பிளையார் உருவான கதையை நாம் அறிவோம். சிவனின் மனைவியான பார்வதி தனது உடம்பிலிருந்த அழுக்கை உருட்டி அதற்கு உயிர் கொடுத்து பிள்ளையாரை உருவாக்கியதாகச் சொல்லுவார்கள். இது இந்துமத நம்பிக்கை சார்ந்த புராணக்கதை. அன்றாட வாழ்க்கைக்கும் இக்கதைக்கும் தொடர்பில்லை என்பதால் மக்கள் பிள்ளையாரைக் கும்பிட்டாலும் இக்கதையை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் சங்கிகளைப் பொறுத்தவரை, பிள்ளையார் உருவானது கதையல்ல, நிஜம் (உண்மை). அறிவியல் அணுகுமுறையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்தக் கதை முட்டாள் தனமாகத் தெறியலாம். ஆனால் சங்கிகளுக்கு இந்தக் கதை என்பது இந்துத்துவா அரசியலுக்கான ‘பாரதிய அறிவியல்’.
“பிள்ளையார் என்பது நம் பாரம்பரிய மருத்துவத்தின் பெருமை. அதாவது மனித உடலையும் யானை முகத்தையும் பொருத்தி வாழ வைக்க முடியும் என்ற மருத்துவ முறையை [நவீன அறிவியலில் அதற்கு பெயர் பிளாஸ்டிக் சர்ஜரி] முன்னோர்கள் அறிந்திருந்தனர்” என்று சில வருடங்களுக்கு முன்னர் மருத்துவர்கள் கூட்டத்தில் மோடி பேசினார். மோடியின் அறிவு மேன்மையைக் கண்டு உலகமே காறித் துப்பியது. ஆனால் காவிக் கும்பலோ முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்று இன்றுவரை வாதிட்டு வருகிறது.
அழுக்குக்கு எப்படி உயிர் கொடுக்க முடியும்? மனிதனின் உடலமைப்பும் யானையின் உடலமைப்பும் முற்றிலும் வேறானவை. எப்படி இரண்டையும் இணைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினால் இது எங்களுடைய நம்பிக்கை, வேதத்தில் அனைத்தும் இருக்கிறது, தினசரி யோகப் (Yoga) பயிற்சி செய்வதன் மூலமாக, நமது முன்னோர்கள் அனைத்தையும் அறிந்திருந்தனர் என்கின்றனர்.
பாரதிய அறிவியலையும் மருத்துவத்தையும் மீட்டெடுத்து நடைமுறைக்கு கொண்டு வருவதாகச் சொல்லிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் தலைவர்கள், தங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் அதிநவீன மருத்துவச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
மோடியிலிருந்து கடைநிலை ஆர்எஸ்எஸ் ஆதரவாளன் வரை மொத்த சங்கிக் கும்பலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும், வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் அறிவியல் பூர்வமானவை என்று வாதிடுவதோடு இவற்றை தங்களது காவி பாசிச அரசியல் திட்டத்திற்கான (இந்து தேசவெறியைத் தூண்டுவது) ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இதற்காக, பள்ளிப் படிப்பிலிருந்து கல்லூரி வரை கல்வியின் அனைத்து மட்டத்திலும் “இந்திய அறிவு பாரம்பரியம் (Indian Knowldege System-IKS), ஆயூர்வேதம், யோகா குறித்தவற்றை பாடமாகப் புகுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் இந்திய அறிவு பாரம்பரியம் என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கை ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்தியுள்ளனர். இக்கருத்தரங்கை இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி குழு (ICSSR), இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழு (ICHR), ஆயுஷ் அமைச்சகம், ஜேஎன்யு பல்கலைக்கழகம் மற்றும் IKSHA என்ற என்ஜிஒ ஆகியவை சேர்ந்து நடத்தியுள்ளன. இவ்வமைப்புகள் இந்தியாவின் அடிப்படையே வேதமரபுதான் என்ற கருத்தை இந்திய வரலாற்றிலும் மருத்துவத்திலும் திணிக்கவேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டு வருபவை. இக்கருத்தரங்கில் ஐஐடி, ஐஐஎம் மற்றும் வெளிநாட்டுகளில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர்கள் என ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதரவாளர்களைக் கொண்டு பாரதிய அறிவியலின் பெருமையைப் பற்றி கும்மியடித்துள்ளனர்.
“அரசியல் அதிகாரத்தை பெற நமக்கான அரசியல் கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டும். அக்கண்ணோட்டத்தை உருவாக்குவதில் அறிவு ஜீவிகளின் (பேராசிரியர்களின்) பங்கு மிகவும் முக்கியமானது.” அந்த வகையில் இந்த கருத்தரங்கம் முக்கியத்துவம் பெறுவதாக ஜேஎன்யுவின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பேசியிருக்கிறார். பார்பனிய மேலாதிக்கத்திற்காக அறிவு ஜீவிகள் வேலை செய்யவேண்டும் என்பதே அவரது வாதம்.
மோடி-அமித்ஷா கும்பலின் உள்நோக்கத்தை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் சாந்திஸ்ரீ துளிப்புடி. இந்த நோக்கத்திலிருந்தே மோடி கும்பல், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை தங்களுக்கான பிரச்சார மையங்களாக மாற்றிவருகின்றனர். இதை, பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதரவாளர்களை பணியமர்த்துவதின் மூலம் சாத்தியப்படுத்திக் கொள்கின்றனர். இதன்மூலம் இந்து தேசவெறிப் பிரச்சாரம் என்பதோடு மட்டுமில்லாமல் கல்வி தனியார்மயமும், NEP-ஐ அமல்படுத்துவதும் அவர்களுக்கு எளிமையாகிவிடுகிறது.
சங்கிகள் பெருமைகொள்வது போல நவீன அறிவியல் அடைந்துள்ள பல உண்மைகள் வேத, புராண மற்றும் இதர வைதீக நூல்களில் சொல்லப்பட்டுள்ளனவா? அவை முறையான பரிசோதனைகளைப் பின்பற்றி வந்தடைந்த முடிவுகளா? என்ற பல சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன.
உதாரணமாக மோடி சொன்ன பிளாஸ்டிக் சர்ஜரி கதையை (பிள்ளையார் உருவான கதை) எடுத்துக்கொள்வோம். இந்திய அறிவு பாரம்பரியத்தில் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை குறித்து சுஸ்ருதர் கூறியிருப்பதாக மேற்கோள் காட்டப்படுகிறது. அவர் எழுதிய சுஸ்ருத சிம்ஹா என்ற நூல் இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் முக்கிய நூலாக கருதப்படுகிறது. சுஸ்ருதரை மேற்கோள் காட்டித்தான், மனித உடலோடு யானை தலையை இணைத்து பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்ததாக பிரதமர் மோடி பேசியிருந்தார்.
ஆனால் மிகவும் சிக்கலான இப்படிப்பட்ட ஒரு அறுவை சிகிச்சையை செய்வதற்கு குறைந்தபட்சம் மனித உடல் அமைப்பைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் புரிதல் வேண்டும். சுஸ்ருதர் தன்னுடைய நூலான சுஸ்ருத சம்ஹிதாவில் மனித உடல் அமைப்பை பற்றி சில குறிப்புகளை தருகிறார்.
சுஸ்ருதரைப் பொறுத்தவரை இதயம் என்பது தாமரை மொட்டு போன்றது. நாம் காலையில் கண்விழிக்கும் போது அது விரிவடைகிறது. இரவு தூங்கும் போது அது சுருங்கி விடுகிறது என்கிறார். காற்றின் காரணமாகவே இதயம் சுருங்குவதாக அவர் கருதினார். இதயம் சுருங்கி விரிவடைவதன் மூலம் இரத்தத்தை உடலுறுப்புகளுக்கு அனுப்புகிறது என்ற உண்மை சுஸ்ருதருக்கு தெரியாது. [அ]
தண்டுவடம் மற்றும் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடு பற்றி சுஸ்ருதருக்கு தெரியாது. அவர் மனிதனுடைய உணரும் திறன் பகுத்தறியும் திறன் ஆகியவற்றின் மையம் மூளையல்ல இதயம் என்கிறார். [அ]
நுரையீரல் பற்றியும் அது எவ்வாறு ஆக்சிஜனை உள்ளிழுப்பதற்கும் வெளியேற்றுவதற்கும் பங்காற்றுகிறது பற்றியும் சுஸ்ருதருக்கு தெரியாது. [அ]
இதயம், மூளை, தண்டுவடம், நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரியாத சூழலில் உடல்மாற்று அறுவைச் சிகிச்சையை எப்படி செய்திருக்க முடியும்? சாத்தியமே கிடையாது. ஆனால் இந்துமத நம்பிக்கை என்ற அடிப்படையில் நம்மை நம்பச் சொல்லுகின்றனர் சங்கிகள். ஆயுர்வேதம், கணிதம், வானியல், யோக ஆகியவற்றில் இவர்கள் கட்டியமைக்கும் கதைகளும் இதுபோன்றவைதான்.
ஒவ்வொரு சமூகமும் தனது சமூக மற்றும் உற்பத்தியின் வளர்ச்சி போக்கில், புற உலகத்தைப் பற்றிய புரிதலிலிருந்து, தனக்கான மருத்துவம், வானியல், விவசாயம் இன்னும் பிறவற்றைப் பற்றிய கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் உருவாக்கி வந்திருக்கிறது. இவற்றை மதம் மற்றும் இனப்பெருமையிலிருந்து அனுகாமல் அறிவியல் (பொருள்முதல்வாதம்) பார்வையில் அணுகும் போதுதான் பழமையின் உண்மைத்தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் சங்கிகளோ தங்களது பார்பனிய மேலாதிக்கத்திற்காக காவி பாசிசத் திட்டத்திலிருந்து அனைத்தும் வேதத்தில் இருப்பதாக போலிதேசியப் பெருமையை கட்டியமைப்பதுடன்; பள்ளி – கல்லூரிகளின் மூலம் இதனைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.
- செல்வம்
https://theprint.in/india/jnu-to-hold-3-day-conference-on-indian-knowledge-systems/2683805/
[அ] மீரா நந்தாவின் Science in Safforon என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.