பட்டாசு ஆலைகள் வெடித்து சிதறுவதும், தொழிலாளர்களின் உயிர் இழப்பும்,
முக்கூட்டணியின் கூட்டுக் களவாணித்தனமே!

பட்டாசு நகரமான சிவகாசி சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில், எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. 8 பேருக்கு மேல் உயிரைப் பறிக்கொடுத்ததோடு, பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய பட்டாசு என்ற பெயரில், 1925-இல் தொடங்கப்பட்ட பட்டாசு உற்பத்தியானது, ஐயன், அணில் மற்றும் சேவல் என்கிற பல்வேறு பெயர்களில் உற்பத்தி செய்யப்பட்டு நாடெங்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அன்றிலிருந்து இன்று வரை பட்டாசுத் தொழிலில் விபத்துகளும், உயிரிழப்புகளும் நின்ற பாடில்லை. தொடர்ச்சியாகவே நீடித்து வருகிறது.

மேற்கண்ட, கொடுமைகளுடன் தொடரும் பட்டாசு உற்பத்தியானது, இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் சிவகாசியில் மட்டுமே 85% முதல் 90% வரை உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது. சிவகாசியில் மட்டும் 8,000 க்கும் மேற்பட்ட ஆலைகளில், குழந்தை தொழிலாளர்கள் உட்பட 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆபத்தான வேதியியல் பொருள்களுடன் வினையாற்றி வருகின்றனர். அவர்களின் அவல வாழ்நிலையைச் சொல்லி மாளாது.

உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு பட்டாசு உற்பத்திக்கு, உரிய பாதுகாப்பு அம்சங்கள், கவச உடைகள், வெடிப்பொருட்களை கையாள்வதற்கான வழிமுறைகள் என ஒவ்வொரு விசயத்திலும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் குறைச்சல் இல்லை. ஆனால், இவற்றை எந்த ஆலைகளும் முறையாகப் பின்பற்றுவது இல்லை. ஏன் அறவே பின்பற்றவில்லை என்றே கூறலாம்.

இதற்கான பொறுப்பு அதிகாரிகளும், இவ்வாலைகளில் கையாளப்பட வேண்டிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் முறையாக, கராராக மேற்கொள்கிறார்களா என்பதும், சோதிப்பதும் நடந்தேருகிறதா என்பதும் சந்தேகமே. அப்படியே, அரிதாக மேற்கொள்ளப்பட்டாலும் ஆலை முதலாளிகளிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு ‘அட்ஜஸ்’ செய்வதும் நடந்திருக்கிறது. இதுபோன்ற முறைகேடுகள் தான் தொடர்ந்து நடந்து வரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணங்களாக அமைகின்றன.

கடந்த ஆண்டு கூட இதே போன்று சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் 10 பேரின் உயிர் பறிக்கப்பட்டதோடு, பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். அச்சமயம் தேசிய பசுமைத் தீர்ப்பாயக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கொண்டக் குழு ஆய்வு செய்துள்ளது. அவற்றில், ஏகப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதைக் கண்டறிந்து அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது. இதற்கு, எந்தவித நடவடிக்கையையும் எடுக்காததன் விளைவே, இவ்வருடத்தில் நடந்தேறிய கோர வெடி விபத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது.

இதுபோன்ற வெடி விபத்துகளை தடுக்க, இனியும் நடந்தேறாமல் முற்றுப்புள்ளி வைக்க, அனுபவங்களில் இருந்து படிப்பினையைப் பெற துப்பில்லாத மக்கள் பிரதிநிதிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதில் மட்டும் கைதேர்ந்தவர்கள். உயிரைப் பணயம் வைத்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களைக் கொடூரமாகச் சுரண்டுவதற்கும், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் ஆலையை நடத்துவதற்கும் பச்சைக்கொடி அசைத்து வரும் ஆட்சியாளர்களும் ஒவ்வொரு விபத்தின் போதும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்பின் போதும் வருத்தம் தெரிவிப்பதும், வேதனை அடைவதும் நிவாரணத்தை அறிவிப்பதும் என்கிற சடங்குகளோடு முடித்துக் கொள்வர்.

நாட்டின் வளர்ச்சிக்கும், வருவாய்க்கும் அதிகபட்சமான பலன்களை உருவாக்கித் தரும் பட்டாசு உற்பத்தித் தொழிலை முறையாக உரிய பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும். தொழிலாளர்களையும் ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்ய வேண்டும். மாறாக, சுரண்டலையே பிரதானப்படுத்தி இலாப வெறியையே குறியாகக் கொண்டு சீரழித்து வரும் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கூட்டு களவாணித்தனம் தொடர்ந்து அரங்கேருமானால், பட்டாசு உற்பத்தி தொழிலையும், அதற்கு உயிரைக் கொடுத்து உழைத்து வரும் தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியாது. தொடரும், பட்டாசு ஆலை வெடிப்பையும், உயிர்ப் பறிப்பையும் தடுக்க முடியாது.

தொழிலாளர்கள் அனைவரும் ஒரே வர்க்கமாக, அணிதிரண்டு போராடுவது மூலமே இந்தக் கூட்டு களவாணித்தனத்திற்கு குறைந்தபட்ச தடைகளையாவதும் ஏற்படுத்த முடியும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன