இரயில் கட்டண உயர்வு: மோடி அரசின் அடுத்த இடி!

வருவாயை அதிகரிக்க தற்போதைய கட்டண உயர்வு போதாது என்கின்றனர் அதிகாரிகள். பீகார், மேற்குவங்கம் சட்டசபைத்தேர்தலுக்குப் பிறகு புறநகர் இரயில் பயணக் கட்டணமும், சீசன் டிக்கெட் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகம்.

“நான் நாட்டுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ரயில்வே யாரும் கற்பனை செய்திருக்க முடியாத மாற்றத்தைக் காணப்போகிறது” என்று, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்ததொரு பொதுக்கூட்டத்தில் பேசினார் மோடி. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வைத் தவிர வேறெந்த பெரிய மாற்றமும் இந்த இடைப்பட்டக் காலத்தில் இந்திய இரயில்வே துறையில் நடைபெறவில்லை.

தற்போது ஜுலை முதல் தேதியிலிருந்து புதிய இரயில் பயணக் கட்டணம் அமலுக்கு வந்திருக்கிறது. இனி மெயில், எக்ஸ்பிரஸ் வண்டிகளில் குளிர்சாதனம் இல்லாத பெட்டிகளில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, முதல் வகுப்பு ஆகியவற்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டிருக்கிறது.

மெயில், எக்ஸ்பிரஸ் வண்டிகளில் குளிர்சாதன வகுப்புகளில் இருக்கை வசதி, மூன்றடுக்கு படுக்கை வசதி, இரண்டு அடுக்கு படுக்கை வசதி, முதல் வகுப்பு படுக்கை வசதி ஆகியவற்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டிருக்கிறது.

தேஜஸ், வந்தே பாரத், சதாப்தி, அந்தியோதயா உள்ளிட்ட சிறப்பு இரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டிருக்கிறது.

சாதாரண வண்டிகளில் இரண்டாம் வகுப்புக்கு முதல் 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வும் இல்லை. 501 க்கு மேல் 1500 வரை ஐந்து ரூபாய் உயர்வு. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ஒரு பயண கிலோமீட்டருக்கு அரை பைசா கட்டண உயர்வு என இக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பிற பயணக்கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.

இந்தக் கட்டண உயர்வின் மூலம் வருடத்திற்கு 1450 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என இரயில்வே அமைச்சகம் கூறுகிறது. ஏற்கனவே நடப்பு இரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் போக்குவரத்தின் மூலம் 92,800 கோடி வருவாய் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் இந்த இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என்பதால் பயணக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் என்கின்றனர் இரயில்வேதுறை உயர் அதிகாரிகள்.

ஏற்கனவே 2024 டிசம்பரில் இரயில்வே பாராளுமன்ற நிலைக்குழுவானது, பயணிகள் போக்குவரத்தினால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டக் குளிர்சாதன வகுப்புகளின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தது. ஆனால் அப்போது நடந்த மாநிலத் தேர்தல்களையொட்டி அப்பரிந்துரையை மோடி அரசு அமல்படுத்தவில்லை. தற்போது பீகார், மற்றும் மேற்குவங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு குளிர்சாதன வகுப்பு கட்டணமும், புறநகர் பயண கட்டணமும், சீசன் டிக்கெட் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகம்.

அதிகபட்சமாகக் கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா தானே உயர்த்தியிருக்கிறோம் இது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது, 2013 மற்றும் 2020 இல் செய்யப்பட்ட கட்டண உயர்வைவிட இது குறைவுதான் என்று கட்டண உயர்வை நியாப்படுத்திதுகிறது மோடி அரசாங்கம். இங்கு எவ்வளவு விலையேற்றப்பட்டது என்பதைவிட இதற்குப் பின்னால் உள்ள நோக்கம்தான் கவனிக்கவேண்டியது.

இரயில் பயணிகளின் நலன்சார்ந்த பல திட்டங்களை மோடி கும்பல் படிப்படியாக நிறுத்திவருகிறது. உதாரணமாக, இரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவந்த கட்டணச்சலுகைகளை கொரோனா காலத்தில்(2020 இல்) நிறுத்தியது. இதன் மூலம், இந்திய இரயில்வே கடந்த ஐந்து வருடத்தில் 8,913 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாகவும் ஏற்கனவே பயணக் கட்டணத்தில் சராசரியாக 46 சதவிகிதம் கட்டணச் சலுகைகள் வழங்குவதால் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தொடர வாய்ப்பு இல்லை என்றும் இரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் பேசியிருக்கிறார். அதேநேரத்தில், இரும்புத்தாது மற்றும் நிலக்கரி போக்குவரத்தை பயன்படுத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு 10% முதல் 20% வரை சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிபிஎம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வேங்கடேசன் கூறுகிறார்.

சாமானிய மக்கள் நீண்ட தூர பயணத்திற்கும், அன்றாடம் நகரங்களுக்கு வேலைக்கு வருவதற்கும் இரயில் போக்குவரத்தையே பெரும்பான்மையாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசோ, மக்களின் தேவைக்கு ஏற்ற விகிதத்தில் இரயில் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மேட்டுக்குடிகளுக்கான வந்தேபாரத், புல்லட் இரயில் போன்ற சொகுசு இரயில் திட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது. 2047 க்குள் 4500 வந்தேபாரத் இரயில்களும் மூன்று புல்லட் இரயிலும் கொண்டு வரப்போவதாக பாஜக கூறுகிறது.

சமீபத்திய தரவுகளின் படி, மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தக்கூடிய இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி சீட்டுகளின் அளவு மற்றும் முன்பதிவு செய்யாத பெட்டிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் குளிர்சாதன முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் வந்தே பாரத் இரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதனால் இரயில் சேவையை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் ஆர்டிகல் 14 இணையத்தளம் கூறுகிறது.

ஆசியாவிலேயே பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வை துறையில் தீவிரமாக தனியார்மயத்தை அமல்படுத்தில் வருவதின் மூலம் இரயில் பயணத்தையே மேட்டுக்குடியினர் மட்டும் பயன்படுத்தும் ஆடம்பர பொருளாக மாற்றி வருகிறது மோடி அரசு. இரயில்வே நவீனமயகாக்கல் என்ற பெயரில் குளிர்சாதன இரயில்களுக்கு முன்னுரிமை, பயணக்கட்டண உயர்வு, இரயில் சேவைகளுக்கான கட்டண உயர்வு, இரயில் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது என்று சாதாரண மக்கள் இரயிலைப் பயன்படுத்த முடியாத நிலையை நோக்கி நகர்த்தப்படுகின்றனர்.

அமலுக்கு வந்துள்ள கட்டண உயர்வு குறைவுதான் ஆனால் இவர்கள் இதோடு நிற்கப்போவதில்லை. கூடிய விரைவில் பிற இரயில் பயணக் கட்டணங்களும் அதிகரிக்கவே வாய்ப்பு என சூசகமாகச் சொல்கிறது இரயில்வே நாடாளுமன்ற நிலைக்குழு. உழைக்கும் வர்க்கத்தினரைக் கடுமையாக பாதிக்கக்கூடிய இக்கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டத்தின் மூலமே இதனை நாம் தடுத்து நிறுத்த முடியும்.

  • செல்வம்

https://theekkathir.in/News/tamilnadu/madurai/small-hike-in-train-fare-is-an-eye-wash-says-su-venkatesan-mp  

https://article-14.com/post/costlier-shoddier-fewer-passengers-losing-money-beyond-vande-bharat-bullet-trains-the-reality-of-the-railways-6653f6961744e

https://article-14.com/post/charge-dismissed-a-muslim-cleric-is-living-in-the-shadow-of-a-baseless-terrorism-case–6865f9534d347

https://indianexpress.com/article/india/railway-fare-hikes-july-1-ac-non-ac-travel-10097957/

https://economictimes.indiatimes.com/industry/transportation/railways/railways-earned-additional-rs-8913-crore-in-5-years-by-withdrawing-senior-citizens-concession-rti/articleshow/120162257.cms?from=mdr

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன