“2014-15 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ₹2532.59 கோடியைச் செலவிட்டுள்ளது, இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம்” என்று இந்துஸ்தான் டைம்ஸ் தளம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்திலும், மெயின்ஸ்ட்ரீம் என்று சொல்லக்கூடிய முதன்மை சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது. இதனை சங்கிக் கும்பல் ஒருநாளும் மறுத்தது கிடையாது. இதற்கு நியாயம் கற்பிக்கும் விதமாக இரண்டு வாதங்களை எப்பொழுதும் முன்வைத்து வருகிறார்கள். அதில் ஒன்று, 2006 – 2014 காங்கிரசு ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ₹675.36 கோடி. அதுவே தமிழுக்கு வெறும் ₹75.05 கோடி மட்டுமே. எனில் அப்பொழுது காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுக ஏன் கேள்வி எழுப்பவில்லை? இரண்டு, சமஸ்கிருதத்திற்கான பல்கலைக் கழகங்கள் அதிகமாக உள்ளன. எனவே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றும், புதிய தமிழ் பல்கலைக்கழகங்களைக் கேரளா மாநிலத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திர மாநிலத்திலோ அமைக்க திமுக என்ன முயற்சி எடுத்தது? யார் உங்களைத் தடுத்தார்கள்? என்றும் கேட்கிறார்கள்.
இது காங்கிரஸ், திமுக என்ற அரசியல் கட்சிகளுக்கான கேள்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும். மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் இன்னமும் காங்கிரசை காட்டி மக்களை ஏமாற்றி விடலாம் என பாஜக நினைக்கிறது. நாட்டின் மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவித்து மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு நியாயவான்களாக நடந்து கொள்ளாமல் சமஸ்கிருதத்திற்கு மட்டும் நிதி ஒதுக்கிவிட்டு மற்ற மொழிகளுக்கு ஓரவஞ்சனை செய்தது ஏன் என்ற கேள்வி பாஜக நேர்மையாக பதிலளிக்காமல் தப்பித்துக் கொள்ள பார்க்கிறது.
1947ல் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு முன்பிருந்தே இவர்களது உண்மையான நோக்கம் இந்திய விடுதலை அல்ல. அகண்ட பாரதம் தான். சுருங்கக்கூறின், இந்தியா அல்ல பாரதம். இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்று ஒப்புக்கொண்டாலும் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் சமஸ்கிருதம் தான். எனவே தேசிய இனங்களுக்கென்று தனித்தனிப் பண்பாடு இருக்க முடியது. ஒற்றைப் பண்பாடுதான் இருக்க முடியும் அது பாரதப் பண்பாடு. எனவேதான் பாஜக ஆட்சியில் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது.
1947 அதிகார மாற்றத்திற்குப் பிறகு அரசியலமைப்பு சட்டம் நிறைவேறியபோது தேசியமொழி எது என்ற விவாதம் நடைபெற்றது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு தற்பொழுது அலுவல் மொழியாக ஆங்கிலமும் ஹிந்தியும் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த விவாதத்தில் சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பொழுது எழுந்தது. எனினும் மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டவர்கள் மட்டுமே சமஸ்கிருத மொழியை பயன்படுத்தியதால் ‘இந்த நாட்டின் ஆட்சி மொழியாகச் சமஸ்கிருதம்தான் இருக்க வேண்டும். சமஸ்கிருதம் என்று சொன்னால் அனைவரும் ஏற்க மாட்டார்கள். அதற்கு முன்னதாக இந்தியை ஆட்சி மொழி ஆக்குங்கள். அதன்பிறகு சமஸ்கிருதத்தை ஆக்குவோம்’ என்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வார்க்கர். அதைத்தான் இப்போது மோடி-அமித்ஷா கும்பல் செய்து வருகிறது.
இந்தப் பின்னணியில் இருந்துதான் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதையும், மற்ற மொழிகளுக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கப்படுவதையும் புரிந்துகொள்ளவேண்டும். இதற்காக அவர்கள் போடும் வேஷங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
“இந்திய அடையாளத்துக்குத் தாய்மொழிகள் முக்கியமானவை. வெளிநாட்டு மொழிகளைவிட அவை முன்னுரிமை பெற வேண்டும். இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை.
நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லாவிட்டால் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது. வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு இந்தியாவை நாம் கற்பனைகூட செய்ய முடியாது. இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாடு முழுவதும் புது முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள ஆங்கிலம் உலகம் முழுவதும் வெறுக்கப்படும். நமது நாடு, நமது கலாச்சாரம், நமது வரலாறு மற்றும் நமது மதத்தைப் புரிந்துகொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்த்திட முடியாது.
இந்தப் போர் எவ்வளவு கடினமானது என்பதை நான் முழுமையாக அறிவேன். ஆனால் இந்தியச் சமூகம் அதில் வெற்றி பெறும் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, சுயமரியாதையுடன், நமது சொந்த மொழிகளில் நமது நாட்டை நடத்துவோம், சித்தாந்தம் செய்வோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம், உலகையும் வழிநடத்துவோம். இதில் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. 2047-ஆம் ஆண்டில் உலகின் உச்சியில் இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும்” என்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரையாகும்.
இந்திய மொழிகள், தாய்மொழிகள், மாநில மொழிகள், சொந்த மொழிகள், இந்தியாவின் மொழிப் பாரம்பரியம் என்று அவர் சொல்வது அனைத்தும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒரியா, வங்கம், பஞ்சாபி… உள்ளிட்ட மொழிகளை அல்ல. அவர் துடிப்பது சமஸ்கிருதத்துக்காகவும், இந்திக்காகவும்தான் என்பது தெளிவு.
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகச் சட்டம், 2020-ன் கீழ் நிறுவப்பட்ட மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் ( CSU) மூலம் அரசாங்கம் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கிறது. புது தில்லி மற்றும் திருப்பதியில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருத மொழியில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கு நிதி வழங்குவதன் மூலம் மாணவர்களுக்குப் பட்டம், டிப்ளமோ, சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
இதுபோன்ற முன்னெடுப்புகள் மற்ற தேசிய இனங்களின் மொழிகளுக்கு இல்லை. ‘காசி சங்கமம்’ நடத்துவது, ‘வணக்கம்’ என்று சொல்வது, ‘என்னால் தமிழில் பேச முடியவில்லையே’ என்று நீலிக்கண்ணீர் வடிப்பது, ‘திருக்குறள்’ சொல்வது. இவையெல்லாம் உண்மையை மறைப்பதற்கான தந்திரமேயற்றி வேறில்லை.
தேசியக் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் மட்டும் வளர்ப்பது என்ற தங்களுடைய கேடான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதில் சமஸ்கிருத்துடன் சேர்த்து ஏனைய மொழிகளில் கற்பிப்பது என்று கூறப்பட்டுள்ளது. இதனைப் புரிந்துகொண்டுதான் தமிழகம் அதனை எதிர்த்தது .
இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் எனப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசினார். ஒன்றிய கல்வி அமைச்சர் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என்றார்.
சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கி.பி 3-ம் நூற்றாண்டில்தான் கிடைத்துள்ளது. தமிழின் முதல் கல்வெட்டு கி.மு 4-ம் நூற்றாண்டில் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. எந்த அடிப்படையில் சமஸ்கிருதத்தை தாய்மொழி என்கிறீர்கள், ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வேங்கடேசன் கேட்டும் இன்றுவரை எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.
சமஸ்கிருதம் பேசும் மக்கள் தொகையை ஒப்பிட்ட சு.வேங்கடேசன், “1950ம் ஆண்டு ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டு வீடுகளில் பேசுகிறவர்களின் எண்ணிக்கை 524. ஆயிரத்துக்கும் குறைவு. இதையே பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை, வீடுகளில் ஒருவர் கூட சமஸ்கிருதம் பேசிக்கொண்டிருக்க முடியாது, அந்த 524 பேரின் பட்டியலை வெளியிடுங்கள் எனப் பெரியார் கேட்டார்.
1950-ல் அதிகபட்சம் 1000 பேர் என்றே கொண்டாலும் இன்று 10 லட்சம் பேர் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டிருப்பதாக ஒன்றிய அரசு சொல்கிறது. எப்படி 75 ஆண்டுகளில் ஆயிரம் பத்து லட்சமாக மாற முடியும். உலகிலேயே இந்த அளவு மக்கள் தொகை பெருக்கம் கொண்ட புள்ளிவிவரம் எதுவும் இருக்காது என நினைக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசுவதையெல்லாம் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கிறார்கள். ஆனால் ஒரு எம்.பி-க்கு கூட சமஸ்கிருதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. எனில் யாருக்காக இதைச் செய்கின்றனர்.
கடைசியாக எடுக்கப்பட்ட 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் ஆகிய மொழி பேசுவோர் இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டதட்ட 22 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் தென்னிந்தியாவில் உள்ள ஐந்து செம்மொழிகளையும் மற்ற மொழிகளையும் புறந்தள்ளிவிட்டு சமஸ்கிருதத்தை மட்டுமே வளர்ப்பது மோடி-அமித்ஷா கும்பலின் முன்னோர்கள் காலம் தொட்டு இருந்துவரும் ஒரு இந்துத்துவ அரசியல் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் இங்குள்ள பெரும்பாலான மொழிகளைப் புறந்தள்ளிவிட்டு ஒரு இந்துத்துவ அரசியலைக் கொண்டுவர முடியும் என்றால், நாம் ஏன் ஓரே ஒரு இந்துத்துவ அரசியலைப் புறந்தள்ளிவிட்டு எல்லா மொழிகளையும் சமமாகப் பாவிக்கின்ற ஒரு அரசியலை முன்னெடுக்க முடியாது? முன்னெடுப்போம்.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
https://m.murasoli.in/editorial