2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த முறையைப் போலவே “திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் அது பாசிச சக்திகளுக்கு ஆதரவாகப் போய் முடிந்துவிடும், தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் காலூன்ற வழிசெய்துவிடும்” என்ற குரல்கள் தற்போது மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளன. “திமுகவிற்கு வாக்களித்தால் அது பாசிச சக்திகளின் வளர்ச்சியைத் தடைசெய்து தமிழகத்தினைப் பாதுகாக்கும் அரணாக இருக்கும்” என்று திமுக அடிவருடிகள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன என்று பார்த்தால், அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட தற்போதுதான் பாசிச சக்திகள் மிகவும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், தங்களுக்கு எதிராகப் பேசும் ஜனநாயக சக்திகள் மீது எந்தத் தடையும் இன்றி வன்முறையை ஏவிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில், மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை அம்பலப்படுத்தி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த, சிபிஎம் கட்சி தோழர்களை இந்து முன்னணி கும்பல் கூட்டத்திற்குள் புகுந்து தாக்கியிருக்கிறது. கையில் பிளேடை மறைத்து வைத்துக் கொண்டு இந்த ரவுடிக் கும்பல் சிபிஎம் தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இந்தத் தாக்குதலில் சிபிஎம் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தோழர் சரத்குமார் உள்ளிட்ட பல தோழர்கள் காயமடைந்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளித் தோழரான ஜெயந்தியையும் கூட விடாமல் தாக்கியிருக்கிறது இந்த மதவெறிக் கும்பல். காயமடைந்த தோழர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு கும்பலாகச் சென்ற இந்த காவிக் கும்பல், அங்கேயும் தோழர்களைத் தாக்கியிருக்கிறது. அப்போது அவர்களுக்கு சிபிஎம் கட்சியினர் தக்கப் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.
திண்டுக்கல்லில் நடந்திருப்பது உள்ளூர் அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு இடையிலான சாதாரண சண்டையல்ல. தமிழ்நாட்டில் இந்து மதவெறி பாசிச சக்திகள் எந்தத் தடையும் இன்றி ஜனநாயக சக்திகளுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தை நடத்த முடியும் என்ற எச்சரிக்கை. அமைதியான வழியில் பிரச்சாரம் செய்வதைக் கூட எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது, வன்முறையை ஏவிவிடுவோம் என்று காவிக் கும்பல் கொடுத்திருக்கும் எச்சரிக்கை. பாசிச கும்பலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
தெருமுனைக் கூட்டத்தின்போதும் சரி, அரசு மருத்துவமனையிலும் சரி, அங்கே இருந்த போலீசார் காவிக் கும்பலைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கின்றனர். தற்போதும் கூட இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடுநிலையாக உள்ளதாகக் காட்டுகிறது திமுக அரசின் போலீசு. இத்தனைக்கும் சிபிஎம் கட்சி திமுகவின் கூட்டணியில் இருக்கிறது.
இது ஏதோ தனித்து நடந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன்னர் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளைக் கொலை செய்வதற்குத் திட்டம் போட்டுக் கொடுப்பேன் என இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் மிரட்டிய போதும், அதற்கு முன்பு இந்து மக்கள் கட்சியினைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் தமிழ்நாட்டில் கலவரம் செய்ய வேண்டும் எனப் பேசிய போதும் திமுக அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.
சமீபத்தில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்து வந்த புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் கார்த்திகேயனை கைலாயத்திற்கு அனுப்பிவிடுவோம் என காவிக் கும்பல் மிரட்டியது.
முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் காவிக் கும்பல், மாநிலம் முழுவதும் எந்தத் தடையும் இன்றி மதவெறிப் பிரச்சாரம் செய்கிறது. அதே சமயம் மோடி அரசை விமர்சித்துப் பேசினால் கூட அவர்கள் மீது இந்தக் கும்பல் தாக்குதல் தொடுக்கிறது. மேடைக்கு மேடை பாசிசத்தை வீழ்த்துவோம் பாசிசத்தை வீழ்த்துவோம் என வீர வசனம் பேசினாலும், இது போன்ற பாசிச சக்திகளை வளரவிடாமல் ஒடுக்குவதற்கு திமுக அரசு இதுவரை துரும்பைக் கூட அசைக்கவில்லை.
தங்களைத் தடுப்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் தான், வடமாநிலங்களைப் போல தற்போது தமிழ்நாட்டிலும் ஜனநாயக சக்திகளுக்கு எதிராகக் காவி பாசிஸ்டுகள் வன்முறையைக் கையிலெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி களத்தில் இறங்கி முறியடிக்காவிட்டால், தற்போது திண்டுக்கல்லில் நடந்தது இனி தமிழ்நாடு முழுவதும் நடப்பது நிச்சயம்.
- சந்திரன்
களத்தில் நின்று பதிலடி கொடுப்பதே ஒரே தீர்வு