பெயரளவிலான ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தைகளைக் கூட அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து நீக்கத் துடிக்கும் காவி பாசிச கும்பல்

ஒன்றிய பாஜக அரசு, அவசரநிலை திணிக்கப்பட்டதன் 50-வது ஆண்டு நாளான ஜூன் 25-ஐ ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ (அரசியலமைப்பு கொலை நாள்) ஆக அனுசரித்தது. இதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைவர்கள் பலர் அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் அரசால் அரசியலமைப்பு முகப்புரையில் சேர்க்கப்பட்ட ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் எனப் பேசி வருகிறார்கள்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, அவசரநிலையின் போது காங்கிரஸ் அரசாங்கத்தால் முகவுரையில் சேர்க்கப்பட்ட ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் எனப் பேசினார்.

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், இந்திய அரசியலமைப்பின் முகவுரையிலிருந்து ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சைக்குரிய கருத்தை ஆதரித்து இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டின் நாகரிகம், செல்வம் மற்றும் அறிவை இழிவுப்படுத்துவதாகும் என்றும், சனாதன உணர்விற்கு ஒரு அவமானம் என்றும், இந்த மாற்றங்கள் இந்தியாவிற்கு இருத்தலியல் சவால்களை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார். மேலும், டாக்டர் அம்பேத்கரின் முக்கியமான ஒரு மேற்கோளை வாசித்துக் காட்டினார். இதில், அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளை நாட்டை விட முன்னிறுத்தினால் நாட்டின் சுதந்திரம் ஆபத்தில் முடியும் என அம்பேத்கர் எச்சரித்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டி, அரசியலமைப்பின் ஆன்மாவாக முகவுரையை விவரித்த அவர், அரசியலமைப்பை யாரும் மாற்ற முடியாது. முகவுரை அரசியலமைப்பின் விதை போன்றது என்று தெரிவித்தார்.

அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சைக்குரிய கருத்தை ஆதரித்து வாரணாசியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், இந்திய கலாச்சாரத்தின் மையக்கரு ‘சர்வ தர்ம சம்பவ்’ (அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை) என்றும், மதச்சார்பின்மை அல்ல என்றும் கூறினார்.

ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம், முகவுரையிலிருந்து ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ வார்த்தைகளை நீக்கும் கோரிக்கையை பா.ஜ.க. ஆதரிக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “யார் இதை விரும்ப மாட்டார்கள்? சரியாகச் சிந்திக்கும் ஒவ்வொரு குடிமகனும் இதை ஆதரிப்பார்கள். ஏனெனில், இந்த வார்த்தைகள் டாக்டர் அம்பேத்கர் மற்றும் குழுவினர் எழுதிய அசல் அரசியலமைப்பு ஆவணத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்” என்று பதிலளித்தார்.

இந்தியாவின் நாகரிகம், செல்வம் மற்றும் அறிவை இழிவுப்படுத்தி, சனாதன தர்மத்தை அவமானப்படுத்தும் ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகளை அரசியலமைப்பின் முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் என ஹோசபாலே, தன்கர், சவுகான், ஜிதேந்திரர் ஆகியோர் கூறுகின்றனர். இந்த வாதம் சரிதானா?

சரியாகச் சிந்திக்கும் ஒவ்வொரு குடிமகனும் இதை எதிர்ப்பார்கள். ஏனென்றால் சனாதன தர்மம் என்றுதான் இருந்திருக்க வேண்டும். மாறாக ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்று இருப்பது, தாங்கள் விரும்பும் பாரத காலச்சாரத்திற்கு அதாவது சனாதன தர்மத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டுள்ள இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம். ஒரே பண்பாடு என்று இந்துராஷ்டிரம் அமைப்பதுதான் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலின் உண்மையான நோக்கமாகும்.

இந்த நோக்கத்திலிருந்து பார்க்கும் பொழுது, ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் 1947-இல் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்பிருந்தே இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் என்றும், இதன் பொருள் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை கொடுப்பது என்றும் பேசிவருகிறார்கள். இப்படிப் பேசுவதும், ஆசன வாயல் சிரிப்பதும் வேறுவேறல்ல.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட தன்கர், சவுகான், ஜிதேந்திரர் பேசுவது நகைமுரண். மேலும் அரசியலமைப்பை யாரும் மாற்ற முடியாது. முகவுரை அரசியலமைப்பின் விதை போன்றது என்றும், ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் டாக்டர் அம்பேத்கர் மற்றும் குழுவினர் எழுதிய அசல் அரசியலமைப்பு ஆவணத்தில் இல்லை என்றும், இந்திய கலாச்சாரத்தின் மையக்கரு ‘சர்வ தர்ம சம்பவ்’ (அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை) என்றும், மதச்சார்பின்மை அல்ல என்றும் கூறியுள்ளனர்.

பாசிஸ்டுகள் முட்டாள்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. மேலும், இதே கருத்தை வழியுறுத்தி 23 செப்டம்பர், 2024 அன்று “மதச்சார்பின்மை என்ற வார்த்தை நம் அரசியல் சாசனத்தில் இடம் பெறவில்லை. சில தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காக அது இடையில் செருகப்பட்ட வார்த்தை” என, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

அதேபோல் ஜூலை 2020-இல், டாக்டர் பல்ராம் சிங் என்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், அரசியலமைப்பின் முகப்புரையில் ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்கிற வார்த்தைகளைச் சேர்ப்பதை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். பின்னர், முன்னாள் சட்ட அமைச்சர் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆகியோரும் இதேபோன்ற எதிர்ப்புகளுடன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை அரசியலமைப்பில் இருந்து வேண்டுமென்றே அதை உருவாக்கியவர்களால் விலக்கப்பட்டதாகவும், பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கும் போது ‘சோசலிஸ்ட்’ என்ற வார்த்தை ஒன்றிய அரசின் கைகளைக் கட்டிப்போட்டதாகவும் அவர்கள் வாதிட்டனர்.

இருப்பினும், ஒரு குறுகிய 7 பக்க உத்தரவில் நீதிமன்றம் இந்த வாதங்களை நிராகரித்தது, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர்  “வாதங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் பலவீனங்கள் வெளிப்படையானவை” என்று குறிப்பிட்டனர்.

மேலும், இந்தியா மதச்சார்பின்மை பற்றிய அதன் சொந்த விளக்கத்தை உருவாக்கியுள்ளது, அதில் அரசு எந்த மதத்தையும் ஆதரிக்காது அல்லது எந்த நம்பிக்கையின் பேரிலுள்ள நடைமுறையையும் தண்டிக்காது. முகவுரையில் கூறப்பட்டுள்ள லட்சியங்கள் – சகோதரத்துவம், சமத்துவம், தனிமனித கண்ணியம் மற்றும் சுதந்திரம் – “இந்த மதச்சார்பற்ற நெறிமுறைகளைப் பிரதிபலிக்கிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இதேபோல், ‘சோசலிஸ்ட்’ என்ற வார்த்தையும் இந்தியாவில் ஒரு தனித்துவமான பொருளைக் கொண்டதாக உருவாகியுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. சோசலிசம் என்பது ”பொருளாதார மற்றும் சமூக நீதியின் கொள்கையைக் குறிக்கிறது, இதில் எந்தவொரு குடிமகனும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படவில்லை என்றும், தனியார் துறையின் மீது எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை” என்றும் அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே “முகவுரையில் சேர்க்கப்பட்டவை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களால் பின்பற்றப்படும் சட்டங்கள் அல்லது கொள்கைகளை கட்டுப்படுத்தவில்லை அல்லது தடுக்கவில்லை, அத்தகைய நடவடிக்கைகள் அடிப்படை மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறவில்லை” என்றும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் 42-வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்குப் பிறகு அதை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அதேபோல் மற்றொரு வழக்கில், ஹிந்துத்வா என்ற வார்த்தைக்குப் பதிலாக, இந்திய அரசியலமைப்பு என்று பொருள்படும் பாரதிய சம்விதானத்வா என்று மாற்றக் கோரி டாக்டர் எஸ்.என். குந்த்ரா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளுக்கு நெருக்கமாக இருப்பதால், இந்துத்துவா பெயரை பாரதிய சம்விதானத்வா என்று மாற்ற வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தைத் தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு ஏற்கவில்லை. ஹிந்துத்வா தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை உறுதிசெய்யும் வகையில், இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக அமர்வு கூறியுள்ளது.

ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலால் தொடுக்கப்பட்ட இவ்வழக்குகளின் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு, புதிதாகச் சொல்வதுபோல் நாடகமாடுவதற்கு ஒரு முரட்டுத் தைரியம் வேண்டும். அது இந்தக் கும்பலிடம் நிறையவே இருக்கிறது. எனவேதான் அறிவுக்கும், அறிவியலுக்கும் தொடர்பில்லாத சனாதன தர்மத்தை வைத்துக்கொண்டு இல்லாத இராமனை, அயோத்தியில் தான் பிறந்தார் அதுவும் பாபர் மசூதியில் மத வழிபாடு நடத்தும் இடத்தில் தான் பிறந்தார் என்றும், இல்லாத இராமன் இராமேஸ்வரத்திற்கும் – இலங்கைக்கும் இடையில் பாலம் கட்டினார் என்றும், இல்லாத சரஸ்வதி நதியை இருப்பதாகச் சொல்லி மக்களின் வரிப்பணத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, சிந்து சமவெளி நாகரீகத்தைச் சிந்து சரஸ்வதி நாகரீகமாக மாற்றுவது என்றும் கூறிவருகிறார்கள்.

அதேபோல் அயோத்தியில் நீதிமன்றத்தின் வாயிலாகவே, இராமர் கோவில் கட்டியதைத் தொடர்ந்து ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுவது, தாஜ் மஹாலை தேஜோ மஹாலயா கோயில் என்றும் அங்குப் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகள் சர்ச்சைக்குரிய பின்னணியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது, குதூப் மினார் வளாகத்தில் உள்ள குவ்வதுல் இஸ்லாம் மசூதியில் பூஜையும், அர்ச்சனையும் நடத்த வேண்டும் என்று கோருவது, கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கின் மனுவை ஏற்று விசாரிக்க மதுரா மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, டெல்லி ஜாமா மசூதியில் இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளன என இந்து மகாசபை கூறுகிறது. அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய கடிதம் எழுதப்பட்டது. இப்படி அனைத்தும் விசாரணைக்கு உகந்ததாக மாற்றப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில், தற்போது அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் அரசால் அரசியலமைப்பு முகப்புரையில் சேர்க்கப்பட்ட ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் எனப் பேசி வருகிறார்கள். இருப்பினும் இந்த வார்த்தைகள் எப்பொழுதும் பொருளற்றதாகவே இருந்து வந்திருக்கிறது அதாவது அதற்குரிய பொருளில் இல்லாமல் வேறொரு பொருளில்தான் இருந்து வந்திருக்கிறது. இதனை உச்ச நீதிமன்ற தீர்ப்பும் உறுதிசெய்திருக்கிறது. இதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாத ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல், தாங்கள் உருவாக்க இருக்கும் புதிய இந்தியாவில் பெயரளவிற்குக் கூட சோசலிஸமோ, மதச்சார்பின்மையோ இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை நாடு என்பது மக்கள் அல்ல, சனாதன தர்மம். இதனை ஏற்றுக்கொண்டு பின்செல்பவர்களே மக்கள் மற்றவரெல்லாம் மாக்கள்.

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

https://www.seithipunal.com/politics/vice-president-expressed-support-for-idea-of-removing-words-socialis

https://www.maalaimalar.com/news/national/the-words-socialism-and-secularism-should-be-removed-from-the-preamble-of-the-constitution-rss-chief-778237

https://tamil.hindusthansamachar.in/Encyc/2025/6/27/RSS-Secretary-Speaks-about-Emergency.php

https://tamil.indianexpress.com/india/vice-president-jagdeep-dhankhar-socialist-secular-preamble-9445640

https://tamil.indianexpress.com/india/rss-gen-secy-dattatreya-hosabale-socialist-secular-words-preamble-tamil-news-9441258

https://indianexpress.com/article/research/why-nehru-and-ambedkar-did-not-include-secularism-in-the-constitution9587266-9587266/

https://tamil.indianexpress.com/explained/how-socialist-and-secular-were-inserted-in-the-preamble-why-supreme-court-ruled-they-will-stay-7655882

https://www.thehindu.com/news/national/supreme-court-ruling-on-socialism-secularism/article68915865.ece

https://www.thehindu.com/news/national/watch-supreme-courts-verdict-on-preamble-of-the-constitution/article68915952.ece

https://www.publicjustice.page/2024/10/blog-post_85.html

https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/mdmk-vaiko-has-accused-the-rss-and-bjp-of-trying-to-change-the-constitution-ray/articleshow-ih0dc6i

https://editorialsintamil.blogspot.com/2024/09/secularism.html

https://editorialsintamil.blogspot.com/2025/06/50.html

https://www.dinamalar.com/news/india-tamil-news/petition-seeking-change-of-hindutva-name-dismissed-/3761359

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/secularism-is-the-interjection-word-governor-ravi-speech-/3737929

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன