அகில இந்திய அளவில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவற்றை அவர் சட்டைச் செய்யவில்லை என்பதால், கடந்த ஜூலை 9-ஆம் தேதி மோடி அரசின் தொழிலாளர் – விவசாய விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து நிறைவேற்றியுள்ளன. இருப்பினும், கேரளம், மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்களில் குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்தம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவை, ஆளும் வர்க்கக் கட்சிகள், பிழைப்புவாதக் கட்சிகளின் செல்வாக்கில் உள்ள தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை உணரவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. மோடியின் மக்கள் விரோதக் கொள்கை என்பது கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களின் வாழ்வையும் தாக்கி சிதைக்கும் என்பதை உளமாற உணர வைக்கும் வகையில் தொழிற்சங்கங்களின் பிரச்சாரமும் அமையவில்லை என்பதையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டிய தேவையையும் உணர்த்துகிறது.
இந்த பொது வேலை நிறுத்தத்தில் அரசு – பொதுத்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் எவரும் கலந்துக் கொள்ளக் கூடாது. மீறி கலந்து கொள்ளும் பட்சத்தில் அன்றைய தினத்திற்கான ஊதியத்தையும், படிகளையும் No Work, No Pay என்ற அடிப்படையில் வழங்கப்பட மாட்டாது. மேலும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மோடி அரசும், ஸ்டாலின் அரசும் மிரட்டியுள்ளன. இதன் மூலம், தொழிலாளர், விவசாயி இதர உழைக்கும் மக்களின் விரோதப் போக்கை ஆதரித்து நடைமுறைப்படுத்துவதில் தாங்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே என்பதை நிரூபித்து வருகின்றனர். இதையும் மீறி வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களை, தொழிலாளர்களை வாழ்த்தி வரவேற்போம்.
இருப்பினும், இந்த பொது வேலை நிறுத்தம் தொழிலாளி, விவசாயி உட்பட பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம், இந்த மோடி அரசு மக்கள் மீதான அரசியல், பொருளாதாரத் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும், ஒரு மக்கள் விரோத அரசு, இது தூக்கி எறியப்பட வேண்டியதே என்கிற அரசியல் எந்தளவு பதிந்துள்ளது என்பதையும், இத்துடன் தமிழக சிபிஎம் செயலர் சண்முகம் அவர்கள் கூறியது போல எந்தளவு மோடி அரசுக்கு பாடம் புகட்டியுள்ளது என்பதையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டும். அப்பொழுது தான் பங்கேற்ற அனைவரும் படிப்பினைப் பெற முடியும். இல்லையெனில், இது போன்ற வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் தொடரும் பட்சத்தில், எவ்வித அனுபவங்களையும், படிப்பினைகளையும் பெறாமல் வெறும் சடங்குகளாகவே முடியும். ஏனெனில் அனுபவங்களின் தொகுப்பு தான் அறிவு.
இச்சங்கங்கள் முன்வைத்துள்ள 17 அம்ச கோரிக்கையில் அன்றாடம் ஏறிவரும் விலைவாசி உயர்வு, குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம் இல்லாதது, பழைய ஓய்வூதியம் ஒழிப்பு அரசு – பொதுத்துறைகளிலுள்ள 15 இலட்சம் வேலை வாய்ப்பை நிரப்பப்படாமல் நிராகரிப்பது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் அலட்சியப்படுத்துவது, 44 தொழிலாளர் சட்டங்களை ஒழித்து அவற்றை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றி அமைத்தது. இதன் மூலம், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரிப்பது. போனஸ் உரிமைப் பறிப்பு, 100 நாள் வேலை உத்தரவாதத்தைப் பறிப்பது போன்ற இன்னும் பல்வேறு கோரிக்கைகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பான்மை பொருளாதார வகைப்பட்டவையே.
இவை, கார்ப்பரேட் முதலாளிகள் வரை முறையற்ற சுரண்டலைத் தீவிரப்படுத்தும், இத்துடன், அளவுக்கு அதிகமான வரிச்சலுகை, வாராக்கடன் இரத்து போன்றவைகளும் கார்ப்பரேட்டுகளின் கல்லாவை நிரப்பும் என்பதில் ஐயமில்லை. இவற்றை பெரும்பான்மை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான வழிமுறையாகவே இப்போது வேலை நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தியதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
தமிழக சிபிஎம் மாநில செயலர் அவர்கள், இதற்கும் ஒரு படி மேலே போய், இந்த பொது வேலை நிறுத்தத்தின் மூலம் கார்ப்பரேட் – மதவெறி பிஜேபிக்கு பாடம் புகட்டுவோம் என்றும் சூளுரைத்துள்ளார். எப்படி புகட்டுவார்கள் என்பது குறித்து எவ்வித விளக்கத்தையும், வழிமுறையையும் முன்வைக்காமல் வாய் சவடால் அடித்ததோடு கடந்துச் செல்கிறார்.
குரல் வாக்கெடுப்பு மூலம், தொழிற்சங்கத்தை முடக்குவது, வேலை நேரத்தை அதிகரிப்பது, தொழிலாளர் பேரம் பேசும் உரிமையைப் பறிப்பது போன்ற பல்வேறு தொழிலாளர் விரோத சட்டங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது இவர்களால் ஒன்றும் அசைக்க முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக, அதாவது, தொழிலாளர் – விவசாயிகள் உட்பட பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்பட்டு வரும் இந்த பொருளாதாரத் தாக்குதல் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்(ளை)கையின் தீவிரமே என்கிற நடைமுறை அரசியல் உண்மையை எடுத்துச் சொல்லி நாடாளுமன்றத்திற்கு வெளியே அணிதிரட்டுவதை விடுத்து, பல்வேறு வர்க்கங்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை இணைத்து அவற்றின் அடிப்படையில் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வதன் மூலம் மோடி அரசை அசைக்கவோ, அதற்கு பாடம் புகட்டவோ அறவே முடியாது.
மறுகாலனியாக்கக் கொள்கையை மனித முகம் கொண்ட வகையில் நடைமுறைப்படுத்திய காங்கிரஸ், கவைக்கு உதவாது என்பதை உணர்ந்த அந்நிய – உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மறுகாலனியாக்கத்தைத் தீவிரப்படுத்தும் உறுதியான சக்தியாக காவிகளைத் தெரிவு செய்தனர். இதன் விளைவே, காவி கார்ப்பரேட் பாசிசம் அரசியல் அரங்கில் அதிகாரம் செலுத்தி வருகிறது என்பதை அரசியல் சக்திகள் அனைவரும் அறிந்த உண்மை. இயல்பாகவே, அடிமைப்படுத்துவதிலும், சுரண்டுவதிலும், தீவிரங்காட்டும் கார்ப்பரேட் முதலாளிகளும், இவற்றை அங்கீகரித்து தீவிரப்படுத்தி வரும் காவிகளும் ஒன்று கலந்த ஒரு வீரிய ஒட்டுரகம். இதை உணர்ந்து மோடி அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தையும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்கும் திசையை நோக்கி நகர்த்த வேண்டும். இதற்கு ஏதுவாக, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கங்களையும் ஒன்றுப்படுத்தி, ஓரணியில் திரட்டி பாசிசத்தை முறியடிக்கும் பாதையில் பயணிக்க வேண்டும். இதைவிடுத்து போகிற போக்கில் சவடால் அடித்துவிட்டு செல்வதன் மூலம் மோடி அரசுக்கு பாடம் புகட்ட முடியாது.
பொருளாதார தாக்குதலுக்கும், ஜனநாயக உரிமைகள் பறிப்புக்கும், ஏற்றத்தாழ்வு அதிகரிப்புக்கும் மையப்புள்ளி மறுகாலனியாக்கத்தைத் தீவிரப்படுத்தி வரும் அரசியலே இதற்கு பொறுப்பேற்று வீரியமாக நடைமுறைப்படுத்தி வரும் பாசிசக் கும்பலான ஆர்எஸ்எஸ், பிஜேபி மோடி தலைமையிலான அரசுக்கு எதிரான, ஒரு வீச்சான அரசியல் போராட்டத்தைக் கட்டியமைப்பதே இன்றைய தேவை. இவற்றை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைந்தக் கண்ணோட்டத்துடன் வீச்சாக எடுத்துச் சென்று பல்வேறு உழைக்கும் வர்க்கங்களையும் ஒரே குடையின் கீழ் திரட்டி, இந்த மோடி அரசானது மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது என்பதை நிறுவ வேண்டும். இதன் மூலமே, இந்த அரசைத் தூக்கியெறிய வேண்டிய அவசியத்தையும் பதியவைக்க முடியும்.
இதை நோக்கியே, பிரச்சாரம், கிளர்ச்சி, பொது வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டங்கள் என மக்கள் திரள் போராட்டங்களும், எழுச்சிகளும் அமைய வேண்டும். இதன் தீவிரமே, காவி – கார்ப்பரேட் பாசிசம் அரங்கேற்றி வரும் மறுகாலனியாக்கத் தீவிரத் தாக்குதலையும் முறியடிக்கும். அதாவது, முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்.
வெறும் சவுடால் அடிப்பது மூலமோ, வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமே வைத்து போராட்டங்களை முன்னெடுப்பது மூலமோ காவி – கார்ப்பரேட் பாசிசத்தையும் அவை அரங்கேற்றி வரும் மறுகாலனியாக்கத் தீவிரத் தாக்குதலையும் முறியடிக்க முடியாது. மேலும், மோடி அரசின் அல்லக்கைகளான நிதின் கட்கரி போன்ற ஒன்றிய அமைச்சர்களின் வறுமை ஒழிப்பும், வேலை வாய்ப்பை உருவாக்குவதுமே எங்கள் நோக்கம் என்கிற ‘தங்களின் நாடாளுமன்ற சக பாடிகளின்’ பொய்ப்பித்தலாட்டத்தை, அலறி ஆர்ப்பாட்டம் செய்வதை அடக்கவே முடியாது.
- மோகன்
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் பெயரளிகளான சடங்கு போராட்டங்களை மட்டுமே நடத்தியது. தமிழகத்தில் எங்குமே போர் குணமான போராட்டங்கள் மறியல்கள் வேலை நிறுத்தங்கள் நடைபெறவில்லை.