள் மாயாதியாகி என்ற சகோதரி. உத்திரப்பிரதேச மாநிலம் பாக்பத் நகரம். கணவனுடன் காரில் அமர்ந்திருந்த மாயாதியாகியை பட்டப்பகலில் பலாத்காரம் செய்ய முயன்றனர் அவ்வழியே சென்ற போலீசு காமவெறியர்கள்.

தட்டிக்கேட்ட கணவனை அங்கேயே சுட்டுக் கொன்றனர். அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை முழு நிர்வாணமாக்கி நகர் முழுவதும் இழுத்துச் சென்றனர். கர்ப்பிணியான அவளை 9 போலீசு மிருகங்கள் மாறிமாறிக் கற்பழித்தன. அவளது பெண் உறுப்பில் தடியைச் சொருகி அவள் துடிப்பதைக் கண்டு ரசித்தன.

 

1988 – 8ஆண்டுகளுக்கு பிறகு மாயாதியாகி. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. “பெண்ணாய் பிறந்ததுதாள் நான் செய்த குற்றமா” துயரத்துடன் கேட்கிறார்.

பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்முன்னே நடந்த இந்த அக்கிரமத்தை விசாரித்துத் தீர்ப்பு வழங்க நீதிமன்றத்திற்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டன. செசன்ஸ் நீதிமன்றம் 6 போலீசுக்காரன்களுக்கு தூக்குதண்டனை வழங்கியது.

அவர்களோ ‘நீதி’ கேட்டு உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் செய்திருக்கின்றனர். கணவனை இழந்து நிராதரவாக மாயாதியாகி காத்துக்கொண்டிருக்கிறாள் – நீதி கிடைக்கும் என்று!

**********

 

“நான் குழந்தைகளைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் திடீரென்று குடிசைக்குள் நுழைந்தார்கள். என் வாயில் துணியை அடைத்து விட்டு என் குழந்தைகளின் முன்னேயே என்னைக் கற்பழித்தார்கள்” – அசாம் துப்பாக்கி படையால் கற்பழிக்கப்பட்ட லட்சுமிதி.

 

பள்ளி செல்லும் சிறுமியா, பச்சிளங்குழந்தையா என்பதெல்லாம் கவலையில்லை போலீசு மிருகங்களுக்கு! ஜுன் ’88 – அசாம் துப்பாக்கிப் படையினரால் கற்பழிக்கப்பட்ட 12 வயது பஞ்சலட்சுமி.

 

உத்தரப்பிரதேசத்திற்கு ஒரு பாக்பட். தமிழகத்திற்கு தளி. பள்ளி ஆசிரியை கல்பனா சுமதியை ஸ்டேஷனில் வைத்துக் கற்பழித்து குற்றுயிராக புதரில் வீசியெறிந்தார்கள் தமிழகத்தின் காக்கிஉடைக் கிரிமினல்கள்.

நாட்டிலுள்ள அத்தனை சமூக விரோதிகள், காம வெறியர்கள், கிரிமினல்கள் புரிந்துள்ள கற்பழிப்புக் குற்றங்களைவிட போலீசாரின் கற்பழிப்புகள்தான் அதிகம். வெறும் காம வெறியின் காரணமாக மட்டுமே போலீசு மிருகங்கள் கற்பழிப்பதில்லை. தனக்குப் பணியாத பெண்களுக்கு, தன்னைக் கண்டு அஞ்சாத பெண்களுக்கு, தன்னை எதிர்த்துப் பேசும் பெண்களுக்குத் தரப்படும் தண்டனை – கற்பழிப்பு.

தாங்கள் கற்பழிப்பது மட்டுமல்ல; தாயையும் மகனையும் உடலுறவு கொள்ளுமாறு செய்வது, சகோதரனையும் சகோதரியையும் உடலுறவு கொள்ள வைப்பது, கணவனெதிரில் மனைவியை, தாயினெதிரே மகளைக் கற்பழிப்பது ஆகியவற்றை சித்திரவதை முறைகளாகவே வைத்திருக்கிறது போலீசு. இத்தகைய சித்திரவதைகளை பெண் போலீசுகளே செய்கின்றனர்!

**********

 

1988 – பீகார் – பராரியா – போலீசுக்காரன்களால் கற்பழிக்கப்பட்ட அபலை. நடு இரவில், கணவன் கண்ணெதிரில் கற்பழித்தது போலீசு

பீகார் – பராரியா கிராமம். குற்றவாளி ஒருவனைத் தேடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு கிராமத்தில் புகுந்து அங்கிருந்த தாழ்த்தப்பட்ட பெண்கள் அனைவரையும் கற்பழித்தது போலீசு. தாயின் கையிலிருந்து குழந்தையைப் பிடுங்கி வீசி எறிந்தான் ஒரு போலீசுக்காரன். கதறியழுத தாயிடம், “அது செத்தால் என்ன? நான் உனக்குக் குழந்தை தருகிறேன்” என்று அவரைக் கற்பழித்தான்.

 

**********

1986 – கேரளா: போலீசால் கற்பழிக்கப்பட்ட தங்கமணி கிராமத்துப் பெண்கள்: பஸ் வசதி கோரி போராடியதற்கு இந்தத் தண்டனை!

 

சாலிவர்கீஸ் – சகோதரியைக் கற்பழிக்க முயன்ற போலீசுக்காரனின் கைவிரலைத் துண்டித்து விரட்டிய தங்கமணி கிராமத்து வீராங்கனை.

 

ஆத்திரமடைந்த மக்களால் இடித்துத் தள்ளப்பட்ட தங்கமணி போலீசு நிலையம் – துணிச்சலான ஆரம்பம்.

 

கேரள மாநிலம் – தங்கமணி கிராமம். பஸ் விடக்கோரி போராட்டம் நடத்திய மக்களை ஒடுக்குவதற்காக வந்திறங்கியது போலீசு பட்டாளம். கிராமத்தின் ஆண்களெல்லாம் தலைமறைவாகிவிட்டனர். “எங்களிடமிருந்தா தப்பித்தீர்கள்? பார் உங்களுக்குப் பாடம் கற்பிக்கிறோம்” என்று கிராமத்துப் பெண்கள் அனைவரையும் கற்பழித்தனர். அசாம், திரிபுரா, மிசோரம், நாராயண்பூர்… ஒன்றல்ல, இரண்டல்ல; போலீஸ் நாய்களின் கும்பல் கற்பழிப்புகளுக்கு கணக்கில்லை.

போராட்டத்தையும், எதிர்ப்பையும் ஒடுக்குவதற்குத்தான் கற்பழிப்புகள் என்றில்லை. கேரள மாநிலம் அப்பப்பாரா என்னும் கிராமத்தின் மலை ஜாதிப் பெண்களைச் சாராயம் குடிக்க வைத்து முழு நிர்வாணமாக்கி, நடனமாடவிட்டு ரசித்தனர் எஸ்டேட் முதலாளிகளும், காட்டிலாகா அதிகாரிகளும், போலீசும். அதன்பின் அவர்களைக் கற்பழித்தனர். ஆக்கிரமித்துக் கைப்பற்றிய நாட்டில் ராணுவம் நடத்தும் அக்கிரமங்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் சொந்த நாட்டு மக்களை அடிமைகளைப் போலவும், பெண்களை தங்கள் போகத்துக்கென்றே படைக்கப்பட்ட பொருளைப் போலவும் நினைத்து வெறியாட்டம் போடும் கூட்டம்தான் போலீசு.

**********

 

மிருகங்களின் ஆட்சியில் மனிதாபிமானத்திற்கு இடமேது? ஒரு நிராயுத பாணியைத் தாக்க 7 போலீசுக்காரன்கள்; இவர் சீக்கிய பயங்கரவாதியல்ல; விற்பனைவரி உயர்வை எதிர்த்துப் போராடும் ஒரு வியாபாரி.

அடிமைகளாக அடங்கிக் கிடக்காமல் தங்களது உரிமைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போலீசுக்குப் பகைவர்கள்தான். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது‘, ‘பந்தோபஸ்து‘, ‘அமைதியை நிலைநாட்டுவதுஎன்று பல பெயர்களில் மக்களின் போராட்டங்களை ஒடுக்குகிறது போலீசு. “நாங்கள் என்ன செய்ய முடியும்? அரசாங்கத்தின் உத்தரவை நிறைவேற்றுகிறோம். அவ்வளவுதான்” என்று தங்களுடைய அடக்குமுறைகளுக்கு நியாயம் கற்பிக்கிறது போலீசு.

பொதுக்கூட்டம் போடாதே” என்றால் போடக்கூடாது; ‘கலைந்து போஎன்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து போக வேண்டும்; ‘ஊர்வலம் நடத்தக்கூடாதுஎன்றால் நடத்தக்கூடாது. போலீசின் ஆணையை மீறுவதற்கு எவனுக்கும் உரிமை கிடையாது என்பது தான் அவர்களது நீதி, கோரிக்கை எவ்வளவு நியாயமானதாக இருந் தாலும் சரி, அதற்காகவே பல இடங்களிலிருந்து வந்த மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தாலும் சரி, அதைப்பற்றியெல்லாம் போலீசுக்குக் கவலையில்லை.

அது குடிதண்ணீருக்கான போராட்டமோ அல்லது கூலி உயர்வுக்கான போராட்டமோ – போலீசின் தடையை மீறி நடத்தப்படும் எந்தப் போராட்டமும் தனக்கெதிராக, தனது அதிகாரத்திற்கெதிராக நடத்தப்படும் போராட்டமாகக் கருதி வெறியுடன் பாய்கிறது போலீசு.

 

சொந்த தாய்மொழி மீதே பற்றற்ற சதைப்பிண்டங்கள்தான் போலீசு. கன்னட மொழியை ஆட்சி மொழியாக்கக் கோரும் போராட்டத்தை உடைக்கும் கர்நாடக போலீசு!

 

பெண்கள் ஆண்களின் அடிமைகள்: அவர்களுக்கு எதற்கு சுயமரியாதை? இந்தியப் பெண்களின் கன்னித்தன்மையைச் சோதனை செய்யும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடும் பெண்ணின் மீதும் தடியடி!

 

போலீசு அனுமதியுடன் அமைதியாக நடத்தப்படும் போராட்டங்களையும் போலீசு விட்டு வைப்பதில்லை.

”உடம்பின் நுட்பமான பகுதிகளிலும் தலையிலும் படும்படி தடியடி நடத்தக்கூடாது; துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால் அறிவிப்பு கொடுக்கவேண்டும், வானத்தை நோக்கி சுடவேண்டும். அப்படியும் கலையவில்லையென்றால் முழுங்காலுக்குக் கீழேதான் சுடவேண்டும்” – இவையெல்லாம் போலீசின் வன்முறையை ‘ஒழுங்குபடுத்தும்’ சட்டங்கள். ஆனால் எந்தக் காலத்திலும், போலீசுக்காரர்கள் இதைப் பின்பற்றுவதில்லை.

போலீசின் தடிகள் மண்டையைத்தான் பிளக்கின்றன; தோட்டாக்கள் மார்பிலும் முதுகிலும்தான் பாய்கின்றன. கைவசம் துப்பாக்கி இல்லாத போது கற்களால் மண்டையைப் பிளக்கிறார்கள் காக்கிஉடைப் பொறுக்கிகள். போலீசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வது இருக்கட்டும். இருக்கின்ற சட்டங்களையே தூர வீசிவிட்டு வெறியாட்டங்கள் நடத்தியதற்காக இதுவரை ஒரேயொருமுறையேனும் அரசு அவர்களைத் தண்டித்திருக்கிறதா? இல்லை.

**********

 

பம்பாய், தொழிற்சங்க தலைவர் தத்தா சமந்த். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதால் அவரை தூக்கிச் சென்று கைது செய்தது. போராட்டக்காரர்களை இப்படித்தான் இழிவுபடுத்துகிறது போலீசு.

குஜராத். மூடிய துணி ஆலைகளைத் திறக்கக் கோரி போராடிப் பயனின்றி இனி சாவது ஒன்றுதான் வழி என்று முடிவுக்கு வந்தார்கள் தொழிலாளர்கள். “நாங்கள் குழந்தைகளுடன் பட்டினியால் வதைபடுகிறோம். இனி மேலும் நாங்கள் உயிர்வாழ வேண்டுமானால் திருடர்களாக மாறவேண்டும். அதைவிடச் சாவதே கவுரவமானது” என்று அறிவித்தார்கள். காசில்லாமல் மருத்துவமனையிலிருந்து விரட்டப்பட்டு நடைபாதையிலே பிரசவித்த தொழிலாளர்களின் மனைவிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றார்கள்.

கல் நெஞ்சையும் கரைக்கும் இந்தப் போராட்டத்தையும் போலீசு தடிக்கம்புகளால் உடைத்தது. சாக அனுமதிக்குமாறு மன்றாடியவர்களை அடித்து நாய்களைப் போல இழுத்துச் சென்றது போலீசு. பெண்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. ஜனதா ஆட்சிக்காலத்தில் கான்பூர் சுதேசி மில் தொழிலாளர்களை குருவிகளைப் போல சுட்டுக்கொன்றது போலீசு.

 

1983 – ஆந்திரா : புரட்சிகர மாணவர்களை ஒடுக்க காகதீயா பல்கலைக் கழகத்திற்குள்ளேயே படையெடுக்கும் போலீசு.

 

1985 – சென்னை: போலீசால் சூரையாடப்பட்ட மீனவர் குடியிருப்புகள்

தமிழகத்தில் அரவங்காட்டில் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களை ‘பேசித் தீர்க்கலாம்’ வாருங்கள் என்று அழைத்து, நம்பி வந்தவர்களை நேருக்கு நேர் சுட்டுக் கொன்றான் போலீசு வெறிநாய் தேவாரம். கடற்கரையே எங்கள் பிறந்தமண் என்று போராடிய மெரினா மீனவர்களை கடற்கரையிலேயே பிணமாக்கி குவித்ததும் தேவாரம்தான். அவனது பரிவாரங்களோ மீனவர்களது வீடுகளைச் சூறையாடின; தீ வைத்தன.

 

1984 – வேலை நிறுத்தத்தில் போலீசால் கொல்லப்பட்ட பாராதீப் துறைமுகத் தொழிலாளியின் மனைவி

 

‘பாடம் கற்பிக்க எங்களாலும் முடியும்’ என்று பாய்கிறது போலீசு. சென்னை அண்ணாசாலையில் ஆசிரியர்கள் மீது தடியடி நடத்தும் போலீசு.

 

1983 – கேரளம் – போராடும் அரசு ஊழியர்கள் மீது போலீசு தடியடி, ‘அரசு அடிமைகளுக்கு இவ்வளவு திமிரா?’

 

ஈவு, இரக்கம், மனிதாபிமானம் என்ற சொற்களுக்கும் போலீசுக்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. தேவாரத்தைப் போன்ற நயவஞ்சகர்களுக்கும் கொலைவெறியர்களுக்கும் தான் பதக்கங்கள், பதவி உயர்வுகள். தங்களது சுயமரியாதையைக் காத்துக்கொள்ள போராடும் பெண்கள், சம்பள உயர்வுக்காகப் போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கல்விக்காகப் போராடும் மாணவர்கள், வேலை கேட்டுப் போராடும் பட்டதாரிகள் – அவர்கள் யாராக இருந்தாலும் சரி படித்தவர்களானாலும் பாமரனானாலும், அவர்களது கோரிக்கை என்னவாக இருந்தாலும் போலீசின் கொலைக்கரத்தை அவர்கள் சந்தித்துதான் தீரவேண்டும்.

**********

1986 – ஆர்வால் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள். உயிர் பிழைத்திருப்பது நிரந்தரமா?

 

பீகார் – ஆர்வால் எனும் ஊரின் ஒரு பள்ளிக்கூடத்தின் மைதானத்தில் கூட்டம் நடத்தினார்கள் தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள். அவர்கள் நக்சல்பாரிகளின் தலைமையில் ஒன்றுதிரண்டிருந்தார்கள் என்றே ஒரே காரணத்திற்காக போலீசு அவர்களை வேட்டையாடியது. நாற்புறமும் அடைக்கப்பட்டிருந்த அந்த மைதானத்தின் வாயிலையும் மறித்துக் கொண்டு எல்லா திசைகளிலிருந்தும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. 12 வயது சிறுமி, பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.

 

1986 – ஆர்வால் படுகொலைக்கு நீதி விசாரணை கோரும் ஆர்ப்பாட்டத்திலும் போலீசு வெறியாட்டம். போலீசு மீது நீதி விசாரணை கோருவதா?’

 

வெள்ளைக்காரன்கள் ஆட்சி போய் போலீசுக்காரன்கள் ஆட்சி! ஆர்வால் – மீண்டும் ஒரு ஜாலியன் வாலாபாக் 100-க்கும் மேற்பட்ட கூலி ஏழைகள் இங்கு குருவி சுடுவதுபோல் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பியோட வழியில்லை. நான்கு பக்கம் சுவர். இருந்த ஒரே வழியையும் அடைத்து நரவேட்டையாடியது போலீசு. நக்சல்பாரிகள் தலைமையில் திரண்டதுதான் இவர்கள் செய்த குற்றம்!

சுடுவதற்கான முகாந்திரம் இல்லை. உத்திரவு இல்லை. முன்னெச்சரிக்கை தரப்படவில்லை. “அவர்களக்குப் பாடம் புகட்டுவதற்காகவே சுட்டோம்” என்று பகிரங்கமாகவே அறிவித்தான் அந்த மாவட்டத்தின் போலீஸ் சூப்பரின்டெண்டெண்டு சி.கே.காஸ்வன். ஜாலியன்வாலாபாக் படுகொலையை முன்நின்று நடத்திய பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டயர்கூட இதே வார்த்தைகளைத்தான் சொன்னான்.

 

படுகொலை முடிந்தபின் பந்தோபஸ்து! பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களை கிராமங்கள் தோறும் சென்று மிரட்டுகிறது போலீசு!

 

மக்களின் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த சம்பவங்கள் கணக்கிலடங்காதவை. போராடியவர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவில்லை; பொது அமைதியைக் கெடுக்கவில்லை. போலீசை எதிர்த்தும் போராடவில்லை. அவர்கள் தங்கள் வயிற்றுப் பாட்டுக்காகத்தான் போராடினார்கள். மக்களின் கோரிக்கைகளைப் பரிவுடன் கவனிப்பதாகச் சொல்லும் அரசாங்கங்களோ போலீசை ஏவி விட்டன. “சட்டத்தின் ஆட்சி”யில் போலீசின் தோட்டக்கள் உழைக்கும் மக்களின் மீது மட்டும்தான் பாய்கின்றன.

**********

 

குதிரை வண்டிக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் போன்ற ஏழை எளியோர் மீதுதான் பாய்ந்து குதறுகிறது போலீசு!

 

 

 

சட்டபூர்வமான குறைந்தபட்ச சம்பளத்தை கூடக் கொடுக்க மறுக்கும் முதலாளியையோ, தாழ்த்தப்பட்ட பெண்களைக் கற்பழிப்பதைத் தங்கள் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை நரவேட்டையாடும் சாதி வெறியர்களையோ, சமூகவிரோத மாஃபியா கும்பல்களின் தலைவர்களையோ போலீசின் குண்டாந்தடிகள் தொட்டதுகூட இல்லை. சட்டப்படி கைது செய்து தண்டிப்பதற்கான காரணங்கள் மலைமலையாக இருந்தும் போலீசின் விரல்கள்கூட அவர்களைத் தீண்டியதில்லை

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன