மோடியின் நண்பர்களான பெரும் முதலாளிகளை ஒழிக்காமல் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

பெரும் முதலாளிகள், பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்களை மடைமாற்றி, அதிக விலைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வது அல்லது வெளிநாட்டு ஆலோசனை நிறுவனங்களுக்குப் பல நூறு கோடி ரூபாய்களை கட்டணமாகக் கொடுப்பதன் மூலம் அவற்றை இந்தியாவைவிட்டு வெளியே கொண்டு சென்று மொரீசியஸ் போன்ற நாடுகள் மூலமாக மீண்டும் இந்தியாவிற்குள் முதலீடுகளாகக் கொண்டுவருகிறார்கள். இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சுவிஸ் வங்கி போன்ற வெளிநாட்டு வங்கிகள் மூலமாக நடைபெறுகின்றன.

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு செய்தி, சமீபத்தில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான பேசு பொருளானது, 2023-ஆம் ஆண்டில் 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத்  தொகை கடந்த ஆண்டில் மட்டும் மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்து, 37,600 கோடி ரூபாயாக  உள்ளது.

2014-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் ஊழல்களைப் பட்டியிலிட்ட, நரேந்திர மோடி, ஊழல் மூலம் சம்பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியா கொண்டுவந்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் தலைக்கு 15 இலட்சம் வரை கொடுக்க முடியும் எனப் பேசினார். தான் பிரதமராகப் பதவியேற்ற 100 நாட்களுக்குள், சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும்  இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு வருவதாக மோடி அப்போது சவடால் அடித்தார்.

ஆனால் இன்று மோடியின் ஆட்சி தொடங்கி 11 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றுவரை வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தில் ஒரு ரூபாயைக்  கூட மோடி அரசு பிடிக்கவும் இல்லை, இந்தியாவிற்குக் கொண்டுவரவும் இல்லை. மாறாக கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து சாமானிய மக்களை, தங்களுடைய சேமிப்புப் பணத்தை எடுப்பதற்குகூட வங்கி வாசலில் நிற்க வைத்தார் நரேந்திர மோடி.

தற்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் இந்த அளவிற்கு அதிகரித்துள்ளது குறித்து விளக்கமளித்துள்ள நிதி அமைச்சகம்[1], சுவிட்சர்லாந்தின் வங்கிகளில் உள்ள பணம் அனைத்தையும் கருப்புப் பணம் எனக் கூறிவிட முடியாது என்றும் அதில் தனிநபர்களது கணக்குகள் மட்டுமன்றி பெரும் நிறுவனங்கள் மற்றும் பிற வங்கிகளின் கணக்குகளும் அதில் அடங்கும் எனவும் கூறியிருக்கிறது. அத்துடன், கடந்த பத்து ஆண்டுகளாக ஸ்விட்சர்லாந்து வங்கிகளுடன் இணைந்து இந்திய அரசின் வருமானவரித்துறை தொடர்ந்து செயலாற்றுவதால்  பல புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் கருப்புப் பணம் பதுக்கப்பட்டால் இந்தியாவிற்கு சுவிஸ் வங்கிகள் உடனே தகவல் தெரிவித்துவிடுவதாகவும் கூறியிருக்கின்றது.

இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக, பலரும் வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் குறித்துக் கணக்கு காட்ட தொடங்கியிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். சுவிஸ் வங்கி கணக்குகளில் உள்ள பணம் பெரும்பாலும், நேரடி வைப்புத் தொகையாக இல்லாமல் சட்டப்பூர்வ வழிகளில் வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் வந்தடைந்ததாகவும் கூறியிருக்கின்றனர்.

இங்கே கருப்புப் பணத்திற்கு ஒன்றிய நிதி அமைச்சகம் புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது சட்டப்பூர்வமாக இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பான வகைகளில் சம்பாதிக்கப்பட்ட கருப்புப் பணமாக இருந்தாலும் கூட, வருமானவரி தாக்கல் செய்யும் போது அந்தப் பணத்தை கணக்கில் காட்டினாலோ அல்லது ஒரு வங்கியில் நேரடியாக முதலீடு செய்துவிட்டு அந்தக் கணக்கில் இருந்து சுவிஸ் வங்கியின் கணக்கிற்கு பரிமாற்றம் செய்தாலோ அந்தக் கருப்புப் பணம் வெள்ளையாக மாறிவிடுவதாக ஒன்றிய நிதியமைச்சகம் கூறுகிறது.

நிதியமைச்சகத்தின் இந்த வரையறை  மோடியின் நண்பர்களான பெரும் பணக்கார முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்த வழிமுறையைப் பின்பற்றி பல ஆயிரம் கோடி ரூபாய்  மதிப்பிலான கருப்புப் பணத்தை பெரும் முதலாளிகள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிட்டு மீண்டும் இந்தியாவிற்குள் அந்நிய நேரடி முதலீடுகளாகத் தங்களது நிறுவனங்களுக்கே கொண்டு வந்திருக்கிறார்கள்.

கருப்புப் பணம் என்றால் மெத்தைக்கு அடியில் கட்டுக் கட்டாக பதுக்கிவைக்கப்பட்ட பணம் என நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நவீன தாராளவாதம் தொடங்கிய பிறகு, இன்னும் குறிப்பாக 2010-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு கருப்புப் பணத்தைக் கையாள்வது மிகப்பெரிய அளவில் மாறியிருக்கிறது. முன்பு போல கருப்புப் பணம் என்பது நேரடியாக பணமாகவோ, ரியல் எஸ்டேட் டீல்களாகவோ, தங்கக் கட்டிகளாகவோ கைமாற்றப்படுவதில்லை.

கருப்புப் பணத்தைக் கைமாற்ற பெரும் முதலாளிகள் பல நவீன யுக்திகளைத் தற்போது கையாண்டு வருகிறார்கள். முதலில் தங்களது பொருட்கள், மிக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதாக போலியான கணக்குகளை உருவாக்குகின்றனர். அல்லது இல்லாத ஒரு கன்சல்டன்சி நிறுவனத்திற்கு தங்களுக்கு ஆலோசனை வழங்கியதற்காகப்  பல நூறு கோடி ரூபாயை  கட்டணமாகச் செலுத்தியதாக கணக்குக்  காட்டுகின்றனர். இந்தப் பணத்தை மொரீசியஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதற்கென உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்களின் (shell companies) கணக்குகளுக்கு மாற்றிவிடுகின்றனர். பின்னர் அந்தப் பணத்தைத் தங்களது நிறுவனங்களுக்கு நேரடி அந்நிய மூலதனமாகவோ, வென்ட்சர் கேபிடல் முதலீடாகவோ அல்லது கடன்களாகவோ மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வருகின்றனர். இந்தப் பரிவர்த்தனையின் ஒவ்வொரு நடவடிக்கையும் வங்கிகள் வழியாகவே செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டு புத்தகங்களில் குறிக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இவை சட்டப்பூர்வ வரிக் கணக்குகளாகவும் தாக்கல் செய்யப்படுகின்றன.

மேற்பரப்பில் பார்ப்பதற்கு சட்டப்பூர்வ பரிவர்த்தனையைப் போல இருந்தாலும் இந்தச் சுழற்சியின் ஒரு முனையில் நுழையும் கருப்புப் பணம், மறுமுனையில் வெளுக்கப்பட்டு வெள்ளையாக வெளியே வருகின்றது. பெரும் முதலாளிகளின் இந்தத் தகிடுதித்தங்கள் எல்லாம் இந்திய அரசுக்குத் தெரியாதது அல்ல. அம்பானி, அதானி  உள்ளிட்ட பெரும் தரகு முதலாளிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப்  பல சர்வதேச பத்திரிக்கைகளும் புலனாய்வு அமைப்புகளும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கின்றன. ஆனால் அந்த வழக்குகளில் இதுவரை ஒரு முதலாளி கூட தண்டிக்கப்படவில்லை.

2014-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி விநியோகம் செய்த அதானி குழுமம் அதனை வெளிநாடுகளில் குறைவான விலை கொடுத்து வாங்கிவிட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து மிக அதிக விலை வசூலித்துக் கொள்ளையடித்ததாக பினான்சியல் டைம்ஸ் நாளிதழும், ஓ.சி.சி.ஆர்.பி. என்ற தன்னார்வ நிதி புலனாய்வு நிறுவனமும் இணைந்து அம்பலப்படுத்தின[2]. இந்தப்  பரிவர்த்தனை முழுவதும் மொரீசியஸ் மற்றும் பிரிட்டீஸ் விர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் நடந்திருக்கின்றன.

அதே மொரீசியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நான்கு நிறுவனங்கள் அதானியின்  பங்குகளில் மட்டும் முதலீடு செய்திருப்பதும் புலூம்பெர்க் நடத்திய ஆய்வில் அம்பலமானது[3]. இந்த நான்கு நிறுவனங்களின் உரிமையாளர்களும், இந்தியாவில் கடன் வாங்கி திவாலானதாக கணக்குக் காட்டிவிட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பவர்கள். இவர்கள் இது போல பல போலியான நிறுவனங்களை உருவாக்கி அதானியின்  கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அதன் பிறகு ஹிடன்பெர்க்கின் அம்பலப்படுத்தல்கள் எவ்வாறு அதானியின்  மருமகனே நேரடியாக மொரீசியஸ் நாட்டில் போலி நிறுவனங்களைத் தொடங்கி இந்தியாவிலிருந்து வெளியேறிய கருப்புப் பணத்தை மீண்டும் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்தார் என்பதை அம்பலப்படுத்தியது. பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை இந்த வழக்குகள் எதிலும் விசாரணை முழுமையாக நடைபெறவே இல்லை.

அதானி இது போல நிலக்கரியை வைத்து ஊழல் செய்த கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றினார் என்றால், அம்பானி சகோதரர்களோ அதானிக்குத்  தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் பலமுறை நிரூபித்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான உபகரணங்களை மிக அதிக விலை கொடுத்து வாங்கியதன் மூலமாக சுமார் 6500 கோடி ரூபாய்  அளவிற்கான கருப்புப் பணத்தை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று மீண்டும் கருப்புப் பண சொர்க்கங்களின் வழியாக இந்தியாவிற்குத் திரும்ப கொண்டுவந்திருக்கிறது[4]. அண்ணன் முகேஷ் அம்பானியின் நிறுவனம் வெளிநாடுகளுக்குக் கடத்திய இந்தக் கருப்புப் பணம் தம்பி அனில்  அம்பானியின் போலி நிறுவனங்கள் மூலமாக மீண்டும் இந்தியாவிற்குள் அந்நிய முதலீடுகளாகத் திரும்ப வந்திருக்கின்றன .

அம்பானி அதானியைப்  போன்றே எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெரும் பணக்கார தரகு முதலாளியான எஸ்ஸார் குழுமமும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்க்கு மிக அதிக விலை கொடுத்து வாங்கியதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்  கருப்புப் பணத்தை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றதாகக்  குற்றஞ்சாட்டப்பட்டது[5]. இந்தப் பணமும் வெள்ளையாக மாற்றப்பட்டு மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளாக விசாரணையே நடத்தப்படாமல் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்திய பெரும் முதலாளிகள் தினந்தோறும் செய்துவரும் நூற்றுக் கணக்கான ஊழல் முறைகேடுகளில், கருப்புப் பண பரிமாற்றங்களில் இவை ஒரு சில வகை மாதிரிகள் மட்டுமே.

பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெரும் முதலாளிகள் வாங்கிய கடன்களைத் திரும்ப செலுத்தாமல் தள்ளுபடி செய்யப்பட்ட பலலட்சம் கோடி ரூபாய்  மதிப்பிலான வாராக் கடன்கள் என்னவாகின என்று யாரும் கேட்பதில்லை. பொதுவாக வியாபாரத்தில் நட்டம் என்று அதனை மூடிவிடுகின்றனர். ஆனால் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்களை மடைமாற்றி இது போன்று அதிக விலைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வது அல்லது வெளிநாட்டு ஆலோசனை நிறுவனங்களுக்குப் பல நூறு கோடி ரூபாய்களை  கட்டணமாகக்  கொடுப்பதன் மூலம் அவற்றை இந்தியாவைவிட்டு வெளியே கொண்டு சென்று மீண்டும் இந்தியாவிற்குள் முதலீடுகளாகக்  கொண்டுவருகிறார்கள். இந்தப் பரிவர்த்தனைகள்  அணைத்தும் சுவிஸ் வங்கி போன்ற வெளிநாட்டு வங்கிகள் மூலமாக நடைபெறுகின்றன. மேற்பார்வைக்கு சட்டப்பூர்வமாகத் தெரிந்தாலும் இவை அனைத்தும் உண்மையில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் பெரும் முதலாளிகளின் கண்கட்டிவித்தைதான்.

இவை அனைத்தும் ஒன்றிய அரசுக்கும், நிதி அமைச்சகத்துக்கும், வருமான வரித்துறைக்கும் தெரிந்துதான் நடக்கிறது. ஆனால் இவற்றைத் தடுக்க யாரும் எதுவும் செய்யவில்லை. ஆனால் மறுபக்கம் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு, பணமதிப்பிழப்பு தொடங்கி தற்போது தங்க நகைகளை அடகு வைப்பது வரை சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார் நரேந்திர மோடி. உண்மையில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் நாம் மோடியின் நண்பர்களான பெரும் பணக்கார முதலாளிகளை முதலில் ஒழிக்க வேண்டும். கூடவே அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கின்றன இந்தக் காவி கார்ப்பரேட் பாசிச கும்பலையும் சேர்த்தே ஒழிக்க வேண்டும்.

  • அறிவு

 

[1] https://www.indiatvnews.com/business/news/government-clarifies-to-media-reports-on-rise-in-swiss-bank-deposits-check-full-breakdown-of-data-2025-06-20-995571

[2] https://www.occrp.org/en/investigation/new-evidence-bolsters-allegations-adani-group-overcharged-for-coal

[3] https://www.bloomberg.com/news/articles/2021-07-27/four-funds-invested-in-adani-have-history-of-bets-gone-wrong

[4] https://www.newsclick.in/india-tripping-black-money-tax-havens

[5] https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/dri-moves-tribunal-against-relief-to-essar-group-in-over-invoicing-case/articleshow/106035592.cms

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன