கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்வது, கடத்திச் சென்று கொட்டடியில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வரும் காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்களின் ஏவல் படையான டெல்லி போலீசுத் துறையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜூலை 9 முதல் இன்று வரை 8 பகத்சிங் சத்ரா ஏக்தா மஞ்சின் (BScem) முன்னணித் தோழர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, கைதுக்கான வாரண்ட்டும் இன்றி கடத்திச் சென்று கொட்டடியில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கியுள்ளது, டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு. இதில் சித்திரவதைக்குள்ளான தோழர்களை நேற்று விடுவித்த நிலையில், மற்றுமொரு தோழரை(ருத்ரா) கடத்திச் சென்றுள்ளது பாசிச ஏவல் துறை. தோழர் ருத்ரா, 20 வயதே ஆன டெல்லி பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவலில் இருந்தபோது, செயற்பாட்டாளர்கள் அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழும் உரிமை மற்றும் கண்ணியத்தை நேரடியாக மீறும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்டு, மின்சாரம் பாய்ச்சப்பட்டு, கழிப்பறைகளில் தலையை மூழ்கடிப்பது உட்பட இழிவான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பெண் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக, கொடூரமான பாலியல் வன்முறை அச்சுறுத்தல்களையும் போலிசுத்துறை விடுத்துள்ளது. அவர்கள் கம்பிகளைப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தியுள்ளது.
இதுவெறும் மனித உரிமை மீறலோ அல்ல அதிகார துஷ்பிரயோகமோ அல்ல. மாறாக இது நேரடியான பாசிச கொலைவெறி தாக்குதல். அரசின் கார்ப்பரேட் நல திட்டங்களையும், தனது மக்களின் மீது உள்நாட்டு போரை தொடங்கி இருக்கும் அரசையும் எதிர்த்து மக்களிடத்தில் தொடர்ந்து காவி பாசிஸ்ட்களை அம்பலப்படுத்திவரும் சமூக செயற்பாட்டாளர்கள், தோழர்களின் குரல்வளையை நசுக்கித் தனது பாசிச நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்தும் முயற்சியாகும்.
ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூரின் போது தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், ஜனநாயக சக்திகளை தொடர்ந்து கைதுசெய்து, நிலவி வரும் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைக் கூட மறுத்து, குரல்களை நெரிக்க UAPA போன்ற கருப்புச் சட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு கோரத்தாண்டவம் ஆடிவருகிறது, காவி கார்ப்பரேட் பாசிச கும்பல். கருத்துச் சுதந்திரத்தையும், இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தையும் கூட விழுங்கி நம்மை பாசிச இருளில் தள்ளியுள்ள பிஜேபி-ஆர்எஸ்எஸ் காவி கார்ப்பரேட் பாசிச கும்பலை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி ஏறிய, உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்! காவி பாசிசக் கும்பலுக்குக் கல்லறை எழுப்புவோம்!
தோழர் புவன்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
சென்னை, புரட்சிகர மக்கள் அதிகாரம். தமிழ்நாடு.